Apr 1, 2017

முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

இம் என்றால் வன வாசம்! ஏன் என்றால் சிறை வாசம்! இது கருணாநிதியின் வசனம்! இந்திரா காந்தியால் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப் பட்டபோது, கருணாநிதியின் கட்சிக்காரர்கள் கூட்டம் கூட்டமாகக் கைது செய்யப்பட்டனர். அந்த நெருக்கடி நிலையைக் கண்டித்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதி பேசிய வசனம் தான் இது! இந்த நெருக்கடி நிலை தான் 1996 முதல் 2001 வரை நடைபெற்ற கருணாநிதி ஆட்சியில் முஸ்லிம் களுக்கு எதிராகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. தன்னைச் சிறுபான்மை சமுதாயத்தின் நண்பர் என்று கூறிக் கொண்டே முஸ்லிம்களைக் கழுத்தறுத்தார்.

கோவையில் 19 முஸ்லிம்களைக் கழுவில் ஏற்றியவர் இந்தக் கருணாநிதி! இம் என்று கேட்ட இந்த 19 முஸ்லிம்களும் கருணாநிதியால் வனவாசத்திற்கு அல்ல, மையவாடிக்கு அனுப்பப்பட்டனர்.

1997ல் புனித ரமளான் மாதத்தில் தாம்பரம் பள்ளியில் தொழுது கொண்டிருந்த இமாம் அபூபக்கர் சித்தீக் உட்பட 17 பேர்களைக் கைது செய்து மூன்று மாதம் சிறைவாசம் அனுபவிக்கச் செய்தவர் கருணாநிதி! மேலப்பாளையத்தில் ஷம்சுல் லுஹாவையும் பள்ளியில் தொழ வந்த மக்களையும் 76 நாட்கள் சிறையில் அடைத்து மகிழ்ந்தவர் கருணாநிதி! முத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் தங்கள் கடை களுக்குத் தீ வைத்து விட்டனர் என்று புகார் செய்த முஸ்லிம்கள் மீது "தங்கள் கடைகளுக்குத் தாங்களே தீ வைத்து விட்டனர்' என்று வழக்குப் பதிவு செய்தவர் கருணாநிதி! பாளையங்கோட்டையில் தப்லீக் ஜமாஅத்தில் வந்திருந்த அப்துர்ரஷீது என்பவர் ரமளான் மாதத்தில் பள்ளிவாசலில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அப்துர்ரஷீதின் மகன் மைதீன்பிச்சை மீது பெற்ற தந்தையைக் கொன்றதாகப் பொய் வழக்கு போட்டு கொலையாளிகளைக் காப்பாற்றியவர் கருணாநிதி!
தேங்காய்பட்டிணத்தில் வெடிகுண்டு புதைக்கப்பட்டிருந்ததைக் காவல் துறையில் புகார் கொடுக்கச் சென்ற ஜமாஅத் தலைவர்கள் மீதே வெடிகுண்டு வழக்கு பதிவு செய்தவர் கருணாநிதி!

ஒவ்வொரு டிசம்பர் 6ன் போதும் 40 ஆயிரம் முஸ்லிம்களை, ஐந்து ஆண்டுகளில் இரண்டு லட்சம் முஸ்லிம்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சிறையில் அடைத்து அழகு பார்த்தவர் தான் திருக்குவளை கருணாநிதி!

1998ல் கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பைக் காரணம் காட்டி, தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் என்று பொய்க் குற்றம் சுமத்தி,பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை சிறையில் பூட்டி சித்ரவதை செய்தவர் கருணாநிதி!

இவரால் ஆக்டோபஸ் என்று வர்ணிக்கப்பட்ட வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்கும் போது, சிறுபான்மை முஸ்லிம்களை வளைத்து வளைத்து அள்ளி சிறையில் போட்டு ஆனந்தப் பள்ளு பாடியவர் கருணாநிதி! சிறுபான்மை முஸ்லிம்களின் நட்பை விட ஆக்டோபஸ் வாஜ்பாயின் நட்பு தான் மேலானது என்று நிரூபித்தவர் கருணாநிதி!

அத்வானி, வாஜ்பாய் திருச்சி வருகின்றார்கள் என்பதற்காகவே முஸ்லிம்களைக் கைது செய்து சிறையிலிட்டு வரலாறு படைத்தவர் கருணாநிதி!

நள்ளிரவிலும் முஸ்லிம்களின் வீடுகளில் காவல் துறையினரை நுழைய விட்டு, வீட்டில் ஆண்கள் இல்லையெனில் பெண்களைத் தூக்கி வா என்று பெண்களையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தி கொடுமைப்படுத்தியவர் தான் கோபால புரத்துக் கருணாநிதி!

இவர் மீது கொண்ட பிரியத்தின் காரணமாக எம்.ஜி.ஆரை ஊருக்குள் விடாமல் தடுத்ததாகப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் காயல்பட்டணத்தில் கூட, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முஸ்லிம்கள் மீது கைது வேட்டை நடத்தியவர் தான் கருணாநிதி! இவையெல்லாம் இவரைச் சிம்மாசனத்தில் வைத்து அழகு பார்த்த சிறுபான்மைச் சமுதாயத்திற்கு இவர் கொடுத்த சிறைவாசப் பரிசுகள்!
ஆயிஷா என்ற கேரக்டரை உருவாக்கி, அவளுக்கு மனித வெடிகுண்டுப் பட்டம் சூட்டி, அவளைத் தேடுவதாகக் கூறி புர்கா அணிந்த பெண்களையெல்லாம் சோதனையிட்டு மானபங்கப்படுத்தியவர் கருணாநிதி!

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே தங்கியிருக்கும் பெண்கள் மதரஸாக்களிலும் சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் காவல்துûறையை நுழைய விட்டுக் களங்கப்படுத்தியவர் கருணாநிதி!

பள்ளிவாசல்களில் மோப்ப நாயை விட்டு முஸ்லிம்களின் உள்ளங்களை நோகடித்தவர் கருணாநிதி!

இரண்டாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்து, முஸ்லிம் பெண்களின் கற்புகளைச் சூறையாடிய நரேந்திர மோடியின் அரசைக் கலைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்து - நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்களித்தவர் கருணாநிதி! இப்படி இந்தச் சமுதாயத்திற்கு இவர் செய்த அநியாய, அக்கிரமங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டு போனால் அதற்கு இந்தப் பக்கங்கள் போதாது. மேலே கூறிய இந்த எடுத்துக் காட்டுகள், கருணாநிதியின் ஐந்தாண்டு கால ஆட்சியை நமக்குப் படம் பிடித்துக் காட்டப் போதுமானவையே! இப்போது ஜெயலலிதாவின் தற்போதைய ஆட்சிக்கு வருவோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் டிசம்பர் 6 உள்ளிட்ட எதற்காகவும் முஸ்லிம்கள் மீது முன்னெச்சரிக்கை கைது நடத்தப்படவில்லை.
மதக் கலவரங்கள், சாதி மோதல்கள் இல்லை. வாஜ்பாய், அத்வானிக் கூட்டம் சென்னைக்கு வந்தது. ஆனால் கைது நடவடிக்கை இல்லை.

ஒரு சிலர் குறிப்பிட்ட காரணங்களுக்காக கைது செய்யப் பட்டனர். ஆனால் அவர்களும் சில நாட்களில் பிணையில் வெளி வந்து விட்டனர்.

மத மாற்றத் தடைச் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்யாமலேயே அது காலாவதியாகும் படி விடப்பட்டது.

பி.ஜே.பி. - தி.மு.க. கூட்டணி அரசால் முஸ்லிம்களைக் குறி வைத்துக் கொண்டு வரப்பட்ட பொடா என்ற கொடுங்கோல் சட்டத்தைக் கூட, தமிழகத்தில் முஸ்லிம்கள் மீது பயன்படுத்தவில்லை. மாறாக, விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையைத் தடுப்பதற்காகவே அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
சுருக்கமாகச் சொல்லப் போனால் கருணாநிதி ஆட்சியில் கண்ட கைதுப் படலங்கள் இந்த ஆட்சியில் எதுவுமில்லை.

இது ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம்கள் கண்ட மிகப் பெரிய பலன்.
அடுத்து நாம் கவனிக்க வேண்டிய அம்சம், முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான இட ஒதுக்கீட்டிற்கான உத்தரவைப் பிறப்பித்தது!
இந்த இரண்டு அம்சங்களுக்காக இந்த ஆட்சி மீண்டும் வருவதற்கு நாம் வாக்களிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

ஆந்திர அரசு போல் இட ஒதுக்கீட்டிற்குச் சட்டம் இயற்றி, அதை நீதி மன்றம் தடுத்து விடாத வகையில், நீதி மன்றத்தின் பரிந்துரைகளின் படி முறையான ஆணையம் அமைத்து, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்த இந்த அரசுக்கு முஸ்லிம்கள் நன்றி பாராட்டியாக வேண்டும்.

அதற்காக இந்த அரசு தொடர நாம் வாக்களித்து, முஸ்லிம் சமுதாயம் நன்றியுள்ள சமுதாயம் என்பதை நிரூபித்தாக வேண்டும்.

இது மனிதர்கள் என்ற அடிப்படையில் நாம் செய்யும் முயற்சியாகும். இந்த முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாம் துஆச் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:26)


இந்த வசனத்தின் படி அவனே ஆட்சியளிப்பவன். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'' என்று கூறுவார்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாம் "மகேசன் (இறைவன்) தீர்ப்பே மக்கள் தீர்ப்பு'' என்ற நம்பிக்கை உள்ளவர்கள். எனவே நாம் அவனிடமே இந்த ஆட்சி தொடர இறைஞ்சுவோமாக!

EGATHUVAM MAY 2006