Apr 9, 2017

மறுவுலக நம்பிக்கை

மறுவுலக நம்பிக்கை

மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையையும் உள்ளத்தில் பதிய வைக்கின்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் அல்குர்ஆன் ஓர் அறிவார்ந்த அறிவியல் வாதத்தை வைத்தது.

பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும் போது அது செழித்து வளர்கிறது. இதை உயிர்ப்பிப்பவன் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 41:39

காய்ந்து போன ஒரு மாங்கொட்டையை மண்ணில் பதிக்கும் போது, அதற்கு உயிர் கொடுத்து, மரமாகத் தழைக்கச் செய்யும் அந்த இறைவன், மனிதனை மீண்டும் தழைக்கச் செய்ய மாட்டானா? என்ற கேள்வியை முன்வைத்தது.

மறுமையை மறுக்கும் மனிதனை நோக்கி மற்றொரு கேள்வியையும் எழுப்பியது.

மறு உலகு உண்டா? என்று வாதம் புரியும் மனிதனே! ஒரு நூறாண்டு காலத்திற்கு முன்னால் உன் வரலாறு என்ன? உனது ஊர் என்ன? உன் பெயர் என்ன? நீ எங்கிருந்து வந்தாய்?

குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இல்லாத        ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா?

அல்குர்ஆன் 76:1

இல்லாமையிலிருந்து வெளிவந்து, இப்போது ஒரு பொருளாகக் காட்சியளிக்கின்றாயா? அப்படிப்பட்ட உன்னை மரணிக்கச் செய்து, மீண்டும் உனக்கு உயிர் கொடுத்து எழுப்புவது எனக்குச் சிரமமா? என்ற கேள்வியைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் எழுப்புகின்றான்.

இதை இன்னொரு வசனத்தில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

"நான் இறந்து விட்டால் இனி மேல் உயிருள்ளவனாக எழுப்பப் படுவேனா?'' என்று மனிதன் கேட்கிறான். "முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்'' என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?

அல்குர்ஆன் 19:66, 67

எவராலும் பதிலளிக்க முடியாத இந்தக் கேள்விக் கணைகள் அன்றைய அரபக மக்கள் மத்தியில், மறுமை உலகம் உண்டு என்ற நம்பிக்கையைப் பதித்தது.

தூதரின் தூய வாழ்க்கை

அத்துடன் முஹம்மது என்ற தூதரின் வாழ்க்கையும் மறுமையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. உலக வாழ்வில் பொய் சொல்லாத ஓர் உத்தமர் மறுமை வாழ்வு விஷயத்தில் ஏன் பொய் சொல்லப் போகின்றார்? என்ற நல்லெண்ணமும் அவர்களிடத்தில் மறு உலக நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மறுமை என்றால் என்ன?

மறுமை நம்பிக்கை என்று சொல்லும் போது அப்படியென்றால் என்ன? என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு இன்னொரு உலகம் உருவாகும். அது தான் மறு உலகமாகும். அங்கு, இவ்வுலகில் தோன்றிய முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர் வரை அனைவரும் எழுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவர். அந்த விசாரணை இரு வகையில் அமைந்திருக்கும்.

1. மனிதன் இறைவனுக்கு எதிராகச் செய்த பாவங்கள்.

2. மனிதன், தனது சக மனிதனுக்கு எதிராகவும் இதர பிராணிகளுக்கு எதிராகவும் செய்த பாவங்கள்.

சுவனம்

மனிதன் இறைவன் இட்ட கட்டளைப்படி நடந்திருந்தால், சக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நன்மை செய்திருந்தால் அவனுக்குச் சுவனம்! அது நிரந்தரமான, அழியாத பெரு வாழ்வு! அங்கு மரணமே கிடையாது. அவன் என்றென்றும் அங்கு தங்கியிருப்பான்.

இவ்வுலகில் சக மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் நன்மை செய்ததற்குப் பரிசாக அங்கு உணவு, உடை, அழகிய மனைவிகள் என அனைத்து வசதிகளையும் அந்தச் சுவனத்தில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான்.

நரகம்

இறைவனின் கட்டளைக்கு மாற்றமாக மனிதன் நடந்திருந்தால், சக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் தீமைகள் செய்திருந்தால் அவனுக்கு நரகம் தண்டனையாக அளிக்கப்படும். அதில் என்றென்றும் நிலைத்திருப்பான். அங்கு அவனுக்கு அழிவே கிடையாது. காலம் காலமாக அந்த நரகத் தீயில் வெந்து பொசுங்கிக் கொண்டிருப்பான். அங்கு அவனுக்கு மரணம் கிடையாது.

இது தான் மறுமை நம்பிக்கை!

இந்த நம்பிக்கையை முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த மக்களுக்கு மத்தியில் ஊட்டினார்கள். மிருகமாய் வாழ்ந்த அந்த மனிதர்கள் மனிதர்களாக மாறினார்கள்.

இன்றளவும் சவூதியில் குற்றங்கள் குறைவாக நடப்பதற்கு அடிப்படைக் காரணம் மறுமை நம்பிக்கை தான். அந்த நாட்டில் உள்ள சட்டங்கள் ஒரு காரணம் என்றாலும் அதை விட வலிமையான காரணம் இந்த மறுமை நம்பிக்கை தான்.

ஏற்கனவே கூறியது போன்று சட்டங்கள் சாட்சியங்களை வைத்துத் தான் செயல்பட முடியும். இது சட்டத்திற்கே உரிய பலவீனம்!

அதனால் சட்டத்தை மட்டும் கொண்டு மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திருக்குர்ஆன் முனையவில்லை.

மக்களின் உள்ளங்களை மாற்றுவதைத் தான் அது முதல் இலக்காகக் கொண்டிருக்கின்றது.

மறுமையில் கிடைக்கும் தண்டனையைத் தான் மக்களிடத்தில் மாறி மாறி எடுத்துக் கூறுகின்றது. இன்னின்ன பாவத்திற்கு, குற்றத்திற்கு இன்னின்ன தண்டனை என்று குற்ற அட்டவணையை வகைப்படுத்தி அதற்குரிய தண்டனையைக் குறிப்பிட்டு விட்டது.

அந்தக் குற்றப் பட்டியலில் இறைவனுக்கு எதிரான பாவங்கள், மனிதனுக்கு எதிரான பாவங்கள் என்ற இரு வகைகள் உள்ளன. அவற்றில் முதல் வகையைப் பார்ப்போம்.

1. இணை வைப்பு, 2. கொலை, 3. வட்டி.

இந்த மூன்று பாவங்களும் கடவுளுக்கு எதிராகக் கொள்ளப்படும் மிகப் பெரும் பாவங்களாகும். இந்தப் பாவங்களுக்கு, குற்றங்களுக்கு மறுமை உலகில் நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் குறிப்பிட்டு விட்டது.

1. இணை வைப்பு

குர்ஆனின் பார்வையில் இணை வைப்பு தான் மிகக் கொடிய பாவம்!

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 31:13

இணை வைப்பு என்றால், உயிருள்ள, மரணித்த மனிதர்களையோ, வானவர்களையோ, ஜின், சூரியன், சந்திரன் இன்னபிற பொருட்களையோ கடவுளாக ஆக்கி, இறைவனை வணங்குவது போன்று அவர்களை வணங்குவதாகும்.

கொலை, வட்டி ஆகிய பாவங்களை இறைவன் நினைத்தால் மன்னிப்பான். ஆனால் இணை வைப்புக்கு அந்த மன்னிப்பும் கிடையாது என்று அல்லாஹ் உறுதியாகக் கூறிவிட்டான்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

அல்குர்ஆன் 4:48

அல்லாஹ்வின் படைப்புகளை அவனுக்குச் சமமாக ஆக்குகின்ற அந்த இணை வைப்பு எனும் பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அவனை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என்று இந்த வசனம் கூறுகின்றது.

நல்வழியும் தீய வழியும்

படைத்த அந்த ஓர் இறைவனை வணங்குவது தான் நல்வழியும் நேர்வழியும் ஆகும். படைத்தவனை விட்டு விட்டு, படைப்பினங்களை வணங்குவது தீய வழியாகும்; அதாவது சாத்தானிய வழியாகும்.

ஷைத்தான் என்பவன் தீய பாதைக்கு அழைக்கின்ற ஒரு சக்தி! அந்தத் தீய சக்தி மனிதனை உண்மையான ஏக இறைவனை வணங்காமல் மற்றவற்றை வணங்கச் செய்கிறான். அதனைத் தொடர்ந்து கொலை, கொள்ளை, மது, சூதாட்டம், விபச்சாரம் என்று எல்லா தீமைகளையும் செய்யுமாறு மனிதனைத் தூண்டுகிறான். அதனால் ஒரே இறைவனை வணங்காத, பல தெய்வங்களை வணங்குகின்ற நாடுகளில் எந்த நாட்டிலும் மது தடுக்கப்படவில்லை. ஆனால் ஒரே இறைவனை வணங்க வேண்டும்; சிலைகளை வணங்கக் கூடாது; நினைவுச் சின்னங்கள் எழுப்பக் கூடாது; சமாதிகள் கட்டப்படக் கூடாது என்ற சட்டங்களைக் கொண்ட சவூதியில் மது இன்று வரை தடுக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தைத் தூண்டுகின்ற ஆபாச நடனங்கள், சினிமாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன

மற்ற நாடுகளில் இது போன்ற பாவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. மது ஆறாக ஓடுகின்றது. அதற்கு அடிப்படைக் காரணமே அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவது தான். அதனால் தான் எல்லா தீமைகளும் ஒழிக்கப்பட வேண்டும் எனில் முதன் முதலில் இந்த இணை வைப்பு எனும் தீமை அழிக்கப்பட வேண்டும். எல்லா நன்மைகளும் ஏற்பட வேண்டுமானால், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குகின்ற நன்மை முதலில் நிலை நாட்டப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் குறியாகவும், நெறியாகவும் கொண்டுள்ளது.

அந்த அடிப்படையில் அது சவூதியில் தன் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது. சவூதி ஆட்சியாளர்கள் புனிதர்கள் அல்லர்! எனினும் அவர்கள் இந்த இணை வைப்புப் பாவத்தைச் செய்யாததற்கு ஒரேயொரு காரணம், நாளை மறு உலகத்தில் குற்ற அட்டவணைப் பட்டியலில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் இந்தப் பாவத்திற்கு நிரந்தர நரகம் என்பதால் தான்.

2. கொலை

இது மனிதன், சக மனிதனுக்கு எதிராகச் செய்யும் பாவம் என்ற பட்டியலிலும், இறைவனுக்கு எதிராகச் செய்யப்படும் பாவம் என்ற பட்டியலிலும் இடம் பெற்றுள்ள பெரும் பாவம் ஆகும். இந்தப் பாவத்திற்கும் நிரந்தரத் தண்டனை தான்.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:93

சவூதியில் குற்றங்கள் குறைவாக இருப்பதற்கு சட்டங்கள் ஒரு காரணம் என்றாலும் அதை விட முக்கியமான காரணம் மறுமை நம்பிக்கை தான். கொலை செய்தால் இந்த உலகத்தில் தண்டனை கிடைக்கும் என்பதை விட, மறு உலகத்தில் நிரந்தரத் தண்டனை கிடைக்கும் என்று ஒருவன் பயப்பட ஆரம்பித்தால் நிச்சயமாக இந்தப் பாவத்தைச் செய்யத் துணிய மாட்டான்.

தற்கொலை

பிறரை ஒருவர் கொலை செய்யக் கூடாது என்றால் ஒருவர் தன்னைத் தானே கொலை செய்வதும் கூடாது.

உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29)

இன்று உலகிலேயே முஸ்லிம்களிடத்தில் தான் தற்கொலை விகிதாச்சாரம் மிக மிகக் குறைவு.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் "கால் அப்' என்ற அமைப்பு தற்கொலை விகிதம் பற்றி 67 நாடுகளில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்துகின்றது.

அந்தக் கருத்துக்கணிப்பில் அது சந்திக்கின்ற ஆள் அந்த வாரத்தில் பள்ளிவாசலுக்கு, சர்ச்சுக்கு வணங்கச் சென்றாரா? என்று அவருடைய மதப்பற்றை மதிப்பீடு செய்கின்றது. அவர் மத சம்பந்தப்பட்ட அமைப்புகளில் தொடர்பு கொண்டிருக்கிறாரா? என்பதையும் விசாரித்து வெளியிட்ட புள்ளி விபர அறிக்கை இங்கு வெளியிடப் பட்டுள்ளது.



இங்கு இந்த ஆய்வு, குவைத் என்று குறிப்பிட்டிருப்பது அதை ஒரு இஸ்லாமிய நாடாகக் கருதித் தான். அந்தந்த நாட்டு மக்களின் மத நம்பிக்கையின் விகிதாச்சாரமும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

2005-2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் போது முஸ்லிம்களிடம் தற்கொலை விகிதம் மிக மிகக் குறைவு என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இதுபோன்ற ஏராளமான புள்ளி விபரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் வெளியிட இந்த இதழ் தாங்காது. இவ்வாறு முஸ்லிம்களிடம் தற்கொலை விகிதம் குறைவாக இருப்பதற்குக் காரணம் மறுவுலக நம்பிக்கை தான்.

கொலையைப் போன்றே தற்கொலை என்ற கொடிய பாவத்திற்கும் நிரந்தர நரகம் தான்.

தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

யார் ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக் கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டேயிருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 157

ஒரு முஸ்லிமுக்கு இவ்வுலகில் என்ன சோதனை ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்கிறான். அவன் தற்கொலை என்ற எல்லைக்கு ஒருபோதும் செல்வதில்லை.

"மகாராஷ்ட்ரா - விவசாயிகளின் மயானம்' என்ற தலைப்பில் பி.சயினாத் என்பவர், 14.11.2007 அன்று ஹிந்து நாளேட்டில் எழுதிய கட்டுரையில், சென்ற பத்தாண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 30,000 என்று குறிப்பிடுகின்றார்.

தற்கொலையைத் தடுக்க சட்டம் ஏது?

உலகில் எந்த அரசாலும் தற்கொலையை, சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? எவராலும் முடியாது. குர்ஆன் ஊட்டுகின்ற இந்த மறுமைச் சிந்தனையைத் தவிர வேறு எந்தவொரு சிந்தனையாலும் தடுக்கவே முடியாது.

இங்கு தான் குர்ஆன், தன்னை ஓர் இறைவேதம் என்பதை நிரூபித்துக் காட்டுகின்றது.

இறந்தவருக்காக மற்றவர்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக ஒரு தொழுகை இஸ்லாத்தில் உண்டு. அந்தத் தொழுகையைக் கூட, தற்கொலை செய்தவனுக்காக நடத்தக் கூடாது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் ரத்துச் செய்து விட்டார்கள். தற்கொலை என்பது இஸ்லாத்தில் எவ்வளவு பெரிய கொடிய பாவம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட சோதனையின் சோகத்தின் காரணமாக நொறுங்குவான். அப்போதெல்லாம் அவனுக்கு ஓர் ஆறுதல் அவசியம் தேவை. அந்தத் தேவையை இந்த அல்குர்ஆன் நிறைவேற்றுகின்றது.

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

அல்குர்ஆன் 13:28

வேதம் என்பது மனிதனை கவலையிலிருந்து காக்க வேண்டும். அந்தப் பணியைச் செய்வதற்குரிய ஒரே தகுதி அல்குர்ஆனுக்கு மட்டும் தான் உள்ளது. அது மட்டும் தான் உலகில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகத் திகழ்கின்றது என்பதற்கு தற்கொலைத் தடை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பயங்கரவாதம்

இன்று உலகம் சந்திக்கின்ற மிகப் பெரிய சோதனை, தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலாகும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னால் உள்ள காலத்திலும் நடத்திய இஸ்லாமியப் போர்களில் ஒரு போதும் தற்கொலை முறையைக் கையாண்டதில்லை. காரணம், தற்கொலை இஸ்லாத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என்பதால் தான்.

இந்தத் தற்கொலைத் தாக்குதல் படலம் தொடங்கியது நமக்குத் தெரிந்த வரையில் 20ம் நூற்றாண்டிலிருந்து தான்.

இந்தத் தற்கொலைத் தாக்குதலைத் தொடங்கி வைத்தது முஸ்லிமல்லாத தீவிரவாதிகள் தான். அவர்களைப் பார்த்து முஸ்லிம் பெயர் தாங்கிகளும் தற்கொலைத் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தனர். இதற்கு இஸ்லாமிய ஜிஹாத் என்றும் இவர்கள் பெயர் வைத்துக் கொண்டனர்.

சரியான இஸ்லாமியப் பார்வை, தற்கொலை இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று என்பது தான். இஸ்லாத்திற்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது.

இரண்டு நாடுகள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் போரில் கூட, பெண்களையும், குழந்தைகளையும், மதத் தலைவர்களையும் கொல்லக் கூடாது என்று கூறுவது இஸ்லாமிய மார்க்கம். அப்படிப்பட்ட தூய மார்க்கத்தை, அப்பாவிப் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தி, குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கும் இந்தக் கோரச் செயலுடன் தொடர்புபடுத்தி ஊடகங்கள் சித்தரிப்பது கொடுமையிலும் கொடுமை!

தற்கொலைத் தாக்குதல் நடத்துபவர்கள் ஒரு போதும் முஸ்லிம்கள் கிடையாது. அதனால் இதை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அழைப்பது அநியாயமும் அக்கிரமும் ஆகும். இஸ்லாம் தற்கொலையை ஆதரிக்கவில்லை. மற்ற மதங்கள் தான் ஆதரிக்கின்றன.

3. வட்டி

குர்ஆனின் பார்வையில் இதுவும் ஒரு கொடிய பாவமும், குற்றமும் ஆகும். கடவுளுக்கு எதிரான பாவங்கள், மனிதனுக்கு எதிரான பாவங்கள் என்ற இரண்டு பட்டியலிலும் இடம் பெறும் பாவங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்கு நிரந்தர நரகம் என்று குர்ஆன் பிரகடனப்படுத்துகின்றது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:275

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கந்து வட்டியை ஒழிப்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் வட்டியை வைத்தே வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயத்திற்கு எதிராக அந்தச் சட்டம் பாய்ந்ததால் அந்தச் சமுதாயம் அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்து, அந்தக் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தது. அந்த அளவுக்கு வட்டிக்காரர்களின் ஆதிக்கம் உள்ளது.

ஆனால் இங்கு இருப்பதைப் போன்று சவூதியில் வட்டிக் கடைகளோ, தனி நபர்களின் கந்து வட்டிகளோ நடத்தப்படவில்லை. இதற்குக் காரணம் அந்தப் பாவம் இறைவனால் மன்னிக்கப்படாது என்ற நம்பிக்கை தான்.

மற்ற பாவங்கள்

மது அருந்துதல்

இப்படி மறுமை நம்பிக்கை மூலமாக இந்த மூன்று பாவங்களை மட்டும் குர்ஆன் அகற்றியுள்ளது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இந்த மூன்று பாவங்களுக்கும் நிரந்தர நரகம் என்பதால் அவை மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவையல்லாமல் வேறு பாவங்களும் உள்ளன. அவற்றுக்கு நிரந்தர நரகம் என்று சொல்லப்படவில்லையே தவிர மற்றபடி நரகத் தண்டனை உண்டு. அவற்றில் ஒன்று மது அருந்துதல்.

மது அருந்தும் பாவம் சவூதியில் சட்டத்தின் மூலம் தடுக்கப் பட்டிருந்தாலும், மது வெள்ளமாகப் பாயும் மற்ற நாடுகளில் கூட முஸ்லிம்கள் மற்றவர்களைப் போன்று மது அருந்துவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் மறுமை அச்சம் தான்.

விபச்சாரம் செய்தல்

இதே போன்று தான் விபச்சாரம்!

சவூதியில் விபச்சாரத்திற்கு மரண தண்டனை! ஆனால் மற்ற நாடுகளில் அரசு அங்கீகாரத்துடன் விபச்சாரம் நடைபெறுகின்றது. விபச்சாரத்திற்கான அனைத்து வாசல்களும் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் விபச்சாரத்தின் பக்கம் செல்வதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் மறுமை நம்பிக்கை தான்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு எடுத்துக் காட்டுவது மிகவும் பொருத்தமாகும்.

புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (விபசாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடு தான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாக'' என்று கூறினார்கள்.

அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்று விட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடு தான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீளுவீராக'' என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்று விட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள். நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?'' என்று கேட்டார்கள். அவர், "விபச்சாரக் குற்றத்திலிருந்து' என்று விடையளித்தார். அப்போது அவர்கள், "இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், "இவர் மது அருந்தியுள்ளாரா?'' என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் விபச்சாரம் செய்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம்' என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர் தொடர்பாக மக்கள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், "அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றி வளைத்துக் கொண்டு விட்டது'' என்று கூறினர். வேறு சிலர், "மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து, "என்னைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள்' என்று கூறினார்'' என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) "மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!'' என்று வேண்டினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்'' என்று கூறினார்கள்.

பிறகு "அஸ்த்' குலத்தின் ஒரு கிளையான "ஃகாமித்' கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடு தான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீளுவாயாக'' என்று கூறினார்கள்.

அதற்கு அப்பெண், "மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "என்ன அது?'' என்று கேட்டார்கள். அப்பெண், "நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள்'' என்றார்.

நபி (ஸல்) அவர்கள், "நீயா (அது)?'' என்று கேட்டார்கள். அப்பெண் "ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும் வரை (பொறுமையாக இரு; பிறகு வா!)'' என்றார்கள். பிரசவிக்கும் வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக் கொண்டார்.

பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழுந்தை பிறந்து விட்டது' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப் போவதில்லை. பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை விட்டு விடவும் நாம் விரும்பவில்லை'' என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, "அவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம்

இவ்விருவரும் தப்பு செய்ததை யாரும் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் இவ்விருவரும் நபியவர்களிடம் வந்து, தாங்கள் குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்து, தண்டனையைப் பெற்றதற்குக் காரணம் என்ன? குர்ஆன் ஊட்டிய அந்த மறுமை நம்பிக்கை தான்.

இன்று இவ்வுலகம் விபச்சாரத்தின் பாதையைத் திறந்து விட்டதால் அதன் விளைவு ஹெச்.ஐ.வி. கிருமியின் அபாயகரமான தாக்குதல் ஆகும். இன்று எய்ட்ஸ் தாக்குதலுக்குள்ளான ஒரு தலைமுறையே தோன்றி விட்டது.

ஒன்றுமறியாத பிஞ்சுகள், பச்சிளம் குழந்தைச் செல்வங்கள் தங்களது பெற்றோர் செய்த பாவத்திற்காக இந்தக் கொடிய வைரஸைச் சுமக்கின்றனர். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு தவிக்கின்றனர். இப்படிப்பட்ட கொடிய பாவத்தில் எல்லா முஸ்லிம்களும் ஈடுபடாததற்கு அடிப்படைக் காரணம் மறுமை நம்பிக்கை தான். இறந்த பின்னர் நிகழவுள்ள இறைவனின் விசாரணை தான்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இருப்பினும் எடுத்துக் காட்டுக்கு இவை போதும் என்று நிறுத்திக் கொண்டு, மனிதன் சக மனிதனுக்கும் இதர உயிரினங்களுக்கும் செய்யும் தீமைகளைப் பார்ப்போம்.

மனித உரிமை மீறல்

உலகத்தில் மனித உரிமை மீறலுக்கான விசாரணை முடியும் முன்பே அந்தக் குற்றத்தைச் செய்த குற்றவாளி மரணித்து விடுவார். அதாவது, தான் செய்த குற்றத்திற்கு இந்த உலகத்தில் தண்டனை எதுவும் அனுபவிக்காமலேயே மரணித்து விடுவார். ஆனால் இஸ்லாத்தில் அப்படிக் கிடையாது. மனித உரிமை மீறலை நடத்திய குற்றவாளி மறுமையில் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். கொலை, கொள்ளை, வட்டி, பொருளாதார மோசடி, கடன் மோசடி, புறம், கோள் என்று மனித உரிமை மீறல் குற்றப் பட்டியலில் வருகின்ற அனைத்திற்கும் மறுமையில் விசாரணை உண்டு.

வாக்குறுதிக்கும் விசாரணை

சாதாரணமாக ஒருவர் மற்றொருவரிடம் உதவி கேட்கும் போது, "நாளை தருகிறேன்' என்று சொல்லி விடுவார். அப்படிச் சொல்லும் போது ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே சொல்வார். வாக்குறுதி கொடுத்தது போன்று மறு நாள் அந்த உதவியைச் செய்வதுமில்லை. அதைப் பற்றி அவர் ஒன்றும் கண்டு கொள்வதுமில்லை. இது மனிதர்களுடைய பார்வையில் சிறு பாவம். ஆனால் அல்லாஹ் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை.

செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

அல்குர்ஆன் 17:36

அடுத்தவனுடைய உள்ளம் புண்படும்படி எந்த வார்த்தை பேசியிருந்தாலும் அது அல்லாஹ்வுடைய ஏட்டில் பதியப்படுகின்றது.

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

அல்குர்ஆன் 50:17, 18

மிருக வதைக்கும் நரக தண்டனை

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இழைத்த கொடுமைகளுக்காக, மனித உரிமை மீறல்களுக்காக மட்டுமல்ல. மிருக வதைக்கும், மிருக உரிமை மீறலுக்கும் மறுமையில் தண்டனை வழங்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது - அல்லாஹ்வே மிக அறிந்தவன் - "நீ அதைக் கட்டி வைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை'' என்று அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: புகாரி 2365

இப்படியொரு விசாரணை மன்றத்தை நினைவூட்டி, மக்களிடம் மனித உரிமை மீறல் ஏற்படாமல் திருக்குர்ஆன் தடுக்கின்றது.

போர் நெறியும் புனிதக் குர்ஆனும்

ஒட்டு மொத்த உலகமும் புனிதக் குர்ஆன் கட்டளைப்படி நடந்திருந்தால் உலகில் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 2:190

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?

அல்குர்ஆன் 9:13

"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 22:39

சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்!

அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்!

அல்குர்ஆன் 2:191

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

அல்குர்ஆன் 22:40

போரி-ருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை!

(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:192

அநீதி இழைக்கப்படும் பலவீனர்களுக்காகவே போர்!

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

அல்குர்ஆன் 4:7

சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 8:61

மதத்தைப் பரப்ப போர் இல்லை!

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:256

போருக்கு இது போன்ற பல்வேறு நிபந்தனைகளை இஸ்லாம் விதிக்கின்றது. அப்படியே போர் தொடுத்தாலும், நான்கு புனித மாதங்களில் போரை நிறுத்தி விட வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:217

இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, நான்கு மாதங்கள் போரை நிறுத்தினால், அந்த இடைவெளி நிச்சயமாக சண்டை செய்யும் நாடுகளுக்கு மத்தியில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்தி விடும். பொதுவாக மனிதன் செய்யும் காரியத்தில் ஓர் இடைவெளி ஏற்படும் போது அதை எளிதில் மீண்டும் துவக்கி விடுவது கிடையாது. அல்குர்ஆன் இந்த உளவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஒரு சமாதானத்தை ஏற்படுத்துகின்றது. இதையும் மீறி சண்டை தொடர்ந்தால் போர் தாக்குதலில் ஒரு வரம்பை நிர்ணயிக்கின்றது.

தாக்குதலுக்கு ஒரு வரம்பும் வரையும்

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

அல்குர்ஆன் 16:126

உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:194

தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 42:40

போரின் போது புனிதக் குர்ஆன் கூறும் இந்த வரைமுறையை உலகில் எந்த ஒரு வேதமும், எந்த ஓர் அரசாங்கமும், ஆட்சியாளரும் கூறவில்லை. இந்த விதிமுறையை இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா மீறியதால் தான் உலக வரலாற்றில் மறக்க முடியாத ஹிரோஷிமா, நாகசாகி பேரழிவு நிகழ்ச்சி ஏற்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது நடுநிலை வகித்து வந்த அமெரிக்காவை வம்புக்கிழுப்பது போல், ஜெர்மனியின் நேச நாடான ஜப்பான், ஹிட்லரின் தூண்டுதலின் பேரில் அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தைத் தாக்குகின்றது. 1941ம் ஆம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி இந்தத் தாக்குதல் நடைபெற்றது. அந்தத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்கப் போர்க் கப்பல்களையும், 200 போர் விமானங்களையும் ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதில் 3000 அமெரிக்க வீரர்கள் பலியாயினர்.

அவ்வளவு தான்! அன்றே அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ஜப்பான் மீதும் அதைத் தூண்டி விட்ட ஜெர்மனி மீதும் யுத்தப் பிரகடனம் செய்தார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும் குதித்தது. பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து நேச நாடுகளாகக் களத்தில் குதித்தன.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, கால் டிப்பெட் என்பவரின் தலைமையில் 11 பேர் அடங்கிய விமானப் பணிக்குழுவினர் ஜப்பான் ஹிரோஷிமாவின் அயியாயி என்ற பாலத்தைத் தகர்ப்பதற்காக விண்வெளியில் வட்டமடிக்கின்றனர்.

அழிவு சக்தி அமெரிக்காவின் விமானம் ஹிரோஷிமாவின் வானில் வட்டமடித்து அணுகுண்டைப் போடுகின்றது. அந்த அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய் - குட்டிப் பையன் என்பதாகும். பாலத்தைக் குறி வைத்துப் போடப்பட்ட அந்த அணுகுண்டு, கொஞ்சம் தவறி 800 அடி தள்ளி விழுகின்றது.

அவ்வளவு தான்!

மூன்று மீட்டர் நீளம், முக்கால் மீட்டர் விட்டம், நான்கு டன் எடை கொண்ட அந்த அணுகுண்டு முட்டை ஓர் அக்கினிக் குஞ்சைப் பொறிக்கின்றது. யுரேனியம், புளூட்டோனியம் உரசலில் நியூக்ளியஸ் இரண்டாக உடைந்து அது நியூட்ரான்களாக அக்னி சிறகு விரித்து பூமியை நோக்கிப் பறந்து வருகின்றது.

அணுகுண்டு முட்டையிலிருந்து அக்னிக் குஞ்சு வெளியான போது அதன் முதல் வெப்பம் 10,000 டிகிரி செல்சியஸ். அந்த சாப்பறைவை சாவகாசமாகத் தரையிறங்கிய போது அதன் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ்.

அவ்வளவு தான். அந்த அக்னிக் குஞ்சு தின்று முடித்த உயிர்களின் எண்ணிக்கை ஒன்றே கால் லட்சம். சிதைந்தவர்கள் 30,524 பேர், காயம் பட்டவர்கள் 79,130 பேர், காணாமல் போனவர்கள் 3,622 பேர்.

ஆகஸ்ட் 9ம் தேதி பாக்ஸ் கார் என்ற விமானம், கேப்டன் ஸ்வீனி என்பவரது தலைமையில் ஜப்பானின் கோகுரா துறைமுகத்தின் மீது குண்டு போடுவதற்காகப் பறந்து கொண்டிருக்கிறது. அந்தக் குண்டின் பெயர் ஃபேட் பாய் - கொழுத்த பையன் அல்லது குண்டுப் பையன்.

கோகுரா துறைமுகம் சரியாகத் தெரியாததால் அந்தக் குண்டுப் பையனை நாகசாகி துறைமுகத்தில் நழுவ விடுகின்றார் அந்தக் கேப்டன். வெடித்த மறு கணத்திலேயே வெந்து போனவர்கள் 35,000 பேர். கதிரியக்கத் தாக்குதலில் கரிந்து போனவர்கள் 40,000 பேர்.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தல்

ஜப்பான் மட்டுமல்ல! மனித நேயமிக்க உலக மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த போது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமேன் சொன்ன அக்கினி வார்த்தைகள்:

"இது வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள்!''

வயோதிகர்கள், வாலிபர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் அழித்த ஒரு நாளை வரலாற்றில் முக்கியமான நாள் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறுகின்றார்.

பியர்ல் துறைமுகம் தாக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, அதற்கு ஈடான ராணுவ வீரர்களைத் தாக்கினால் நியாயம்! ஆனால் அதற்குப் பதிலாக லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்லும் பேரழிவை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

இப்போது குர்ஆன் கூறும் போர் நெறியைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

அல்குர்ஆன் 16:126

உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:194

உலகில் வேறு எந்த மதமாவது இப்படியொரு புனித நெறியைப் போதித்திருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள்.

மறுமை நம்பிக்கை தான் அவர்களை மனித மாணிக்கங்களாக ஆக்கியது. மறுமையில் தொடரும் மனித உரிமை விசாரணை அவர்களை இதுபோன்ற கொடுமைகள் நடத்துவதை விட்டும் தடுத்தது.

மனித உயிர் புனித உயிர்

அல்குர்ஆன் இறங்குவதற்கு முன்னால் பெண்ணினம் ஒரு பேயினம்; அது ஓர் ஈன இனம் என்று உயிருடன் புதைத்துக் கொண்டிருந்தவர்கள் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்த அந்த அரபு மக்கள்!

என்ன பாவத்துக்காக கொல்லப் பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது...

அல்குர்ஆன் 81:8

திருக்குர்ஆனின் இந்த வசனம் அவர்களின் கல் மனதைக் கரைய வைத்தது. இன்றைக்குப் பெண்ணினத்திற்குப் பெருமதிப்பு கொடுக்கும் பேரன்பு மிக்கவர்களாக மாறி விட்டனர். அப்படி மனித உயிருக்கு மாண்பும், மரியாதையும் அளிக்கும் ஒரு சமுதாயமாக இஸ்லாமியச் சமுதாயம் பரிணமித்து விட்டது. இதற்கு அடிப்படையாக அமைந்தது மறுமை உலக நம்பிக்கை தான்.

பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் அந்த அரக்கர்களை, ஓர் இருபத்து மூன்று ஆண்டு கால வரலாற்றில் இரக்க குணமுடையவர்களாக மாற்றிய அல்குர்ஆன், அதைப் போதிக்கும் தூதர் வழியாக மனித உயிரைப் பற்றிய பிரகடனத்தை அறிவிக்கச் செய்கின்றது. அதன்படி அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது அறிவிக்கும் பிரகடனத்தைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடை பெறும்' ஹஜ்ஜின் போது (ஆற்றிய உரையில்), "மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், "இதோ இந்த (துல்ஹஜ்) மாதம் தான்'' என்று பதிலüத்தார்கள். (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள், "மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், "இதோ இந்த ஊர் ("மக்கா')தான்'' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், "இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள் தான்'' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்'' என்று கூறிவிட்டு, "நான் உங்கüடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா?'' என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், "ஆம்'' என்று நபி (ஸல்) அவர்களுக்கு பதிலüத்தனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: புகாரி 6785

மாநபியின் இந்த வேண்டுகோளை முஸ்லிம் சமுதாயம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு சிலர் மீறியிருக்கலாம். ஆனால் மேற்கத்தியர்கள் மீறியது போன்று மீறியதில்லை. இதற்கு எடுத்துக் காட்டாக இரண்டு உலகப் போர்களைக் கூறலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சியில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் போட்டு போட்டு முன்னேறின. ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து குவித்தன. இந்தப் பொருட்களை விற்பனை செய்ய பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல காலனி நாடுகள் சந்தைகளாக விளங்கின. ஜெர்மனிக்கு அப்படிப்பட்ட காலனி நாடுகள் எதுவும் இல்லை.  எனவே பிரஞ்சு, பிரிட்டானிய காலனி நாடுகளில் சிலவற்றையாவது கைப்பற்றினால் தான் ஜெர்மனியின் தொழில் முன்னேற்றம் சாத்தியம்; இதற்கு உலகப் போரைத் தொடங்குவது தான் வழி என்று ஜெர்மன் கருதியது. இதனால் ஆஸ்திரியாவுக்கும், செர்பியாவுக்கும் இடையே ஏற்பட்ட போரை உலகப் போராக மாற்றியது. செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யா போரில் குதித்தது அதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

1914ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தொடங்கி, 1918, நவம்பர் 11 அன்று முடிவடைந்த முதல் உலகப் போரின் இழப்புகளை வரலாற்றாசிரியர்கள் பின்வருமாறு கணித்துள்ளனர்.

இறந்து போன பொது மக்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம்.

ராணுவ வீரர்கள் நாடு வாரியாக,

ஜெர்மனி - 20,00,000

ரஷ்யா - 17,00,000

பிரான்ஸ் - 13,60,000

ஆஸ்திரியா, ஹங்கேரி - 12,00,000

பிரிட்டன் - 7,60,000

இத்தாலி - 6,50,000

துருக்கி - 3,75,000

பிரிட்டிஷ் சாம்ராஜ்ய நாடுகள் - 2,50,000

ஐக்கிய அமெரிக்கா - 1,26,000

இதில் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், காயம் பட்டவர்கள் ஆகியோரின் தொகை சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டும் மூன்றே முக்கால் கோடியைத் தாண்டும்.

51 மாதங்கள் நடைபெற்ற இந்த முதல் உலகப் போர் ஜெர்மனியின் சரணாகதியுடன் முடிவடைந்தது. மன்னர் கெய்ஸர் முடி துறந்தார். உலகத்தையே ரணகளமாக்கிய சர்வாதிகாரி ஒழிந்தார் என்று உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் அது தற்காலிகமானது தான் என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓர் உலகப் போர் தொடங்கியது. கெய்சரை விடப் பன்மடங்கு இனவெறியைத் தூண்டி விட்டுப் பேசி ஹிட்லர் இதைத் தொடங்கி வைத்தார்.

1945ம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனில் 2 கோடி பேர், போலந்து நாட்டில் 60 லட்சம் பேர் உட்பட உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்த ஐந்து கோடிப் பேர் பலியாயினர்.

இந்தப் போர்கள் உலகப் போர்கள் என்றால் சில ஆண்டுகளுக்கு முன் இராக்கின் மீது அமெரிக்கா தொடுத்த போர் ஓர் அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போராகும். ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி, இறையாண்மை மிக்க ஒரு அரசாங்கத்தின் மீது அமெரிக்கா நடத்திய காட்டுமிராண்டித்தனமான ஆதிக்கப் போர். இதற்கு அது காட்டிய காரணம், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்பது தான்.

மார்ச் 20ம் தேதி, 2003ம் ஆண்டு அமெரிக்க, பிரிட்டன் படைகள் இராக்கின் மீது படையெடுத்தன. ஆனால் இதுவரை அந்தப் பேரழிவு ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை.

இறுதியில் இராக் அதிபர் சதாமைக் கைது செய்து அவரைத் தூக்கில் போட்டு, அமெரிக்கா தனது வெறியைத் தணித்துக் கொண்டது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என சுமார் 6 லட்சம் மக்களைக் கொன்று குவித்தது.

லட்சக்கணக்கான மக்களை முடமாக்கியது.

லட்சக்கணக்கானோரை அகதிகளாக்கியது.

லட்சக்கணக்கான குழந்தைகளை அனாதைகளாக்கியது.

லட்சக்கணக்கானோரை சிறைபிடித்து சித்ரவதை செய்தது.

இவ்வாறு அமெரிக்க, பிரிட்டானியர்கள் செய்த இந்த அராஜகப் போர் இருபத்தோறாம் நூற்றாண்டின் மாபெரும் மனித உரிமை மீறலாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் எங்கேனும், ஏதேனும் ஓர் இடத்தில்; இது போன்ற மனிதப் பேரழிவுகளைக் காட்ட முடியுமா? இதற்குக் கடிவாளமாக, கவசமாக இருந்து இஸ்லாமிய சமுதாயத்தைக் காத்துக் கொண்டிருப்பது திருக்குர்ஆன் தான். அது ஊட்டுகின்ற, போதிக்கின்ற மறு உலக நம்பிக்கை தான். இப்படிப்பட்ட நம்பிக்கை மூலமாகத் தான் உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் அனைத்துத் தீமைகளுக்கும் தீர்வு காண முடியும்.

இன்று உலகை சீர்கேட்டிற்குக் கொண்டு போய்க் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சனைகள்:

1. தேசிய வாதம்

உலகில் நடக்கும் அனைத்துப் போர்களுக்கும் இது ஒரு மூல காரணமாக அமைந்துள்ளது.

2. இனவாதம் மற்றும் தீண்டாமை

இன்றைக்கும் இந்தியா தீண்டாமை எனும் தீயில் வெந்து கொண்டு தான் உள்ளது. இன்னும் ஒரு சில ஜாதியினருக்கு, தேனீர் விடுதிகளில் தனிக் குவளைகளில் தேநீர் பரிமாறப்படும் அவல நிலை! ஒரு சில ஜாதியினர் இன்னும் மலம் வாரும் பரம்பரைத் தொழிலை விட்டு மாறவில்லை. இப்படியொரு தீண்டாமை இந்தியாவில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

வளர்ந்து விட்ட அமெரிக்காவிலும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராக வெள்ளையர் இனம் இந்தச் சாக்கடை நீரை அள்ளி வீசுகின்றது. கருப்பர், வெள்ளையர் சாதியச் சண்டை அறிவியலின் உச்சியிலிருக்கும் அமெரிக்காவிலும் அகன்றபாடில்லை.

3. மொழிவாதம்

இலங்கையில் இந்த மொழிவாதம் தான் இதுவரை 60,000க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக அமைந்தது. ஒன்றுபட்ட இந்தியாவிலேயே கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் தண்ணீர் தகராறு!

இப்படிப்பட்ட வேற்றுமைகளை எல்லாம் இந்தக் குர்ஆன் ஒரேயடியில் அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கி விடுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இதையெல்லாம் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. மறுமை அச்சத்தின் மூலமாகத் தான் முடியும் என்பதை திருக்குர்ஆன் இந்த நூற்றாண்டு வரை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கின்றது.

இன்று உலகத்தில் இதுவரை தீராத, தீர்க்க முடியாத இதரப் பிரச்சனைகளுக்கும் இந்தத் திருக்குர்ஆன், மறுமை நம்பிக்கை எனும் ஒரு மாமருந்தை வைத்திருக்கின்றது.

ஆட்சி அதிகாரத்தில், நிர்வாகத் துறையில் லஞ்சம், ஊழல்

நீதித்துறையில் ஊழல்

இன்று நிர்வாகத் துறையில் லஞ்சம், ஊழல் ஏற்பட்டால் அதை நீதித் துறை சரி செய்யும். மங்கைக்கு சூதகம் ஏற்பட்டால் கங்கையில் குளிக்கலாம்; அந்த கங்கையே சூதப்பட்டால் என்ன செய்ய முடியும்? என்று கேட்பார்கள். அது போன்று நிர்வாகத் துறையைச் சரி செய்ய வேண்டிய நீதித்துறை உலகெங்கிலும் லஞ்ச லாவண்யத்தில், ஊழலில் ஊறிப் போய்விட்டது.

நிதியை வாங்கி நீதியை விற்கும் நீர்த்துப் போன நீதித்துறை! இதற்கு அடிப்படைக் காரணம், சட்டம் என்ன செய்யும் என்ற தைரியம் தான். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து, "மனிதா! இறந்த பிறகு ஒரு விசாரணை இருக்கின்றது; அங்கு வா! அதிலிருந்து நீ தப்ப முடியாது' என்று திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கின்றது.

போதை மருந்து கடத்தல்

கலப்படம்

பதுக்கல்

பெண் சிசுக் கொலை

சினிமா, ஆபாசம்

ஓரினச் சேர்க்கை

ஆட்சியாளர்களின் அராஜகம்

அடுத்த நாட்டு ஆக்கிரமிப்பு

விவாக ரத்து

வரதட்சணை

பாகப்பிரிவினையில் மோசடி

வயதான பெற்றோரைப் புறக்கணித்தல்

நில மோசடி

சூதாட்டம், லாட்டரி

புகை பிடித்தல்

தனிநபர் ரகசியத்தை அம்பலப்படுத்துதல்

கற்பு நெறியுள்ள பெண்கள் மீது அவதூறு பரப்புதல்

சைபர் கிரைம்

இன்னும் என்னென்ன பாவங்கள், குற்றங்கள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் திருக்குர்ஆன் மட்டுமே தீர்வைத் தருகின்றது.


இஸ்லாம் இவற்றுக்கு இரு விதமான தீர்வுகளைத் தருகின்றது. ஒன்று சட்டத்தின் அடிப்படையில்! மற்றொன்று, மறுமை அச்சத்தின் அடிப்படையில்!

EGATHUVAM SEP 2008