அல்லாஹ்வின்
ஆலயத்தைப் பாழாக்கிய அநியாயக்காரர்கள்
கே.எம்.
அப்துந்நாஸிர், கடையநல்லூர்
ஏகத்துவக்
கொள்கை வளர்ச்சி அடைந்த ஊர்களில் ஒன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ஆகும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 1982ம் வருடம் சகோதரர் எம். அப்துல் ஜலீல் மதனீ
அவர்களின் தலைமையில் விதைக்கப்பட்ட ஏகத்துவம் என்ற விதை இன்று ஆல் போல் தழைத்து கடையநல்லூரைச்
சுற்றிலும் தென்காசி, வடகரை, அச்சன் புதூர், வாவா நகரம், ஆலங்குளம், புளியங்குடி, வாசுதேவ நல்லூர், வீராணம், வல்லம், பொட்டல் புதூர் இன்னும் பற்பல ஊர்களில் சத்திய ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது.
இறையுதவிக்கு
அடுத்த படியாக, கடையநல்லூரைச் சார்ந்த தவ்ஹீத் வாதிகளின் மாபெரும் தியாகத்தினாலும், நல்லுள்ளம் கொண்டவர்களின்
உதவியினாலும் 1995ம் வருடம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது தான்
அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசலாகும்.
கடந்த
24 ஆண்டுகளில் கடையநல்லூரில் ஏகத்துவவாதிகள் பட்ட கஷ்டங்களையும் துன்பங் களையும் பட்டியலிட்டு
விட முடியாது. அடிதடிகள், ஊர் விலக்கம்., மய்யித்தை அடக்குவதற்குத் தடை, தெருமுனைப் பிரச்சாரம் செய்தவற்குத் தடை, சத்திய வழியில் நபியவர்கள்
காட்டிய முறைப்படி திருமணம் நடத்துவதற்குத் தடை இன்னும் பற்பல இன்னல்கள்.
இவற்றையெல்லாம்
கடந்து, எதிர் நீச்சல் போட்டு தலைநிமிர்ந்து தன்மானத்துடன் தன்னிகரற்ற சேவை கடையநல்லூர்
அல்மஸ்ஜிதுல் முபாரக்கின் மூலம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும்
முன்னுதாரணமாக திகழக் கூடிய வகையில் நடமாடும் நூலகம், கடனுதவித் திட்டம், ஏழைச் சிறுவர்களுக்கு
கத்னா செய்வதற்கு உதவி, ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி, ரத்த தானம், பைத்துல் மால், இஸ்லாமியப் புத்தகங்கள், ஆடியோ,
வீடியோ,
சிடிக்கள் அடங்கிய மாபெரும் இஸ்லாமிய நூலகம், காலையிலும் மாலையிலும்
500 குழந்தைகளுக்கு மேல் பயிலக்கூடிய குழந்தைகள் மதரஸா, இன்னும் பற்பல பணிகள்
இந்தப் பள்ளிவாசலை தலைமை இடமாகக் கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவையெல்லாம்
இறையுதவிக்கு அடுத்த படியாக கடையநல்லூரைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் வெளி நாட்டிலும், உள்நாட்டிலும் தங்களுடைய
இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி ஐந்தும் பத்துமாகத் தரும் சில்லரைக் காசுகள் மூலமாகத்
தான் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
1989ம்
ஆண்டு கடையநல்லூரில் ஒரு பள்ளிவாசலைக் கட்ட வேண்டும் என்று தவ்ஹீத் சகோதரர்கள் முடிவு
செய்கின்றனர். சகோதரர் எஸ்.எஸ்.யூ. ஸைஃபுல்லாஹ் ஹாஜா மற்றும் இன்னும் பல சகோதரர்களின்
தீவிர முயற்சியின் காரணமாக இறைவனின் உதவியால் 1993ம் ஆண்டு பள்ளி வாசலுக்காக இடம் வாங்கப்படுகிறது.
பள்ளிவாசலுக்குரிய
இடத்தை தனிப்பட்ட நபர்களின் பெயரில் வாங்கினால் நாளை ஏதாவது பிரச்சினைகள் ஏற்படலாம்
என்று முடிவு செய்து, அன்றைய சூழ்நிலையில் சகோதரர் பி. ஜைனுல் ஆபீதீன் மற்றும் பல மவ்லவிகளின் தீவிர
பிரச்சாரத்தின் மூலம் நாம் அழைப்புப் பணி செய்து வந்த, ஜாக் என்ற அமைப்பின்
பெயரில் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றக்கூடிய கடையநல்லூர் மக்களுக்காக அந்த இடத்தின் பத்திரம் முடிக்கப்பட்டது.
இதைத்
தவிர நிர்வாக விஷயத்தில் ஜாக் என்ற அமைப்பிற்கும் கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக்
பள்ளிவாசலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. இதனை ஜாக்கும் ஒப்புக் கொண்டு நடைமுறைப்
படுத்தியும் வந்துள்ளது.
இதனை
உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள கடையநல்லூரைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும்
நன்கறிவர்.
பள்ளிவாசல்
கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை நிர்வாக விஷயமாக இருந்தாலும், மார்க்கப் பணிகளாக இருந்தாலும்
ஜாக் அமைப்பைச் சாராத கடையநல்லூர் தவ்ஹீத் மக்கள் தான் முன்னின்று செய்து வருகின்றனர்.
பொதுவாக
ஜாக் அமைப்பின் பள்ளிவாசல்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் உரையாற்றக்
கூடாது என்றும், பெருநாள் தொழுகை ஒரு நாள் முன்பாகவே நடத்த வேண்டும் என்றும் ஜாக் அமைப்பு முடிவு
செய்து, தங்கள் ஆக்கிரமிப்பிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
பி.ஜே. அவர்களின் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு மற்றும் அவர் பேசிய மார்க்க சம்பந்தமான
ஆடியோ, வீடியோ, சிடிக்கள் ஜாக் அமைப்பைச் சார்ந்த எந்தப் பள்ளிவாசல்களிலும் இருக்கக் கூடாது என்பதை
அவர்கள் தங்களுடைய எழுதப்படாத விதியாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனால் இயக்க வெறிபிடித்த
இவர்களின் சாயல் சிறிது கூட இல்லாமல் கடையநல்லூர் அல் மஸ்ஜிதுல் முபாரக்கின் பணிகள்
தெளிவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்நிலையில்
தங்களுடைய கடையநல்லூர் ஜாக் கிளைச் செயலாளர் என்று அவர்கள் பெயரளவில் கருதி வந்த அப்துல்
ஜலீல் மதனீ அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவ சிகிச்சை
செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் கடையநல்லூரில் இல்லாத ஜாக் அமைப்பின் பெயர் பலகையை
பள்ளியில் பதிக்க வேண்டும் என்று அதன் மாநிலத் தலைவர் உலக அமீர் (?) எஸ்.கே. மற்றும் அவருடைய
அடிவருடிகள் மூலம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் மேலும் மனக் கவலைக்கு
உள்ளான அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் மிகுந்த மனப்போரட்டத்திற்கு மத்தியில் கடந்த ஆறு
மாதங்களுக்கு முன்பாக ஜமாத்தினர்களை சமாதானப் படுத்தி அக்கல்வெட்டினை யாருடைய பார்வையும்
படாத விதத்தில் பள்ளியில் பதித்தார்.
"அண்ணன்
எப்போது போவான், திண்ணை எப்போது காலியாகும்''
என்று காத்துக் கொண்டிருந்ததைப் போல் அப்துல் ஜலீல் மதனீ அவர்கள்
உடல் நலக் குறைவினால் ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், ஜலீல் மதனீ அவர்களுக்கு
மிகப் பெரும் விரோதியாகத் திகழ்ந்த, ஏர்வாடியைச் சேர்ந்த ஒருவர் "கடையநல்லூர் அல் மஸ்ஜிதுல்
முபாரக் ஜாக் அமைப்பிற்குத் தான் சொந்தம்'' என்ற மிகப் பெரும் பொய்யை திடீரென்று பள்ளிவாசல் நிர்வாகிகளிடம்
கூறினார். ஜாக்கின் மாநிலத் தலைவர் கூட அதுவரை கூறாத ஒன்றை கேள்விப்பட்ட ஜமாஅத் நிர்வாகிகள்
மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும்
கோவையைச் சேர்ந்த ஜாக் நிர்வாகி ஒருவர், காவல் துறையினரிடம் "பள்ளிவாசல் கட்டும் போது இந்த ஊர்க்காரன்
யாருமே கிடையாது. நான் தான் சுவர்களுக்கெல்லாம் தண்ணீர் அடித்தேன்'' என்று முழுப் பூசணிக்
காயை மொத்தமாக விழுங்கியவன் போல் பொய்யுரைத்ததைக் கேட்ட பள்ளிவாசல் தலைவர் ஒரு கணம்
திகைத்தே விட்டார்.
எஸ்.கே.
என்பவர் "இந்த ஊர்க்காரர்கள் இந்தப் பள்ளிக்கு ஐந்து காசு கூட கொடுத்தது கிடையாது.
நான் தான் கத்தை, கத்தையாக, அள்ளிக் கொடுத்தேன்'' என்று ஒரு அண்டப் புழுகலை தன் பங்கிற்கு காவல் துறை அதிகாரிகளிடம் அவிழ்த்து விட்டார்.
திகைத்துப் போன ஜமாத்தார்கள் "இவர்கள் தான் குர்ஆன், ஹதீஸ் அமைப்பிற்குச்
சொந்தக்காரர்களா? அல்லாஹ் நமதூரை ஜலீல் மதனி இருக்கும் வரை இவர்களை விட்டும் காப்பாற்றி விட்டான்.
இனியும் இறைவன் இவர்களின் தொடர்பின்றி காப்பாற்ற வேண்டுமே'' என இறைவனிடம் பிரார்த்தனை
செய்தனர்.
அப்துல்
ஜலீல் மதனீ அவர்கள் மீது அன்பு கொண்ட உள்ளங்கள் எல்லாம் அவர்களுக்காக கண்ணீர் வடித்து, அவர்களுக்காக இறைவனிடம்
பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நிலையில் இவர்கள் "பள்ளிவாசல் எங்களுக்குத் தான்
சொந்தம், இங்கே நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம், எங்கள் அமைப்பினரைத் தவிர வேறு யாரும் பயான் செய்யக் கூடாது'' என்றெல்லாம் ஜாக்கின்
மாநிலத் தலைவரும் மாவட்டத் தலைவரும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கோரத் தாண்டவம் ஆடினர்.
ஜலீல்
மதனீ அவர்கள் இல்லாத நிலையிலும் பள்ளிவாசல் நிர்வாகம் சரியாகத் தான் எவ்வித இடையூறுமின்றி
ஜமாஅத்தினரின் உதவியோடு நன்றாக செயல்பட்டு வந்தது. ஆனாலும் இவர்கள் "ஜலீல் மதனீ
அவர்கள் கவலைக்கிடம். பள்ளிவாசல் நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது'' என்றெல்லாம் கல் நெஞ்சம்
கொண்டவர்களை விடக் கடுமையான முறையில் தீர்மானம் நிறைவேற்றி அதில் கையொப்பம் இடுமாறு
பள்ளிவாசல் நிர்வாகிகளை மிரட்டினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். மேலும் நிர்வாகிகளிடம்
"ஜலீல் மதனீ ஜாக் மாவட்டப் பொருளாளர், மாவட்டம் சம்பந்தமான தஸ்தாவேஜுகளை எடுக்க வேண்டும்'' என்று கூறி பள்ளிவாசல்
பீரோவின் சாவியை ஏமாற்றி வாங்கியதுடன் பள்ளிவாசலின் தஸ்தாவேஜுகளையும் சாவியையும் பள்ளி
நிர்வாகிகளுக்குக் கூட தெரியாமல் ஜாக் நிர்வாகி ஒருவர் திருடிச் சென்று விட்டார்.
இவர்களுடைய
அடாவடித் தனத்தைக் கண்ட ஜமாஅத் நிர்வாகிகள் அல் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் பொதுக்
குழுவைக் கூட்டினர். ஜலீல் மதனீ அவர்கள் வரும் வரை நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக ஐந்து
நபர்கள் கொண்ட குழுவைத் தேர்ந்தெடுத்தனர். இக்கூட்டத்தில் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, அப்துல்லாஹ் உமரி மற்றும்
நூருல் அமீன் ஆகிய ஜாக் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட
முடிவினை ஆமோதித்து கையொப்பம் இட்டனர். மறுநாள் வெள்ளிக்கிழமை இது மிகச் சிறந்த முடிவு
என்பதை ஆமோதித்து இம்தாதி என்பவர் உரை நிகழ்த்தினார். ஆனால் மறுவாரம் வெள்ளிக் கிழமை
ஆன போது ஜாக்கின் மாநிலத் தலைவரும், மாவட்டத் தலைவரும் வந்து, இது ஜாக் பள்ளிவாசல், இங்கே நாங்கள் சொல்பவர்கள் தான் ஜும்ஆ நிகழ்த்த வேண்டும். இல்லையென்றால்
வெள்ளிக் கிழமைத் தொழுகையில் பிரச்சினை செய்வோம் என்று பள்ளிவாசல் நிர்வாகிகளை மிரட்டினர்.
மிரண்டு
போன பள்ளிவாசல் நிர்வாகிகள் தொழுகையில் பிரச்சினை வந்து விடக் கூடாதே எனப் பயந்து ஜமாத்தினர்களை
சமாதானப்படுத்தி அவர்களால் அனுப்பப்பட்டவரையே ஜும்ஆ நடத்த அனுமதித்தனர்.
இவர்களின்
இந்த அடாவடித் தனத்தைப் பொறுக்க முடியாத பள்ளிவாசல் நிர்வாகத் தலைவரும், துணைத் தலைவரும் எஸ்.கே.
என்பவரைச் சந்தித்து "எங்களுடைய பள்ளியில் பிரச்சனைகளை ஏற்படுத்தாதீர்கள். இதுவரை
அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் பள்ளிவாசலை எப்படி நடத்திச் சென்றார்களோ அப்படியே நாங்கள்
நடத்திச் செல்கிறோம். நீங்கள் பிரச்சினை செய்தால் அனைத்து இறைப் பணிகளும் நின்று போய்விடும்'' என்று எவ்வளவோ எடுத்துக்
கூறியும் "என் கையில் எதுவுமில்லை. எல்லாமே ஏர்வாடி சிராஜ் தான்'' என்று கூறி விட்டார்.
இயக்க வெறிபிடித்த இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்கள்
சிந்திக்கவில்லை.
இந்நிலையில்
தான் பள்ளிவாசல் தலைவர் தலைமையில் மீண்டும் பள்ளிவாசல் பொதுக்குழு கூட்டப் பட்டது.
அதில் "இப்பள்ளிவாசல் கடையநல்லூரைச் சார்ந்த குர்ஆன் ஹதீஸைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்குரியது.
இது எந்த இயக்கத்திற்கும் உரிய பள்ளியல்ல. இதுகாலம் வரை அப்துல் ஜலீல் மதனீ அவர்கள்
எவ்வாறு நடத்தி வந்தார்களோ அவ்வாறே நாமும் நடத்திச் செல்ல வேண்டும். பள்ளியில் எந்த
இயக்கம் சம்பந்தப்பட்ட போஸ்டர்களோ, விளம்பரமோ,
பெயர் பலகையோ, கல்வெட்டோ இருக்கக் கூடாது'' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு ஜமாத்தினரின் ஆதரவோடு அனைத்தும்
அப்புறப் படுத்தப்பட்டது..
பெயரளவில்
இருந்த "ஜாக்''கும் சென்று விட்டதை அறிந்த இயக்க வெறிபிடித்த ஜாக் மாநிலத் தலைவர் எஸ்.கே., மாவட்டத் தலைவர் சிராஜ், தமுமுக நெல்லை மாவட்டத்
தலைவர் சேட்கான், செயலாளர் பகத்சிங், கோவை அய்யூப், ஹாமித் பக்ரி, அப்துர் ரஹ்மான் ஷிப்லி இன்னும் பலர் அருகிலுள்ள ஊர்களைச் சார்ந்த அறுபதுக்கும்
மேற்பட்ட இரத்த வெறிபிடித்த த.மு.மு..க கைக்கூலிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு பள்ளிவாசலுக்குள்
நுழைந்து, ஜமாத்தினரை நோக்கி அசிங்கமான வார்த்தைகளைக் கூறி மிகப்பெரும் இரத்தக் களறிக்குத்
திட்டமிட்டனர்.
ஆனால்
ஜமாத்தினர் பொறுமை காத்ததால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அன்றைய பொழுது கழிந்தது. இது
பள்ளிக்குத் தொழவந்த அனைவருக்கும் தெரியும்.
பிறகு
ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் மார்ச் 15ம் தேதி வரை ஜாக்கினர் ஒரு
ஜும்ஆவும், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஒரு ஜும்ஆவும் என்ற வகையில் முடிவு செய்யப்பட்டது. இது
இதுவரை இல்லாத ஒரு நடைமுறையாகும். அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் இருக்கின்ற காலத்திலேயே
பள்ளிவாசல் ஜும்ஆ பயான்கள் அனைத்தும் எஸ்.எஸ்.யு. ஸைஃபுல்லா ஹாஜா அவர்களால் தான் பல
வருடங்களாக முடிவு செய்யப்பட்டு,
நடத்தப்பட்டு வருகிறது. பிறகு மார்ச் 20ம் தேதியன்று நடைபெற்ற
ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் இரு தரப்பாரும் கோர்ட்டில் சென்று
பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆர்.டி.ஓ. கூறி விட்டார். எனவே ஏற்கனவே பள்ளிவாசலை நிர்வாகம்
செய்து வந்த அல்மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியினர் ஜமாஅத்தினர், அப்துல்லாஹ் உமரி என்பவரை
நீக்கி விட்டுப் புதிய இமாமை நியமித்து தொழுகை நடத்த ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த
அப்துல்லாஹ் உமரி என்பவர் ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களும், அவருடைய அண்ணன் சேகனா
அவர்களும், அப்துந்நாசிர் அவர்களும் தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும், பிளேடால் கையை அறுத்ததாகவும்
காவல் துறையில் பொய்யாக வழக்கை பதிவு செய்து மருத்துவமனையில் இருபத்தி இரண்டு நாட்கள்
படுத்துக்கொண்டார்.
இந்நிலையில்
கோர்ட்டில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிய ஆர்.டி.ஓ. என்ன காரணத்தினாலோ
இரண்டு நாட்கள் கழித்து திடீரென்று "பள்ளிவாசல் ஜாக் அமைப்பிற்குரியது தான்'' என்று நியாயமற்ற தீர்ப்பை
ஆதாரங்களின்றி இரவோடு இரவாக பிறப்பித்தார். இவ்வாறு தீர்ப்பளிக்க ஆர்.டி.ஓ.க்கு எந்த
அதிகாரமும் இல்லை என்பதும், கோர்ட்டில் வழக்கு முடியும் வரை இருக்கும் நிர்வாகத்தின் அடிப்படையிலேயே இயங்க
வேண்டும் என்று முடிவு செய்வது தான் ஆர்.டி.ஓ.வின் பணி என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய
விஷயம்.
இதனால்
காவல் துறை உதவியோடு த.மு.மு.க வினர் பள்ளியில் நுழைந்து அங்கு இரவில் தங்கியிருந்த
சகோதரர் செய்யது அஹ்மது என்பவரை மிரட்டி வெளியேற்றி விட்டு பள்ளிவாசலின் அனைத்துப்
பூட்டுக்களையும் அறுத்தெறிந்து மாபெரும் அட்டூழியத்தையும் அநியாயத்தையும் அரங்கேற்றினர்.
தான் அழித்த தீர்ப்பு நியாயமற்றது என்பதை உணர்ந்த ஆர்.டி.ஓ. மறுநாள் உத்தரவை மாற்றி
இரு தரப்பாரும் நீதி மன்றத்தை அணுகி பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும், அது வரை பழைய நிர்வாகமே
தொடர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இதனால் பள்ளிவாசல் மீண்டும் நிர்வாகிகள்
வசம் வந்தது. இந்நிலையை தாங்கிக் கொள்ள முடியாத இரத்த வெறி பிடித்த ஜாக், த.மு.மு.க குண்டர்கள்
மிகப்பெரும் களேபரம் ஒன்றிற்குத் திட்டமிட்டு தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சுரண்டை, ஏர்வாடி ஆகிய பகுதிகளிலிருந்து
த.மு.மு.க மற்றும், ஜாக் அமைப்பைச் சார்ந்த குண்டர்களை கூலிக்கு அழைத்து வந்தனர். அவர்களின் நோக்கம்
பள்ளிவாசலை எப்படியாவது இழுத்து மூடி விடவேண்டும் என்பது தான். ஏனெனில் கடையநல்லூரில்
ஒரு சில புல்லுருவிகளைத் தவிர வேறு யாரும் ஜாக் என்ற அமைப்பில் கிடையாது. அவர்களில்
சிலர் தொழுகை அற்றவர்கள். சிலர் அறவே கொள்கையற்றவர்கள். அது போன்று தமுமுகவினரும் கடையநல்லூரில்
ஒன்றிரண்டு பேரைத் தவிர யாரும் கிடையாது.
இவர்களுக்குப்
பள்ளிவாசல் மூடப்படுவதால் எந்தப் பாதிப்பும் இல்லை. எனவே தான் "மகன் செத்தாலும், மருமகள் விதவையாக வேண்டும்'' என்ற கதையில் நமக்கில்லாத
பள்ளி வேறு யாருக்கும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் லுஹர் நேரத்தில் பள்ளிவாசலுக்குள்
நுழைந்த தென்காசியைத் சேர்ந்த ஐந்து த.மு.மு.க குண்டர்கள் அங்கு தொழுகைக்காக வந்திருந்த
உள்ளூர் சகோதரர்கள் மீது தேங்காய் கீறும் கம்பியால் அடித்து இரத்தக் களறியை உருவாக்கினர்.
இதனால் சேகனா அவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இரத்தத் துளிகள் இன்று வரை
பூட்டப்பட்ட பள்ளிவாசல் பாய்களில் ஆறாத வடுக்களாக சாட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் பல சகோதரர்கள் காயமடைந்தனர்.
காவல்
துறையினர் வந்த உடன் ரவுடிக் கும்பலைச் சேர்ந்த அவர்கள், தாங்கள் தாக்கப்பட்டது
போல் பாய்களில் படுத்துக் கொண்டும் தங்களின் சட்டைகளைக் கிழித்துக் கொண்டும் போலியாகக்
கத்தினர்.
உள்ளூர்
காவல் துறையினர் த.மு.மு.க புரோக்கர்கள் மூலம் கவனிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் பள்ளிக்கு
தொழுகைக்காக வந்தவர்கள். வெளியில் நின்ற உள்ளூர் மக்கள் உட்பட 28 பேரைக் கைது செய்தனர்.
பள்ளிவாசல் பூட்டப்பட்டது. இந்த இயக்க வெறியர்களின் முகங்களில் சந்தோஷம் பொங்கியது.
மேலும்
காவல் துறையினர் ஜாக் மற்றும் த.மு.மு.க அயோக்கியர்களின் கவனிப்பால், பள்ளிவாசல் நிர்வாகத்தினர்
மீதும், ஜமாஅத்தினர் மீதும் 7 பொய் வழக்குகளைப் பதிவு செய்தனர்.
ஜமாஅத்
நிர்வாகிகளின் ஒட்டு மொத்த முடிவில் அகற்றப்பட்ட முபாரக் பள்ளிவாசல், மர்யம் பள்ளிவாசல் கல்வெட்டுகளை
தவ்ஹீத் ஜமாத்தினர் அகற்றியதாக கதை கட்டி சில வழக்குகளும், கடப்பாரையால் தவ்ஹீத்
ஜமாஅத்தினர் தாக்கினார்கள் என்று ஒரு பொய் வழக்கும், அவதூறு நோட்டீஸ் விநியோகம் செய்தார்கள் என்று ஒரு புகாரும், அப்துல்லாவை அடித்தார்கள், பள்ளிவாசல் பொருட்களைத்
திருடினார்கள், மர்யம் பள்ளிவாசலில் வேலை செய்ய விடாமல் தடுத்தார்கள் போன்ற நடக்காத விஷயங்களைப்
பொய்யாகப் புனைந்து காவல் துறையைக் கவனித்து மொத்தம் 7க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளைப்
போட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின்
மீது சிறிதளவு கூட அச்சம் இல்லாமல் பொய்களையே மூல தனமாகக் கொண்டுள்ள இவர்களுக்கு மறுமையில்
அல்லாஹ் இது பற்றி விசாரிப்பானே என்ற பயம் கொஞ்சம் கூட இல்லையா?
"பூமியில்
குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர். கவனத்தில்
கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்
(அல்குர்ஆன்
2:11,12)
அல்லாஹ்வின்
பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில்
நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையும்
உண்டு.
(அல்குர்ஆன்
2:114)
EGATHUVAM MAY 2006