Apr 9, 2017

ஜாக் பின்பற்றுவது இஸ்லாமியக் காலண்டரல்ல! இஸ்ரேலியக் காலண்டரே!

ஜாக் பின்பற்றுவது இஸ்லாமியக் காலண்டரல்ல! இஸ்ரேலியக் காலண்டரே!

14.07.08 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாக் அமைப்பிற்கும், கேரளாவைச் சேர்ந்த நத்வத்துல் முஜாஹிதீன் என்ற அமைப்பிற்கும் இடையே பிறை பற்றிய விவாதம் கோவையிலுள்ள மஸ்ஜிதுல் முஜாஹிதீனில் நடைபெற்றது.

கேரள நத்வத்துல் முஜாஹிதீன் அமைப்பு கொள்கையில் ஜாக்கைப் போன்றது தான். குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டைத் தவிர்த்து நபித்தோழர்கள் என்ற ஓர் அடிப்படையையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இவ்விரு இயக்கங்களும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றன.

அப்படி ஒத்த கருத்தைக் கொண்ட இவ்விரு அமைப்புகளுக்கிடையே பிறை பற்றிய விவாதம் நடந்திருக்கின்றது. ஒத்த கருத்தைக் கொண்ட அமைப்புகளுக்கு இடையிலேயே விவாதம் நடைபெற்றதை வைத்துப் பார்க்கும் போது, பிறை விஷயத்தில் ஜாக் ஓர் ஆதரவற்ற அனாதை என்பது அம்பலமாகியுள்ளது.

ஜாக்கின் கருத்துக்களுக்கும் காலண்டருக்கும் கை கொடுப்பது யூதவிசமும், அதன் கிளையான ஷியாயிஸமும் தான் என்பதை நாமல்ல! நத்வத்துல் முஜாஹிதீன் அமைப்பே நன்றாகத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

முதல் பிறையா? மூன்றாம் பிறையா? சிவகாசி காலண்டர் அடிப்படையா? என்று பிறை பார்த்து நோன்பு வைப்பவர்களை, பெருநாள் கொண்டாடுபவர்களைக் கேலி செய்து சுவரொட்டிகள் ஒட்டி, தங்களை அறிவு ஜீவிகள் போலவும், இருபத்தோறாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் சிகரங்கள் போலவும் ஜாக் வர்க்கம் பீற்றியும் பிதற்றியும் கொள்கின்றது.

இவர்கள் முதல் பிறையா? மூன்றாம் பிறையா? என்று கேலி செய்வது முஸ்லிம்களை மட்டுமல்ல! முஹம்மது (ஸல்) அவர்களையும் தான். ஏனெனில் அவர்கள் தான் பிறை பார்த்து நோன்பு      வையுங்கள் என நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.

"பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1906

அவ்வாறு பிறை பார்த்து நோன்பு வைக்கும் போது, சமயத்தில் முதல் நாளன்று நமக்குத் தெரியும் பிறை இரண்டாம், மூன்றாம் பிறை போன்று தெரியும். இந்தப் பிறையைப் பார்த்து விட்டு முஸ்லிம்கள், "நாம் ரமளானில் ஒரு நாளை அநியாயமாக விட்டு விட்டோமே!' என்று எண்ணத் தலைப்படுவார்கள். பெருநாள் கொண்டாட வேண்டிய நாளில் நோன்பு நோற்று விட்டோமே என்று கவலைப்படுவார்கள். அவ்வாறு கவலைப்படக் கூடாது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதன் நக்லா என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறை பார்க்க முயன்றோம். (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாவது இரவின் பிறை என்றனர். மற்றும் சிலர் இரண்டாவது இரவின் பிறை என்றனர். நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிக் கூறினோம். அதற்கவர்கள் "நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்?'' என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோம் என்று விடையளித்தோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "பிறையைப் பார்க்கும் வரை (முதல்) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவுக்குரியது தான்'' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபுல்பக்தரீ

நூல்: முஸ்லிம்

எனவே ஜாக் ஒட்டியுள்ள இந்தச் சுவரொட்டிகள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸைத் தான் கேலியும் கிண்டலும் செய்கின்றன. தூதர் நபி (ஸல்) அவர்களின் இந்தக் குர்ஆனிய கட்டளைக்கு எதிராகக் குதர்க்க வாதமும் கோணல் வசனமும் பேசுகின்றார்கள். இதற்கு அல்லாஹ்வே பதில் சொல்கின்றான்.

வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:85

ஆம்! அல்லாஹ் இவர்களை இவ்வுலகிலும், மறுவுலகிலும் இழிவுபடுத்தப் போவதாகக் கூறுகின்றான். கோவையில் இவர்களுக்கும், கே.என்.எம். (கேரள நத்வத்துல் முஜாஹிதீன்) அமைப்பினருக்கும் நடந்த விவாதத்தின் போது இந்த அறிவுஜீவிகளை, அறிவியல் சிகரங்களை (?) அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டான்.

ஏகத்துவம் ஏற்கனவே இவர்களைப் பற்றி, "இவர்கள் பின்பற்றுவது தூதரையல்ல! யூதரைத் தான்'' என்று துல்லியமாகக் கூறியுள்ளது. ஏகத்துவம் முன்மொழிந்த அதே கருத்தை, இவர்கள் பின்பற்றுவது யூதரைத் தான் என்ற கருத்தை கே.என்.எம். தெளிவாக இப்போது வழிமொழிந்துள்ளது.

யூதவிஷம் இவர்களிடம் ஏறிப் போனதால் தான், முதல் பிறையா? மூன்றாம் பிறையா? என்று சுவரொட்டிகள் மூலம் ஹதீஸைக் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.

நம்மைப் பார்த்து சிவகாசி காலண்டரா? என்று கேட்கிறார்கள். பிறை விஷயத்தில் யாரும் காலண்டரைப் பார்த்து முடிவு செய்வது கிடையாது. எத்தனையோ முறை நமது நோன்பு மற்றும் பெருநாட்கள் காலண்டருக்கு மாற்றமாக, கண்ணில் பிறை கண்ட அடிப்படையில் அமைந்திருக்கின்றது. இதை யாருமே மறுக்க முடியாது.

"உமர் (ரலி) அவர்கள் காலண்டர் வைத்திருந்தார்கள். ஆனால் நோன்பு பிடிப்பதற்கும், பெருநாள் கொண்டாடுவதற்கும் அவர்கள் காலண்டரை ஆதாரமாகக் கொள்ளவில்லை. அதற்கு அவர்கள் ஆதாரமாகக் கொண்டது பிறை பார்ப்பதைத் தான்'' என்று கே.என்.எம். ஆலிம் அப்துர்ரஹ்மான் ஸலபீ அவர்கள் இந்த விவாதத்தில் குறிப்பிட்டது போல்,

நாம் இன்று சிவகாசி காலண்டரை அல்ல! வேறு எந்தக் காலண்டரையும் நோன்பு, பெருநாளுக்கு ஆதாரமாகக் கொள்ளவில்லை. நாம் ஆதாரமாகக் கொள்வது பிறையைப் பார்த்துத் தீர்மானிக்கும் இஸ்லாமியக் கணக்கை மட்டும் தான்.

இதைத் தான் இவர்கள் சிவகாசி காலண்டர் என்று கிண்டல் செய்கிறார்கள்.

சரி தான்! யூத ரசம் ஊட்டப்பட்ட இவர்களுக்கு இஸ்லாமியக் கணக்கு கிண்டலாகத் தான் தெரியும். ஜாக் பருகியிருக்கும் யூத ரசத்தையும், அதற்கு அது பூசுகின்ற இஸ்லாமிய ரசாயன சாயத்தையும் கே.என்.எம். மவ்லவி அப்துர்ரஹ்மான் ஸலபி மிகச் சரியாகவே கிழித்துக் காட்டி விட்டார்.

"முதன் முதலில் இந்தக் காலண்டரை அறிமுகப்படுத்தியவன் அப்துல்கரீம் பின் அபில் அவ்ஜா என்ற நாத்திகன் தான். பிறையைக் கண்ணால் பார்க்கத் தேவையில்லை. பிறையைக் கணித்தால் போதுமானது என்ற யூதக் காலண்டரைத் திணித்தவன் இந்த நாத்திகன் தான். இதைத் தான் (யூதத்தின் கள்ளப்பிள்ளையும் செல்லப் பிள்ளையுமான) ஷியாக்களின் இமாம் ஜஃபர் சாதிக் தங்களது காலண்டராக ஆக்கிக் கொண்டார். இந்த நாத்திகன் இந்த அக்கிரமத்தை மட்டும் இஸ்லாத்தில் நுழைக்கவில்லை; நான்காயிரம் பொய்யான ஹதீஸ்களையும் நுழைத்திருக்கிறான்.

இத்தகைய துரோகிக்கு கூஃபாவின் கவர்னர் அபூஜஃபர் மரண தண்டனை என அறிவித்தார். மரண தண்டனைக்குள்ளான இந்த நாத்திகன் சொன்ன பதில்:

எனக்கு எப்படி இவர் மரண தண்டனை விதிக்க முடியும்? நான் இறக்காதவன். சாகா வரம் பெற்றவன். நான் நுழைத்த நாலாயிரம் ஹதீஸ்கள், நான் அழியாதவன் என்பதைக் காலாகாலம் நிரூபித்துக் கொண்டிருக்கும்.

அவை ஹலாலை ஹராமாக்குபவை. ஹராமை ஹலால் ஆக்குபவை. அவற்றில் ஒன்று தான் நோன்பன்று பெருநாள் கொண்டாடுவதும், பெருநாளன்று நோன்பு நோற்பதும் ஆகும்.

இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் ஸலபி அவர்கள் ஜாக்கின் வேஷத்தைக் கலைத்தெறிந்தார்.

மரண தண்டனை பெற்ற நாத்திகவாதி உதிர்த்த நச்சுக் கருத்துக்கள், கக்கிய விஷ வாயுக்கள் அடிப்படையில் தான் ஜாக் இந்தக் குழப்பத்தை, அதாவது பெருநாளன்று நோன்பையும், நோன்பன்று பெருநாளையும் சமுதாயத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை முஸ்லிம்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேரள அணியினரின் அற்புதக் கேள்வி

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட கே.என்.எம். மார்க்க அறிஞர் ஜக்கரிய்யா சுலாஹி அவர்கள், "ஜாக்கின் காலண்டர் யூதக் காலண்டர் தான். அதை நான் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். யூதக் காலண்டரில் 31 வரும். இந்த விஷயத்தைத் தவிர மற்றவைகளில் ஜாக் காலண்டர், இஸ்ரேலியக் காலண்டரை ஒத்திருக்கின்றது'' என்று குறிப்பிட்டார்.

அத்துடன் அந்த அணியினர் ஓர் அற்புதமான கேள்வியையும் முன்வைத்தனர்.

பிறைக் கணிப்பிற்கு அறிவியலைப் பயன்படுத்துகின்ற நீங்கள் ஏன் இத்தாவுக்கு இதே அறிவியல் அளவுகோலைப் பயன்படுத்த மறுக்கிறீர்கள்? அறிவியல் வளர்ந்து விட்டது என்று கூறி அங்கும் அதைப் பயன்படுத்தி மூன்று மாத கால இத்தாவை மிச்சம் பிடிக்கலாம் அல்லவா? என்ற கருத்தில் ஒரு கேள்வியையும் முன்வைத்தனர்.

கலந்துரையாடலா? கழன்ற உரையாடலா?

ஜாக் தரப்பில் சென்ற அணியினரில், கமாலுத்தீன் மதனியைத் தவிர மற்றவர்கள் கூறு கெட்டவர்கள். இதைக் கவனத்தில் கொண்டே கமாலுத்தீன் மதனி ஆரம்பத்திலேயே மிக ஜாக்கிரதையாக, "இது ஒரு கலந்துரையாடல் தான். விவாதம் அல்ல'' என்பதாகத் தன் அறிமுக உரையில் குறிப்பிடுகின்றார்.

விவாதத்திற்கு, கலந்துரையாடல் என்று ஜாக் தரப்பில் கூறப்பட்டாலும் இது ஜாக்கிற்குத் தோல்வியாகவே முடிந்தது.

கே.என்.எம். மார்க்க அறிஞர்களின் கூரான விவாதத்திற்கு, ஜாக்கினர் கூறான பதிலைத் தரவில்லை.

ஒரு கட்டத்தில் கே.என்.எம். அணியினர், "கமாலுத்தீன் மவ்னம் காப்பது வியப்பளிக்கின்றது' என்றும் குறிப்பிட்டனர்.

இதன் பின்னர் சூடாகிப் போன கமாலுத்தீன் மதனி மலையாளத்தில் பறைய ஆரம்பித்தது.

"உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். யூதன், கிறித்தவன், இந்து யார் சொன்னாலும் ஏற்க வேண்டும்'' என்ற தத்துவத்தைத் ததும்பச் செய்தார்.

ஜாக்கின் மற்றொரு மவ்லவி கணிப்பிற்கு வக்காலத்து வாங்கி, வரிந்து கட்டிக் கொண்டு, "(பிறை பார்ப்பது தொடர்பான) ஒரு ஹதீஸைப் பின்பற்றுவதற்காக வேண்டி, வானியல் பற்றிக் குர்ஆன் கூறும் வசனத்தை மறுப்பதா?'' என்று கேள்வி எழுப்பிக் கொந்தளித்தார்.

இவர்களின் இந்தக் கொந்தளிப்பையும், வார்த்தைக் கொப்பளிப்பையும் கூர்ந்து பாருங்கள். இவர்கள் தங்களுக்குள் யூதச் சிந்தனையை வார்த்து விட்டார்கள் என்பது புலப்படும். தாங்கள் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதற்குத் தக்க மார்க்கத்தை வளைப்பது யூதர்களின் மூர்க்கத் தனமான முரட்டு வழக்கம்.

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.

அல்குர்ஆன் 2:87

குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் மோதல் போன்று தெரிகின்ற இடங்களில் இணைத்து ஒரு பொருத்தமான விளக்கத்தை, தவ்ஹீது ஜமாஅத்தின் அறிஞர்கள் கூறுகின்ற போது, நம்மை வழிகேடர்கள் என்று வாய் கிழியப் பேசினார்கள். இன்று இவர்கள் தாங்கள் ஒரு முடிவை எடுத்து விட்டு, அந்த முடிவுக்காக, குர்ஆனுடன் எந்த வகையிலும் முரண்படாத ஒரு ஹதீஸையே உதறித் தள்ளும் நிலைக்குச் சென்று விட்டார்கள்.

இனியும் இவர்கள் பின்னால் செல்லலாமா? சிந்தியுங்கள். குர்ஆனுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீசுக்கும் மாற்றமாக, பிறை விஷயத்தில் இவர்கள் கொண்டிருக்கும் கருத்தை ஏற்றுக் கொண்டால், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நாத்திக யூதனின் கருத்தைத் தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

ஜாக் - கே.என்.எம். விவாத சி.டிக்களைப் பார்த்து மேலதிகமான விளக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் கோவை மாவட்டத் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

EGATHUVAM SEP 2008