தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு
அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இன்று இமயமாய், விண்ணைத் தொடும் சிகரமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இயக்கத்தில்
கோபுரம்; கொள்கையில் குப்பை மேடு என்ற நிலையில் இந்த இயக்கத்திலுள்ள உறுப்பினர்கள்
ஆகி விடக் கூடாது. கொள்கையிலும் கோபுரமாக இருக்க வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கிறேன் என்று சொல்கின்ற ஒருவர் தனது
கையில் தாயத்து கட்டியிருந்தால் (அப்படி யாரும் கட்டுவதில்லை) அவர் ஏதோ அரசியல் கட்சியில்
இருப்பது போன்று நினைத்துக் கொண்டு இந்த இயக்கத்தில் இருக்கிறார்; கொள்கையளவில் இல்லை என்று தான் அர்த்தம்.
ஒரு காலத்தில் குர்ஆன், ஹதீஸை மட்டும்
பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கும், செயல்படுவதற்கும்
பிறந்த இயக்கம் தான் அஹ்லே ஹதீஸ் என்ற இயக்கம். இன்று அந்த இயக்கத்தவர் தங்கள் கைகளிலும்
கழுத்துக்களிலும் தாயத்தைக் கட்டிக் கொண்டு திரிகின்றனர். கேட்டால் பெரியவர்கள் செய்தார்கள்
என்ற மவ்ட்டீக வாதத்தைப் பதிலாகத் தருகின்றனர். அவர்கள் இந்த நிலையை அடையக் காரணம், தங்கள் கொள்கையைப் பின்பற்றாதது தான்.
எனவே தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கத்தில் இருப்பவர்கள் அது போன்ற
ஒரு நிலையை அடைந்து விடாதிருக்க ஒவ்வொரு விஷயத்திலும் இவ்வியக்கத்தின் நிலைப்பாட்டைத்
தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றைத் தங்களின் முழு வாழ்க்கையிலும் கடைப் பிடிக்க
வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத்தைச் சாராதவர்கள், தங்களுக்கென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.
உதாரணத்திற்கு,
தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவர், திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டால், அதில் கலந்து கொள்ளலாமா? அது வரதட்சணை
வாங்கி நடத்தப்பட்ட திருமணம் ஆயிற்றே! அத்திருமணத்தில் இறைவனுக்கு இணை கற்பிக்கும்
காரியங்கள் நடந்தனவே! என்றெல்லாம் கேள்விகளுக்கு அவர் இடம் கொடுக்க மாட்டார். எந்தவிதத்
தடங்கலோ, தயக்கமோ இன்றி அந்த விருந்தில் போய் கலந்து கொள்வார்.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் அப்படிப் போய் கலந்து
கொள்ள முடியாது;
கலந்து கொள்ள மாட்டார். காரணம், தவ்ஹீத் ஜமாஅத் இது போன்ற விஷயங்களில் தனக்கென்று ஒரு நிலைப்பாட்டை
வகுத்துக் கொண்டது தான்.
மார்க்க நிலைப்பாடே இயக்க நிலைப்பாடு
வரதட்சணை வாங்கும் திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று
கூறி தனது உறுப்பினருக்கு இந்த ஜமாஅத் வழிகாட்டுவது போன்று, ஒருவர் தனது திருமணத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும்
ஒரு நிலைப்பாட்டைக் கூறி வழிகாட்டுகின்றது.
நிலைப்பாடு என்று குறிப்பிடும் போது தவ்ஹீத் ஜமாஅத்தினர் தங்கள்
மனோ இச்சைப்படி உருவாக்கிக் கொண்ட, சொந்தமாகத்
தயாரித்துக் கொண்ட ஒரு நிலைப்பாடு என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. மார்க்கம் என்ன சொல்கின்றதோ
அந்தச் சட்டங்களைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் தனது நிலைப்பாடாகக் கொண்டுள்ளது.
1. மணப் பெண் தேர்வு
இணை கற்பிக்கும் பெண்களைத் திருமணம் முடிக்கக் கூடாது என்று
திருக்குர்ஆனில் அல்லாஹ் தடை செய்துள்ளான்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம்
செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை
கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு
(உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான்
கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர்.
அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை
பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
அல்குர்ஆன் 2:221
ஏகத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட இளைஞர்களில் சிலர் பக்கா தர்ஹா
வழிபாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த மணமகளைத் திருமணம் முடிக்கின்றனர். அதிலும் குராபி
மதரஸாக்களில் படித்து ஆலிமா பட்டம் பெற்ற பெண்ணைத் திருமணம் முடிக்கின்றனர். இதற்கு
இவர்கள் குறிப்பிடுகின்ற ஒரே காரணம், அந்தப் பெண்
தனது மாமன் மகள், மாமி மகள் என்ற உறவு முறையைத்
தான். திருமணத்திற்குப் பிறகு அவளைத் தவ்ஹீதுக்குக் கொண்டு வந்து விடுவேன் என்றும்
கூறுகின்றனர்.
இந்த நொண்டிச் சாக்கிற்கும் நோஞ்சான் சமாதானத்திற்கும் அல்லாஹ்வே
விளக்கம் தருகிறான்.
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய
மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும்
நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே
அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. இருவரும் நரகில்
நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்! என்று கூறப்பட்டது.
அல்குர்ஆன் 66:10
நீண்ட காலமாகப் பழகி, நெருக்கமாக
வாழ்ந்த இவ்விரு இறைத் தூதர்களே தங்கள் மனைவிமார்களை ஏகத்துவத்திற்குக் கொண்டு வர முடியவில்லை
எனும் போது,
நேற்று தவ்ஹீதுக்கு வந்த நாம், இன்று ஒரு முஷ்ரிக்கான பெண்ணை மணமுடித்து, நாளை தவ்ஹீதுக்குக் கொண்டு வந்து விடுவேன் என்று சொல்வது எவ்வாறு
பொருத்தமான பதிலாக அமையும்?
இணை வைப்பில் உள்ள அந்தப் பெண் நாளை தவ்ஹீதுக்கு வந்து விடுவாள்
என்பது என்ன நிச்சயம்? அவள் தவ்ஹீதுக்கு வந்து விடுவாள்
என்ற ஞானம் நம்மில் யாருக்கு இருக்கிறது? இது அடுத்து
எழக்கூடிய கேள்வியாகும்.
திருமணம் முடித்துக் கொஞ்ச நாட்களில் இந்தப் பெண் கருவுற்ற நிலையில்
அவளை மணமுடித்த ஏகத்துவவாதி இறந்து விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். பிறக்கும்
அந்தக் குழந்தை தர்ஹா வழிபாட்டிலேயே வளர்க்கப்படும். காரணம், பெண்ணுடைய குடும்பமே தர்ஹா வழித்தோன்றல்கள், தர்ஹா வழிபாட்டு மையம்!
நாமும் நமது சந்ததியினரும் நரகத்தில் வீழ்ந்து விடக் கூடாது
என்பதற்காகத் தான் தவ்ஹீது ஜமாஅத்தில் இணைந்தோம். இந்த அடிப்படை நோக்கமே இப்போது அடிபட்டு, நம்முடைய சந்ததியை நாமே நரகத்தில் கொண்டு போய் தள்ளும் நிலைக்கு
ஆக்கி விடுகின்றோம். எனவே ஓர் ஏகத்துவக் கொள்கைவாதி ஒருபோதும் இணை வைக்கும் பெண்ணைத்
திருமணம் முடிக்கக் கூடாது.
2. திருமண உரை
ஒரு காலத்தில் பி.ஜே. உட்பட தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள்
பலரும் நீண்ட நெடிய தூரம் பயணம் மேற்கொண்டு, கொள்கைச் சகோதரர்களின்
திருமணங்களில் போய் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்கள். இதற்குக் காரணம் அந்தக் காலத்தில்
ஏகத்துவத்தைச் சொல்வதற்கு திருமணத்தின் மூலமாகவாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஆர்வம்
தான். ஆனால் இப்போது அவர்கள் யாரும் இது போன்று கலந்து கொள்வதில்லை. மாநில தாயீக்களும்
கலந்து கொள்வதில்லை. இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமண சபை என்று
ஒன்று கூடி,
அந்தச் சபையில் நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்டதாகப் பார்க்க
முடியவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், மதீனாவுக்கு வந்த போது, அவர்களையும்
சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத்
(ரலி) அவர்கள் வசதி படைத்தவராக இருந்தார்கள். அவர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களிடம், எனது செல்வத்தைச் சரிபாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன்; (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத்
தருகிறேன்! எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் வளம் (பரக்கத்)
புரிவானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்! எனக் கூறினார்கள். அவர்கள் பாலாடைக்
கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, தாம் தங்கியிருந்த
வீட்டாரிடம் கொண்டு வந்தார்கள். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன்
வந்தார்கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் என்ன விசேஷம்? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டேன்!
என்றார்கள். நபி (ஸல்) அவருக்கு என்ன மணக்கொடை (மஹ்ர்) கொடுத்தீர்? எனக் கேட்டார்கள். ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்! என
அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு, ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2048, 2049
திருமணத்திற்கென்று ஒரு தாயீ வர வேண்டும் என்பது அவசியமில்லை.
அப்படியானால் திருமண உரை?
திருமணத்தின் போது உரை நிகழ்த்தியாக வேண்டும் என்பது கட்டாயமல்ல!
ஜும்ஆ, பெருநாள் போன்ற வணக்கங்களுடன் சேர்ந்து அமைந்துள்ள உரைகளைத்
தவிர மற்ற இடங்களில் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் உரைகள் எங்கும்
அமையலாம். தேவை அதைத் தீர்மானிக்கும்.
(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார்
தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது
ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிமாறி விட்டது. உடனே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு
வெளியே வந்து,
பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும்
கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது மக்களே! உங்களை ஒரே
ஒரு உயிரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள் எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும், அல்ஹஷ்ர் அத்தியாயத்திலுள்ள நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
எனும் (59:18) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு
கூறி)னார்கள்.
அப்போது (உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம்
பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும் என்று கூறி, பேரீச்சம்
பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1848
வறுமையில் வாடும் ஒரு கூட்டத்தினரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் தர்மத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்துகின்றார்கள். இது
போன்று தான் திருமண உரையும்! திருமண ஒப்பந்தத்தின் போது வந்திருக்கும் மணமக்கள், அவர்களது பொறுப்பாளர்கள், சாட்சிகள்
முன்னிலையில் இறையச்சத்தை ஊட்டுகின்ற ஓர் உரை! அதுவும் கட்டாயமில்லை என்ற அளவுக்குத்
தான் திருமண உரை என்பது அமைந்துள்ளது.
திருமண உரை இந்த அளவுக்குத் தான் எனும் போது நாம் ஏன் திருமணத்தில்
இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் திரள்கிறோம் என்ற கேள்வி எழலாம்.
திருமண அவையில் இவ்வளவு பேர்கள் கூடுவதற்கு ஓர் அடிப்படைக் காரணம்
இருக்கின்றது. நம்முடைய தவ்ஹீது சகோதரர்களின் திருமணத்தின் போது தான் சுன்னத் ஜமாஅத்தினர்
எனப்படும் ஊர் ஜமாஅத்தினர் தங்கள் கெடுபிடிகளை, காட்டு தர்பார்களைக்
கட்டவிழ்த்து விடுகின்றனர். திருமணப் பதிவேடு தர மாட்டோம்; திருமணத்தில் கலந்து கொள்ளும் மக்களை ஊர் நீக்கம் செய்வோம் என்று
ஜமாஅத்தினர் மிரட்டல் விட்டனர். இந்த எதிர்ப்பலைகளால் நாம் ஒரு பெருங்கூட்டத்துடன்
அவையில் கலந்து கொள்வது கட்டாயமாகி விடுகின்றது.
ஏகத்துவம் எங்கெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கின்றதோ அங்கெல்லாம்
இத்தகைய பிரச்சனைகள் இன்னும் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படி மக்கள் குழுமுகின்ற
இடங்களில் இவ்வாறு ஒரு சொற்பொழிவு நடைபெறுகின்றது. இத்தகைய திருமணங்களில் நம்முடைய
தாயீக்கள் கலந்து கொள்கின்றனர்.
இது போன்ற கட்டங்களில் நம்முடைய தாயீக்கள், திருமணத்திற்காக ஒரு மார்க்க அறிஞர் அல்லது பேச்சாளர் வந்து
கலந்து கொண்டு உரை நிகழத்தினால் தான் திருமணம் என்பது கிடையாது என்று பகிரங்கமாக உணர்த்துவதற்குத்
தவறுவதில்லை.
இந்த வழக்கத்தை நியாயப்படுத்துவதில்லை. ஏகத்துவம் வளர்ந்த ஊர்களில்
இப்போது இந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதும் மாறி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள், உரை நிகழ்த்தினால் தான் திருணமம் நிறைவேறும் என்று விளங்கிக்
கொள்ளக் கூடாது.
இறைவன் நாடினால் அடுத்த இதழில்...
EGATHUVAM NOV 2009