கொள்கை மட்டும் போதாது தொழுகையும் வேண்டும்
எம். அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.சி.
பேராசிரியர், இஸ்லாமியக்
கல்லூரி, கடையநல்லூர்
இறைவனுடைய மாபெரும் கருணையால் மறுமை வெற்றிக்கு அடித்தளமாக இருக்கக்
கூடிய ஏகத்துவக் கொள்கையை ஏற்கும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இந்த அடிப்படையில்
அல்லாஹ் உலகத்தில் வாழும் அனைவரையும் விட நம்மை மேம்படுத்தி இருக்கிறான். அல்லாஹ்விற்கே
எல்லாப்புகழும்.
ஆனால் "இறைவனுக்கு இணை வைக்காமல் இருந்தால் மட்டும் போதும்
மறுஉலக வாழ்வில் வெற்றியடைந்து விடலாம்'' என்று நம்மில்
பலர் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பெரும்பாலும் நல்லமல்களை நாம் செய்யாமல் இருப்பது
இதைத் தான் உணர்த்துகிறது.
ஏகத்துவக் கொள்கையைக் கடைப் பிடித்தவனுக்கு நிச்சயம் சொர்க்கம்
கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் நரகம் செல்லாமல் சொர்க்கம் செல்வானா? என்று நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தின் கடமைகளை
சரியாக நிறைவேற்றாத காரணத்தினால் தவ்ஹீத்வாதிகளும் மறுமையில் நரகில் தண்டிக்கப் படுவார்கள்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏகத்துவக் கொள்கையுடையவர்களில்
சிலர் நரகத்தில் அடுப்புக்கரிகளைப் போன்று மாறுகின்ற அளவிற்கு அங்கே வேதனை செய்யப்
படுவார்கள். பின்பு (இறைவனுடைய) அருள் அவர்களுக்குக் கிட்டும். (நரகத்திலிருந்து) அவர்கள்
வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசல்களில் வீசப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள்
மீது தண்ணீரைத் தெளித்தவுடன் நதியால் சுமந்து வரப்பட்ட விதை (கரையோரம்) முளைப்பதைப்
போல் அவர் (புதிதாக) உருவெடுத்து சொர்க்கத்தில் நுழைவார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: திர்மிதி 2522
தவ்ஹீத் கொள்கையை வைத்து மாத்திரம் நரகத்திலிருந்து தப்பித்து
விடமுடியாது என்பதை தெள்ளத் தெளிவாக இந்த ஹதீஸ் எடுத்துரைக்கிறது. நரகத்திற்குச் சென்று
விட்டு சொர்க்கத்திற்குள் நுழைவதை விட நரகத்திற்குள் புகாமல் சொர்க்கம் புகுவதே மாபெரும்
வெற்றி. இவ்வாறு அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின்
கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு
அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர
வேறில்லை.
(அல்குர்ஆன் 3:185)
தவ்ஹீதின் வெளிப்பாடு நற்காரியங்கள்
இந்த வெற்றியை நாம் அடைய வேண்டும் என்றால் தவ்ஹீத் கொள்கையை
கடைப்பிடிப்பதுடன் அல்லாஹ் விதித்த கடமைகளையும் அவனுடைய தூதர் காட்டித் தந்த நற்காரியங்களையும்
அதிகம் செய்ய வேண்டும். அமல்கள் என்பது ஏகத்துவத்தின் வெளிப்பாடாகும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவதைப் போல் ஏகத்துவவாதியின்
நற்செயல்களை வைத்து இவர் தவ்ஹீத்வாதி என்று மக்கள் இனங்காணும் விதத்தில் நமது நடவடிக்கைகள்
இருக்க வேண்டும். ஒரு ஏகத்துவவாதி நரகம் புகாமல் சொர்க்கம் புக வேண்டுமானால் அவனிடத்தில்
அவசியம் நல்லமல்கள் நிறைய இருக்க வேண்டும். இதை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் பல்வேறு
இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள்
ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர் பார்ப்பவர்
நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 18:110)
அல்லாஹ் இந்த வசனத்தில் தன்னுடைய சந்திப்பை அடியார்கள் பெறுவதற்கு
இரண்டு விஷயங்கள் வேண்டும் என்று கூறுகிறான். ஒன்று இணை வைக்காமல் ஏகத்துவக் கொள்கையைக்
கடைப்பிடிப்பது. மற்றொன்று நல்லறம் செய்வது. அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்கு
நல்லறங்கள் அவசியம் என்று இந்த வசனத்திலிருந்து உணரலாம்.
மனிதன் செய்த நல்லறங்கள் மற்றும் தீமைகளை அல்லாஹ் மறுமை நாளில்
தராசுகளை வைத்து அளவிடுவான். அதில் நல்லறங்கள் அதிகமாகிவிட்டால் அவன் சுவர்க்கம் செல்வான்.
ஆனால் தீமைகள் மிகைத்து விட்டால் அவன் செல்ல வேண்டிய இடம் நரகம். இதை அல்லாஹ் பின்வரும்
வசனத்தில் எடுத்துரைக்கிறான்.
யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில்
இருப்பார். யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும். ஹாவியா என்றால்
என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்? அதுவே சுட்டெரிக்கும்
நெருப்பாகும்.
(அல்குர்ஆன் 101:6)
நாம் இறந்த பிறகு நம்முடன் வரக்கூடியது நாம் செய்த செயல்கள்
தான். நாம் புரிந்த நல்லறங்களைத் தவிர செல்வமோ, காசு பணமோ
மறு உலக வாழ்வில் எந்தப் பயனும் தராது. மறு உலக வாழ்வில் ஈடேற்றம் பெற வேண்டுமானால்
நல்லமல்கள் அவசியம் என்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
எனவே தவ்ஹீத் என்பது வெறும் நம்பிக்கை மாத்திரம் இல்லை. மாறாக செயல்பாடுகளுடன் இணைந்தது
என்பதை மறந்துவிடக் கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்து போனவரை
மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன.
ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகின்றது. அவரை அவருடைய குடும்பமும், செல்வமும், அவர் செய்த செயல்களும் பின்
தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும், செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன்
தங்கிவிடும்.
அறிவிப்பவர்: அனஸ் பின்
மாலிக் (ரலி)
நூல்: புகாரி 6514
இறைவன் வலியுறுத்திய காரியங்களில் ஒன்றான தொழுகை விஷயத்தில்
நாம் மோசமாக நடந்து கொள்கிறோம். பலர் தொழுகைக்குரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்று
வதில்லை. பல நேரங்களில் தொழ வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் கேளிக்கைகளில் ஈடுபட்டு
வருகிறோம்.
தொழுகைக்கு மட்டும் மக்களை அழைக்கின்ற தப்லீக் ஜமாஅத்தினர் தவறான
செய்திகளை நம்பினாலும் தொழுகை விஷயத்தில் கவனமாக இருப்பதுடன் தாங்கள் ஈடுபட்ட பணியில்
எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள்! சத்தியக் கொள்கையில் இருக்கக்கூடிய நாம் அவர்களை
விடப் பன்மடங்கு தொழுகையைப் பேண வேண்டும். தொழுகையின் அவசியத்தையும் அதை விட்டவனுக்கு
மார்க்கம் விடும் எச்சரிக்கையையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒரு ஏகத்துவவாதி அறிந்து
கொண்டால் நிச்சயமாக அவன் தொழுகையை விடமாட்டான்.
தொழுகையின் முக்கியத்துவம்
இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத்
தவிர வேறு யாரும் வணக்கத்திற்குத் தகுதியானவர் இல்லை என்று கூறுவது, மற்றும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்து தூண்களால் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஐந்தில் ஒன்றான தொழுகையை ஒருவர் விடுவாரானால் அவருடைய இஸ்லாம்
என்ற கட்டடம் பெரிய குறைபாடு உடையதாக ஆகி விடுகின்றது. எப்போது அது இடிந்து விழும்
என்று சொல்ல முடியாது. நாம் கட்டிய கட்டடத்தின் ஒரு தூண் விழுந்து விட்டாலோ அல்லது
அது பலம் குன்றியதாக இருந்தாலோ உடனே நாம் அதைச் சரி செய்து விடுகிறோம். இல்லையென்றால்
அது நம் மீது விழுந்து நம்மையே அழித்து விடும். தொழாதவனின் இஸ்லாம் என்ற கட்டடம் காலப்போக்கில்
இடிந்து, அவனிடத்தில் இஸ்லாம் அற்றுப் போய்விடும் என்பதால் நபி (ஸல்)
அவர்கள் தொழுகையை இஸ்லாத்தின் தூண் என்று ஒப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும்
முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஸகாத்
வழங்குதல்,
ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு
நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 8
கலிமாவை நம்புவது மாத்திரம் இஸ்லாம் அல்ல. இந்த ஐந்து கடமைகளையும்
நிறைவேற்றுவது தான் இஸ்லாம். ஒருவன் கலிமாவை ஏற்றுக் கொண்டு, தொழவில்லை என்றால் அவனுடைய இஸ்லாம் அரைகுறையாக உள்ளது என்று
அர்த்தம். மேற்கூறப்பட்ட ஐந்தும் சேர்ந்தது தான் இஸ்லாம் என்று நபி (ஸல்) அவர்கள் பின்வரும்
ஹதீஸில் விளக்குகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (ஜிப்ரீல்), "இஸ்லாம் என்றால் என்ன?'' என்று கேட்டார்.
அதற்கவர்கள் "இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) இணையாகக் கருதாத நிலையில்
அவனை நீர் வணங்குவதும், தொழுகையை நீர் நிலைநிறுத்தி
வருவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நீர் வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (50)
எல்லா விஷயங்களிலும் நமக்கு அழகிய முன்மாதிரியாக விளங்கும் நபி
(ஸல்) அவர்கள் தொழுகை விஷயத்திலும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள். மரண
வேளையில் கூட தொழுகையை அவர்கள் விட்டு விடவில்லை.
அப்பாஸ் (ரலி) மற்றும் அலீ (ரலி) ஆகிய இருவரின் மீது சாய்ந்து
கொண்டு தரையில் காலை ஊன்ற முடியாமல் அவர்களது பாதம் தரையில் கோடு போட்டுக் கொண்டே சென்றது.
இவ்வளவு சிரமமான நிலையிலும் இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொழுகையை நிறைவேற்றினார்கள்.
தான் இல்லாவிட்டாலும் தன் தோழர்கள் தொழுது கொண்டிருப்பதைப் பார்த்து அளவில்லா மகிழ்ச்சி
கொண்டார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற போது நடந்த நிகழ்ச்சியை எனக்குச்
சொல்வீர்களா?''
என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான போது, "மக்கள் தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். "இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்'' என்று கூறினோம். அப்போது "பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர்
வையுங்கள்''
என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள்
குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள்.
பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, "மக்கள்
தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். "இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று சொன்னோம். அப்போது, "பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து
குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள்.
பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, "மக்கள்
தொழுது விட்டார்களா?'' என்று கேட்டார்கள். "இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள்'' என்று சொன்னோம். அப்போது "பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர்
வையுங்கள்''
என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ்
நூல்: புகாரி 687
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு
ஒரு மனிதருக்கும் இடையில் (தொங்கியவர்களாக) வெளியே வந்தார்கள். (அவர்களின் கால்களை
சரியாக ஊன்ற முடியாமையால்) பூமியில் அவர்களது இரு கால்களும் கோடிட்டுக் கொண்டு சென்றன.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 198
நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக வெளியில் வரவில்லை. தொழுகைக்காக
இகாமத் சொல்லப் பட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது அறையின் திரையை உயர்த்திப் பார்த்தார்கள். நபி (ஸல்)
அவர்கள் எங்களுக்குத் தோற்றமளித்த போது அவர்களின் முகத்தை விடவும் மகிழ்ச்சியான எந்த
ஒரு காட்சியையும் நாங்கள் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 681
பொதுவாக மரண வேளையில் மிக முக்கியமான விஷயங்களை வலியுறுத்திக்
கூறுவோம். ஒருவர் நமக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றொருவர் நமக்கு 5 ரூபாயும் தர வேண்டும்
என்று இருந்தால் நாம் மரணிக்கும் போது லட்சம் ரூபாயைப் பற்றித் தான் பேசுவோம்.
இது போன்று நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தன்னுடைய சமுதாயத்திற்குத்
தொழுகையை கடைப்பிடிக்கும் படி மிகவும் வலியுறுத்திக் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு மரண வேளையில் அவர்களுடைய மூச்சு மேலும்
கீழும் சென்று கொண்டிருந்த போது அவர்கள் பெரும்பாலும் தொழுகையைப் பற்றியும் உங்களுடைய
வலக்கரம் சொந்த மாக்கியுள்ள (அடிமைகளைப்) பற்றியும் வலியுறுத்திச் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின்
மாலிக் (ரலி)
நூல்: இப்னு மாஜா (2688)
அல்லாஹ், இறந்தவர்கள் அனைவரையும் மறுமை
நாளில் எழுப்பி விசாரணை செய்வான். முதன் முதலில் அவன் தொழுகையைப் பற்றித் தான் விசாரிப்பான்.
இதற்கடுத்து தான் மற்றவைகளைப் பற்றி கேள்வி கேட்பான். இறைவன் கேட்கும் முதல் கேள்விக்கு
நாம் அனைவரும் தயாராக இருக்கின்றோமா? என்று யோசிக்க
வேண்டும்.
அடியான் முதன் முதலில் விசாரிக்கப்படுவது அவனுடைய தொழுகையைப்
பற்றித் தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 463
தொழாதவர்களுக்கு எச்சரிக்கை
நபி (ஸல்) அவர்கள் ஒருவனிடத்தில் போர் செய்கிறார்கள் என்றால்
அவன் சாதாரண குற்றத்தைச் செய்திருக்க முடியாது. தொழாதவனிடம் போர் செய்வேன் என்று சொல்லி
இருக்கிறார்கள் என்றால் தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் விளங்கிக்
கொள்ள வேண்டும்.
மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன்
அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்பி
தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று
நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி 25
தொழுகையை விடுவது என்பது சாதாரணமான குற்றமில்லை. இறை மறுப்புச்
செயல் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் ஒன்றை
இறை மறுப்புச் செயல் என்று சொன்னால் அதுவென்ன சிறிய குற்றமாகவா இருக்கும்?. இதைத் தொழாதவர்கள் உற்று நோக்க வேண்டும்.
இறைவனை நம்பியவர்களுக்கும், நம்பாதவர்களுக்கும்
உள்ள வேறுபாடு இந்தத் தொழுகை தான். இறைவனை ஏற்காதவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கத்
தயாராகி விட்டால் முஸ்லிம்களாக மாறி விடுவார்கள். இறைவனை வணங்குவதற்கு அவர்கள் தயாராக
இல்லாத காரணத்தினால் அவர்கள் இறை மறுப்பாளர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தொழுகையை
விட்டு விட்டால் நமக்கும் இறை மறுப்பாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கும் இணை வைப்பு மற்றும் இறை மறுப்பு ஆகியவற்றுக்கும்
இடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 116
ஆட்சியாளர்கள் குடிமக்களுக்கு அநீதி இழைத்தாலும் அதற்காக அவர்களிடத்தில்
குடிமக்கள் சண்டையிடக் கூடாது. ஆனால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தாமல் இருந்தால்
அவர்களிடத்தில் சண்டையிடலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது சம்பந்தமாக
வரக் கூடிய ஒரு ஹதீஸில் நீங்கள் தெளிவான இறை மறுப்பை அவர்களிடத்தில் கண்டால் சண்டையிடலாம்
என்று வந்துள்ளது. ஆக நபி (ஸல்) அவர்கள் தொழுகையை விடுவதை தெளிவான இறை மறுப்புச் செயல்
என்று குறிப்பிட்டுள்ளார்கள். தொழுகை ஒரு முஃமினிடத்தில் இருக்க வேண்டிய முக்கியமான
அம்சம் என்பதால் ஆட்சியாளர்கள் தொழுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராகப் போர்க்
கொடி தூக்கக் கூடாது என்று சொன்னார்கள்.
"ஆட்சியதிகாரத்தில் இருப்பவர் களிடம் நாங்கள் சண்டையிட
மாட்டோம். எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு
ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நாங்கள் கண்டாலே தவிர'' என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதி மொழி வாங்கியதும் அவர்கள்
எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.
அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல்: புகாரி 7056
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள்
நன்மையையும் காண்பீர்கள். தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையை தெளிவாக) அறிந்து கொண்டாரோ
அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாற்றமாக) யார் (தீமையைக்
கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்குண்டு)'' என்று கூறினார்கள். உடனே மக்கள், "அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்
வரை (வேண்டாம்)''
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 3447
மறுமை நாளில் நரகவாசியிடம் சொர்க்கவாசிகள், "ஏன் நரகத்தில் வந்து அவதிப்படுகிறீர்கள்?'' என்று கேட்பார்கள். அதற்கு அந்த நரகவாசிகள் சொல்லும் முதல் காரணம்
நாங்கள் தொழவில்லை என்பது தான். இறைவன் நம்மைப் படைத்த நோக்கத்தை நாம் பாழாக்கினால்
அவன் தரும் தண்டனை நரகம் என்பதைப் பின்வரும் வசனம் உணர்த்துகிறது.
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம்
"உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள்.
"நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்
(எனக் கூறுவார்கள்) (அல்குர்ஆன் 74:40)
தொழுகையைக் கெடுக்கும் தூக்கம்
இன்றைக்கு நமது தொழுகைகளை பெரும்பாலும் தூக்கம் அலைக்கழித்து
விடுகிறது. லுஹர் தொழுகைக்கு வருகின்ற கூட்டம் ஃபஜர் தொழுகைக்கு வருவதில்லை. காரணம்
தூக்கத்தை உதறி விட்டு வருவதற்குச் சிரமமாக இருக்கிறது.
கடமையான தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கியவனுக்குரிய தண்டனையை
நாம் அறிந்து கொண்டால் நிச்சயம் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட பின் நமக்குத் தூக்கம்
வராது.
நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப்
பற்றிக் குறிப்பிட்டு, "அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்'' என்று விளக்கம் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)
நூல்: புகாரி 1143
நம்மில் மிகவும் சொற்ப நபர்கள் மாத்திரம் தான் ஃபஜர் தொழுகையை
நிறைவேற்றுகிறார்கள். ஃபஜர் தொழுகைக்காக எழுந்து தொழுவது என்னவோ மலை போன்ற காரியத்தைப்
போல் நமக்குத் தெரிகிறது.
ஆனால் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் இறைவனுடைய பொருத்தத்தைப்
பெற விரைந்து ஓடி வர வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்களுக்கு
ஃபஜர் மற்றும் இஷா தொழுகைகள் பெரும் சுமையாக
இருந்தன. எனவே அந்த நயவஞ்சகர்களைப் போன்று நாம் ஆகக்கூடாதென்றால் ஃபஜர் தொழுகையை விட்டுவிடக்
கூடாது.
பெருமானாரின் காலத்தில் இருந்த நயவஞ்சகர்கள் கூட ஒரு நாளைக்கு
3 வேளை சரியாகத் தொழுது விடுவார்கள். ஆனால் முஸ்லிம் என்று தன்னைக் கூறிக் கொண்டு ஒரு
நாளைக்கு ஒரு வேளை கூட தொழாமல் இருக்கின்றவர்கள் தங்கள் நிலையை சற்று உணர வேண்டும்.
நயவஞ்சகர்களுக்கு மிகக் கடினமான தொழுகை இஷா தொழுகையும், ஃபஜர் தொழுகையும் ஆகும். அவ்விரண்டில் உள்ள (நன்மையை) அவர்கள்
அறிந்து கொண்டால் தவழ்ந்தாவது அவ்விரு தொழுகைகளுக்கு வந்து விடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1041
ஃபஜர் தொழுகை பலருக்குத் தவறி விடுவதைப் போல் அஸர் தொழுகையும்
பெரும்பாலும் தவறி விடுகிறது. ஏனென்றால் இந்த இரண்டு நேரங்களிலும் நாம் உறங்கிக் கொண்டிருப்போம்.
எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இந்த இரண்டு தொழுகைகளைக் குறிப்பிட்டுக் கூறி இவைகளை நிறைவேற்றியவர்
சொர்க்கம் செல்வார் என்று கூறினார்கள்.
"பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது
ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளை) யார் தொழுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரி 574
EGATHUVAM JUL 2006