இத்தா
ஒரு விளக்கம்
கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லா விட்டால் நான்கு மாதம், பத்து நாட்கள் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக்
கால கட்டம் "இத்தா' எனப்படுகிறது.
கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின்
எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.
முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை
இல்லை எனக் கூறி விடுவர். இதனால் தந்தை யார் என்பதே தெரியாததால் மன ரீதியான பாதிப்பு
அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல்
போய் விடும்.
இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள்
என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.
கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே! அந்த மாதத்தில்
மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே! நான்கு மாதம் பத்து நாட்கள்
அதிகமல்லவா?
என்று சிலர் நினைக்கலாம்.
இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத்
தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும்
காத்திருக்கச் சொல்கிறது.
ஒரு பெண் தான் முதல் மாதமே கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டாலும்
அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். (அதனால் தான் இறைவனும் கூட இவ்வாறு குர்ஆனில் கூறுகிறான் 2:228) தான் கருவுறவில்லை என்று கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம்.
நான்கு மாதம் பத்து நாட்களுக்கு இவ்வாறு கூறமுடியாது. வயிறு காட்டிக் கொடுத்து விடும்.
குறைப் பிரசவமாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்தால் அது முந்தைய
கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள்
கடந்த பின்பு அவன் இப்படிக் கூற முடியாது. குழந்தை இருந்தால் தான் நான்கு மாதத்தில்
வெளிப்படையாகத் தெரியுமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.
இத்தகைய காரணங்களால் தான் பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர் காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவளது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச்
செய்துள்ளான்.
மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள்
சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும்
உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.
(அல் குர்ஆன் 65:4)
கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல்
காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் காலக் கெடுவிலிலி-ருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.
கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை
அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான் (அல் குர்ஆன் 65:4)
கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும்
கிடையாது.
கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால்
அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள்
ஆகலாம்.
இவ்வசனத்திலிலி-ருந்து இந்தச் சட்டத்தை அறியலாம்.
இத்தாக் காலம் என்பது மேற்கூறப்பட்ட நிலையிலுள்ள பெண்கள் மறுமணம்
செய்வதற்காக உள்ள கால கட்டமாகும். அதாவது மேற்கூறப்பட்ட கால கட்டங்கள் நிறைவு பெற்றவுடன்
தான் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.
இக்கால கட்டங்களில் அவர்கள் தங்களுடைய அலங்காரங்களைக் குறைத்துக்
கொள்ள வேண்டும்.
இந்தக் கால கட்டத்தில் பகிரங்கமான முறையில் மணம் பேசுதல் போன்ற
காரியங்களில் ஈடுபடக் கூடாது. மறைமுகமாக திருமணம் குறித்து பேசிக் கொள்வதில் தவறில்லை.
(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை
நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக
அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும்
முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு
அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும்
அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 2:235
கணவன் இறந்த பின் அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை
வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் சுர்மா இடவோ மணப் பொருட்களை பூசவோ சாயமிடப்பட்ட
ஆடைகளை அணியவோ கூடாது. நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட (அஸ்ப்
எனும்) ஆடைகளைத் தவிர!
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 313
இதைத் தவிர ஏனைய காரியங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில்
எந்தத் தடையும் இல்லை. மேலே கூறப்பட்டுள்ள காரியங்கள் தவிர மற்றவற்றுக்கு சாதாரண நாட்களில்
பெண்களுக்கு என்ன சட்டமோ அது தான் இந்த இத்தா காலத்திலும் உள்ளது.
ஆனால் இன்று நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில், இத்தா என்ற பெயரில் பெண்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.
வீட்டில் வெள்ளைத் திரை போட்டு மறைத்து வைக்கின்றனர். பெண்களைச்
சூரிய ஒளி கூட படாத வகையில் இருட்டறையில் அடைத்து
வைத்து விடுகின்றனர். சில ஊர்களில் பாய்களால் அறை அமைக்கின்றனர். அவர்கள் வானம் பார்க்கக்
கூடாது; வெளிச்சம் பட்டுவிடக் கூடாது; யாரையும்
பார்க்கக் கூடாது என்பதற்காகப் பாயிலுள்ள ஓட்டைகளைக் கூட சாணியைப் பூசியும், சிமிண்ட் போன்ற பொருட்களை பூசியும் அடைத்து விடுகின்றனர். இதற்கு
வயதான பெண்களும் விதிவிலக்கல்ல.
அவர்கள் எந்த ஆண்களையும் பார்க்கக் கூடாதாம், அதற்காகத் தான் இவ்வாறெல்லாம் செய்கின்றனர்.
சில ஊர்களில் ஆண் குழந்தைகள் கூட அந்த அறைக்குள் செல்வது கூடாதாம்.
இதை விட மிகக் கொடுமை என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்கள் கூட அந்த அறைக்குள் செல்லக்
கூடாதாம். ஏனென்றால் அப்பெண்களின் வயிற்றில் ஆண் குழந்தை இருக்கலாமாம். அது அப்பெண்ணைப்
பார்த்து விடக் கூடாதாம். சில ஊர்களில் பெற்றெடுத்த மகன் கூட இந்த அறைக்குள் தன்னுடைய
தாயைப் பார்ப்பதற்குத் தடை உள்ளது.
இது போன்று மார்க்கத்தில் இல்லாத கற்பனைக் கட்டுப்பாடுகளைப்
போட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அல்லாஹ்வும்
அவனது தூதரும் காட்டித் தராத இந்த நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் இந்த எளிய மார்க்கத்தை
கடின மார்க்கமாக ஆக்கி விட்டவர்கள், அல்லாஹ்விடம்
பதில் சொல்லியாக வேண்டும்.
வீட்டில் வெள்ளைத் திரை போட்டு மறைக்கும் பழக்கம் பிற மதத்திலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகும். கணவனை இழந்தவர்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் திருமணம் முடிக்காமல் இருக்க வேண்டும்; அலங்காரங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு
எந்தக் கட்டுப்பாட்டையும் அல்லாஹ் விதிக்கவில்லை. காரணம், இது அல்லாஹ்விடமிருந்து வந்த கரை படாத கலப்படமில்லாத மார்க்கமாகும். மக்கள்
மீது எந்தச் சிரமத்தையும் விதிக்காத எளிய மார்க்கமாகும்.
இத்தாவிலும் சலுகைகள்
கணவனை இழந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய இத்தா குறித்து பார்த்தோம்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களும் இத்தா இருக்க வேண்டும் என்றாலும், அதே கால அளவு இருக்கத் தேவையில்லை.
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம்
(மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ்
படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால்
அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக்
கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு
ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 2:228
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தா காலம் கிட்டத்தட்ட
மூன்று மாதங்களாகும். மேலும், பைபிள் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டதைப்
போன்று, விவாகரத்துச் செய்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ ஒரேயடியாகத்
தடை விதிக்கவில்லை. இந்த மூன்று மாதவிடாய் காலத்திற்குள் கணவன், மனைவியுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை வழங்குகிறது.
ஒருவர் ஒரு பெண்ணை மணமுடித்து, அவளைத் தொடாமலேயே விவாகரத்துச் செய்து விட்டால் அந்தப் பெண்
இத்தா அனுஷ்டிக்க வேண்டுமா? என்றால் தேவையில்லை என்று திருக்குர்ஆன்
கூறுகிறது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து
அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும்
இத்தா ஏதுமில்லை. அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள். அழகிய முறையில் அவர்களை விட்டு
விடுங்கள்!
அல்குர்ஆன் 33:49
இது போன்ற இல்லறவியலின் ஒவ்வொரு விஷயத்திலும் பல்வேறு சலுகைகளை
வழங்கி, தான் ஓர் எளிய மார்க்கம் என்பதை உலகுக்குப் பறை சாற்றி நிற்கின்றது.
EGATHUVAM OCT 2007