பிரார்த்தனையே வணக்கம்
குர்ஷித் பானு
ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக்
கல்வியகம்
இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து
வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு
ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான்.
"நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும்; எனக்கு எதையும்
இணையாக்காதே''
என்பது தான் அது!
இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று
தான் பிரார்த்தனை!
"பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, "என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக
நுழைவார்கள்'
என்று உங்கள் இறைவன் கூறுகிறான்'' என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின்
பஷீர் (ரலி)
நூல்: திர்மிதீ 3372
எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை இறைவனுக்கு மட்டுமே
செய்ய வேண்டும். இறைவன் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான்
அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப்
பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால்
அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)
பிரார்த்தனையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
பணிவோடு பிரார்த்திக்க வேண்டும்
பிரார்த்தனை செய்யும் போது, அனைத்து
ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம்
என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும்.
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும்
பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்
7:55)
அவர் (ஸக்கரிய்யா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார்.
(அல்குர்ஆன் 19:3)
உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்
பிரார்த்தனை செய்யும் போது "இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்'' என்ற உறுதியான
நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.
அச்சத்துடனும், நம்பிக்கை
யுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில்
உள்ளது.
(அல்குர்ஆன் 7:56)
வலியுறுத்திக் கேட்க வேண்டும்
இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, "நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்'' என்பது போன்று கேட்கக்கூடாது. மாறாக, "இதை
நீ தந்து தான் ஆக வேண்டும்; உன்னால் தான் தர முடியும்; வேறு யாராலும் தர முடியாது'' என்று
வலியுறுத்திக் கேட்க வேண்டும்.
"நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே!
நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை
நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை'' என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 6338
பாவமானதைக் கேட்கக் கூடாது
பிரார்த்தனை செய்யும் போது இறைவனால் தடை செய்யப் பட்டுள்ளதைக்
கேட்கக் கூடாது. உதாரணமாக ஒருவன் திருடப் போகும் போது, "இறைவா, நான் திருடப் போகின்றேன். எனக்கு
நிறைவாகப் பொருட்கள் கிடைக்கச் செய்'' என்பது போல்
பிரார்த்திக்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் பிரார்த்தித்தேன்; ஆனால்
என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று (மனிதன்) கூறுகின்றான்.
உறவைத் துண்டிக்கும் விஷயத்திலும், பாவமானவற்றிலும்
பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்குப் பதிலளிக்கப்படாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2735
அவசரப்படக்கூடாது
பிரார்த்தனை செய்யும் போது அவசரப்படக் கூடாது. பலமுறை திரும்பத்
திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தித்தேன், எனக்குக் கிடைக்கவில்லை
என்று கூறி பிரார்த்திப்பதையே விட்டு விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த்தனை
செய்தால் அது ஏற்கப்படாது.
"நான் பிரார்த்தித்தேன்; ஆனால்
என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை
ஏற்கப்படும்''
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6340
நிராசை அடையக் கூடாது
சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்கும்
அந்தக் காரியம் நிறைவேறவில்லை என்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள்.
அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது.
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில்
நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
(அல்குர்ஆன் 39:53)
அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும்
கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 12:87)
உணவும் உடையும் ஹலாலாக இருத்தல்
பிரார்த்தனை செய்யக் கூடியவனின் உணவும், உடையும், பானமும் ஹலாலான முறையில் இருக்க
வேண்டும். பிறரை ஏமாற்றியோ அல்லது மோசடி செய்தோ, அடுத்தவர்களின்
பொருளை அபகரித்தோ அல்லது வட்டிப் பணத்திலோ வாங்கிய உணவு மற்றும் உடைகளைப் பயன்படுத்திக்
கொண்டு ஒருவன் பிரார்த்தித்தால் அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன்
ஏற்றுக் கொள்ள மாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும்
ஏவுகின்றான் என்று கூறி விட்டு,
தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலிஹான) நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக
நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்.
(அல் குர்ஆன் 23:51)
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ள வற்றிலிருந்து
தூய்மை யானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்தி வாருங்கள்.
(அல்குர்ஆன் 2:172)
ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி
குறிப்பிட்டார்கள். "அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதி
படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை, அவனது உணவு, அவனது குடிப்பு
ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில் மூழ்கி விட்டான். இந்த நிலையில்
அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1844
இந்த ஒழுங்கு முறைகள் அனைத்தையும் ஒருவர் கடைப்பிடித்து, பிரார்த்தனை செய்கிறார். இருந்தும் அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப்
படவில்லை என்றால் அதனால் அவர் நம்பிக்கை இழந்து விடக் கூடாது. தமது பிரார்த்தனையை இறைவன்
ஏற்றுக் கொள்ளவில்லை என்று எண்ணி விடக் கூடாது.
இறைவன் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான்
வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தனக்குத் தீங்கு தரக் கூடியதைக்
கேட்பான். உதாரணமாக, தனக்கு நிறைய செல்வம் வேண்டும்
என்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்தச் செல்வம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச்
செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன்
தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கின்றான். அனைத்தையும் அறிந்த
இறைவன் அதைக் கொடுப்பதற்குப் பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகின்றான்.
அதுவும் இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்குப் பகரமாக மறுமையில் அவனது நிலையை
உயர்த்துவான்.
"உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும்
எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப்
பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது
அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில்
ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்'' என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு "அல்லாஹ் அதிகமாக்குவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: அஹ்மத் 11150
ஓர் அடியான் தன்னிடம் பிரார்த்தனை செய்யும் போது அவனை வெறுங்
கையுடன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான்.
"உங்களுடைய இறைவன் சங்கையானவன். அவனுடைய அடியார் தனது கையை
அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி)
நூல்: இப்னு மாஜா 3911
பாவமானதையும், உறவைத் துண்டிக்கும்
விதத்திலும் இல்லாத எல்லா துஆக்களும் ஒப்புக் கொள்ளப்படும் என்றாலும் சில குறிப்பிட்ட
நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் மற்ற நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளை
விட அதிகமதிகம் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே அந்தச் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.
பதிலளிக்கப்படும் துஆக்கள்
கடமையான தொழுகைக்குப் பின்..
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும்
துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
"எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்)
அவர்கள், "இரவில் கடைசியிலும் கடமை யாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும்
கேட்கும் பிரார்த்தனை ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: திர்மிதீ 3499
ஸஜ்தாவின் போது...
ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும்.
எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.
"ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை
நெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 482
இரவின் கடைசி நேரத்தில்...
இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும்
துஆக்களில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப்
பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும் இறங்குகின்றான். "என்னிடம் யாரேனும்
பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன்.
என்னிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6321
மறைமுகமான பிரார்த்தனை
நாம் யார் மீது அதிகப் பிரியம் வைத்திருக்கிறோமோ அவர்களுக்காகப்
பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நினைப்போம். அப்போது அவர்கள் முன்னிலையிலேயே பிரார்த்திப்பதை
விட அவர்களுக்குத் தெரியாமல் மறைமுகமாகப் பிரார்த்திக்கும் போது அது கட்டாயம் ஏற்றுக்
கொள்ளப்படும்.
நான் ஷாமுக்கு வந்து அபூ தல்ஹாவிடம், அவரது வீட்டிற்குச் சென்றேன். அவரை நான் காணவில்லை. உம்மு தல்ஹாவை
நான் கண்டேன். அப்போது அவர், "இந்த வருடம் நீங்கள் ஹஜ்
செய்ய நாடுகின்றீரா?'' என்று கேட்டார். அதற்கு நான், ஆம் என்றேன். அப்போது அவர், "நீங்கள் எங்களது நன்மைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று கூறிவிட்டு, பின்வருமாறு
கூறினார்.
"ஒரு முஃமினான மனிதர் தன்னுடைய சகோதரனுக்காக மறைமுகமாகப்
பிரார்த்தித்தால் அவருக்கென்று சாட்டப்பட்டுள்ள மலக்கு பதிலளிக்கின்றார். அவர் தன்னுடைய
சகோதரரின் நன்மைக்குப் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அவருக்காக சாட்டப் பட்ட மலக்கு, "ஆமீன், உங்களுக்கும் அவ்வாறே ஆகட்டும்' என்று கூறுவார்'' என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல் முஸ்லிம் 2733
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ
தந்தை தன் பிள்ளைகளுக்காகச் செய்யும் துஆவும் அதிகமாக ஒப்புக்
கொள்ளப்படும். இன்றுள்ள பிள்ளைகள் பெற்றோரை ஒரு தொல்லை எனக் கருதி சரியாகக் கவனிக்காமல்
விட்டு விடுகின்றார்கள். ஆனால் பிள்ளைகள் கவனிக்கா விட்டாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகப்
பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். தங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் கவனித்தால்
இன்னும் அதிகமாகவே அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எனவே பிள்ளைகள் பெற்றோரிடத்தில்
நல்ல முறையில் நடந்து கொண்டு பெற்றோரின் துஆவைப் பெற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும்.
அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை.
3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 3908
நோன்பாளி நோன்பு துறக்கும் போது...
ஒரு அடியான் நோன்பு நோற்று, தனக்கு
அனுமதிக்கப்பட்ட உணவு, பானம் அனைத்தும் தன் அருகில்
இருந்தாலும் தனது இறைவனின் கட்டளைக்கு அஞ்சி, பசி, தாகம், உணர்ச்சிகள் போன்றவற்றை கட்டுப்படுத்திக்
கொண்டு இருக்கிறான். இந்த அடியான் நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனையை இறைவன்
அங்கீகரிக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரின் பிரார்த்தனை மறுக்கப்படாது.
நீதியான அரசன்,
நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை, பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை. அதை அல்லாஹ் புழுதிகளை
விட்டும் உயர்த்துவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 175
பாங்குக்கும், இகாமத்திற்கும்
இடையில்...
"பாங்குக்கும், இகாமத்திற்கும்
இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது'' என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 521
போர்க்களத்தில்...
"பாங்கின் போதும், சிலர் சிலருடன்
மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப் படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின்
ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 2540
ஜும்ஆ நாளில்...
"வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில்
ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ் அவருக்குக்
கொடுக்காமல் இருப்பதில்லை'' என்று அபுல்காஸிம் (நபி-ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக்
குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6400
பிரயாணத்தின் போது...
பிரயாணம் என்பது ஒரு சிரமமான காரியம். நபி (ஸல்) அவர்கள், பிரயாணத்தை நரக வேதனையின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார்கள்.
எனவே இந்தப் பிரயாணத்தின் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்.
மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும்.
அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. நோன்பாளி நோன்பு
துறக்கும் போது செய்யும் பிரார்த்தனை. 3. பிரயாணியின் பிரார்த்தனை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 3909
எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்து
பிரார்த்திப்போமாக!
எல்லா நேரத்திலும், எல்லா நிலைகளிலும்
வல்ல நாயனை மட்டுமே வணங்கக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!
EGATHUVAM JUL 2006