Apr 5, 2017

பெண்களின் விவாகரத்து உரிமை

பெண்களின் விவாகரத்து உரிமை

விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ர-) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி "சரி'' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் "தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர-)

நூல்கள்: புகாரி 5273, நஸயீ

மேற்கண்ட செய்தியி-ருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தி-ருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்கா விட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும், திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியி-ருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிகச் சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும். இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப் பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதி-ருந்து இதை உணரலாம்.

இஸ்லாம், திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது. இதைத் திருக்குர்ஆன் "அப்பெண்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்து, ஒருவர் மற்றொருவருடன் கலந்து விட்டீர்களே! (திருக்குர்ஆன் 4:21) என்றும்

"கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று மனைவியருக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு'' (திருக்குர்ஆன் 2:228) என்றும் கூறுகிறது.

பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படா விட்டால் அதனாலும் பல        தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.

கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.

விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, விரும்பியவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.

எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதி-ருந்து அறியலாம். (பார்க்க திருக்குர்ஆன் 2:228-232)

இப்போது சொல்லுங்கள்! உலகில் உள்ள மதங்களில் எந்த மதம் இலகுவான மதமாக இருக்கின்றது? பெண்களுக்கும் இலகுவான சட்டங்களை வகுத்துள்ளது?

இஸ்லாமிய மார்க்கம் தான் வணக்க வழிபாடுகளில் மட்டுமல்லாமல் வாழ்வியலிலும் எளிமையான சட்டங்களை வழங்கி, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று பறைசாற்றுகிறது. இதைத் தான்  வல்ல அல்லாஹ்வும் தனது திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.


அல்குர்ஆன் 5:6

EGATHUVAM OCT 2007