Apr 16, 2017

குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் ஸதகத்துல் ஃபித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்ஹியா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பயிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனைப் பயிடுவதாகக் கனவு கண்டு அதை நிறைவேற்ற முயலும் போது, இறைவன் அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பயிடச் செய்தான். இந்த வரலாறு திருக்குர்ஆனில் 37வது அத்தியாயம் 102 முதல் 108 வரையிலான வசனங்கல் கூறப்பட்டுள்ளது. அதன் இறுதியில் பின்வரும் மக்கடையே இந்த நடைமுறையை நாம் விட்டு வைத்தோம் எனக் கூறப்படுகின்றது.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் 22:28

இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளையும் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்

குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு தான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலே, யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆக மாட்டார் என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: பரா (ர), நூல்: புகாரி 955, 5556

இந்த ஹதீஸில் இருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டும் இன்றி ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய 11, 12, 13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். பெருநாள் தினத்தில் கொடுக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்கலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் 22:28

குர்பானி கொடுப்பதற்கான பிராணிகளை வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்கல் இறைவனைத் துதிப்பார்கள் என்ற வாசகத்தைச் சிந்திக்கும் போது அறியப்பட்ட நாட்கல் குர்பானி கொடுக்கலாம் என்பது தெரிகிறது. இன்னின்ன நாட்கள் என்று விளக்கத் தேவையில்லாத அளவுக்கு அனைவருக்கும் தெரிந்த நாட்களையே அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

ஹஜ்ஜின் கிரியைகள் ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய மூன்று நாட்கள் வரை நீடிக்கும். பிறை 13 வரை ஹஜ்ஜின் கிரியைகள் உள்ளன. இது அனைத்து ஹாஜிகளுக்கும் தெரிந்த ஒன்றாகும். எனவே அறியப்பட்ட நாட்கள் என்பது 10, 11, 12, 13 ஆகிய நாட்கள் தான். சாதாரண மக்களுக்கே தெரிந்த விஷயமாக உள்ளதால் தான் அல்லாஹ் அறியப்பட்ட நாட்கள் எனக் கூறுகிறான்.

எனவே இந்த வசனத்திருந்து பிறை 13 மக்ப் வரை குர்பானி கொடுக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அறுக்கும் முறை

குர்பானிப் பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள். கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன், ஆயிஷாவே! கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு, இறைவா இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும், முஹம்மதின் சமுதாயத்தாரிடம் இருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர), நூல்: முஸ்ம் 3637

முஸ்ம் நூல் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

எத்தனை ஆடுகள்?

நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள இரண்டு கருப்பு, வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களின் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ர), நூல்: புகாரி 5554

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆடுகள் குர்பானி கொடுத்து இருப்பதால் நாமும் இரண்டு ஆடுகள் கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இரண்டு ஆடுகள் கொடுத்த நபி (ஸல்) ஒன்று தமக்காகவும் மற்றொன்று தமது சமுதாயத்திற்காகவும் கொடுத்ததாக அவர்களே குறிப்பிட்டதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சமுதாயத்திற்காக கொடுக்கின்ற பொறுப்பு நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லாததால் நாம் நமக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பது போதுமானதாகும்.

ஆபிது பின் ஹிப்ஸ் என்ற நபித் தோழர் தமது குடும்பத்தார் அனைவரின் சார்பாகவும் ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்து இருக்கிறார் என்று புகாரியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் காலத்தில் எத்தகைய நடை முறை இருந்தது என்பதைப் பின்வரும் செய்தியிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கன் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூ அய்யூப் (ர) அவர்கடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று விடையத்தார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் யஸார்

நூற்கள்: திர்மிதீ 1425, இப்னு மாஜா 3137, முஅத்தா921

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்குத் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: புகாரி 1718

மாட்டையோ, ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டை அல்லது ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு, அல்லது ஓர் ஒட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர். அறிவிப்பவர்: ஜாபிர் (ர), நூல்: முஸ்ம் 2323

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல், விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டைக் குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் கொஞ்சமும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

விநியோகம் செய்தல்

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்ம்கடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமான அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அத்தார்கள். இது புகாரியில் 1719வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு நபி (ஸல்) அவர்கடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர் (ர) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்று உள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து, அறுத்து, பங்கிடக்கூடியவருக்குக் கூயாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள். அறிவிப்பவர்: அலீ (ர), நூல்: புகாரி 1717

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவருக்கு, உரிப்பவருக்கு தனியாகத் தான் கூ கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி பிராணியின் எந்த ஒரு பகுதியையும் கூ என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் கட்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள்! வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். எவ்வளவு உண்ணலாம்; எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் நமக்கு நியாயம் என்று தோன்றுகின்ற அளவுக்கு நாம் எடுத்துக் கொண்டு, எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்கல் குர்பானி இறைச்சியை மூன்று பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும். என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானி கொடுக்கப்படும் பிராணிகள் ஏனோ தானோ என்று இருக்கக் கூடாது. மாறாக தரமுள்ளவையாக அவை இருக்க வேண்டும்.

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையல்ல. வெப்படையாகத் தெரியக் கூடிய குருட்டுத் தன்மை, வெப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெப்படையாகத் தெரியக்கூடிய ஊனம், கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! கொம்பில் ஒரு குறை, பல்ல் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு! மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: பரா (ர), நூல்: நஸயீ 4293

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெப்படையாகத் தெரியக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

இது பற்றி நமக்குக் கிடைத்துள்ள முக்கியமான ஹதீஸ்களைப் பார்ப்போம்.

நீங்கள் முஸின்னத் தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள்! உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர. அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத்தை அறுங்கள்! என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: ஜாபிர் (ர), நூல்: முஸ்ம் 3631

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் யார் நமது தொழுகையைத் தொழுது விட்டுப் பயிடுகிறாரோ அவர் தான் (குர்பானி எனும்) கடமையை நிறைவு செய்தவராவார். யார் தொழுகைக்கு முன் அறுக்கிறாரோ அவர் கிரியையைச் செய்தவராக மாட்டார் என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூ புர்தா (ர) அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டேன். இது உண்ணுகின்ற பருகுகின்ற நாள் என்று விளங்கிக் கொண்டேன். எனது குடும்பத்தில் நான் அறுக்கும் ஆடே முதல் ஆடாக இருக்க வேண்டும் என்று விரும்பி தொழுகைக்கு வருவதற்கு முன்பே அறுத்து விட்டேன் எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமது ஆடு இறைச்சிக்காக அறுக்கப்பட்டதாகும் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்கடம் ஜத்அத் பருவத்தில் ஆட்டுக்குட்டி உள்ளது. இரண்டு ஆடுகளை விட அது எனக்கு விருப்பமானது. அதை அறுத்தால் போதுமா? என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், போதும். ஆனால் உம்மைத் தவிர வேறு யாருக்கும் இது போதுமாகாது என்றார்கள்.

அறிவிப்பவர்: பரா (ர), நூல்: புகாரி 955

நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தனர். அதில் எனக்கு ஜத்வு கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதைக் குர்பானி கொடுப்பீராக! என்றனர். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ர), நூல்கள்: புகாரி 5547, முஸ்லிம் 3634 எந்த வயதுடைய பிராணியைக் குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு இம் மூன்று ஹதீஸ்கல் போதுமான விளக்கம் கிடைக்கின்றது.

முஸின்னத் எனும் பருவம் உடையதைக் குர்பானி கொடுக்குமாறு முதல் ஹதீஸ் கட்டளையிடுகிறது.

முஸின்னத் என்பது எத்தனை வயதுடைய பிராணி என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்தக் கருத்து வேறுபாடுகள் யாவும் அர்த்தமற்றதாகவே உள்ளன.

முஸின்னத் என்றால் இனவிருத்தி செய்வதற்கான பருவத்தை அடைந்தவை என்பது பொருள். அதாவது மனிதர்கள் வயதுக்கு வருவது போல், பருவமடைவது போல் கால்நடைகளும் குறிப்பிட்ட வயதில் பருவமடைகின்றன. இங்கே வயதை விட பருவமடைவது தான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மனிதர்கல் பெண்கள் பருவமடைவது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் 15 வயதில் பருவமடைவார்கள். சிலர் ஒன்பது வயதிலும் பருவமடைவதுண்டு. அவர்களது நாட்டில் நிலவும் தட்பவெப்பம், குடும்பப் பாரம்பரியம், உணவுப் பழக்கம், வசதி வறுமை போன்று எத்தனையோ காரணங்களால் இந்த வித்தியாசம் ஏற்படுகின்றன.

இது போன்ற வித்தியாசம் மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் உள்ளது. காஷ்மீர் ஆடுகளும் தமிழகத்து ஆடுகளும் ஒரே வயதில் பருவமடையும் என்று கூறமுடியாது.

பெரும்பாலும் ஒட்டகம் ஆறு வயதில் பருவமடையும். மாடுகள் மூன்று வயதில் பருவமடையும். ஆடுகள் இரண்டு வயதில் பருவமடையும். இந்தப் பருவத்தில் உள்ள பிராணிகள் முஸின்னத் எனப்படும். இந்தக் கணக்கு உத்தேசமானது தான். இதில் பல காரணங்களால் வித்தியாசம் ஏற்படும். துணை தேடுவது, பற்கள் விழுதல் போன்றவற்றை வைத்து அதற்கான அறிவு உள்ளவர்கள் பருவமடைந்ததைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

முஸின்னத்தை குர்பானி கொடுங்கள் என்றால் பருவமடைந்ததைக் குர்பானி கொடுங்கள் என்பது பொருள். நமது நாட்டில் இத்துறையில் அனுபவமுள்ளவர்கடம் கேட்டு வெள்ளாடு, செம்மறி ஆடு, மாடு ஆகியவை எத்தனை வருடம் எத்தனை மாதத்தில் பருவம் அடையும் என்று அறிந்து கொள்ளலாம்.

பவருமடைவதற்கு முந்தைய நிலையில் உள்ளது ஜத்வு எனப்படும். அதாவது பல் விழும் பருவத்தில் உள்ளது என்பது பொருள். உறுதியான பற்கள் முளைப்பதற்காகப் பிறக்கும் போது இருந்த பற்கள் விழுந்து விடும். அவ்வாறு பல் விழ ஆரம்பித்து விட்டால் அது ஜத்வு எனப்படும். இதுவும் ஆடு, மாடு, ஒட்டகங்களுக்கு வித்தியாசப்படும். நாட்டுக்கு நாடு மாறுபடும்.

பல் விழுந்து விட்டதா என்று பார்த்து அறிந்து கொள்ளலாம். அல்லது விசாரித்து அறிந்து கொள்ளலாம். ஏறத்தாழ ஒரு வயதில் பல் விழக்கூடும்.

முதல் ஹதீஸில் பருவம் அடைந்ததைக் குர்பானி கொடுக்கச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் சிரமமாக இருந்தால் அதற்கு அடுத்த நிலையில் உள்ளதைக் கொடுக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இரண்டாவது ஹதீஸில் பல்விழும் பருவத்தில் உள்ளது உனக்கு மட்டும் தான். மற்றவருக்குப் போதாது என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். இது முந்திய ஹதீஸின் கருத்துக்கு எதிரானது போல தோன்றுகிறது.

சக்தி இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் ஜத்வு கொடுக்கலாம் என்று முதல் ஹதீஸும், அந்த நபித் தோழரைத் தவிர வேறு எவரும் கொடுக்கக் கூடாது என்று இரண்டாவது ஹதீஸும் கூறுகிறது.

மூன்றாவது ஹதீஸில் உக்பா என்ற மற்றொரு நபித்தோழருக்கும் அனுமதியக்கப்பட்டுள்ளது. உம்மைத் தவிர வேறு யாருக்கும் இந்த அனுமதி கிடையாது என்ற ஹதீஸுடன் இதுவும் முரண்படுகிறது.

இரண்டாவது ஹதீஸை சிறந்தது என்ற அடிப்படையில் கூறியதாகத் தான் எடுத்துக் கொள்ளவேண்டும். சட்டம் தெரியாத நிலையில் நீர் முன்பே அறுத்து விட்டதால் இப்போது ஜத்வு கொடுத்தாலும் முஸின்னத்தின் நன்மை கிடைக்கும். மற்றவர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது. ஜத்வு கொடுத்தால் ஜத்வு கொடுத்த நன்மை தான் கிடைக்கும் என்று புரிந்து கொண்டால் ஹதீஸ்களுக்கிடையே முரண்பாடு ஏதுமில்லை.

இயன்ற வரை பருவமடைந்ததைக் கொடுக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால் அல்லது சக்தி இல்லாவிட்டால் குறைந்த பட்சம் பல் விழுந்த ஆட்டையேனும் கொடுக்க வேண்டும். இவ்வாறு புரிந்து கொண்டால் முரண்பாடு இல்லை.

கிடாயும் பெட்டையும்

பெட்டை ஆடுகளையும், கிடாய்களையும் முஸ்ம்கள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சில பகுதிகல் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போலவும் கருதுகின்றனர்.

சாதாரணமான நேரத்திலேயே பெட்டை ஆடுகளைச் சாப்பிடக் கூடாது எனக் கருதக் கூடியவர்கள், குர்பானி கொடுப்பதற்குப் பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர். பெட்டை ஆடுகளைக் குர்பானி கொடுக்கக் கூடிய ஒருவரைக் கூட தமிழகத்தில் காண முடியாது.

இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதில் கிடாயும் ஆடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும் சமமானவை தான் என்பதை முஸ்லிம்கள் முதல் நம்ப வேண்டும். பறவையினங்கல் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகல் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர்.

குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும் தான் தகுதியானது என்று திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை. நபிகள் நாயகத்தின் பொன் மொழிகலும் கூறப்படவில்லை.

இன்னும் சொல்லப் போனால் குர்பானி பற்றிக் கூறும் போது ஜத்வு என்று ஆண்பால் கூறப்பட்டுள்ளது போலவே ஜத்அத் என்று பெண்பாலும் கூறப்பட்டுள்ளது. முஸின் என்று ஆண் பாலாகவும் முஸின்னத் என்று பெண் பாலாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே ஆண் கால்நடைகளைத் தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை

ஒருவர் குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக்கூடாது, முடிகளை நீக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ர), நூல்: நஸயீ 4285

தாமே அறுக்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போது தமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்ம் உட்பட பல நூல்கலும் இடம் பெற்றுள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

பொது நிதியிருந்து குர்பானி கொடுத்தல்

வசதியுள்ளவர்கள் மட்டுமின்றி வசதியற்றவர்களும் குர்பானி கொடுப்பதற்கான ஏற்பாட்டை நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்தியிருந்தார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுக் கருவூலத்தில் ஏராளமாக நிதி குவிய ஆரம்பித்தது. ஆரம்ப காலத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிடக் கூட வசதியற்றிருந்த ஒரு சமுதாயம் மிக உன்னதமான பொருளாதார முன்னேற்றத்தை எட்டியது.

இவ்வாறு செல்வச் செழிப்பு ஏற்பட்ட காலத்தில் குர்பானி கொடுக்க விரும்புகிறவர்களுக்கு குர்பானி பிராணிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணிகளை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். எனக்கு ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி தான் கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆறு மாதக் குட்டி தானே கிடைத்துள்ளது எனக் கூறினேன். அதையே நீர் குர்பானி கொடுப்பீராக! என்று நபி (ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ர), நூல்கள்: புகாரி 5547, முஸ்லிம் 3634 பொது நிதியிருந்து குர்பானிப் பிராணிகள் வழங்கப்படும் வழக்கம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததை இந்த ஹதீஸிருந்து அறிந்து கொள்ளலாம்.

EGATHUVAM NOV 2009