அல்குர்ஆன் விடுக்கும் அறைகூவல்
இதோ ரமளான் மாதம் வந்து விட்டது. இந்த ரமளான் மாதத்தில் தான்
திருக்குர்ஆன் இறங்கியது. அந்த மாதத்தில் இறங்கியதால் தன்னை நம்பிய மக்களை இந்தத் திருக்குர்ஆன்
நோன்பு நோற்கச் சொல்கிறது.
அதிகாலை 4 மணியிலிருந்து அந்தி மாலை 6 மணி வரை உணவு சாப்பிடாமல், தண்ணீர்
அருந்தாமல்,
கணவன் மனைவியர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருக்கச் செய்கின்றது.
இதன் மூலம் அது அவர்களுக்கு உணர்த்துகின்ற பாடம் என்ன?
தாகம் ஏற்படுகின்றது; ஆனால் ஒரு
முஸ்லிம் தண்ணீர் அருந்துவதில்லை.
பசிக்கின்றது; ஆனால் அவர்
உணவைச் சாப்பிடுவதில்லை.
அருகிலேயே மனைவி இருக்கிறாள்; ஆனால்
அவளுடன் இல்லறத்தில் ஈடுபடுவதில்லை.
ஏன்? அல்லாஹ் பார்க்கிறான் என்ற பயம்
தான்.
இந்தப் பயம் தான் அவருக்கு முன்னால் இருக்கும் அவருக்கே சொந்தமான
நீரை, அவருக்குச் சொந்தமான உணவை உட்கொள்ளாமல் தடுத்தது. இந்தப் பயம்
தான் அவர் திருமணம் செய்து கொண்ட, அவருக்குச் சொந்தமான அவரது மனைவியை
அனுபவிக்க விடாமல் தடுத்தது.
தனக்குச் சொந்தமான பொருளையே அல்லாஹ் பார்க்கிறான் என்ற பயத்தில்
அனுபவிக்காமல் இருக்கும் போது அடுத்தவர் பொருளை அனுபவிக்கலாமா? என்ற பாடத்தை இந்த நோன்பு அவருக்கு அளிக்கின்றது.
நோன்பின் போது யாரும் பார்க்காமல் இருந்தாலும் அவர் சாப்பிடுவதில்லை.
ஏன்? அல்லாஹ் பார்க்கிறான்; மனிதர்கள்
யாரும் இந்த விஷயத்தில் தன்னைத் தண்டிக்கப் போவதில்லை என்றாலும் நாளை மறுமையில் அல்லாஹ்
தண்டித்து விடுவான் என்ற பயம் ஏற்படுகின்றது. இந்த சார்ஜைத் தான் ரமளான் மாதத்தில்
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் திருக்குர்ஆன் ஏற்றுகின்றது. இது ஒரு வருடம் ஆனதும் சார்ஜ்
இறங்கி விடாமல் இருப்பதற்காக மறு வருடம் ரமளானில் மீண்டும் ஏற்றுகின்றது.
இவ்வாறு மனிதன் தன் ஆயுட்காலம் முடிகின்ற வரை அல்லாஹ்வைப் பயந்து
வாழச் செய்கின்றது.
அல்லாஹ்வுக்கு எதிரான பாவங்களை, குற்றங்களைச் செய்யாமல் அவன் மனது பக்குவப்படுகின்றது. அதைத்
தொடர்ந்து,
சக மனிதனுக்கு எதிரான, பிற உயிரினங்களுக்கு
எதிரான பாவங்களைச் செய்ய விடாமல் தடுக்கின்றது.
மனித இனத்தில் ஏற்படுகின்ற அத்தனை பிரச்சனைகளையும் இறையச்சம், மறுமை நம்பிக்கை, மறு உலக விசாரணை
மூலம் தடுத்து,
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகின்றது.
அப்படிப்பட்ட தன்மை உலகின் தன்னிகரற்ற வேதமான அல்குர்ஆனுக்கு
மட்டும் தான் இருக்கின்றது என்பதால் தான் அது உலக மக்களை நோக்கி, தன் போன்ற திட்டத்தை யாராலும் உருவாக்க முடியுமா? என்று அறைகூவல் விடுக்கின்றது. இதன் மூலம், தான் மட்டுமே இறைவேதம் என்று நிரூபித்து நிற்கின்றது.
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம்
கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர்
அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர் களையும்
அழைத்துக் கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 2:23
சவால் விட்டதுடன் நிற்காமல், உலக
மக்களின் பிரச்சனைகளை, தான் மட்டுமே தீர்த்து வைப்பேன்; அவர்களுடைய சுமைகளை நீக்குவேன் என்று சான்று பகர்ந்து, உறுதிமொழியையும் அது தருகின்றது.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம்
உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை
அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார்.
தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார்.
தூய்மை யற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார்.
இவரை நம்பி,
இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும்
செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே
வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 7:157
EGATHUVAM SEP 2008