Apr 8, 2017

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி - வரலாற்றுப் புரட்டுகளும் வரலாற்று உண்மைகளும்

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி - வரலாற்றுப் புரட்டுகளும் வரலாற்று உண்மைகளும்

எம். ஷம்சுல்லுஹா

"தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி' என்ற பெயரில், ஜாக் அமைப்பு ஒரு நூல் வெளியிட்டுள்ளது. வரலாற்று உண்மைகள் என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த நூலில், பல்வேறு வரலாற்றுப் புரட்டுகளைச் செய்துள்ளது. இது குறித்த உண்மைகளை மக்களுக்கு விளக்குவதற்காகவே இந்தக் கட்டுரை.

பாஸ் மார்க்கும் ஃபர்ஸ்ட் மார்க்கும்

ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறான். மற்றொரு மாணவன் குறைந்த மதிப்பெண் எடுத்து, அதாவது தேர்ச்சி பெறுவதற்கென நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் மட்டுமே எடுத்திருக்கிறான்.

அந்தப் பள்ளிக்கூட நிர்வாகம், முதல் மதிப்பெண் எடுத்தவனைக் கண்டு கொள்ளாவிட்டால் கூடப் பரவாயில்லை. குறைந்த மதிப்பெண் எடுத்தவனை மிகப் பெரிய சாதனையாளன் என்று பாராட்டினால் அது அநியாயம் அல்லவா?

இது போன்ற அநியாயத்தைத் தான் தவ்ஹீது எழுச்சி என்ற நூலில் ஜாக் அரங்கேற்றியிருக்கிறது.

தமிழகத்தின் தவ்ஹீது எழுச்சியில் தங்களுக்குத் தான் முழுப் பங்கு என்று இவர்கள் வாதிடும் போது, அடுத்தவர்கள் ஆற்றிய சேவையின் பலனை அபகரிக்கவும், அதைத் தங்கள் கணக்கில் வரவு வைக்கவும் முயற்சி செய்கின்ற போது, அதை அடையாளம் காட்டுவது என் போன்றோரின் கடமை!

இவர்கள் வெளியிட்டுள்ள இந்த வரலாற்றுப் புரட்டுகளுக்குப் பதிலளிப்பதோ, அல்லது நாங்கள் தான் தவ்ஹீது எழுச்சிக்குக் காரணம் என்று இவர்களைப் போன்று சுய புராணம் பாடுவதோ எனது நோக்கமல்ல.

தஞ்சை தவ்ஹீது எழுச்சி மாநாட்டையொட்டி, ஏகத்துவம் இதழில் "தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி' என்ற வரலாற்றைத் தொகுத்து எழுத நேரிட்டது. அவ்வாறு எழுதிய பின்பு தான் ஜாக் வெளியிட்டுள்ள தவ்ஹீது எழுச்சி நூலை, சகோதரர் ஹாஜா நூஹ் என்னுடைய பார்வைக்குத் தந்தார்.

அதில் இந்த அபத்தங்களையும் அவதூறுகளையும் பார்த்தேன்.

கமாலுத்தீன் மதனி தான் தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சிக்கு வித்திட்டவர் என்ற வரலாற்றுப் புரட்டை எழுதியிருந்தனர். அது அவர்களது இஷ்டம். தங்கள் நூலில் எது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். உண்மை என்ன என்பதை மக்கள் நன்கறிவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்தையும் அறிந்த அல்லாஹ் இவற்றை நன்கறிவான். அவன் அவரவர்களின் செயல்களுக்குத் தக்க கூலி கொடுப்பான்.

இவர்களைப் போன்று சுய புராணம் பாட பி.ஜே.வுக்குத் தெரியாது. எனினும் என் போன்றவர்களுக்குத் தெரிந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது கடமை என்ற அடிப்படையிலும், தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி என்ற தொடரில் இவற்றைக் கொண்டு வருவது அவசியம் என்ற அடிப்படையிலும் தான் இதை இங்கு எழுதியுள்ளேன்.

ஜலீல் மதனியின் மதிப்பீடும் மதிப்பெண்ணும்

இவர்களுடைய சங்கத்தின் நிர்வாகியாக இருந்த, அவர்களாலும் நம்மாலும் மதிக்கப்படக்கூடியவர் மறைந்த அப்துல் ஜலீல் மதனி அவர்கள். அவர் கூறுவதைக் கேளுங்கள்.

தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்படுவதற்கு பி.ஜே. ஒரு முக்கியக் காரணம். அவர் ஒரு முஜ்தஹித் (ஆய்வாளர்). இதை இவர்கள் (மதனிகள்) பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் மீது பொறாமைப்படுகிறார்கள்.

இது அப்துல் ஜலீல் மதனியின் நடுநிலையான மதிப்பீடாகும்.

இங்கு இன்னொரு விஷயத்தையும் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். மதனிகள் என்று இங்கு நான் குறிப்பிடுவது அனைத்து மதனிகளையும் அல்ல!

சகோதரர் அப்துல் ஜலீல் மதனி அவர்கள் வஃபாத் ஆகும் வரை தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைந்தே பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அது போன்று சகோதரர் அப்துஸ்ஸமது மதனி அவர்களும் அன்றிலிருந்து இன்று வரை சத்தியத்தைச் சொல்வதில் நம்முடன் தோளோடு தோள் நின்று கொண்டிருக்கிறார்.

தமிழக தஃவா பணிக் களத்தில் யாருக்கு என்ன பங்கு? என்பதை நன்கு தெளிவாகத் தெரிந்து தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அல்லாஹ் இவர்களுக்கு அருள் செய்வானாக! இப்படி உண்மையை நன்கு விளங்கி நடுநிலையுடன் செயல்படும் மதனிகளும் இருக்கிறார்கள் என்பதை கொள்கைச் சகோதரர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

இவர்களாலேயே மதிக்கப்படக் கூடிய அப்துல் ஜலீல் மதனி அவர்களின் இந்தக் கருத்திலிருந்து தமிழக தஃவா களத்தில் பி.ஜே.யின் பங்கென்ன? என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வரலாற்று உண்மையைத் தான், வரலாற்று உண்மைகள் என்ற தலைப்பிட்டு வெளியிட்டுள்ள நூலில் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைத்திருக்கிறார்கள்.

இதற்கு ரொம்ப தூரம் நாம் செல்ல வேண்டியதில்லை. தமிழகம் முழுவதும் பயணிக்க வேண்டியதில்லை. மேலப்பாளையத்தில் உள்ள பக்கா குராபிகளைச் சந்தித்து, தமிழகத்தில் தவ்ஹீது வளரக் காரணம் யார்? என்று பேட்டியெடுத்தாலே போதும்.

காரணம், ஒரு காலத்தில் பி.ஜே. மேலப்பாளையத்தில் பேசியது போன்று வேறு எந்த ஊரிலும் பேசியிருக்க மாட்டார். அது போன்று இந்த ஊரில் சந்தித்த கொலை முயற்சியைப் போன்று வேறு எந்த ஊரிலும் சந்தித்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு மேலப்பாளையத்தில் பி.ஜே.யின் தொடர்பு இருந்தது.

மேலப்பாளையத்தில் கமாலுத்தீன் மதனிக்கு நெருக்கமானவர்களைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் கமாலுத்தீன் மதனி என்றால் யார் என்று தெரியாது. தமிழக அளவிலும் அவரது நிலை இது தான். உண்மை இப்படியிருக்கும் போது இவரும், இவரது சம்பளப் பட்டுவாடா கம்பெனியும் தான் ஒட்டுமொத்த தவ்ஹீது எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது என்று சித்தரிப்பது வரலாற்றுப் புரட்டாகும்.

இந்த வரலாற்றுப் புரட்டுகளும் பொய்களும் ஜாக் வெளியிட்டுள்ள தவ்ஹீது எழுச்சி என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

பி.ஜே.வுக்கு அரசியல் ஆசையா?

ஜாக்கின் வரலாற்றுப் புரட்டுகளில் மிக முக்கியமான ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும்.

மேலப்பாளையத்தில் பிரமாண்டமாகக் கூடிய மக்கள் வெள்ளத்தைப் பார்த்த பி.ஜே.யின் உள்ளத்தில் அரசியல் ஆசை வெளிப்பட்டது. தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. எனவே இதைப் பற்றிய ஆலோசனைகளை சென்னை டேவிட்சன் தெருவில் செயல்பட்டு வந்த அல்ஜன்னத் அலுவலகத்தில் பி. ஜைனுல் ஆபிதீனுக்கென உள்ள அறையில் பலரும் வந்து ஆலோசனை நடத்தலானார்கள்.

பக்கம்: 39

இது மிகப் பெரிய பொய்யும் புளுகுமாகும். ஏனென்றால் பி.ஜே. அரசியல் களத்தில் நுழைய வேண்டுமென்றால் அதற்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன.

பொதுக்குழுவினரிடம் புகுந்த புதிய ஆசை

திருச்சியில் நடைபெற்ற தமுமுக பொதுக்குழுவின் போது அமைப்பாளர் பதவியை பி.ஜே. ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

காரணம், அந்தப் பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவரிடமும் அரசியல் ஆசை புகுந்து கொண்டது.

அரசியல் களம் புக வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லோரும் மிதக்கும் போது, தான் அதில் இருப்பது பொருத்தமில்லை; அதனால் பதவி விலகுவதாக அறிவித்தார்.

பொதுக்குழுவில் கலந்து கொண்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் பி.ஜே.வின் இந்த முடிவை அறிந்து கண்ணீர் விட்டு அழுதனர்.

பிறகு அவர்கள் அனைவரும் அரசியல் எங்களுக்கு வேண்டாம் என்று கூறி விண்ணப்பித்ததும் மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1999 ஜூலை 4 அன்று சென்னையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு அரசியல் பிரவேசத்திற்கு அனைத்து வாசல்களையும் திறந்து வைத்து இரு கைகளை நீட்டி வரவேற்றது. அப்போது அவர் அரசியல் பிரவேசம் கண்டிருக்கலாம்.

மக்கள் கூட்டத்தைக் கண்டு மயங்கி பி.ஜே.வுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது என்பது உண்மையெனில் 2004ல் தமுமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற இடஒதுக்கீட்டுப் பேரணி அவரது அரசியல் ஆசையை (?) நிறைவு செய்து கொள்வதற்கு, அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பாகும்.

மேலப்பாளையத்தில் புதிய தமிழகத்துடன் இணைந்து ஒரு மாநாடு போன்ற பொதுக்கூட்டத்தை தமுமுக சார்பில் நடத்தினோம். அதற்குப் பிறகு பி.ஜே., பாக்கர் போன்ற ஒரு சிலரைத் தவிர்த்து இதர தமுமுக தலைவர்களுக்கு அரசியல் ஆசை வந்து விட்டது; வளர்ந்து விட்டது. இன்னாருக்கு இன்ன பொறுப்பு என்பது உட்பட நிச்சயிக்கப்பட்டது. யார் யாருக்கு என்னென்ன பதவி என்பது உட்பட முடிவு செய்யப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்று தான். பி.ஜே.யின் கண் ஜாடையும், கையசைப்பும் தான்.

இவையெல்லாம் அவர் அரசியல் களத்தில் நுழைவதற்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்கள்.

இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் அரசியல் பிரவேசம் மேற்கொள்ளவில்லை. இனியும் மேற்கொள்ளப் போவதில்லை.

இவர் தங்களது இயக்கத்தில் இருக்கும் வரை தங்களது அரசியல் கனவு பலிக்காது; அந்தக் காலம் கனியாது என்று தமுமுக தலைவர்கள் ஓர் அவகாசத்திற்காகக் காத்திருந்தனர். அந்த அவகாசம் அவர்களுக்குக் கிடைத்ததும் அவரை வெளியே தள்ளினர்.

பின்னர் தமுமுகவின் அரசியல் காதல் திமுகவுடனான திருமணத்தில் முடிந்தது. வக்பு வாரியம் என்னும் குழந்தையும் பிறந்தது. இன்னும் இது போன்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக என்று உறவுகள் தொடரும்.

பஞ்சாயத்துத் தேர்தலில் ஜாக் நிர்வாகி

இப்படிப் பகிரங்க அரசியலில் மூழ்கி முத்துக் குளிக்கும் தமுமுக, கமாலுத்தீனுக்கு நல்ல இயக்கமாம். அது மார்க்க இயக்கமாம்.

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் துபை சென்ற போது, தமுமுக ஒரு நல்ல இயக்கம் என்று நற்சான்று அளித்திருக்கின்றார்.

பி.ஜே. தமுமுகவில் இருந்த போது அதை அரசியல் என்று அரபு நாடுகளுக்குக் கடிதம் எழுதினார். இதன் மூலம் அரபு நாட்டில் பணி புரிந்து கொண்டிருந்த அன்றைய தமுமுகவினருக்கு வேட்டு வைக்க முயற்சி செய்தார்.

இட ஒதுக்கீடு என்ற ஒரே லட்சியத்தை முன் வைத்து, அதிமுகவுக்காக உழைத்து விட்டு அதன் பின்னர் எந்தக் கட்சியுடனும் காதல் கொள்ளாது தனித்து இயங்கும் தவ்ஹீது ஜமாஅத் அரசியல் இயக்கமாம்.

ஒழுக்கம், மானம் இவற்றை எல்லாம் காற்றில் பறக்க விட்ட, இஸ்லாத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்ற அரசியல்வாதிகளை அரியணையில் அமர்த்துவதற்காக முழுவீச்சோடு பாடுபட தன் பக்தர்களை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அல்லாஹ்வின் விரோதிகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதை மாபெரும் வெற்றி என்று சூளுரைக்கின்றார்.

பக்கம்: 47

இவ்வாறு ஜாக் வெளியிட்டுள்ள வரலாற்றுப் புரட்டுகள் நூலில் பி.ஜே.வைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

உலக மகா எத்தன் ஏர்வாடி சிராஜ், பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு பதவியும் வகிக்கிறார். இது கமாலுத்தீனுக்கு அரசியலாகத் தெரியவில்லை.

கடையநல்லூரில் பீட்டர் அல்போன்சுக்காக ஓட்டுக் கேட்டு கோவை அய்யூப் பேசுகிறார். இது கமாலுத்தீனின் கண்ணுக்கு அரசியலாகத் தெரியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் எல்லாம் ஜாக்கின் மாநில நிர்வாகிகள் என்பது தான்.

பழ்லுல் இலாஹிக்கு முஸ்லிம் லீக்கில் எம்.எல்.ஏ. சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மேலப்பாளையத்தில் ஜாக் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

ஒருவருக்கு எம்.எல்.ஏ. சீட் வேண்டும் என்று கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதை விடக் கேவலமான அரசியல் எதுவும் உண்டா?

இதுவெல்லாம் கமாலுத்தீனின் காமாலைக் கண்ணுக்கு அரசியலாகத் தெரியவில்லை. ஆனால் அரசியலை விட்டு வெளியே நிற்கும் தவ்ஹீது ஜமாஅத் அரசியல் இயக்கமாகத் தெரிகின்றது.

ஏகத்துவவாதிகளே! பி.ஜே.வுக்கு அரசியல் ஆசை வந்து விட்டது என்று கமாலுத்தீன் கூறும் குற்றச்சாட்டு உண்மையானதா? நியாயமானதா? என்று இப்போது சொல்லுங்கள்.

இதற்கெல்லாம் காரணம் அப்துல் ஜலீல் மதனி அவர்கள் சொன்னது போன்று, பொறாமை தான். இதைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

பி.ஜே.யின் அரசியல் ஆசை   தான் அவரை ஜாக்கிலிருந்து வெளியேற்றியது என்பது போன்று ஒரு பொய்யை ஜோடித்துள்ளனர்.

அந்த ஒரு பொய்க்குப் பதில் சொல்லி விட்டால் போதும். மற்றவை என்ன தரத்தில் அமைந்தவை என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என்ற நோக்கத்தில் அந்த ஒன்றுக்கு மட்டும் விளக்கத்தைத் தந்துள்ளேன்.

கமாலுத்தீன் வெளியிட்டுள்ள இந்த வரலாற்றுப் புரட்டு என்ற நூலில் உள்ள பொய்களை உணர்ந்து கொண்ட குமரி மாவட்ட மக்கள் இன்று கூட்டம் கூட்டமாக தவ்ஹீது ஜமாஅத்தில் இணைந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்குக் காரணமாக உள்ள சகோதரர் ஹாஜா நூஹ் அவர்கள் ஒரு பண்டிதர் அல்ல. இவர்களுடைய பார்வையில் ஒரு பாமரன். அந்தப் பாமரன் தான் இன்று இவர்களது கோட்டையை உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறான். இவர்கள் இவ்வளவு காலமும் தவ்ஹீது பிரச்சாரத்திற்குச் செல்ல முடியாத ஊர்களிலெல்லாம் தவ்ஹீது ஜமாஅத்தினர் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சிக்கு யார் காரணம் என்பதற்கு, குமரி மாவட்ட மக்களே இன்று சாட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

EGATHUVAM JUN 2008