Apr 2, 2017

திருக்குர்ஆனின் சிறப்புக்கள்

திருக்குர்ஆனின் சிறப்புக்கள்

மைமூனா 
ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்

வல்ல ரஹ்மான் இறக்கியருளிய திருக்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் இக்குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரியாமல் இருக்கின்றார்கள். போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப் பற்றி அறிந்து அதன் படி செயல்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ பெயர் தாங்கிகளாக இருந்து வருகின்றார்கள்.

இன்னும் சிலர் "குர்ஆன் என்றால் அதை ஓர் உறையில் போட்டுப் பத்திரமாக ஓரிடத்தில் வைக்க வேண்டும்; இறந்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் போது மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும்'' என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றார்கள். எனவே முஸ்லிம்களுக்கே குர்ஆனைப் பற்றி விளக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம்.

குர்ஆன் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டு வதற்காக இறைவனால் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வேதமாகும். இதை அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.

(அல்குர்ஆன் 2:185)

இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழி காட்டுகிறது. "நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய் வோருக்கு பெரிய கூலி உள்ளது'' என்று நற்செய்தியும் கூறுகிறது.

(அல்குர்ஆன் 17:9)

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.

(அல்குர்ஆன் 25:1)

இந்தக் குர்ஆனுக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன.

ஒன்றுக்குப் பத்து நன்மை

இந்த உலகத்தில் எந்த ஒரு நன்மையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதற்காக சில கஷ்டங்களை அனுபவித்த பிறகே அதன் பலனை அனுபவிக்க முடிகின்றது. ஆனால் அவை எல்லாமே இந்த உலகத்துடன் அழிந்து போய் விடுகின்றன. எந்த அளவிற்கு என்றால், ஒரு சில காரியங்களை நாம் மிகவும் சிரமப்பட்டுச் செய்கின்றோம். ஆனால் அதன் பலன் ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ முடிந்து விடுகின்றது. இந்த அளவிற்குத் தான் அதன் பலன்கள் நிலையற்றவையாக உள்ளன.

ஆனால் நிலையானதும், மிகவும் எளிதாக நன்மையைப் பெற்றுத் தருவதுமான செயல் ஒன்று இருக்கும் என்றால் அது வல்ல ரஹ்மானின் திருமறைக் குர்ஆனை ஓதுவதில் தான் இருக்கும். இந்தக் குர்ஆனை ஓதுவதற்காக நாம் எந்த ஒரு சிரமத்தையும் மேற்கொள்ளத் தேவையில்லை.

அதாவது தொழுகை என்ற வணக்கத்தை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும்; உளூச் செய்ய வேண்டும்; ஆண்களாகயிருந்தால் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்ற நிபந்தனைகள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் செய்தால் தான் தொழுகையின் முழுமையான நன்மைகளை அடைய முடியும்.

குர்ஆன் ஓதுவதைப் பொறுத்த வரையில் இது போன்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அதிகமான நன்மைகளை அள்ளி விடலாம். இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய சில பொன்மொழிகளைப் பார்ப்போம்.

"அல்லாஹ்வின் வேதத்தி-ருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு!  ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும்.  "அ-ஃப், லாம், மீம்' என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன்.  மாறாக, அ-ஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத் (ரலி)

நூல்: திர்மிதி 2910

மறுமையில் பரிந்துரை

இன்றைய முஸ்லிம்களைப் பொறுத்த வரை, குரங்கு கையில் பூமாலை என்பது போன்று இந்தக் குர்ஆனுடைய அருமை, பெருமை தெரியாமல் இருக்கின்றார்கள். தங்களுடைய நேரங்களை இது போன்ற நல்ல வழியில் செலவழிக்காமல் பொய், புறம், கோள், அவதூறு பேசியே நேரத்தை வீணடிக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த உலக வாழ்க்கைக்காக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் சிரமம் பார்க்காமல் செய்கின்றார்கள். உதாரணமாக ஒரு வேலை வேண்டும் என்றால் அதற்காகப் பல மனிதர்களை சிபாரிசுக்காகத் தேடி அலைகின்றார்கள். நிலையற்ற உலகிற்கு இப்படி முயற்சி செய்கின்றார்கள். ஆனால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு சிபாரிசாக வரக் கூடிய குர்ஆனை மறந்து விடுகின்றார்கள். இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது,

"நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் அதைச் சார்ந்தவருக்குப் பரிந்துரையாக வரும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

நூல்: முஸ்லிம் 804

இரு மடங்கு நன்மை

குர்ஆன் ஓதத் தெரியவில்லையே என்று நினைப்பவர்களுக்கும் மார்க்கம் ஒரு நற்செய்தி கூறுகின்றது. அதாவது முயற்சி திருவினையாக்கும் என்பது போன்று, ஒரு மனிதன் குர்ஆனை ஓதுவதற்கு முயற்சி செய்கின்றான்; அதன் மூலம் அவனுக்குப் பல சிரமங்கள் ஏற்படுகின்றன; அதையும் பொருட்படுத்தாமல் அவன் திக்கித் திணறி ஓதுகின்றான் என்றால் அதற்காக அவனுக்கு இரு மடங்கு கூலி இருக்கின்றது.

"குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார்.  சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூ-கள் இருக்கின்றன'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்-ம் 798

மனிதரில் சிறந்தவர்

இந்த உலகில் நமக்குப் பிடித்தவர்கள் நம்மைப் பாராட்டினால் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் நம் அனைவருக்கும் உயிரை விடவும் மேலான நபி (ஸல்) அவர்களின் வாயால் சிறந்தவர் என்ற பாராட்டைப் பெற வேண்டும் என்றால் அது திருக்குர்ஆன் மூலமே கிடைக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் குர்ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றாரோ அவர் தான்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)

நூல்: புகாரி 5027

அல்லாஹ்வின் அருள்

குர்ஆனை ஓதும் போது நன்மைகள் கிடைப்பது போன்று பிறர் ஓதுவதைக் கேட்கும் போதும் நன்மை கிடைக்கும்.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப் படுவீர்கள்!

(அல்குர்ஆன் 7:204)

ஷைத்தானை விரட்டும் மருந்து

நமக்கெல்லாம் ஜென்ம விரோதியாக இருக்கின்ற ஆணவம் கொண்ட ஷைத்தானை விரட்டும் ஒரு மருந்தாக இந்தக் குர்ஆன் இருக்கிறது.

"உங்கள் வீடுகளை மண்ணறை களாக ஆக்கி விடாதீர்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டு ஓடுகின்றான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 780

பாதுகாப்பு கிடைப்பது

உலகில் பிறந்த அனைவருக்கும் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஷைத்தானை விட்டு பாதுகாப்புப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அவன் எல்லா நேரத்திலும் மனிதனை ஆட்டிப் படைப்பதில் குறிக்கோளாய் இருப்பான்.

உதாரணமாகச் சொல்வதென்றால், ஒரு மனிதனுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரக் கூடிய தூக்கத்திலும் கெட்ட கனவை ஏற்படுத்தி, அதன் மூலம் நம்முடைய நிம்மதியைக் கெடுப்பான். இது போன்ற ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும் பாதுகாக்கக் கூடியதாக குர்ஆன் வசனம் அமைந்துள்ளது.

"நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டே இருப்பார். காலை வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3275

அழகிய உதாரணத்துக்குரியவர்

இவ்வுலகில் வாழும் அனைவரும் ஒரு நல்ல உதாரணமாக இருப்பதற்குத் தான் விரும்புவார்கள். கெட்டவனாக இருந்தாலும் கெட்ட உதாரணமாக இருப்பதற்கு விரும்ப மாட்டான். இப்படி எல்லோருமே விரும்பக் கூடிய ஒரு நல்ல உதாரணத்தைப் பெற வேண்டும் என்றால் இந்தக் குர்ஆனை ஓதுவதன் மூலமே இந்தச் சிறப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.

அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)

நூல்: புகாரி 5020

இது போன்று ஏராளமான சிறப்புக்கள் திருக்குர்ஆனுக்கு இருக்கின்றன. நாம் அனைவரும் அதன் சிறப்புக்களை உணர்ந்து செயல்பட வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

ஜெட் விமானத்தைத் தாக்கிய தேனீக்கள் என்ற தலைப்பில் தேனீக்களின் அதிசய நிகழ்வுகளைக் கடந்த மே இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் மேலும் பல அற்புதங்களைக் காண்போம்.

இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை.

கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொள்கின்றான்.

பறவைகள் சில குச்சிகளை வைத்துக் கட்டுகின்றன. எறும்பு, கரையான் போன்றவை மண்ணை வைத்து வீட்டை அமைத்துக் கொள்கின்றன. இவையெல்லாம் கூடு கட்டுகையில் தங்கள் இனத்திற்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீட்டுக்காக மனித இனத்திற்கும், அடுத்த இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.

ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதமான இந்தத் தேனீ, யாருக்கும் எதற்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் மெழுகுக் கூட்டிற்கான மூலத்தை எப்படிப் பெற்றது? யார் கொடுத்தது?

தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் உள்ளன. இதில் இளைய பாட்டாளித் தேனீ அல்லது பணியாளர் தேனீ தங்களின் அடிவயிற்றுக் கிடங்கில் அமையப் பெற்றிருக்கும் மெழுகுச் சுரப்பிகளில் இருந்து மெழுகைச் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கப்பட்ட மெழுகை, தேனீக்கள் மென்று குழைத்து இந்தத் தேனடையை உருவாக்குகின்றன.

மென்று, குழைத்து, கட்டப்படுகின்ற தேன் கூட்டின் விதவிதமான அறைகளின் சுவர்கள் நன்கு காய்ந்து கனமாகி விடுகின்றன. ஆனால் அதே சமயம், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் நெகிழ்ச்சியடையும் நிலையையும், 145 டிகிரி அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் உருகும் நிலையையும் அடைந்து விடுகின்றன.

இங்கு தான், கூடுகளைக் கட்டிக் கொள் (16:68) என்று அல்லாஹ் குறிப்பிடும் கட்டளையைச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

மனிதன் தான் கட்டும் வீட்டிற்காக பெரிய சிமெண்ட் கிடங்கை வெளியில் வைத்திருக்கின்றான். கட்டடத்திற்கு சிமெண்ட் மட்டும் போதாது. ஜல்லி, இரும்பு, செங்கல், மணல், தண்ணீர் என பல மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக வீட்டுச் சுவர்களைக் கட்டும் போது, சுடப்பட்ட செங்கல்களை அடுக்கி வைத்துக் கொண்டு அதன் மீது முகட்டைப் போட்டு விட முடியாது. அந்தச் செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகள் அடைக்கப்பட வேண்டும். செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகளை அடைப்பதற்கு சிமெண்ட் சாந்துகளைப் பயன் படுத்துகின்றோம். மனிதனுக்கு மட்டும் தான் இந்த அறிவுத் திறன் இருக்கிறதா? என்று பார்த்தால் அல்லாஹ்வின் அற்பப் படைப்பான, அதே சமயம் அற்புதப் படைப்பான இந்தத் தேனீக்கு மனிதனை விஞ்சுகின்ற அறிவுத் திறன் இருக்கின்றது.

இந்தச் சின்னஞ்சிறு தேனீ பல்வேறு மரப்பட்டைகள், மலர் அரும்புகளில் இருந்து செந்நிறத்துப் பிசினைச் சுமந்து கொண்டு வந்து தேன் கூட்டில் உள்ள கீறல்களை, இடைவெளிகளை அடைக்கின்றன. அதில் உள்ள பாந்துகளை இந்தப் பிசின் சாந்துகளை வைத்துச் சரி செய்து கொள்கின்றன.

மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீடுகளுக்கு அழகிய வண்ணம் (பெயிண்ட்) தீட்டுகின்றான் என்று எண்ணி விடக் கூடாது. அல்லாஹ்வின் இந்தச் சிறிய படைப்பும் தான் கட்டும் வீட்டிற்கு செந்நிறப் பிசினைக் கொண்டு வண்ணம் தீட்டிக் கொள்கின்றது. இதனால் அந்தத் தேன் கூட்டில் ஒரு பளபளப்பு பளிச்சிடுகின்றது.

இவ்வாறு இந்தச் சின்னஞ்சிறு அரிய படைப்பின் அடிவயிற்றுக் கிடங்கிலிருந்து கிடைக்கின்ற மெழுகின் மூலம் எழுகின்ற மெழுகு மாளிகையான தேன் கூடு, அந்தத் தேனீக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் சேர்த்தே பயன்படுகிறது.

இருட்டில் வாழும் இந்தக் குருட்டு மனிதனுக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாகவும், அழகு சாதனங்களுக்கும் அவனது வீட்டில் அலங்கரிக்கும் மரச் சாமான்களுக்கும் மெருகூட்டும் வண்ணக் கலவை யாகவும் அது பயனளிக்கின்றது.

மனிதன் இயற்கை வளத்தைச் சுரண்டியும், அடுத்தவரின் அல்லது அடுத்த பிராணியின் சொத்தைச் சூறையாடியும் தன் வீட்டைக் கட்டிக் கொள்கின்றான். ஆனால் இந்தத் தேனீயோ தன் சொந்தக் காலில் நின்று, சொந்த மூலத்தைக் கொண்டே தன் கூட்டைக் கட்டிக் கொள்கின்றது.

தாவர இனத்தில் போய் தேனீ சில சேர்மானங்களைப் பெறுகின்றது. அவ்வாறு தாவர வர்க்கத்திலிருந்து அந்தச் சேர்மானங்களைத் தானமாகப் பெற்றுவிடவில்லை. அதற்குப் பரிகாரமாக அந்தத் தாவரத்தின் மலர்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் மகரந்தச் சேர்க்கையைக் காணிக்கை யாகக் கொடுத்து விடுகின்றது.

சிலந்தியும் தன் சொந்தக் காலில் நின்று, தன் உடலிலிருந்து உருவாகும் திரவத்திலிருந்து இழைகளைப் பின்னி வலையை அமைத்துக் கொள்கின்றது. ஆனால் அதனால் மனித சமுதாயத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. மேலும் அது மனிதனுக்கு இடர் விளைவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தேனீயும், தேன் கூடும் மனித சமுதாயத்திற்கு மாபெரும் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வகையில் "கூடு கட்டுக'' என்று தேனீயை நோக்கி அல்லாஹ் கூறும் கூற்று வெறும் கூற்றாக இல்லை. மனிதனின் அறிவுக் கண்ணைத் திறக்கின்ற, சிந்தனை ஊற்றாக அமைந்துள்ளது.

என் கூட்டைக் கட்டுவதற்காக மெழுகு எனும் மூலத்தை என்னுள் சுரக்க வைத்தவன் தன்னிகரில்லா என்னிறைவன் என்று அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு சாட்சி கூறி நிற்கின்றன, இந்தத் தேனீக்கள்!

அதிசயப் புதையல்! அதிரசப் படையல்

தேன் கூடு என்பது இன்ன பிற பொடிப் பொடி ஈக்கள், பெரும் பெரும் பறவைகள் கட்டுகின்ற கூடுகள் போன்றதல்ல! அல்லாஹ்வின் அற்புதங்களைச் சுமந்து நிற்கும் அதிசயப் புதையலாகும்; அதிரசப் படையலாகும். தேன் கூடு என்பது தேனீக்கள் வசிக்கின்ற ஒரு வீடு மட்டுமல்ல!

பூக்கள் சுரக்கின்ற இன்சுவை மதுர பானம் (சங்ஸ்ரீற்ஹழ்), மகரந்தத் தூள் ஆகியவை தேனீயின் வயிற்றில் போய் செரிமானம் ஆகி வயிற்றின் வழியாக வெளியேறும் அமிர்த பானமான தேனைக் காக்கின்ற, செயல் நுணுக்கம் தாங்கிய சேமிப்பு வங்கி தான் தேன் கூடு! பாலினச் சேர்க்கைக்குரிய பள்ளியறை! தேனீக்கள் பொறிக்கின்ற சினை முட்டைகளையும் அந்தச் சினை முட்டைகள் ஈனுகின்ற குஞ்சுகளையும் காக்கின்ற கரு என தேன் கூட்டின் பன்பமுகப் பயன்பாட்டைப் பட்டியல் போடலாம்.

தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை

மரக் கிளைக்கு இடையிடையே அந்தரத்தில் தொங்கும் இந்தத் தேன் கூடு வெறும் தேன் கூடல்ல! தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை! அமுதம் சுரக்கும் அதி மதுரத் தேன் ஆலை! இங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தொழில், பணி நடந்து கொண்டே இருக்கின்றது.

திட்டமிடப்பட்ட தேன் கூட்டு அறைகள்

தேனீயின் பணிகளுக்குத் தக்க தேன் கூட்டில் திட்டமிடப்பட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. தேன் கூட்டில் ஒரு பகுதி வளரும் ஆண் தேனீக்களுக்காகவும், தேன் மற்றும் மகரந்தத் தூளை சேமிப்பதற்காகவும் கட்டப்படுகின்றது.

ஆண் தேனீக்களுக்காகக் கட்டப்படும் அறைகள் பணியாளர்களுக்காகக் கட்டப்படும் அறைகளை விடப் பெரிதாக அமைக்கப்படுகின்றன. இந்த அறைகள் மூடப்பட்டு விட்டால் ஒரு குவிமாடத்தை (உர்ம்ங்) போல் காட்சி அளிக்கும். பாட்டாளித் தேனீக்களின் அறைகள் மூடப்பட்டு விட்டால் தரை மட்டமாகக் காட்சியளிக்கும்.

ஆண் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் நடுவிலும் கீழ்ப் பகுதியின் வலது புறத்திலும் கட்டப்படுகின்றன. பாட்டாளித் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் மேற்பகுதியில் இடது புறத்தில் கட்டப்படுகின்றன.

ராணித் தேனீக்களின் அறைகள்

தேன் கூட்டின் முகத்தில் நேராக, அதே சமயம் பாட்டாளித் தேனீக்களின் அறைகளுக்கு எதிராக, செங்குத்தாக ஓர் அறை தொங்கும். இது தான் ராணித் தேனீயின் அறையாகும்.

படுக்கை விட்டத்தில் அமைந்துள்ள அறைகள் பாட்டாளி அல்லது ஆண் தேனீக்களின் அறைகளாகும்.

குஞ்சுகளுக்குரிய அறை

குஞ்சுகள் அல்லது முட்டை அல்லது முட்டைப் புழுக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட அறையில் தான் இளம் ராணி பருவம் அடைவதற்காக வளர்க்கப்படுகின்றது. ராணித் தேனீயின் இந்த அறை சாதாரண முட்டைப் புழுக்களுக்கான அறையை விட அகலமானது.

இவ்வாறு ராணீத் தேனீக்கள், ஆண் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் எனப்படும் பெண் தேனீக்கள் என்று மூன்று வகையான தேனீக்களுக்கும் இந்தத் தேன் கூட்டில் தனித்தனி அறைகள் கட்டப்படுகின்றன.

மனிதன் என்ற அறிவியல் விலங்கு தான் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் கட்ட முடியும். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, ஒப்பனை அறை என்று பல்வேறு அறைகளைக் கட்ட முடியும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் அந்தக் கற்பனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டுத் தன்னிகரற்ற முறையில் தனி பாணியில் பொறியியல் கலை நுட்பத்துடன் கூடு கட்டி, தேனீக்கள் மனிதனை, மனித அறிவை விஞ்சி நிற்கின்றன.

இதனால் தான் மனிதனின் அறிவை விஞ்சுகின்ற தேனீக்களின் இந்தத் தொழில் நுட்பக் கலையை மனிதன் கண்டறியும் வகையில் திருக்குர்ஆனில் தேனீ என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் தேனீக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.

இது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது. தேனீ கூடு கட்டும் விதம், அது கொண்டு வருகின்ற மகரந்தத் தூள், மொண்டு வருகின்ற தேன் மதுர இன்சுவை பானம், சிவப்பு நிறப் பிசின் போன்றவற்றைச் சேமிக்கும் பணியும் பாங்கும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு அதிர்ச்சியிலும் உறைய வைக்கின்றது.

மனிதனைப் போன்று சுற்றுப் புறச் சூழலை அழித்து தனக்கு வீடு கட்டாமல், இந்தத் தேனீக்கள், தான் கட்டுகின்ற கூட்டிற்காகச் சேமித்து வரும் மகரந்தத் தூள் மூலம் தாவர இனத்தின் உருவாக்கமும், இனப் பெருக்கமும் நடைபெறுகின்றது.

தேனீக்கள் சுமந்து வருகின்ற மகரந்தத் தூள் பூக்களில் படியும் போது ஏற்படும் தாவர இனப் பெருக்கம் பற்றிய அறிவியல் ரகசிய வெளிப்பாட்டை அறியும் போது நம்முடைய ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

ஒரு மனிதன் சத்தியத்திற்கு வருவதற்கு எத்தனையோ தடைக் கற்கள் உள்ளன. ஒருவன் சத்தியத்திற்கு வர வேண்டும் என்று எண்ணும் போது சமுதாயத்தில் அவனுக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்து, மரியாதை குறுக்கே வந்து நிற்கும். அதை வைத்து அவனிடம் ஷைத்தான் பல குறுக்குக் கேள்விகள் கேட்பான்.

மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் கிராமத் தலைவராக இருப்பார். அல்லது சட்டமன்ற உறுப்பினராக அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக ஏன்? முதலமைச்சராகக் கூட இருப்பார். நீ இஸ்லாத்திற்குப் போனால் இந்த மரியாதை கிடைக்குமா? என்று ஷைத்தான் அவரிடம் கணக்குப் போட வைப்பான். அவரும் கூட்டிக் கழித்துப் பார்த்து விட்டு, இந்த மரியாதை அங்கு போனால் நமக்குக் கிடைக்காது என்று அவர் அசத்தியத்திலேயே இருந்து விடுகின்றார்.

இது மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஷைத்தான் போடும் தடைக் கல்லாகும். இஸ்லாத்தின் பெயரிலேயே அசத்தியத்தில் இருக்கும் ஒருவர் ஏகத்துவத்தின் பக்கம் இணைய வரக் கூடிய கட்டத்திலும் இது போன்று ஷைத்தான் அவரிடம் விஷ வித்துக்களை விதைக்கின்றான். அதனால் அவர் சத்தியத்திற்கு வராமலேயே இருந்து விடுகின்றார்.

இன்று சமுதாயத்தில் பல செல்வந்தர்கள், "நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான். உங்கள் பள்ளிக்குத் தொழ வந்தால் எங்களுக்கும் நஜாத் என்ற முத்திரை குத்தி விடுகின்றார்கள். இது தான் நாங்கள் பகிரங்கமாக வர முடியாததற்குக் காரணம்'' என்று கூறுகின்றார்கள்.

இப்படிச் சொல்பவர்கள் இதுவரை இந்தப் பக்கம் வருவதை நாம் பார்க்க முடியவில்லை. அந்தப் பக்கத்தில், அதாவது அசத்தியத்தின் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள். இப்போது இவர்களுக்குக் குறுக்கே சமூக அந்தஸ்து, மரியாதை தடைக் கல்லாக இருக்கின்றது.

அடுத்து, ஒரு மனிதன் சத்தியத்திற்கு வருவதற்குத் தடைக் கல்லாக நிற்பது நோய் நொடிகள், பொருளாதார நஷ்டம் போன்றவை.

ஒருவன் தவ்ஹீதிற்கு வந்திருப்பான். வந்தவுடன் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு விடும். அவ்வளவு தான்! அவன் சத்தியத்தை விட்டு வெளியே போய் விடுவான்.

அது போல் ஒருவன் தவ்ஹீதுக்கு வந்திருப்பான். அவனைத் தவிர அவனது குடும்பமே விபத்தில் பலியாகி விடுவர். இது அவனுடைய உள்ளத்தில் ஒருவித மன உறுத்தலையும் உடலில் ஓர் உதறலையும் ஏற்படுத்தி விடும்.

அதற்குத் தக்கவாறு மக்களும், "பாருங்கள்! இவன் அவ்லியாக்களைத் திட்டினான். இந்தச் சாபம் தான் இவனை இப்படி ஆட்டி அலைக்கின்றது'' என்று விமர்சனம் செய்வார்கள். அவ்வளவு தான். தடுமாறி தடமும் மாறி விடுவான்.

வீட்டில், வீதியில் நாம் ஏகத்துவப் பிரச்சாரத்தைச் செய்ய முனைகின்ற போது, "அடுத்த வீட்டு அப்துல் காதிரைப் பார்! அவனுடைய குடும்பமே விபத்தில் காலி! எதிர் வீட்டு இப்ராஹீமைப் பார்! அவனுடைய பொருளாதாரம் நஷ்டமடைந்து விட்டது'' என்று முன்னுதாரணமாக்கி தவ்ஹீதுக்கு வர விடாமல் தடுக்கின்ற பணிகளில் ஈடுபடுவர்.

இன்றைக்கும் பலர் தவ்ஹீதுக்கு வராமல் இருப்பதற்கு இந்தத் தடைக்கல் தான் காரணமாக இருக்கின்றது. தமிழகத்தில் ஆரம்பத்தில் இந்தத் தடைக்கல் தான் மிகப் பெரிய அளவில் குறுக்கே வந்து நின்றது. இதைத் தான் அல்லாஹ் உடைத்தெறிகின்றான்.

தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டானோ அவருக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை. (39:36)

ஒருவர் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் போது இப்படித் தான் அசத்தியவாதிகள் எச்சரிக்கை விடுப்பார்கள். அப்படிப்பட்ட எச்சரிக்கையை எதிர் கொள்வதற்கு ஒரேயொரு ஆயுதம் இந்த வசனம் தான். "அல்லாஹ் போதும் என்று நம்புங்கள். என் கொள்கைக்கு வந்த நீங்கள் என்னைத் தான் பயப்பட வேண்டும். என் அல்லாதவர்களை நீங்கள் பயப்படக் கூடாது'' என்று நமக்குப் பாடம் புகட்டுகின்றான்.

அதாவது இந்த விஷயத்தில் நாம் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போன்று நடக்க வேண்டும் என்று சொல்கின்றான். இதோ இப்ராஹீம் (அலை) அவர்களின் முழக்கத்தைப் பாருங்கள்.

எதையும் எதிர் கொண்ட இப்ராஹீம் நபி

"அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங்காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு எவ்வாறு நான் அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?'' (என்று அவர் கூறினார்) (6:81)

இணை கற்பித்தால் அல்லாஹ் தண்டிப்பான் என்று நான் ஆதாரப்பூர்வமாக, அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு பயமுறுத்துகின்றேன். அதற்கு நீங்கள் பயப்படவில்லை. ஆனால் ஆதாரம் இல்லாமல், அல்லாஹ் அல்லாத தெய்வங்கள், அவ்லியாக்கள் தண்டித்து விடுவார்கள் என்று என்னைப் பயமுறுத்துகிறீர்கள். நான் எப்படிப் பயப்படுவேன் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் முழங்குகின்றார்கள்.

இப்படித் தான் ஓர் ஏகத்துவவாதி இருப்பான். இப்படித் தான் இருக்க வேண்டும். இப்படித் தான் ஏகத்துவ வாதிகள் இருக்கின்றார்கள். ஏதாவது ஒரு சோதனை ஏற்பட்டதும் கொள்கையை விட்டு ஓடுவது என்பது மக்கத்து காஃபிர்கள், முஷ்ரிக்குகள் வேலையாகும்.

விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலை கீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நஷ்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நஷ்டம்.

(22:11)

இந்து மதத்தின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் சிவசேனா தலைவன் தன் மனைவி இறந்ததும் சிலைகளைப் போட்டு உடைத்தான். இது போன்று சுன்னத் ஜமாஅத்தினர் நோய் என்றால் நாகூர் தர்ஹாவுக்குச் செல்வார்கள். அங்கு நிவாரணம் கிடைக்கும் என்று காத்திருப்பார்கள். கிடைக்கவில்லை என்றால் ஏர்வாடிக்கு மாறி விடுவார்கள். இதே போல் தரீக்காவை விட்டு தரீக்காவும் மாறுவார்கள்.

இது போன்று ஒரு ஏகத்துவவாதி இருக்க மாட்டான். அதற்கு எடுத்துக் காட்டு தான் அண்மையில் நடந்த விபத்து! எம்.ஐ. சுலைமான், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்று விட்டு காரில் சென்று கொண்டிருந்த போது கார் ஒரு மரத்தில் மோதி விட்டது. கார் சிதைந்து, சின்னாபின்னமாகி, சிதிலமாகி விட்டது. எம்.ஐ.சுலைமான் அவர்களுக்குக் காலில் பலத்த காயம். ரஹ்மத்துல்லாஹ், கார் டிரைவர் சில்மி ஆகியோருக்கும் காயம்.

அவ்வளவு தான்! இது அவ்லியாக்களின் வேலை தான் என்று இந்த அசத்தியவாதிகள் கதை கட்டி விட்டனர்.

மரத்தில் மோதிய காரைப் பார்ப்பவர்கள், அந்தக் காரில் இருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்குச் சாத்தியமேயில்லை என்ற முடிவுக்குத் தான் வருவார்கள். ஆனால் அல்லாஹ் அந்த மூவரையும் காப்பாற்றி விட்டான். இவர்களின் எதிர்பார்ப்பு பொய்க்கும் வண்ணம் மூன்று பேருமே பிழைத்து விட்டார்கள்.

விவாதத்தில் கலந்து கொண்டு திரும்பிய எம்.ஐ. சுலைமானும், ரஹ்மத்துல்லாஹ்வும் ஒருக்கால் இறந்து விட்டாலும் நாங்கள் கொண்டிருக்கும் கொள்கை சத்தியம்; நாங்கள் சொன்னது சத்தியம்; நாங்கள் வாதிட்டது சத்தியம்; அல்லாஹ் ஒருவன் தான் நிரந்தரமாக உயிரோடு இருப்பவன்; இவர்கள் கூறும் அவ்லியாக்கள் இறந்து விட்டவர்கள் தான்; உயிரில்லாதவர்கள் தான்.

இந்த நிலைப்பாட்டில் எங்களுக்கு எள்ளளவும் மாற்றம் கிடையாது.

அதனால் இந்த அசத்திய வாதிகளுக்குச் சொல்லிக் கொள்கிறோம்.


விபத்து நேரிட்டாலும் 22:11 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று விளிம்பிற்கு வந்து விட மாட்டோம். சத்தியத்தை விட்டு வெளியேறி விட மாட்டோம். இந்தக் கொள்கையில் இறுதி வரை நிற்போம். அதிலேயே உயிர் துறப்போம்.

EGATHUVAM JUL 2006