Apr 8, 2017

முபாஹலா என்ற சத்தியப் பிரார்த்தனை

முபாஹலா என்ற சத்தியப் பிரார்த்தனை

(காயல்பட்டிணத்தில் பி.ஜே.வுக்கும் ஜலீல் முஹைதீனுக்கும் முபாஹலா நடந்து முடிந்தவுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்த ரெட் ஸ்டார் சங்கத்தினர் ஒரு பிரசுரத்தை வெளியிட்டனர். 28.9.85 தேதியிட்ட அந்தப் பிரசுரம் வாசகர்களின் பார்வைக்குத் தரப்படுகின்றது.)

கண்ணியத்திற்குரிய முஸ்லிம் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!

நமதூரில் சமீப காலமாக நடந்து வரும் "குத்பியத்' எனும் முஹிய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரழி) அவர்களின் நாமத்தை ஆயிரம் முறை இருட்டிலிருந்து நினைவு கூரும், "திக்ரு'' அங்கீகரிக்கப்பட வேண்டியவையா? நிராகரிக்கப்பட வேண்டியவையா? என்ற பிரச்சனை பாமர மக்களைக் குழப்பிக் கொண்டிருந்தது.

அங்கீகரிக்கப்பட வேண்டியது என்ற தரப்பில் ஜனாப். ஹாஜி. எம்.இசட். ஜலீல் முஹிய்யித்தீன் அவர்கள் பல கூட்டங்கள் வாயிலாகவும் பிரசுரங்கள் வாயிலாகவும் பொது மக்களுக்கு அறிவித்ததோடு, இதை யாரும் நிராகரிப்பார்களேயானால் தன்னுடன் "முபாஹலா'' எனும் சத்தியப் பிரார்த்தனைக்கு வரலாம் என சவால் விட்டிருந்ததை நம்மூர்வாசிகள் அறிந்ததே!

மேற்கூறிய குத்பியத்தை நிராகரித்து, ஜனாப் ஜலீல் முஹிய்யித்தீன் அவர்களின் முபாஹலா சவாலை, தொண்டியைச் சேர்ந்த ஜனாப். மவ்லவி பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் பொது மேடையில் ஏற்றார்கள்.

இரு தரப்பினருக்கிடையில் தேதியும் காலமும் நிர்ணயிக்கப்பட்டு எங்கள் ரெட் ஸ்டார் சங்கத்திற்கு இரு சாராரும் கையெழுத்திட்டு, "நீங்கள் எந்தத் தரப்பையும் சாராதவர்களாக இருப்பதினால் நீங்கள் நடுநிலை வகித்து நீதமுடன் இந்த முபாஹலாவை நடத்தி இப்பிரச்சனைக்கு முடிவு காண உதவுங்கள்'' என்று 21.9.85 தேதியிட்டு மனுக் கொடுத்திருந்தார்கள்.

24.9.85 செவ்வாய் காலை 10.30 அளவில் அப்பா பள்ளி & மரைக்கார் பள்ளி ஆகிய எங்கள் இரு பெரும் ஜமாஅத் கூட்டத்தை ரெட் ஸ்டார் சங்கத்தில் ஜனாப் கே.எம். இஸ்மத் பி.எஸ்.சி. அவர்கள் தலைமையில் கூட்டி ஜனநாயக முறைப்படி விவாதித்து முபாஹலா எனும் சத்தியப் பிரார்த்தனை நடத்த இடம் கொடுப்பது என முடிவு செய்தோம்.

எங்களிடம் இடம் கேட்டு மனுச் செய்த இரு தரப்பினர்களுக்கும் கீழ்க்குறிப்பிட்ட பதினோரு நிபந்தனைகள் விதித்திருந்தோம். அவையாவன:

1. ஜனாப். ஜலீல் முஹய்யித்தீன், ஜனாப். பி. ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் ஆகியோரும், அவர்கள் இருவரின் மனைவி மக்களும், அவர்களின் சார்பில் 21.9.85 அன்று எங்களுக்குக் கையெழுத்திட்டுத் தந்த கீழ்க்கண்ட நபர்கள் மட்டுமே இந்த முபாஹலாவிற்கு அனுமதிக்கப் படுவார்கள். எக்காரணம் கொண்டும் வேறு எந்தப் பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஜனாப் எம்.இசட். ஜலீல் முஹிய்யித்தீன் அவர்கள் சார்பில்

1. ஜனாப் எஸ்.கே.எம். சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்கள்

2. ஜனாப் பி.ஏ.ஜே. முஹம்மது கிழ்ற்

3. ஜனாப் பி.எம்.எஸ். சைபுதீன்

4. ஜனாப் கே.பி.எஸ். தாஜுத்தீன் ஆகியோர்களும்

ஜனாப் மவ்லவி பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் சார்பில்

1. ஜனாப் எம்.ஓ.எம்.ஏ. சதக்கத்துல்லாஹ் அவர்கள்

2. ஜனாப் ஹாஜி எஸ்.ஏ. பாரூக்

3. ஜனாப் எம்.ஹெச். ஹாஜா முஹிய்யித்தீன் எம்.ஏ.

4. டி.எஸ்.ஏ. முஹம்மது இஸ்மாயீல் ஆகியோர்களும் ஆவார்கள்.

மேற்குறிப்பிட்ட நபர்களில் யாராவது அசௌகரியத்தின் காரணத்தினால் வர முடியாமல் போனால் வேறு எந்த நபரையும் அனுமதிக்க முடியாது.

2. முபாஹலா 26.9.1985 வியாழன் மாலை சரியாக 5 மணிக்கு நடைபெறும்

3. சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அன்று மாலை 4.45 மணிக்கு ரெட் ஸ்டாரில் ஆஜராகி இருக்க வேண்டும்.

4. குறிப்பிட்ட நேரத்தில் வருகை தரத் தவறினால் 30 (முப்பது) நிமிடங்கள் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டு அப்படியும் வரத் தவறினால் மாலை சரியாக 5.30 மணிக்கு நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்டு பொது மக்களுக்கு அறிவிக்கப்படும்.

5. சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட எங்கள் சங்கத்திற்குக் காரில் வந்து, முபாஹலா முடிந்தவுடன் காரிலேயே சென்று விட வேண்டும்.

6. முபாஹலா செய்ய வரக் கூடியவர்கள் இங்கு வரும் பொழுது "ஒழு'வுடன் வர வேண்டும்.

7. முபாஹலாவுக்குரிய எழுதிப் படிக்கப்படும் வாசகத்தைத் தவிர வேறு எந்தப் பிரசங்கமும் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது.

8. முபாஹலா நடைபெறும் இடத்தில் தேனீரோ மற்றும் குளிர்பானங்களோ வழங்கப்படவும் மாட்டாது. கொண்டு வந்து அருந்தவும் அனுமதிக்கப்பட மாட்டாது.

9. இந்த முபாஹலாவிற்கு ஒலி பெருக்கி பயன்படுத்தப்பட மாட்டாது.

10. இந்த முபாஹலா சம்பந்தமாக ஏற்படும் எந்த விளைவுகளுக்கும் செலவினங்களுக்கும் எங்கள் ஜமாஅத்தோ அல்லது சங்கமோ எந்த விதத்திலும் பொறுப்பாகாது.

11. மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைத் தவிர சூழ்நிலைக்கேற்ப மேற்கொண்டு நிபந்தனைகள் விதிக்கவோ, விதிமுறைகளை மாற்றி அமைக்கவோ கீழே குறிப்பிட்டுள்ள எங்கள் ஜமாஅத் கமிட்டியினர் (பதினொன்று) பேர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

1. ஜனாப் கே.எம். இஸ்மத் பி.எஸ்.சி. அவர்கள்

2. ஜனாப் எம்.எம். அஹ்மது

3. ஜனாப் எஸ். ஹஸன் மரைக்கார் பி.காம்.

4. ஜனாப் மு.க. காதர் சாகிபு

5. ஜனாப் ஜே.எஸ். முத்து கபீர் ஹாஜி பி.எஸ்.சி.

6. ஜனாப் எம்.யூ.எல். முஹிய்யித்தீன் ஹாஜி

7. ஜனாப் எஸ்.ஏ. மீராத் தம்பி ஹாஜி

8. ஜனாப் எஸ்.டி. முத்து வாப்பா சாகிபு

9. ஜனாப் ஏ.எம். சுலைமான்

10. ஜனாப் ம.கு. மொகுதூம் மீரா சாகிபு

11. ஜனாப் எஸ்.கே. அஹ்மது மீரா சாகிபு

மேற்கூறிய நிபந்தனைகளை இரு சாராரும் எந்தவித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டனர்.

முபாஹலா விபரம்:

ஜனாப். அல்ஹாஜ் எம்.இசட். ஜலீல் முஹிய்யித்தீன் அவர்கள்,

"உள்ளார்ந்த அன்பின் உடன்பிறப்பே! நீ உனது இம்மை மறுமையின் எந்த ஒரு நலனையேனும் உவந்து விளைகின்ற போதும், அக்கிரமக் கொடியர்களை, அநீதக்காரர்களைத் தொட்டும் அச்சம் அடைகின்ற போதும், நாயனின் நல் ஒளியாக ஆகி நிற்க நாடுகின்ற போதும், தூய்மையான கனிந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாயாக!

அடுத்து முறைப்படி நிரப்பமான ஒழு எனும் அங்க சுத்தியையும், அடுத்து கழிந்து போன காலங்களில் உன்னிலே நிகழ்ந்து விட்ட தவறுகளையெல்லாம் நினைத்து வருந்தும் "தவ்பா' எனும் சுத்தியையும் செய்து கொள்வாயாக! பின்னர் இரண்டு ரக்அத்துகளாக ஆறு ஸலாம்களில் பன்னிரெண்டு ரக்அத்துகள் தொழுது நிறைவு செய்து (ஒவ்வொரு ரக்அத் தொழுகையிலும் ஃபாத்திஹா, குல்ஹுவல்லாஹ் சூரா ஓதிக் கொள்ளவும்)

பிறகு பெற்ற தாயிடம் கெஞ்சும் பச்சிளஞ் சேய் போல், "யா அப்துல் காதிர் முஹிய்யித்தீனே! யா அப்துல் காதிர் முஹிய்யித்தீனே!!' என ஆயிரம் முறை அழைப்பாயாக! உடல் நலமும் உளத்திடமும் ஒருங்கே பெற்றவனாயின் எஜமான் ஏந்தல் முஹிய்யித்தீன் அவர்கள் நேரிலேயே வருகை தந்து விடுவார்கள். நீ தளர்ந்த உடலும் தொய்ந்த உள்ளமும் பெற்றவனாயின் கவலைப்படாதே! கனவிலே வருகை தந்து உன் கவலைகள் அனைத்தையும் போக்கிடுவார்கள்.

நீ தனித்திருக்கப் பயந்தால் தயக்கமேற்பட்டால் உன் அன்புத் துணைவியையும் உன்னோடு சேர்த்துக் கொள். ஆனால் ஒவ்வொருவரும் 12 ரக்அத்துகள் அவசியம் தொழ வேண்டும் என்பதை மறந்து விடாதே!

நீ இதயம் உருக எஜமான் ஏந்தல் முஹிய்யித்தீன் அவர்களை அழைக்கின்ற போது (தொழும் போது அல்ல) நீ வீற்றிருக்கும் அறையை (இடத்தை) மையிருட்டாக ஆக்கிக் கொண்டால் அங்கே வியத்தகு காட்சிகள் பல விழி நேரில் கண்டு மகிழலாம்.

இவ்விதம் செய்து பலன் பெற்றவர்கள் எழுதியுள்ள கடிதங்கள் எண்ணிலடங்கா! பலன் பெற்ற பின் நீயும் அவசியம் எழுது. அது கொண்டு உன் உடன் பிறப்பான மற்றவரும் செயல்பட்டுச் சீரிய பலன் பெற உதவியாக இருக்கும்.

காதிர் ஒலி அவர்களின் மிக்க "சுதா' சுமந்த மதார்களின் எந்தத் தரீக்காவினைச் சேர்ந்த ஷைய்க்மார்களில் எவரிடத்திலேனும் இதற்கு "இஜாஸா' பெற்றுக் கொள்!

இல்லையெனினும் கவலை வேண்டாம். "ஞாலத்தின் தனி மேதை', ஞானத்தின் குரு பீடம், அஸ்ஸெய்யித் அப்துஷ் ஷகூர் ஜீலானி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களால் சீருடை அணிவித்து சிறப்பிக்கப் பெற்றவரும், மாதிஹுர் ரசூல் அஷ்ஷெய்க் சதக்கத்துல்லாஹ் ஒலி (ரழி) அவர்களின் வழித்தோன்றலாக வந்தவரும், "பாபகீஹ்' முஹம்மது ஜுபைர் ஹாபிழ் (ரஹ்) அவர்களின் புதல்வராகவும் உள்ள அல்ஹாஜ், ஜலீல் முஹிய்யித்தீன் காதிரிய்யில் காஹிரி அவர்களிடமிருந்து யாம் பெற்ற இஜாஸத்தை (அனுமதி) உமக்குத் தருகிறோம். செயலினை மேற்கொண்டு சீரிய பலன் பெற்று எழுதிட வேண்டுகிறோம்''

என்று தன்னுடைய முபாஹலா வாசகத்தை முடித்தார்கள்.

ஜனாப் பி. ஜெய்னுல் ஆபிதீன் மவ்லவி அவர்கள், குத்பியத் "ஷிர்க்' என்றும், குர்ஆன், ஹதீதுக்கு நேர் முரணானது என்றும் நிராகரித்துக் கூறினார்கள்.

இறுதியாக துஆ:

"யா அல்லாஹ்! மேற்கூறிய இந்த குத்பியத் கொள்கையில் உனது கண்ணோட்டத்தில் சத்திய தீனுல் இஸ்லாத்திற்கு மாற்றமாக யார் இருக்கிறார்களோ அவர்கள் மீது உனது லஃனத்தை (சாபம், முனிவு) நீ இறக்கி வைப்பாயாக!''

என்று ஜனாப் ஜலீல் முஹிய்யித்தீன் ஹாஜி அவர்கள் மூன்று முறை கூற, ஜனாப் ஜெய்னுல் ஆப்தீன் மவ்லவி அவர்களும், அவர்தம் மனைவி மக்களும் ஆமீன் கூறினார்கள்.

அடுத்து இதே துஆவை ஜனாப் ஜெய்னுல் ஆப்தீன் மவ்லவி அவர்கள் மூன்று முறை கூற ஜனாப் ஜலீல் முஹிய்யித்தீன் ஹாஜி அவர்களும் அவர்தம் மனைவி மக்களும் ஆமீன் கூறினார்கள்.

இத்துடன் முபாஹலா எனும் சத்தியப் பிரார்த்தனை முடிவுற்றது.

குத்பியத்தை அங்கீகரித்த ஜனாப் ஜலீல் முஹிய்யித்தீன் ஹாஜி அவர்களுடன் முபாஹலாவில் கலந்து கொண்ட அவர்தம் குடும்பத்தினர்:

1. ஜனாபா. எம்.எஸ். மும்தாஜ் (மனைவி 29)

2. செல்வி. பாத்திமா ஸெஹ்ரா (மகள் 9)

3. செல்வி. நபீஸத்துல் மிஸ்ரியா (மகள் 7)

4. செல்வன். அப்துர்ரஹீம்     (மகன் 3)

குத்பியத்தை நிராகரித்து முபாஹலா செய்த ஜனாப். மவ்லவி பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுடன் முபாஹலாவில் கலந்து கொண்ட அவர்கள் குடும்பத்தினர்:

1. ஜனாபா. கமருன்னிஸா (மனைவி 20)

2. செல்வன். முஹம்மது     (மகன் 4)

3. செல்வன். முஸ்லிம்      (மகன் நான்கு நாட்கள்)

முடிவுரை:

எங்களால் இயன்ற அளவில் நீதியுடனும் நேர்மையுடனும் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் அல்லாஹ்வின் உதவி கொண்டு இந்த "முபாஹலா' நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளோம். எங்களை அறியாமல் தவறு நடந்திருந்தால் இரு சாராரும் பொறுத்தருள வேண்டுகிறோம்.

இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேற அமைதி காத்து ஒத்துழைத்த அனைத்து மக்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

யா அல்லாஹ்! இதில் யாருக்கும் அதிர்ச்சி தரும் தண்டனையை நீ கொடுக்காமல், யார் உன் பொருத்தத்திற்கு முரணாக இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல ஹிதாயத்தைக் கொடுத்து நேரான பாதை எதோ அதில் பகிரங்கமாக இறக்கி, தவ்ஹீதை நிலைநாட்டச் செய்வாயாக! எது நேரான பாதை, எது தவறான பாதை என்பதைக் கூடிய விரைவில் நீ வெளிப்படுத்தி அருள்வாயாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன். வஸ்ஸலாம்.

இவண்

மரைக்கார் பள்ளி & அப்பா பள்ளி ஜமாஅத்தார்

ரெட் ஸ்டார் சங்கம்

காயல்பட்டணம்