Apr 2, 2017

பள்ளிவாசலை இழுத்து மூட சதி - ஸபானிய்யாக்களை மறந்த ஜாக் சபையினர்

பள்ளிவாசலை இழுத்து மூட சதி - ஸபானிய்யாக்களை மறந்த ஜாக் சபையினர்

அன்று ஏகத்துவத்தை மக்களிடம் எடுத்துச் சொன்ன போது எங்கு பார்த்தாலும் அடி, உதை, ஊர் நீக்கம் என்ற கொடுமைகள் நமக்கு எதிராக அணி வகுத்துக் கிளம்பின. அத்துடன் நாம் பள்ளிவாசல்களில் தொழுவதற்கும் தடுக்கப்பட்டோம்; மீறி தொழச் சென்றால் தடியர்களால் தாக்கப் பட்டோம்.

காவல் நிலையம், நீதிமன்றம் என்று வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருந்தோம். பாங்கு சொல்லப் பட்டதும் பள்ளியில் போய்த் தொழ வேண்டும் என்று நம் மனம் ஆர்வப் படும். ஆனால் பள்ளியில் போய்த் தொழ முடியாது. அதனால் நமது வீடுகளிலேயே தொழுவோம். என்ன தான் குறித்த நேரத்தில் வீடுகளில் தொழுதாலும் பள்ளியில் தொழுதது போன்ற நிம்மதியிருக்காது. இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அல்லாஹ் நமக்குப் பள்ளிவாசல்களை வழங்கினான்.

அந்தப் பள்ளிகள் நிறுவப்பட்ட பிறகு மாநபி காட்டிய வழிமுறையில் மன நிறைவுடன் தொழுகைகளை நிலை நாட்டினோம். கடைசியில் பள்ளிகள் நிரம்பி வழிந்தன. அந்தப் பள்ளிகள் நமக்குப் போதவில்லை என்றாகி விட்டது. விரிவாக்கத்தில் விரைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் குர்ஆன், ஹதீஸை தனக்குப் பெயராக்கிக் கொண்ட ஜாக் என்ற இயக்கம் இன்று பள்ளிவாசல்களை மூடும் மூர்க்கத் தனமான செயலில் இறங்கியிருக்கிறது.

முதல் கட்டமாக மூன்று நாட்கள் மூடுதல்

அதன் தொடக்கமாகவும், முதல் கட்டமாகவும் தென்காசியில் மூன்று நாட்கள் பள்ளிவாசலை மூடி ஒத்திகை பார்த்தார்கள்.

அதன் பின் அந்த ஆலய மூடல் அநியாயத்தை, அக்கிரமத்தை உள்ளத்தில் ஓர் எள்ளளவும் உறுத்தலின்றி கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக்கில் ஜாக் அரங்கேற்றியது. அதற்காக தமுமுக சங்கத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டது. ஏற்கனவே தவ்ஹீதையும், தவ்ஹீது வாதிகளையும் அழிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் தமுமுக இதைத் தக்க தருணமாகக் கருதி ஜாக்குடன் கைகோர்த்துக் களம் இறங்கியது.

முடிவு, அவர்கள் எதிர்பார்த்தபடி அப்பள்ளிவாசல் மூடப்பட்டது. இன்று வரை கடையநல்லூரிலுள்ள  ஏகத்துவவாதிகள் பள்ளியில் போய் தொழ முடியாமல் பரிதவிக்கின்றனர்; அனல் புழுக்களாய் துடிக்கின்றனர். அன்று நாம் பள்ளி இல்லாமல் அலைக்கழிந்த காலத்தையும், இன்று பள்ளி எனும் அருட் கொடை இருந்தும் அலைக்கழிவதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இத்தனைக்கும் யார் காரணம்? ஜாக்! அன்று சுன்னத் வல்ஜமாஅத்தினர் பள்ளிவாசல்களில் தொழுவதைத் தான் தடுத்தனர். பள்ளிகளை இழுத்து மூடும் துரோகத்திலும் துரைத்தனத்திலும் இறங்கவில்லை.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

(அல்குர்ஆன் 2:114)

அன்று சு.ஜ.வை எதிர்த்து இந்தத் தீமைக்கு எதிராக, மேற்கண்ட குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு பிரச்சாரம் செய்தனர் இந்த ஜாக்கினர். அப்போது நாமும் அவர்களுடன் இருந்தோம். அவர்களை விட அதிகமாக இந்தத் தீமைகளை எதிர்த்து எரிமலையாய் கனன்றோம். நாம் இன்றும் அதே நிலையில் இருக்கிறோம். ஆனால் இவர்களோ சு.ஜ.வினரை விட ஒரு படி தாண்டி, பள்ளிகளை இழுத்து மூடுவது என்ற கொடிய தீமையின் கொடுமுடிக்கே சென்று விட்டனர்.

அபூஜஹ்லின் பாதையில் அடியெடுத்து வைக்கும் ஜாக்

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் (ஸபானிய்யாக்கள் எனும்) நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!

(அல்குர்ஆன் 96:9-19)

இந்த வசனங்கள் யாரைக் குறிக்கின்றன? அபூஜஹ்லைத் தான் என்று நாம் யாவரும் அறிந்து வைத்திருக்கின்றோம். அவனது இந்தப் பாணியைப் பின்பற்றி அவனது பணியைக் கையாண்டு, பொய்யான வழிமுறைகளில் ஜாக் களமிறங்கி உள்ளது.

கடையநல்லூரில் அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளியில் தமுமுகவினருடன் இணைந்து தவ்ஹீத் ஜமாஅத்தினரைத் தாக்கி இரத்தம் குடித்து, ருசி கண்டு, அந்தப் பள்ளியைப் பூட்டிய இந்த ஆக்டோபஸ் ஜாக் இப்போது மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானை ஹைஜாக் செய்து இழுத்து மூடுவதற்கு வந்திருக்கின்றது.

மேலப்பாளையத்தில் ஜாக்குக்கு என்று ஆட்கள் கிடையாது. எனவே தமுமுகவின் துணையுடன் இந்த அராஜகத்தை அரங்கேற்ற முயற்சிக்கின்றது.

அவன் தனது சபையோரை அழைக்கட்டும்

என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுவது போல் தமுமுக போன்ற தவ்ஹீது ஜமாஅத்திற்கு விரோதமான ஜமாஅத்துகளை அழைத்துக் கொண்டது ஜாக்.

அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி

என்று அல்லாஹ் பட்டியலிடும் தன்மைகளின் படி குற்றமிழைத்து, பல பொய்களில் இறங்குகின்றது.

மறுமை நாளில் ஸபானிய்யாக்களை (நரகக் காவலர்களை) சந்திப்போம் என்பதை மறந்து ஆளும் வர்க்கத்தினரை, ஆட்சியாளர்களை தங்கள் சூழ்ச்சி வலைகளில் வளைக்க முயற்சி செய்தனர்.

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் என்பதை அவர்கள் பின்னிய சதி வலைகளின் கண்ணிகளைத் தகர்த்தெறிவதன் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறான். அவற்றை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பள்ளிவாசலை இழுத்து மூட தமுமுக, ஜாக் கூட்டு சதி

மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் என்ற பள்ளிவாசலின் தலைவராகக் கடந்த 12 ஆண்டுகளாக மவ்லவி ஷம்சுல்லுஹா இருந்து வருகிறார். மேலப்பாளையத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் இதை அறிவார்கள்.

இந்தப் பள்ளிவாசலில் மவ்லவி ஷம்சுல்லுஹா தலைமையில் பல்வேறு மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அந்த நிகழ்ச்சிகளில் இப்போதைய திமுக அமைச்சரான மைதீன் கான், அதிமுக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்று உள்ளனர்.

தற்போதும் வாரந்தோறும் குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் மேலப்பாளையம் மற்றும் சுற்றுப் பகுதிகளிலுள்ள பல்வேறு தரப்பினரும் வந்து பயன் பெறுகின்றனர்.

இந்தப் பள்ளிவாசலில் நடந்த ஏராளமான சமுதாயப் பணிகள் குறித்த செய்திகள் பல்வேறு நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்ச்சிகள் யாவும் மவ்லவி ஷம்சுல்லுஹா தலைமையில் தான் நடந்துள்ளன.

12 வருடங்களாக இப்பள்ளியில் ஷம்சுல்லுஹா தான் ஜும்ஆ உரை நிகழ்த்தி வருகிறார். இப்பள்ளிக்காகவும் இதர சமுதாயப் பணிகளுக்காகவும் பல்வேறு உதவிகள் வேண்டி ஏகத்துவம், உணர்வு இதழ்களில் விளம்பரங்களும் ஷம்சுல்லுஹா அவர்களால் வெளியிடப்பட்டன.

மேலப்பாளையத்திலுள்ள தவ்ஹீத் சகோதரர்களின் நிர்வாகத்தில் இயங்கி வரும் இப்பள்ளி, மாவட்டத்தின் தவ்ஹீத் பிரச்சாரக் கேந்திரமாகச் செயல்பட்டு வருவதை மேலப் பாளையத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு முஸ்லிமும் அறிவார்.

ஜும்ஆவில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்ததால் அருகில் உள்ள இடத்தை உரியவரிடம் பெற்று பள்ளிவாசல் விரிவு படுத்தப்பட்டது.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் கேந்திரமாகத் திகழும் இந்தப் பள்ளிவாசலை எப்படியாவது இழுத்து மூட வேண்டும் என்று ஜாக் தலைமையும், தமுமுகவும் கூட்டாகத் திட்டம் தீட்டினார்கள். இப்பள்ளிக்குச் சொந்தம் கொண்டாடுவதன் மூலம் பிரச்சனையை ஏற்படுத்தினால் பள்ளிவாசலை இழுத்து மூடிவிடலாம் என்று கணக்குப் போட்டனர்.

ஜாக்கின் மாநிலத் தலைவர் கமாலுத்தீன் மதனீயும், அதன் நெல்லை மாவட்டத் தலைவர் ஏர்வாடி சிராஜுதீன் என்பவரும் சேர்ந்து பள்ளிவாசலை இழுத்து மூட சதித் திட்டம் தீட்டி நெல்லை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர்.

ஏர்வாடி சிராஜுதீன் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில் அவர் அளித்திருந்த ஆணையுறுதிப் பத்திரத்தில் பின் வருமாறு கூறப்பட்டிருந்தது.

தபசில் சொத்தில் எங்கள் சங்கத்தால் மஸ்ஜிதுர்ரஹ்மான் கட்டப்பட்டுள்ளது. மேற்படி மஸ்ஜிதுர்ரஹ்மான் கட்டும் பணிக்கு மேற்பார்வை செய்யும் பொறுப்பாளராகவும் அது போல் தபசில் அமைந்துள்ள மேலப் பாளையம் பகுதியில் எங்கள் சங்கக் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்வதற்கு தாயி எனும் பிரச்சாரக்காரராகவும் வாதி/எங்கள் சங்கத்தால் எதிர் மனுதார் பணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் மேற்படியார் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கு மாறாக நன்கொடை வசூல் செய்தல், ஆவணங்களை அப்புறப்படுத்துதல், சரிவர கணக்கு பராமரிக்காமை போன்ற செயல்களில் செயல்பட்டதால் மேற்படியார் மஸ்ஜிர்ரஹ்மான் பள்ளிவாசல் தொடர்பான அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 20.11.05ல் நீக்கப்பட்டு, மேற்படியாருக்கு உரிய தகவலும் கொடுக்கப்பட்டு விட்டது. தபசில் சொத்து 30.11.05 முதல் எங்கள் சங்க நேரடி கட்டுப்பாட்டில் அதன் மாவட்டத் தலைவரால் நிர்வகிக்கப்பட்டு வரப்படுகின்றது.

வழக்கு சொத்திற்கும், எதிர் மனுதாருக்கும் அல்லது மேற்படியார் சார்ந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. மாறாக மேற்படியார் தான் அமைப்பிலிருந்து விடுவிக்கப் பட்டதன் காரணமாக தபசில் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் கெட்ட நோக்கில் கடந்த 27.06.06ல் தபசில் சொத்தில் அத்துமீறி நுழைந்து தபசில் சொத்தின் சுவாதீனத்தினை எடுக்க எத்தனித்தார். மேற்படி முயற்சி கடும் பிரயாசத்தால் தடுக்கப்பட்டது. இதனால் வர்மம் கொண்ட எதிர் மனுதார் ஒரு மாத காலத்தில், தான் சார்ந்துள்ள அமைப்பு வழி தபசில் சொத்தின் சுவாதீனத்தினை வலுக் கட்டாயமாக எங்கள் சங்க அமைப்பிடமிருந்து எடுக்க இருப்பதாக ஊரில் கடந்த 02.07.06ல் இருந்து பிரஸ்தாபம் செய்து வருகிறார்....

என்று முழுக்க முழுக்க பொய்யை மட்டுமே தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தன்னுடைய நிர்வாகத்தில் ஷம்சுல்லுஹா தலையிடக் கூடாது என்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் கோரியிருந்தார். (பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!)

பொய்க் கடிதம்

குர்ஆன் ஹதீஸ் பெயரைச் சொல்லி இயக்கம் நடத்துவோர் அல்லாஹ்வின் பள்ளிவாசல் விஷயத்தில் எந்த அளவுக்குப்    பொய் சொல்லியுள்ளனர் என்பதை நியாயவான்கள் உணர வேண்டும்.

இந்தப் பொய்யனுக்கு சாட்சியாக கமாலுத்தீன் மதனி கடிதம் அளித்துள்ளார். அக்கடிதத்தில் 20.11.05 அன்று முதல் ஷம்சுல்லுஹாவை நீக்கி விட்டதாகவும், அன்றிலிருந்து ஷம்சுல்லுஹாவுக்குச் சம்பளம் கிடையாது என்றும் கமாலுத்தீன் மதனி  குறிப்பிட்டுள்ளார்.

20.11.05 வரை ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்ததாகப் பச்சைப் பொய்யை எழுத்து மூலம் வழங்கியவர் தான் ஜாக்கின் அகில உலகத்(?) தலைவர். அந்த இயக்கத்தில் இருப்பவர்கள் அதைக் கை கழுவுவதற்கு இந்தப் பொய்யே போதுமானதாகும். கமாலுத்தீன் மதனீ எழுதிய இந்தப் பொய்க் கடிதத்தையும் தங்கள் மனுவில் ஆதாரமாக ஏர்வாடி சிராஜ் சமர்ப்பித்திருந்தார்.

07.07.06 அன்று மனுவைத் தாக்கல் செய்து, அன்றைய தினமே தடையுத்தரவையும் வாங்கி விட்டார்.

மஸ்ஜிதுர்ரஹ்மானை நிர்வகித்து வரும் ஏர்வாடி சிராஜின் (?) நிர்வாகத்தில் 25.07.06 வரை ஷம்சுல்லுஹா தலையிடக் கூடாது என்று இடைக்காலத் தடையை நீதிமன்றம் பிறப்பித்தது.

ஆணையருடன் சந்திப்பு

இந்தத் தகவல் தெரிந்ததும், மாநகரக் காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோரை மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து, "ஏர்வாடி சிராஜ் என்பவர் கடைந்தெடுத்த பொய்யைச் சொல்லி நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகம் ஷம்சுல்லுஹாவின் கையில் தான் இருக்கிறது. நீதிமன்றத்தில் பொய்யான தகவல் கொடுத்து, ஒருதலைப் பட்சமாக இந்த உத்தரவை வாங்கியிருப்பதால் நாங்கள் நீதிமன்றத்தில் எங்கள் தரப்பை விளக்கி, உத்தரவைப் பெறுகின்ற வரை எங்கள் பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தனர். காவல்துறையும் நமது தரப்பு நியாயத்தைப் புரிந்து கொண்டது.

திருத்தப்பட்ட தீர்ப்பு

இந்நிலையில் நீதிமன்றத்தில் நமது தரப்பில் 13.07.06 அன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு அன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

நீதிமன்றத்தை நாம் அணுகிய அதே நேரத்தில் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் விசாரணை நடக்கின்றது. இரு தரப்பையும் விசாரித்தார்.

அந்த விசாரணையின் போது, மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகத்தைத் தாங்கள் தான் பார்த்து வருவதாகவும், அனைத்து செலவுகளையும் தாங்களே செய்து வருவதாகவும் நா கூசாமல், அல்லாஹ்வின் அச்சமின்றி ஏர்வாடி சிராஜுதீன் மற்றும் தமுமுக மாவட்ட நிர்வாகிகள் பொய் சொன்னார்கள். இரு தரப்பையும் விசாரித்த காவல்துறை துணை ஆணையர் அன்று மாலை நடைபெறும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறி விட்டார்.

இதற்கிடையே நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த நமது தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவு ஒரு பள்ளிவாசல் சம்பந்தப்பட்டது என்ற விபரத்தை விளக்கிய பின் 25.07.06 வரை வழங்கிய தடையுத்தரவை நீதிமன்றம் விலக்கிக் கொண்டது. அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் தீர்ப்பு திருத்தப் பட்டது.

பள்ளிவாசலில் நுழைந்து தகராறு செய்து, அதைக் காரணம் காட்டி பள்ளியை இழுத்து மூட ஜாக் மற்றும் தமுமுகவினர் செய்த சதி இதனால் முறியடிக்கப்பட்டது.

ஆனால் அதே சமயம் மஸ்ஜிதுர்ரஹ்மானை ஜாக் மற்றும் தமுமுகவினர் கைப்பற்றி விட்டதாகவும்  பூட்டப்பட்டு விட்டதாகவும் பல்வேறு விதமான வதந்திகளை தமுமுகவினர் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பரப்பி விட்டிருந்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதற்கிடையே 13ம் தேதியன்று இரு தரப்பாரும் ஆர்.டி.ஓ. முன் அழைக்கப்பட்டனர்.

மேலப்பாளையத்தில் ஜாக் மற்றும் தமுமுகவுக்கு ஆள் இல்லாததால் தென்காசி, நாகர்கோவில், ஏர்வாடி என்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியாட்களை அழைத்துக் கொண்டு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு ஜாக் மற்றும் தமுமுக கும்பல் வந்திருந்தது.

30.11.05 முதல் மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகத்தைத் தானே பார்த்து வருவதாக ஆர்.டி.ஓ. முன்னிலையிலும் ஜாக் மாவட்டத் தலைவர் ஏர்வாடி சிராஜ் மற்றும் தமுமுகவினர் கூசாமல் பொய் சொன்னார்கள். இரு தரப்பையும் மறு நாள் விசாரணைக்கு வருமாறு கூறி ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஜாக் மற்றும் தமுமுக கும்பல் அங்கு நின்றிருந்த மேலப்பாளையம் நகரக் காவல் ஆய்வாளரை அடிக்காத குறையாக, மிகக் கடுமையாகத் திட்டினார்கள்.

மறுநாள் 14.07.06 அன்று ஜும்ஆ நாள் என்பதால் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஜும்ஆ முடிந்ததும் மீண்டும் ஆர்.டி.ஓ. விசாரணை! அதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

அதன் பின்னர் ஜாக் மற்றும் தமுமுக தரப்பினர் திரும்பத் திரும்ப காவல்துறையை வற்புறுத்தியதன் பேரில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145வது பிரிவின் கீழ் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறை எழுத்துப்பூர்வமான உத்தரவைப் பிறப்பித்தது.

இவ்வாறு அவர்கள் ஆர்.டி.ஓ. விசாரணையை வலிந்து வலிந்து கோருவதற்குக் காரணம் அவர்களது கடையநல்லூர் அனுபவத்தின் அடிப்படையில் தான். நீதிமன்றத்தை வளைக்க முடியாது. நிர்வாகத் துறையை வளைத்து விடலாம் என்ற நம்பிக்கை. கடையநல்லூர் ஃபார்முலாவில் பள்ளியை இழுத்து மூடலாம் என்பது அவர்களது கணக்கு!

இந்த விசாரணையில், தற்போது யாரிடம் நிர்வாகம் இருக்கின்றது என்பது மட்டும் முடிவு செய்யப்படும்.  நிர்வாகத் துறை என்பதால் ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்தின் மூலம் சரிக் கட்டி, தங்களிடம் தான் நிர்வாகம் இருக்கின்றது என்று தீர்ப்பு வாங்கி, அதன் அடிப்படையில் பள்ளிவாசலில் நுழைந்து சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தி, பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்பது இந்தச் சதிகாரர்களின் திட்டம்.

பைக் எரிப்பு நாடகம்

நீதிமன்றத்தில் அவர்கள் பெற்ற இடைக்காலத் தடையை அல்லாஹ் முறியடித்து விட்டதால், அவர்கள் பெற்ற ஒருதலைப்பட்சமான தீர்ப்பு செல்லாது என்றாகி விட்டது. இந்த உண்மை எதிர்த் தரப்பாருக்குப் பெரும் ஆட்டத்தையும், அச்சத்தையும் கொடுத்து விட்டது. அதன் விளைவு தான் அடுத்த நாள் நடைபெற்ற பைக் எரிப்பு நாடகம்.

தாங்கள் நினைத்தது போல் காரியம் கைகூடவில்லை என்பதால் கதிகலங்கிப் போன தமுமுகவினர், தங்களின் ஆளும் கட்சித் தொடர்பைப் பயன்படுத்தியும் பள்ளிவாசலைக் கைப்பற்றவும், இழுத்து மூடவும் இயலாமல் போனதால் வேறு வகையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தத் திட்டமிட்டனர்.

தமுமுகவின் மாநிலச் செயலாளராகவுள்ள ஜே.எஸ். ரிபாயி என்பவரின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட பைக் எரிந்து விட்டதாக, புகார் கூறி ஷம்சுல்லுஹா, ஸய்யது இப்ராஹீம் (ஏகத்துவம் துணை ஆசிரியர்), ஞானியார், சேப்பிள்ளை மைதீன் ஆகியோர் மீது ரிபாயி புகார் கொடுத்தார். புகாரையும், புகாரின் பின்னணியையும் ஆய்வு செய்த காவல் துறையினர் அது பொய்ப் புகார் என்பதைக் கண்டறிந்தனர்.

இதில் ஞானியார் என்பவர் எம்.காம் படித்த ஊனமுற்ற இளைஞர்.

பைக்குக்குத் தீ வைத்து விட்டு ஓடி விட்டதாக ரிபாய் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் ஞானியார் என்ற இந்தச் சகோதரர் நடக்கும் போதே அடிக்கடி கீழே விழும் நிலையில் உள்ளவர். இவர் எப்படி தீ வைத்து விட்டு ஓட முடியும்? என்ற நியாயமான, இரக்க சிந்தனை காவல்துறையினருக்கு ஏற்பட்டது.

மேலும் பைக்கில் ஒன்றரை லிட்டர் பெட்ரோல் இருந்துள்ளது. பைக்கில் தீ வைக்கப்பட்டால் பைக் முழுவதும் எரிந்து நாசமாகியிருக்கும். பைக்கின் சீட் மட்டும் இலேசாக எரிக்கப்பட்டு அணைக்கப்பட்டுள்ளது. பைக் முழுவதும் எரிந்து விடக் கூடாது என்று கவனமாக எரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் ஹாஜா நூஹ், மாவட்டத் தலைவர் யூசுப் அலீ, மாவட்டச் செயலாளர் சாதிக் ஆகியோர் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்தச் சதிக் கும்பலின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் தோற்றுப் போனதால் இப்போது இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர் என்பதைக் காவல் துறையிடம் எடுத்துரைத்தார்கள்.

இறுதியில் பைக் எரிப்பு சம்பவத்தின் உண்மை நிலை காவல்துறைக்குப் புரிய வந்தது.

பொய் வழக்கு

எனவே இரு தரப்பினரிலும் சிலரைப் பிடித்து விசாரித்து விட்டு, ஷம்சுல்லுஹா தரப்பில் ஞானியார், சேப்பிள்ளை மைதீன் ஆகியோரை சாதாரண வழக்கில்  கைது செய்து உடனடியாக ஜாமீனில் விடுவித்தனர்.

பல்வேறு நிர்பந்தங்கள் காரணமாகவே நமது தரப்பில் இருவர் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்தனர்.

அவர்களின் ஆளுங் கட்சித் தொடர்பினால் அதிகபட்சமாக இதைத் தான் செய்ய முடிந்தது.

அவர்கள் நினைத்தவாறு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்ய காவல்துறையே மறுத்துவிட்டது.

பொய்ப் புகார் அளிப்பதே தொடர் வேலை

ஏற்கனவே மதுரை மாவட்ட தமுமுக செயலாளர் சிக்கந்தர் என்பவர் தனது பைக்கை தானே எரித்து விட்டு, தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மீது புகார் கொடுத்தார். இது பொய்ப்புகார் என்பதைக் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

இது போல் செய்யது அஹமது சலபி என்பவர் (ஜாக் நிர்வாகி) தனது வீட்டு வாசலில் தொங்கிய துணியை எரித்து விட்டு ஷம்சுல்லுஹா மற்றும் ஸய்யது இப்ராஹீம் ஆகியோர் மீது புகார் கொடுத்தார்.

பொய்ப் புகார் கொடுப்பதை இவர்கள் ஒரு கொள்கையாக வைத்துள்ளதை உளவுத்துறை அறிந்து வைத்திருந்ததால், பைக் எரிப்பு விஷயத்தில், ஷம்சுல்லுஹாவைக் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டு அதிரடியாக பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரத்தம் சிந்தச் செய்யும் இவர்களின் திட்டமும் தோல்வியில் முடிந்தது.

இதே போன்று கடந்த டிசம்பர் மாதத்தில், ஜாக் பெயரில் ஷம்சுல்லுஹா வசூல் செய்வதாகவும், பத்து இலட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்து விட்டதாகவும் காவல்துறையில் பொய்ப் புகார் ஒன்றை ஜாக் சார்பில் அளித்தனர். அதை விசாரித்த காவல்துறையிடம் பள்ளிவாசல் கட்டுமானத்திற்கான வரவு செலவுக் கணக்குகளை நமது ஜமாஅத்தினர் காட்டிய பிறகு அது பொய்ப் புகார் என்பதை காவல்துறை உறுதி செய்தது.

மாவுப் பத்திரிகையின் மடமைத் தனம்

ஜாக்கின் இந்தப் புழுகு மூட்டைகளை மிஞ்சும் வகையில் தமுமுக தனது மாவுப் பத்திரிகையில் அண்டப் புழுகுகளை அள்ளி வீசியுள்ளது. அந்தப் பத்திரிகையைப் படிக்கும் நடுநிலையாளர்கள் மட்டுமல்ல, அவர்களது ஆதரவாளர்கள் கூட காறித் துப்பும் வகையில் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது.

ஷம்சுல்லுஹா பத்து லட்சம் வசூலித்தாராம். ஜாக் இயக்கத்தினர் கணக்கு கேட்டார்களாம். அதனால் 26.01.2004 அன்று ஷம்சுல்லுஹா பொதுக்குழுவைக் கூட்டி, ஜாக் இயக்கத்தினர் தொழ வந்தால் வெட்ட வேண்டும் என்று கூறினாராம்.

இப்படிக் கொஞ்சமும் வெட்கமின்றி, அல்லாஹ் ஒருவன் இருக்கிறான்; மறுமை நாள் ஒன்று உள்ளது என்ற அச்சமின்றி எழுதியுள்ளார்கள். ரிபாய், இனாயத்துல்லாஹ் ஆகியோரின் பேட்டியையும் இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ளது. இந்த இருவருமே 26.01.04 வரை மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியில் நிர்வாகிகளாக இருந்தவர்கள். ஜாக்குக்கு எதிராக முழு மூச்சுடன் செயல்பட்டவர்கள்.

கமாலுத்தீன் மதனீ ஒரு முறை மஸ்ஜிதுர்ரஹ்மானுக்குத் தொழ வந்த போது, ஆட்களைத் திரட்டி, அடிக்கச் சென்று, கமாலுத்தீன் மதனீயை ஓட ஓட விரட்டியவர்கள் இவர்கள்.

26.01.04 அன்று மஸ்ஜிதுர்ரஹ்மான் பொதுக்குழு நடப்பதற்கு முன்பு வரை மஸ்ஜிதுர்ரஹ்மான் வரவு செலவு அனைத்தையும் சரி பார்த்து, கையெழுத்தும் போட்டுள்ளார்கள். இன்றளவும் அவர்கள் கையெழுத்துப் போட்ட மினிட் புத்தகம் நம்மிடம் உள்ளது.

பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப் படாததால் ஜமாஅத்தை விட்டு விலகிய இவர்கள், ஏதோ காலம் காலமாக ஜாக்கில் இருந்தது போன்று பேட்டி கொடுத்துள்ளதாக மாவுப் பத்திரிகையில் வந்திருப்பதைக் கண்டு நடுநிலையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேதம் ஓதும் சாத்தான்கள்

மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகம் ஷம்சுல்லுஹாவிடம் தான் இருக்கிறது என்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து வைத்திருந்ததால், ஜாக் மற்றும் தமுமுகவின் மோசடிகளுக்குக் காவல் துறையினர் ஒத்துழைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இந்த ரவுடிக் கும்பல் ஆர்.டி.ஓ. அலுவலக வாசலிலேயே காவல் ஆய்வாளர் அவர்களைத் தரக்குறைவாகத் திட்டி, தாக்க முனைந்தனர். மாவுப் பத்திரிகையிலும் காவல் ஆய்வாளர் பீர் முஹம்மது லஞ்சம் வாங்கி விட்டதாக அவதூறு கூறியுள்ளனர்.

காவல் ஆய்வாளர் பீர் முஹம்மது நேர்மையான போலீஸ் அதிகாரி என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் தங்கள் ரவுடித் தனத்திற்கு ஒத்துழைக்காத ஒரே காரணத்திற்காக அநியாயமாக ஒரு முஸ்லிம் அதிகாரியின் பதவிக்கு வேட்டு வைக்க நினைக்கும் இவர்கள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோருவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்று உள்ளது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஊரறிந்த, உலகறிந்த விஷயத்தில் கூட இவ்வாறு பித்தலாட்டம் செய்யும் இவர்கள் பொதுமக்களின் கவனத்துக்கு வராத, தங்களது இயக்கத்தின் கணக்கு வழக்குகள் போன்றவற்றில் எத்தகைய பித்தலாட்டங்களில் ஈடுபட்டு உள்ளார்களோ என்றும் பொது மக்கள் பேசத் துவங்கியுள்ளனர்.

இந்த மோசடிக் கும்பலின் துணையோடு ஜாக் இயக்கத்தினர் அரங்கேற்றிய இந்தச் சதிச் செயலால் இந்த இயக்கங்களைப் பற்றிய உண்மை நிலை மக்களுக்குப் புரிந்து விட்டது. அந்த வகையிலும் அல்லாஹ்    நமக்கு மாபெரும் வெற்றியையே அளித்துள்ளான்.

நரகத்திற்கு அழைக்கும் ஜன்னத்

அல்ஜன்னத் பத்திரிகையும் மாவுப் பத்திரிகையை மிஞ்சும் வகையில் பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளது. ஜன்னத் என்று சுவனத்தின் பெயரை வைத்துக் கொண்டு, நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பொய்யை, கொஞ்சமும் கூச்சமின்றி எழுதியுள்ளனர்.

மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜாக் அமைப்பிற்கு உரியது தான் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியதாம்.

ஷம்சுல்லுஹா கூட்டத்தினர் ஆயுதங்களுடன் பள்ளியில் தங்கியுள்ளனராம்.

காவல்துறையினர் அவர்களை அழைத்து எச்சரித்தார்களாம்.

ரிபாய் என்பவரின் வீட்டை இரவோடு இரவாக தரைமட்டமாக்க வேண்டும் என்பதற்காக பைக்கை தீயிட்டுக் கொளுத்தினார்களாம்.

மஸ்ஜிதுர்ரஹ்மானில் பெண்கள், பிள்ளைகளுடன் பள்ளியில் குடியிருக்கின்றனராம்.

மீறி உள்ளே வருபவர்கள் மீது பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருக்கின்றனராம்.

இவ்வாறு அல்ஜன்னத்தில் எழுதியுள்ளனர்.

ஏர்வாடி சிராஜின் கையில் நிர்வாகம் இருப்பதாக நீதிமன்றத்தில் பச்சைப் பொய் சொன்னவர்கள், தங்கள் பத்திரிகையில் ஷம்சுல்லுஹா  ஆயுதங்களுடனும், பெண்கள், குழந்தைகளுடன் பள்ளியில் தங்கியிருப்பதாக எழுதியுள்ளனர். (பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்)

உண்மையில் ஜும்ஆ நாளைத் தவிர வேறு எந்த நாளிலும் பெண்கள் பள்ளிக்கு வரவோ, தங்கவோ இல்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதிலும் இப்படி நா கூசாமல் பொய் சொல்வதைப் பார்க்கும் போது இவர்கள் உண்மையில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புபவர்கள் தானா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

பத்திரிகையில் எதையும் எழுதி, தனது இயக்கத்தினரைத் திருப்திப் படுத்தலாம். ஆனால் அல்லாஹ் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற நம்பிக்கை கூட இவர்களிடம் இல்லாமல் போய் விட்டதே என்று எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறத் தயாரா? என்று கேட்பதற்கும் யோசிக்க வேண்டியுள்ளது. இவ்வளவு தைரியமாகப் பொய் சொல்பவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் சத்தியம் செய்யத் தயங்க மாட்டார்கள். எனவே, பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கூறி, இவர்களை அவனிடமே விட்டு விடுவோம்.

போதிப்பது குர்ஆன் பூட்டுவதோ பள்ளிவாசல்

பள்ளிவாசலை இழுத்து மூடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்? அல்லாஹ்வையும் அவனது தூதரையுமா? அல்லது அபூஜஹ்லையா?

இவர்களின் இந்த நடைமுறை, அபூஜஹ்லைப் பற்றி அல்லாஹ் கூறும், "குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி'' என்ற அந்தத் தீய பண்புகளுக்கு அப்படியே ஒத்திருக்கவில்லையா?

நி         20.11.2005 அன்று ஷம்சுல்லுஹா ஜாக்கிலிருந்து நீக்கப்பட்டாராம்.

நி         20.11.2005 வரை அவர்கள் ஷம்சுல்லுஹாவுக்குச் சம்பளம் கொடுத்தார்களாம்.

நி         30.11.2005 முதல் மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகத்தை ஏர்வாடி சிராஜ் என்பவர் பார்த்து வருகின்றாராம்.

நி         27.06.06 அன்று ஷம்சுல்லுஹா மஸ்ஜிதுர்ரஹ்மானுக்குச் சென்று ஏர்வாடி சிராஜிடம் தகராறு செய்தாராம்.

நி         மஸ்ஜிதுர்ரஹ்மானைக் கைப்பற்றுவேன் என்று 02.07.06 முதல் ஷம்சுல்லுஹா பிரச்சாரம் செய்து வருகிராராம்.

இப்படிப் பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வருபவர்கள் தான் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுபவர்களா?

ஏர்வாடி சிராஜ் என்ற கடைந்தெடுத்த பொய்யனுக்கு, உலக அமீர் (?) கமாலுத்தீன் மதனீ சாட்சி கூறுகின்றார். 20.11.05 அன்று முதல் ஷம்சுல்லுஹாவை நீக்கி விட்டதாகவும், அன்றிலிருந்து அவருக்குச் சம்பளம் கிடையாது என்றும் கையெழுத்துப் போட்டு கடிதம் கொடுத்திருக்கின்றார்.

2001ம் ஆண்டு ஷம்சுல்லுஹாவுக்கு எதிராக சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ஜாக்கினர் வழக்கு தொடர்ந்தனர். 2001ல் நீதிமன்றத்தில் எதிரியாக நிறுத்தி விட்டு இப்போது நீக்கி விட்டோம் என்று சொல்வது பச்சைப் பொய்யல்லவா?

20.11.2005 வரை ஷம்சுல் லுஹாவுக்குச் சம்பளம் கொடுத்ததாகக் கூறும் இவர்கள் அதற்கான ஒரேயொரு வவுச்சரையாவது காட்ட முடியுமா?

ஊரறிந்த விஷயத்தில் கூட இப்படிக் கூசாமல் பொய் சொல்கின்றார்கள் என்றால் இவர்களைப் பற்றி மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களது சதியை முறியடிக்க அல்லாஹ் போதுமானவன். சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளனான அல்லாஹ் இவர்களது சதியை ஒவ்வொன்றாக முறியடித்துக் கொண்டிருக்கின்றான்.

சத்தியம் வென்றது

இவர்கள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆர்.டி.ஓ. விசாரணையில் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வாங்கி விடலாம் என்று எண்ணித் தான் காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்.டி.ஓ. விசாரணை கோரினார்கள். ஆனால் அதிலும் அல்லாஹ் இவர்களது சதியை முறியடித்து விட்டான், அல்ஹம்துலில்லாஹ்.

இரு தரப்பையும் விசாரணை செய்து, இரு தரப்பு ஆதாரங்களையும் ஆய்வு செய்த ஆர்.டி.ஓ. துரைராஜ் அவர்கள் இது குறித்து தனது தீர்ப்பை 26.07.06 அன்று வழங்கினார்.

தீர்ப்பு விபரம்

இந்த நீதிமன்றம் இரு தரப்பிலும் ஆவணங்கள், வாதப் பிரதி வாதங்களைப் பரிசீலித்தது. "ஏ' பார்ட்டியாகிய ஏர்வாடி சிராஜுதீன் தரப்பினர் பள்ளிவாசல் நிர்வாகம் தங்களிடம் இருப்பதற்கான தகுந்த சான்றுகளை, ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

"பி' பார்ட்டியான ஷம்சுல்லுஹா தரப்பு,

நி         மஸ்ஜிதுர்ரஹ்மானில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள வவுச்சர்கள்

நி         மின்சாரக் கட்டணம் செலுத்திய ரசீது

நி         சொத்து வரி

நி         தண்ணீர் கட்டணம்

நி         மஸ்ஜிதுர்ரஹ்மானுக்கு வந்த கடிதங்கள்

நி         வரவு செலவுக் கணக்கு அறிக்கை

ஆகியவற்றைச் சமர்ப்பித்தனர்.

பள்ளிவாசலில் பணி புரியும் பணியாளர்களும் தாங்கள் ஷம்சுல்லுஹா தரப்பில் தான் பணி புரிகின்றோம் என்பதற்கான வாக்குமூலங்களையும் சமர்ப்பித்து இருந்தனர். இந்த ஆதாரங்கள், சான்றுகள் அனைத்தும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் அன்றாடப் பணிகள் ஷம்சுல்லுஹா எனும் "பி' பார்ட்டியால் தான் செய்யப்படுகிறது என்பதை நிரூபிக்கின்றன.

மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், இந்தச் சொத்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் முழுக் கட்டுப்பாடு இவர்களிடம் தான் இருக்கின்றது என்பதை இந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே "ஏ' பார்ட்டியான ஏர்வாடி சிராஜுதீன் என்பவர் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு முடிகின்ற வரை "பி' பார்ட்டியாகிய ஷம்சுல்லுஹா தரப்பினர் செய்து வரும் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. அது வரை இந்த நீதிமன்ற உத்தரவு நீடிக்கின்றது.

மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் "பி' பார்ட்டியாகிய ஷம்சுல்லுஹா தரப்பினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்குமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.

இவ்வாறு ஆர்.டி.ஓ. தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் ஜாக் மற்றும் தமுமுகவின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து ஜாக் மற்றும் தமுமுகவினர் செய்த சதிச் செயல்களை அல்லாஹ் தகர்த்தெறிந்து உள்ளான். அல்ஹம்துலில்லாஹ். சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப் பெரும் சூழ்ச்சியாளன் அவன் என்பதை நிரூபித்துள்ளான்.

இவர்கள் எவ்வளவு தான் பணத்தை வாரியிறைத்தாலும், ஆளும் கட்சி உறவைக் கொண்டு அராஜகம் செய்தாலும் அத்தனையையும் அல்லாஹ் முறியடித்து வருகின்றான்.


அல்லாஹ்வின் ஆலயத்தை இழுத்து மூட முயற்சித்து அடுக்கடுக்கான பொய்களைக் கூறும் இவர்களை சமுதாயம் அடியோடு புறக்கணிக்கும் காலம் தூரத்தில் இல்லை.

EGATHUVAM AUG 2006