அவமானத்திற்கு அபராதம் நூறு கோடி
உத்தரபிரதேச மாநிலத்தில் காஜியாபாத் மாவட்டத்தில் வருங்கால வைப்பு
நிதித் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் சில மாதங்களுக்கு முன்பு அம்பலத்திற்கு வந்தது. காஜியாபாத்
மாவட்ட அரசுக் கருவூலத்திலிருந்து 7 கோடி ரூபாய்
கையாடல் செய்யப்பட்டதாக மாவட்ட ஊழல் கண்காணிப்பு நீதிபதி உச்சநீதிமன்றத்திற்குப் புகார்
செய்கின்றார். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. இவ்வழக்கில் ஒரு உச்ச
நீதிமன்ற நீதிபதி, 11 உயர் நீதிமன்ற நீதிபதிகள், 24 மாவட்ட நீதிபதிகள் சிக்கியுள்ளனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஓய்வு
பெற்ற முன்னாள் நீதிபதி பி.கே. சமன்தா என்பவரது பெயரை செப்டம்பர் 10, 2008 அன்று பண்ம்ங்ள் சர்ஜ் என்ற செய்தித் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பில்
குறிப்பிட்டது. ஆனால் செய்தியின் படக் காட்சியில் காட்டும் போது, நீதிபதி சமன்தாவின் படத்தைக் காட்டுவதற்குப் பதிலாக உச்சநீதிமன்றத்தின்
ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவாந்த் என்பவரது படத்தை 15 வினாடிகள் காட்டியது.
தான் காட்டிய படம் சமன்தாவுக்கு உரியது அல்ல. சவாந்த் அவர்களின்
படம் என்று தெரிந்தவுடன் தவறுக்காக சம்பந்தப்பட்ட சவாந்திடம் மேற்படி செய்தி நிறுவனம்
மன்னிப்புக் கோரியது. ஆனால் நீதிபதி சவாந்த் விடவில்லை.
பண்ம்ங்ள் சர்ஜ் தொலைக்காட்சி
நிறுவனத்தின் மீது மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அளவிட முடியாத
நட்டம் என்ற அடிப்படையில் நூறு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று அந்த நீதிமன்றம்
உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பண்ம்ங்ள் சர்ஜ் நிறுவனம்
மேல் முறையீடு செய்த போது, கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உயர்நீதிமன்றம்
நிறுத்தி வைத்தது. ஆனால் கீழ் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டை விசாரிப்பதற்கு
முன் 20 கோடி ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், 80 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மேற்படி செய்தி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகிய
போது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதாவது
20 கோடி முன்பணமும், 80 கோடி வங்கி
உத்தரவாதமும் செலுத்திய பின்னரே மேல் முறையீட்டை விசாரிக்க முடியும் என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின்
உத்தரவை உறுதி செய்துள்ளது.
நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்கு
மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போன்ற அனைத்து நிலையிலான நீதிமன்றங்களும் வரிந்து
கட்டிக் கொண்டு நூறு கோடி ரூபாய் அபராதத்தை முன் தொகை, பின் தொகை என்று விதித்து தீர்ப்புகளைப் பொழிந்து தள்ளி விட்டன.
ஊடகம் இழைத்த தவறு, படத்தை மாற்றி
ஒரு பதினைந்து வினாடிகள் காட்டியதற்கு இத்தனை பெரிய தண்டனை.
ஒரு சாதாரண, சாமான்ய மனிதன் பாதிக்கப்பட்டு இவ்வாறு வழக்குத் தொடர்ந்தால்
இந்த அளவுக்கு வேண்டாம்; ஒரு குறைந்தபட்ச கண்டனத்தையாவது
தெரிவிக்க இந்த நீதிமன்றம் முன்வருமா? பண்டிதருக்கு
ஒரு நீதி, பாமரனுக்கு ஒரு நீதி என்பதையே இது காட்டுகின்றது. சட்டத்தின்
முன் அனைவரும் சமம் என்ற சமநீதி இங்கே அடிபட்டுப் போய் விடுகின்றது.
இந்தியாவின் எங்காவது ஒரு மூலையில் குண்டு வெடித்து விட்டால்
போதும். உளவுத் துறைக்கு முன்பாகவே ஊடகத்துறையின் மூளையில் முஸலிம்கள் என்ற சிந்தனை
வெடித்து விடும். அவ்வளவு தான். அந்த பயங்கரவாதச் செயலை முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி, திரும்பத் திரும்ப செய்தி அலைகளில் வெடித்துத் தள்ளுகின்றனர்.
ஆனால் இறுதியில் முஸ்லிம்கள் இல்லை என்றானதும் ஒரு ஒப்புக்காவது, ஒரு தடவை கூட வருத்தம் தெரிவிப்பதில்லை. மறுப்பும் வெளியிடுவதில்லை.
தானாக முன்வந்து கண்டனம் தெரிவிக்க வேண்டிய நீதிமன்றங்கள், இவற்றைக் கண்டு கொள்வதில்லை.
அண்மையில் ஈசச ஒஇச தொலைக்காட்சியின் பேட்டியாளர் கரண் தாப்பருக்குப்
பேட்டியளித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் இந்தியாவின் பத்திரிகையாளர் சங்கத்
தலைவருமான மார்கண்டேய கட்ஜு, ஊடகங்களின் இந்தப் போக்கை கடுமையாகக்
கண்டிக்கின்றார். (அவருடைய பேட்டியின் சில பகுதிகளை தனித் தலைப்பில் தந்துள்ளோம்.)
இது சற்று ஆறுதலான விஷயம்.
நாம் நீதிமன்றங்களிடமிருந்து எதிர்பார்ப்பது இந்த அளவுக்குரிய
அபராதத்தை அல்ல. குறைந்தபட்சக் கண்டனத்தைத் தான்.
எந்த ஒரு செய்தியையும் அது வந்த மாத்திரத்தில் அதை நம்புவதையும், அதை அப்படியே அடுத்தவரிடம் வாந்தி எடுப்பதையும் இஸ்லாம் வன்மையாகக்
கண்டிக்கின்றது. இதோ முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே
அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 6
செய்தியை முதன் முறையாக ஒளிபரப்புதல், ஒரு பரபரப்பு, கிளர்ச்சி, அனல் பறப்பு போன்றவற்றை மூலதனமாகக் கொண்டு செய்திகளை ஊடகங்கள்
வெளியிட விரும்புகின்றன. அந்தச் செய்திகள் வரும் வழி சரியானதா? செய்தி உண்மையானதா? என்று பார்ப்பதற்கு
எந்த முன்னுரிமையும் முதன்மையும் அளிப்பதில்லை. வருவதை வாந்தியெடுப்பது, வருவாயைப் பெருக்குவது என்பதை மட்டும் குறியாகக் கொண்டு ஊடகங்கள்
செயல்படுகின்றன.
புலனாய்வு ஊடகவியல் என்றெல்லாம் இவர்கள் பீற்றிக் கொள்கின்றனர்.
ஆனால் பொய்யை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளியலாகத் தான் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட
ஊடகத்திற்கு இந்த நூறு கோடி ரூபாய் அபராதம் சரியென்றே தோன்றுகின்றது.
மீடியாக்களின் முஸ்லிம் விரோதப் போக்கு
ஊச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு
பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து
முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள
கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என்
& ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில்
பங்கேற்ற போது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு
இலக்காகியுள்ளது.
அந்தக் கேள்வி பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:
செய்தியாளர் கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும்
டி.வி. ஆசிரியர்களைச் சந்தித்த போது, "மீடியா
பொறுப்பில்லாமல் செயல்படுகிறது' என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின்
செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
கரன் தாப்பர்: உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: நிச்சயமாக இல்லை.
கரன் தாப்பர்: உண்மையாகவா சொல்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல
அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி
இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுவதையும் பார்க்கிறேன்.
கரன் தாப்பர்: உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில்
வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்தச் சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாகச்
செயல்படவில்லையா? அல்லது அது போதுமானதாக இல்லையா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில்
மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதைப் பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம்.
முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து
மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை.
நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்தப் பிரச்சனைகளை
வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து தீர்வு காணத் தூண்டாமல், பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புகிறது மீடியா.
சினிமா நட்சத்திரங்கள், அழகிப் போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாச்சாரங்களை பெரிதுபடுத்தி, நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள் தான் என்பது போல்
ஒரு பிரமையை உண்டாக்குகிறது.
கரன் தாப்பர்: ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்குப் போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது
என்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு
ஒரு போதைப் பொருள். ஓப்பியம் மாதிரி. ரோமாபுரிப் பேரரசன் சொல்வானாம், "மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க
ஏற்பாடு செய்'
என்று. இந்தியாவில் மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்க முடியாவிட்டால்
அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது
கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது. அது தான் நாட்டின் ஒரே பிரச்சனை மாதிரி.
கரன் தாப்பர்: மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதைக் காட்டும்
இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: இரண்டாவது, அனேக நேரங்களில் மக்களைப் பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட
மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால் தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும்.
ஆனால் என்ன நடக்கிறது?
ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்
"குண்டு வைத்தது நாங்கள் தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது' அல்லது "ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு
கூறுகிறது'
என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள்
எப்படித் தெரியும் என்றால் எஸ்.எம்.எஸ். வந்தது, இ மெயில்
வந்தது என்று காட்டுகிறார்கள்.
எஸ்.எம்.எஸ்., இ மெயில் போன்றவற்றையெல்லாம்
யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம்.
அதைப் பெரிதாகத் தொலைக்காட்சியில் காட்டி, மறுநாள் பத்திரிகைகளிலும்
பிரசுரிக்கும் போது என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு
வைப்பவர்கள்,
தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி
சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம்
பேர் நல்லவர்கள் என்பது தான் உண்மை.
கரன் தாப்பர்: மீடியா இந்த விஷயத்தில் கவனக் குறைவாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதைச் சோதிக்காமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா? அல்லது வேண்டுமென்றே அப்படிச் செய்வதாக நினைக்கிறீர்களா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த
மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு
எதிரானது.
கரன் தாப்பர்: மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா
சொல்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: குண்டு வெடித்த சிறிது நேரத்தில்
எஸ்.எம்.எஸ். வந்தது; இ மெயில் வந்தது என்பதைச் சாக்கிட்டு
ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும் போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க
முடியும்?
கரன் தாப்பர்: மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாட்டுக்கு மூன்றாவது
உதாரணமாக எதைச் சொல்லப் போகிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: ஒரு ஃபியூடல் சொசைட்டி, மாடர்ன் சொசைட்டியாக மாறுகிற கால கட்டத்தில் அந்த மக்களும் நாடும்
முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவ
வேண்டும்.
இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையைத்
தூண்டுவதற்குப் பதில் ஜோசியம், மூட நம்பிக்கை போன்ற அறிவியலுக்கு
எதிரான விஷயங்களைப் பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூட நம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாகப் பின்தங்கி
நிற்கிறார்கள்.
அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து, ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்குக் கொண்டு வர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக மீடியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும்
வேலையை நமது மீடியா செய்கிறது.
பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது. இன்றைக்கு
நீங்கள் இந்தக் கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர்
சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாகச் சொல்லி மக்களின்
மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!
கரன் தாப்பர்: ஆக, மீடியா என்ன
செய்ய வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அதைச் செய்யவில்லை என்கிறீர்கள். தன்னை
நம்பிய இந்தியாவை மீடியா கைவிட்டு விட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் மீடியாவின்
பங்களிப்பு அபாரமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மீடியா என்பது ஏதோ சாமான் உற்பத்தி
செய்து சந்தையில் விற்கும் சாதாரணமான பிசினஸ் கிடையாது. அறிவு சம்பந்தப்பட்டது. சிந்தனை
சம்பந்தப்பட்டது. மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான புதிய சிந்தனைகள் உருவாகத் தூண்டுகோலாகச்
செயல்படும் புனிதமான பணி மீடியாவுக்குத் தரப்பட்டிருக்கிறது. அந்தப் பொறுப்பை அது செய்யத்
தவறினால் நாட்டை, மக்களை அது கைவிட்டு விட்டதாகத்
தானே அர்த்தம்?
கரன் தாப்பர்: இந்தியாவை இன்னும் மோசமாக்குகிறது மீடியா என்றா
சொல்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: அதுதான் என் மதிப்பீடு. ஒரு ஜோசியர்
உட்கார்ந்து கொண்டு "இது அந்த ராசி, அது அணிந்தால்
உங்களுக்கு ராசி' என கதையளந்து கொண்டிருப்பதை
எத்தனை சேனல்களில் பார்க்கிறோம்.
கரன் தாப்பர்: "செய்தியை சரியாகச் சொல்வதில்லை; உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்துக் கூறுகிறது; கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது' என்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: அதே தான் என் கருத்தும். 2009 தேர்தலில் பார்த்தோம். முன்னெல்லாம் செய்தியாளர்கள் வேட்பாளரைப்
பார்த்து, "எனக்குப் பத்தாயிரம் கொடு; உனக்கு
சாதகமாகச் செய்தி போடுகிறோம்' என்று பேரம் பேசினார்கள்.
அதைப் பார்த்து பத்திரிகை உரிமையாளர்களுக்கு வேறு ஐடியா உதித்தது.
"நாம் தான் சம்பளம் கொடுக்கிறோமே, செய்தியாளர்கள்
இப்படியும் சம்பாதிக்க ஏன் இடமளிக்க வேண்டும்? நாமே சம்பாதிக்கலாமே?' என்று முடிவு செய்து, "ஒரு
கோடி கொடுங்கள்,
நான் ஒரு பேக்கேஜ் தருகிறேன்' என்று
டீல் போடுகிறார்கள்.
ஒரு பத்திரிகையில் "வேட்பாளர் "ஏ' அமோக வெற்றி பெறுவார்'' என்ற செய்தி
மேலேயும் "அவருக்கு டெபாசிட் போய்விடும், "பி' தான் ஜெயிப்பார்'' என்று கீழேயும்
முதல் பக்கத்திலேயே பிரசுரமான விசித்திரத்தை பார்த்தோம். கண்ணை விற்று சித்திரம் வாங்கும்
வேலை.
கரன் தாப்பர்: இந்த மாதிரி பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிபதி
வர்மா தலைமையில் நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் அமைத்து சுயமாக சில கட்டுப்பாடுகளை
கொண்டுவர முயற்சி செய்தார்கள்...
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: அதில் எந்தப் பலனும் ஏற்பட்டதாகத்
தெரியவில்லையே! நீங்கள் தொழில் நடத்துவது ஏழைகள் வாழும் நாட்டில்; அதனால் அவர்களுடைய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்; அதை விடுத்து "லேடி காகா வந்து விட்டார்.. கரீனா கபூர்
தனது மெழுகுச் சிலையை மிகவும் சிலாகித்தார்..' இதெல்லாமா
முக்கிய செய்தி ஆவது?
கரன் தாப்பர்: மீடியா ஏன் மாறவில்லை என நினைக்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை.
அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம்
என்ற பயம்.
கரன் தாப்பர்: அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: பத்திரிகைகளை மட்டும் தான் பிரஸ்
கவுன்சில் இப்போது கேள்வி கேட்க முடியும். பிரஸ் கவுன்சில் பெயரை மீடியா கவுன்சில்
என மாற்றி டி.வி. சேனல்களையும் அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சொல்லித் திருந்தாத
மீடியா நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது; லைசென்ஸை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை
அளிக்க அந்தக் கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். இது குறித்து பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.
கரன் தாப்பர்: அது பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பார்களே?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்குப்
பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். எந்த சுதந்திரமும் எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள்
இருந்தாக வேண்டும். மீடியா இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.
கரன் தாப்பர்: மீடியாவை உங்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது போலிருக்கிறதே?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: நான் ரொம்பவும் மதிக்கிற சில மீடியாக்காரர்களும்
இருக்கிறார்கள். உதாரணமாக சாய்நாத்தைச் சொல்லலாம். அவர் மேல் எனக்கு ரொம்ப மரியாதை
உண்டு. விவசாயிகள் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட ஆட்கள்
குறைவு. பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத் தான் இருக்கிறார்கள். எகனாமிக்தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்கள்.
EGATHUVAM DEC 2011