Apr 5, 2017

உடன் கட்டையும் இல்லை! உடன் மொட்டையும் இல்லை!

உடன் கட்டையும் இல்லை! உடன் மொட்டையும் இல்லை!

கணவன் இறந்து விட்டால் போதும்! அந்தப் பெண்ணுக்கு, சமுதாய மக்கள் மொட்டையடித்து விடுவர். வெள்ளாடை உடுத்தி ஒரு மூலையில், மூளி என்று முடக்கி வைத்து விடுகின்றனர்.

ஒரு பெண் கணவனுடன் வாழ்ந்தால் சுமங்கலி! கணவனை இழந்து விட்டால் அமங்கலி; தாலி அறுத்தவள். நல்ல காரியத்திற்குச் செல்வோருக்கு முன்னால் அவள் குறுக்கே வந்து விட்டால் அது துற்குறி, சாபக்கேடு, கெட்ட சகுனம் என்றெல்லாம் விதவைப் பெண்களை வதை செய்கின்ற கொடுமை நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

மொட்டை அடித்து வதை செய்யும் கொடுமையுடன் நின்று விடுவதில்லை. இறந்த கணவனை எரிக்கும் போது அந்த நெருப்பில் மனைவியையும் தள்ளி விட்டு, உடன் கட்டை ஏறுதல் என்ற பெயரில் கொழுந்து விட்டு எரியச் செய்வர்.

04.09.1987 அன்று ராஜஸ்தான் மாநிலம் டியோராலா என்ற கிராமத்தில் ஒரு கோரச் சம்பவம் நடந்தது. ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த மால்சிங் என்பவர் இறந்து விடுகிறார். அவருடைய உடலுக்குச் சிதை மூட்டப்படுகிறது. இறுதிச் சடங்கில் ஊர் பொதுமக்கள் கூடி நிற்கிறார்கள். இறந்த கணவனின் தலை, அவனது இளம் மனைவியின் மடியில் இருக்க சிதைக்கு தீ மூட்டப்படுகின்றது. பிணம் மட்டும் அந்தக் கோரத் தீயின் பசிக்கு இரையாகவில்லை. கொழுந்து விட்டு எரிந்த அந்த நெருப்பில் 18 வயது இளம் பெண் ரூப் கண்வாரும் சேர்ந்து எரிகின்றாள்.

தன்னைக் காப்பாற்றும்படி கதறிய கதறல், மவ்ட்டீக சிந்தனையில் ஊறிப் போன அந்த மக்களின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை. மறுமணம் புரிந்து மறு வாழ்வு காண வேண்டிய ஒரு மலர் குருட்டு நம்பிக்கையின் கோரத் தீயில் பலியாகிப் போகின்றாள்.

இன்றைய காலத்து 24 மணி நேரத் தொலைக்காட்சி அலை வரிசைகள் அன்று இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்தச் செய்தியைக் கண்டு உலகமே வெகுண்டு, வீறு கொண்டு எழுந்திருக்கும். பத்திரிகைகள் தான் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் படம் பிடித்துக் காட்டின. பாரதீய ஜனதா கட்சி மட்டும் அப்போது இந்த அநியாயத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.

அகில இந்திய அளவில் கிளம்பிய எதிர்ப்பலையால் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. எனினும் ஊர் மக்களுக்கு எதிராக காவல்துறை தரப்பில் சரியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இதனால் 31.04.2004 அன்று இந்த வழக்கைத் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இவ்வாறு உடன்கட்டை ஏறவில்லை என்றால், கணவனை இழந்த கைம்பெண் இப்படிச் சாகவில்லை என்றால், அவளைச் சாகடிப்பதற்குச் சமுதாயம் வேறொரு முறையைக் கையாளும்.

ஆண்களோ அல்லது திருமணம் முடித்த பெண்களோ பார்க்காதவாறு விதவைப் பெண் ஒரு கருப்புத் திரையில் மூடப்பட்ட, ஆட அசைய முடியாமல் சதுர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு தனியறையில் அடைக்கப்படுவாள்.

நாள் முழுவதும் தரையில் தான் உட்கார வேண்டும். அதுவும் தன் இரு முட்டுக்கால்களை நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வந்து குத்த வைத்து உட்கார வேண்டும். ஒரு வேளை மட்டும் உப்பில்லாத உணவு சாப்பிட வேண்டும். இதிலேயே அவள் மெலிந்து சாக வேண்டும். இதுவும் ராஜஸ்தானில் நடைபெறும் கொடுமையாகும்.

விதவைப் பெண்கள் அனுபவிக்கும் விதவிதமான கொடுமைகளைப் பார்த்தீர்களா? ஏற்கனவே கணவனை இழந்து தவிக்கும் அவளுக்குச் சமுதாயம் ஆறுதல் வழங்குவதற்குப் பதிலாக, அரங்கேற்றும் அக்கிரமங்கள், இழைக்கும் அநியாயங்களைப் பாருங்கள்.

உடன் கட்டை ஏற்றி, உயிருடன் ஒரு பெண்ணைக் கொலை செய்யும் கொடுமை இந்நாட்டில் இந்து மதத்தில் உள்ள நடைமுறையாகும்.

யூத மதத்தில் விதவையின் நிலை

யூத மதப்படி, கணவனை இழந்த கைம்பெண்ணுக்குக் குழந்தை இல்லையெனில் அவள் கண்டிப்பாகக் கணவனின் தம்பியைத் திருமணம் முடித்தாக வேண்டும். கணவனின் சந்ததி தழைப்பதற்காக இந்த ஏற்பாடு! இதை பைபிளின் பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கலாம்.

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

ஆதியாகாமம் 38:8

இதில் வேடிக்கை என்னவெனில், இறந்தவனின் சகோதரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும் அவன் தன் அண்ணியைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்.

விதவையான அந்தப் பெண்ணிடம் சம்மதம் கூடப் பெறப்படாது. காரணம், அவள் இறந்தவனின் மனைவியாக, ஒரு பெண்ணாக நடத்தப்படமாட்டாள். மாறாக, அவள் இறந்தவனின் சொத்தாகவே கருதப்படுவாள்.

அது மட்டுமின்றி விதவை களையும், விவாகரத்துச் செய்யப் பட்ட பெண்களையும் யூத உயர் குலத்தோர் மற்றும் மத குருமார்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் பழைய ஏற்பாடு தெரிவிக்கின்றது.

கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம் பண்ண வேண்டும்.

விதவையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்பு குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம் பண்ணாமல், தன் ஜனங்களுக் குள்ளே ஒரு கன்னிகையை விவாகம் பண்ணக் கடவன்.

அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 21:13-15

இப்படி யூத மதம் தன் பங்குக்கு விதவைப் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது; கொடுமையைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

அரபியர்களிடம் விதவைகள்

இஸ்லாம் வருவதற்கு முன் வாழ்ந்த அரபியர்களிடம் விதவைகளை மணம் முடிக்கும் பழக்கம் இருந்தாலும் அவர்களிடத்திலும் ஒரு கொடுமை நீடித்து வந்தது.

சகோதரர்களின் மனைவிகளை சொத்துக்களைப் போல் பாவிப்பது யூதர்களின் நடைமுறை என்றால், அரபியர்கள் தங்கள் தந்தையரின் மனைவியரைச் சொத்தாகப் பாவித்து அவர்களைக் கட்டிக் கொள்வார்கள்.

இவ்வாறு விதவைகள் மற்றும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் விஷயத்தில் உலக மதங்கள் அனைத்தும் அநீதியையும், அக்கிரமத்தையும் இழைப்பதைப் பார்க்கிறோம். இதில் இஸ்லாம் மட்டும் தான் விதிவிலக்காகத் திகழ்கிறது.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:32

கைவிடப்பட்ட கைம்பெண்களை திருமணம் முடித்து வைக்க இந்த வசனம் சொல்கிறது. யூத, கிறித்தவ, இந்து மதங்கள் போன்று விதவைகளையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் சாபக்கேடுகளாக, சமுதாயச் சுமைகளாக இஸ்லாம் கருதவில்லை.

கைம்பெண்களின் சம்மதம் கேட்காமலேயே அவளைக் கொழுந்தனுக்குக் கட்டி வைக்கும் பழக்கத்தை யூத மதம் கொண்டிருப்பதைக் கண்டோம். கணவனின் சொத்துக்களில் ஒன்றாக அவளையும் பாவிக்கும் பொழுது, அந்தப் பெண்ணிடம் எப்படி சம்மதம் கேட்கச் சொல்ல முடியும்?

இதோ இஸ்லாம் எனும் இந்த எளிய மார்க்கத்தின் இனிய தூதர், இது தொடர்பாக வழங்கும் உரிமை முழக்கத்தைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணை அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்'' என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஹன்ஸா பின்த் கிதாம்(ரலி)

நூல்: புகாரி 5136

எவ்வளவு பெரிய விடுதலை உணர்வை இஸ்லாம் வழங்குகிறது என்று பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணம் முடித்த பெண்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் விதவையர் தான் என்றால், விதவைகளின் மறு வாழ்வுக்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இறந்து விட்ட தந்தையின் மனைவியரை, தந்தையின் சொத்தாகப் பாவித்து, பிள்ளைகள் மணமுடிக்கும் வழக்கம் அரபியர்களிடம் இருந்ததைக் கண்டோம். இந்தப் பழக்கத்தை இஸ்லாம், அரபியர்களிடமிருந்து வேரறுத்து எறிந்து விடுகின்றது.

உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.

அல்குர்ஆன் 4:22

விதவைகளையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் மணம் முடிக்கும் வழக்கம் கிறித்தவர்களிடம் தற்போது நடைமுறையில் இருந்தாலும் வேதத்தில் இல்லை. எனவே இது வேதத்தின் குறைபாடாக ஆகிவிடுகின்றது. ஆனால் திருக்குர்ஆன் நிறைவான வேதம் என்பதால் இந்த நிவாரணத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன், அதை மக்களிடம் நடைமுறையிலும் கொண்டு வந்தது.


இவ்வாறு விதவைப் பெண்களின் கொடுமைகளைப் போக்கும் எளிய மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. இந்த எளிய மார்க்கம் விதவைகளுக்கென சில வழிமுறைகளையும் வகுத்துள்ளது. அது தான் இத்தா சட்டமாகும்.

EGATHUVAM OCT 2007