தேர்தல் தரும் படிப்பினைகள்
கே.எம். அப்துந்நாஸிர்
பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்
மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று
முடிந்து விட்டது. வாகனங்களின் அணி வகுப்புகள், நட்சத்திரங்களின் மினுக்கல்கள், கட்சிகளின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர்களின் தொகுதிப் பிரவேசம், தொண்டர்களின் ஆரவாரம், கட்அவுட்கள், கொடிக் களைகள் என்று விழாக் கோலமாக காணப்பட்ட தமிழகம் மே 6ம் தேதியுடன் அமைதி நிலைக்குத் திரும்பியது. எது எப்படி இருப்பினும்
இந்தத் தேர்தல் நமக்குப் பல படிப்பினைகளை பெற்றுத் தந்துள்ளது.
ஜோதிடம் பொய்யானது
தேர்தலை முன்னிட்டுத் தான் எத்தனை, எத்தனை கருத்துக் கணிப்புகள், ஜோதிடர்களின் வாய் ஜாலங்கள். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக கணிப்புகள் வெளிவந்து கொண்டே இருந்தன. அ.தி.மு.க.
ஆட்சியைக் கைப்பற்றும் என்று சில கணிப்புகள், தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்று சில கணிப்புகள்.
இதில், ராகு
இங்கு வந்து விட்டான், கேது அங்கே
போய் விட்டான் எனவே அ.தி.மு.க. தான் ஆட்சியைக் கைப்பற்றும்; ஜெயலலிதா தான் முதலமைச்சராவார் என்றெல்லாம் ஜோதிடர்களின் கிரகக்
கணிப்புகள் வேறு.
நாளை நடக்கவிருப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது
என்பதைத் தான் இத்தகைய பலதரப்பட்ட கணிப்புகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
இதைத் தான் திருமறைக் குர்ஆன் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும்
அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன்
அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
(அல்குர்ஆன் 6:59)
தான், நாளை
சம்பாதிக்க உள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ்
நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
(அல்குர்ஆன் 31:34)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நாளை நடப்பதை அல்லாஹ்வைத்
தவிர வேறு யாரும் அறிய முடியாது''
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: இப்னு மாஜா 1887
ஜோதிடம் என்பது வெறும் ஏமாற்றுக் கலை தான் என்பதைப் பல விஷயங்களில்
அறிந்த பிறகும் இன்று வரை மக்கள் அதில் ஏமாந்து விடுவதை நாம் நடைமுறை வாழ்க்கையில்
பார்க்க முடிகிறது. இதற்கு ஒரு சில உதாரணங்களை நாம் தெளிவாகக் கூறலாம்.
ராஜீவ் காந்தி பத்தாண்டுகள் பிரதமராக இருப்பார் என்று மிகப்
பிரபலமான ஜோதிட வித்வான் கணித்துக் கூறினார். ஆனால் அது பொய்யாகப் போனது.
இந்தியா உலகக் கோப்பையைக் கைப்பற்றும் என்று பிரபல ஜோதிடர்கள்
கணித்து கூறியதும் பொய்யாகப் போனது.
ஜெயலலிதா முதலமைச்சராவார் என்று பிரபல ஜோதிடர்கள் கணித்துக்
கூறியதும் பொய்யாகப் போனதை இந்தத் தேர்தலில் நாம் கண்டோம்.
இப்படிப்பட்ட விஷயங்களை நம்பி நாம் ஏமாந்து விடக் கூடாது என்பதால் தான் நபியவர்கள் மிகக் கடுமையான எச்சரிக்கையை
நமக்கு விடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் குறிகாரன், அல்லது வருங்காலத்தைக் கணித்துக் கூறுபவனிடம் சென்று அவன் கூறுவதை
உண்மை என நம்புகிறானோ அவன், இந்த முஹம்மதின்
மீது இறக்கப்பட்ட வேதத்தை நிராகரித்து விட்டான்''
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 9171
பித்அத்தை ஆதரிப்பவர்கள் சிந்திக்கட்டும்
இந்தத் தேர்தல் நமக்கு மற்றொரு படிப்பினையைப் பெற்றுத் தருகிறது.
ஒவ்வொரு கட்சியினரும் தாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரச்சாரம்
செய்தார்கள். அந்தப் பிரச்சாரம் தான் மக்களை மாற்றக் கூடியது என்றும், தாங்கள் யாரை தீய சக்திகளாக நினைக்கிறார்களோ அவர்கள் மீண்டும்
ஆட்சிக்கு வந்து விடாமல் தடுக்கின்ற கேடயம்
என்றும் கருதினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிரச்சாரம் செய்ததை நாம் காண
முடிந்தது.
தேர்தல் பணிகளையெல்லாம் கண்காணிக்கின்ற, கட்டுப்படுத்துகின்ற தேர்தல் கமிஷன் ஒரு உத்தரவு பிறப்பிக்கின்றது.
அதாவது 6ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. யாராவது 05:01 மணிக்கு பிரச்சாரம் செய்தாலும் அவர் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை
அனுபவிக்க வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு. இந்த உத்தரவிற்குக் கட்டுப்பட்டு அனைத்து
அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரச் சாரத்தை 4:55 மணிக்கே முடித்துக் கொண்டதை நாம் கண்டோம்.
பிரச்சாரம் என்பது நல்ல விஷயம் தானே என்று கருதி யாரும் தேர்தல்
கமிஷனின் உத்தரவை மீறி செயல்படவில்லை. என்ன காரணம்? நல்ல விஷயமாக இருந்தாலும் உத்தரவை மீறினால் இரண்டு வருடம் சிறைத்
தண்டனை என்ற சட்டம் தான், அதன் மீது
உள்ள பயம் தான் இதற்கான காரணமாகும்.
இவ்வுலகில் சாதாரண மனிதர்கள் பிறப்பிக்கக் கூடிய சட்டங்களுக்கே
இவ்வளவு அச்சம் இருக்கிறதென்றால் அனைத்து உலகையும் கட்டியாளக் கூடிய இறைவனின் சட்ட
திட்டங்களுக்கு நாம் எந்த அளவிற்குக் கட்டுப்பட்டு
நடக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இன்று மார்க்கத்தின் பெயரால், நன்மை என்ற பெயரில் எவ்வளவு பித்அத்தான, இணை வைக்கக் கூடிய காரியங்கள் இஸ்லாமிய மக்களிடம் நிறைந்து காணப்படுகின்றன.
மவ்லித்கள், தாயத்து, தர்ஹா வழிபாடுகள் என்று பல வகையான, நிரந்தர நரகத்திற்குரிய காரியங்களை நன்மை என்ற பெயரில் இன்றைக்குப்
பலர் செய்து வருகின்றனர்.
அது மட்டுமல்ல! பராஅத் இரவு, முஹர்ரம் பண்டிகை, மீலாது விழா, பாங்கிற்கு முன் ஸலவாத்து கூறுவது, கூட்டுத் துஆ, 3ம், 7ம், 40ம் பாத்திஹாக்கள் மற்றும் வருடாந்திர கத்தம் ஃபாத்திஹாக்கள், சுன்னத்துக் கல்யாணம், பெண் வீட்டு விருந்து, சடங்கு விருந்து என எத்தனை வகையான பித்அத்துகள் மலிந்து காணப்படுகின்றன.
இவ்வுலக விஷயங்களில் நல்லதாக இருந்தாலுமே பொறுப்பிலுள்ள சாதாரண
மனிதர்களின் கட்டளை களுக்குப் பயந்து விடக் கூடிய நாம், மார்க்கத்தின் பெயரால் அல்லாஹ்வும், அவன் தூதரும் கட்டளையிடாத விஷயங்களையெல்லாம் பொறுப்பற்ற முறையில்
நன்மை என்ற பெயரில் செய்து வருகிறோமே! நாம் இறைவனின் கட்டளைகளைச் சற்று சிந்தித்துப்
பார்க்க வேண்டும்.
மார்க்கத்தின் பெயரால் நாம் செய்கின்ற பித்அத்தான காரியங்கள்
எல்லாம் நம்மை நரகத்தில் கொண்டு போய் தான் சேர்க்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "காரியங்களில் தீயது (மார்க்கத்தின்
பெயரால்) புதிதாக உருவாக்கப் பட்டவையாகும். ஒவ்வொரு புதிய காரியங்களும் அனாச்சாரங்களாகும்.
ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்''
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: நஸயீ 1560
இரண்டு வருட சிறைத் தண்டனைக்குப் பயந்து, நல்லது என்று கருதப்பட்ட தேர்தல் பிரச்சாரமே ஐந்து நிமிடத்திற்கு
முன்பாக முடித்துக் கொள்ளப்படுகிறதென்றால், நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய, இணை வைத்தல் மற்றும் பித்அத்தான காரியங்கள் எந்த அளவிற்குத்
தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் மூலம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
இவ்வுலகிலாவது மனிதர்களை ஏமாற்றி, தண்டனையிலிருந்து தப்பித்து விட முடியும். ஆனால் இறைவனை ஒரு
போதும் நாம் ஏமாற்றி விட முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனத் தூய்மையின் அவசியம்
இந்தத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இஸ்லாமிய சமுதாயத்தின் நன்மைகளை முன்னிட்டு அ.இ.அ.தி.மு.க.விற்கு
ஆதரவளித்தது. ஆனால் அ.தி.மு.க கூட்டணியிலுள்ள பிற கட்சிகள் போட்டியிட்ட சில தொகுதிகளில்
அ.தி.மு.க.வினர் மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் கூட்டணிக் கட்சி வேட்பாளரின் வெற்றிக்காகப்
பணி செய்யாமல், "அருகில் மந்திரியின்
தொகுதி இருக்கிறது. அங்கு சென்று பணி செய்தால் அதிகமான வருமானம் கிடைக்கும்'' என்ற எண்ணத்தில் சென்று விட்டதைத் தேர்தல் களத்தில் நம்மால்
காண முடிந்தது.
உண்மையில் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை
விட இவர்களிடம் காசின் மேல் உள்ள பக்தி தான் உயர்ந்த லட்சியமாகக் காணப்பட்டது. ஆனால்
தவ்ஹீத் ஜமாத்தினர் எந்த விதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலும்
பணி செய்ததைக் காண முடிந்தது.
இங்கு தான் நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸஹாபாக்கள்
வைத்திருந்த நேசத்தையும், அவர்களுக்குக்
கட்டுப்பட்டு நடந்த தன்மையையும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
கொண்ட கொள்கைக்காக மனைவி, மக்கள், சொத்து, சுகங்கள், ஏன்? உயிரைக் கூட தியாகம் செய்த அந்த உத்தமத் தோழர்களை உருவாக்கியது
அவர்களிடம் இருந்த இஹ்லாஸ் என்ற மனத்தூய்மை தான். இறைவனுக்காக, மறுமை நலனை முன் வைத்து ஒரு பணியைச் செய்யும் போது தான் அந்தக்
காரியம் சிறப்பானதாக, முழுமையானதாக
அமையும். இதைத் தான் திருமறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழு கையை நிலை நாட்டு மாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்
படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன் 98:5)
"நிச்சயமாக அல்லாஹ் அவனுக்காக மனத் தூய்மையுடன், அவனுடைய திருமுகத்தை நாடி செய்யப்படுகின்ற நல்லமலைத் தவிர வேறெதையும்
ஏற்றுக் கொள்ள மாட்டான்'' என நபி (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: நஸயீ 3089
வரம்பு மீறிப் புகழ்தல்
தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியினரும், தாங்கள் சார்ந்துள்ள கட்சித் தலைவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்ததை
நாம் காணமுடிந்தது. இதற்கு இஸ்லாமிய சமுதாயத் தவர்களும் விதி விலக்கல்ல. மார்க்கமற்ற
தலைமையின் கீழ் இருந்தால் அவர்கள் நம்மை நரகிற்குத் தான் அழைத்துச் செல்வார்கள் என்பதை
இந்தத் தேர்தல் களம் நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. ஏனென்றால் அவர்களும் புகழ்
விரும்பிகளாகத் தான் உள்ளனர். எப்படியெல்லாம் புகழ்ச்சிகள்!
இதில் ஆச்சரியம் என்னவென்றால் மாற்று மதத்தவர்களுக்கு ஒரு கொள்கை
கிடையாது. இணை வைத்தல், பித்அத் போன்ற
எச்சரிக்கைகளை எல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள். ஆனால் இஸ்லாமியத்
தலைவர்கள், இயக்கத்தவர்கள் கூட இந்த
வரம்புகளைக் கடந்து சென்றது தான் நம்மை மிகவும் கவலை கொள்ளச் செய்தது.
"எதிர் காலத்தில் இஸ்லாமிய சமுதாயம் பாதுகாப்பைப் பெற முடியுமென்றால்
அது கருணாதி ஆட்சிக்கு வந்தால் தான் முடியும்'' "முஸ்லிம்களின் ஒப்பற்ற பாதுகாவலர் கருணாநிதி''
"கழகமே கோயில், அம்மாவே தெய்வம்'' "எல்லாப் புகழும் அம்மாவுக்கே'' இது போன்ற
வரம்பு மீறிய வார்த்தைகளை இஸ்லாமிய சமுதாய மக்களும் பயன்படுத்தியதை நாம் பார்க்க முடிந்தது.
இஸ்லாமிய வேட்பாளர்களெல்லாம் ஓட்டுகளுக்காக கைகூப்பி வணங்கி நின்றதையும் காண முடிந்தது.
இப்படி தன்னுடைய சமுதாயம் வழி தவறிச் சென்று விடக் கூடாது என்பதற்காகத்
தான்,
நம்முடைய உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னைப்
புகழ்கின்ற விஷயத்திலே மிகவும் எச்சரிக்கை செய்து சென்றுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன்
ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப்
புகழாதீர்கள். நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியான் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும்
அவனது தூதர் என்றுமே கூறுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3445
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! நீங்கள் இறையச்சத்தைப்
பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களை ஷைத்தான் வழி கெடுத்து விட வேண்டாம். நான்
அப்தில்லாஹ்வின் மகன் முஹம்மதாவேன். அல்லாஹ்வுடைய அடியாரும், அவன் தூதருமாவேன். கண்ணியமிக்கவனும், யாவற்றையும் மிகைத்தவனுமாகிய அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில்
வைத்துள்ளானோ அதை விட என்னை நீங்கள் உயர்த்திப் பேசுவதை நாம் விரும்பவில்லை.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்
நூல்: அஹ்மத் 12093
கட்டுப்பாடற்ற, மார்க்கமற்றவர்களின் தலைமையின் கீழ் சென்றால் இப்படிப்பட்ட நிலை
தான் ஏற்படும் என்பதை இந்தத் தேர்தல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.
பண்பாட்டை இழக்க வைக்கும் பதவி ஆசை
பதவி சுகத்தைப் பெற்றுத் தரும் ஓட்டுகளுக்காக இந்த அரசியல் வாதிகள்
எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை நாம் இந்த தேர்தல் களத்தில் பார்க்க முடிந்தது.
இதற்கு இஸ்லாமிய அரசியல் வாதிகளும் விதிவிலக்கல்ல. சாதாரண வாரியப் பதவிகளைப் பெறுவதற்காக
எப்படியெல்லாம் சில இயக்கத்தவர்கள் தரம் தாழ்ந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள் என்பதில்
சிலவற்றை இங்கு சுட்டிக் காட்டுவது கட்டாயமாகும்.
"பி.ஜே.யும், பாக்கரும் அம்மாவின் அழகில் மயங்கி விட்டார்கள்''
"சிம்ரனோடு பி.ஜே. சேர்ந்து விட்டார்''
"செந்திலைப் போன்று தான் பி.ஜே.யும்''
"பி.ஜே. நாற்பது கோடி வாங்கி விட்டார்''
"ஆன்மீகத்தை கெடுத்த பி.ஜே. அரசியலைக் கெடுக்க
வந்து விட்டார்'' "சிம்ரன் குட்டை
பாவாடை உடுத்தி வேன் மீது நின்று ஓட்டு கேட்பார், கீழே நின்று பார்த்து விட்டு ஓட்டுப் போட்டு விடாதீர்கள்''
இன்னும் சொல்வதற்கு நா கூசும் எத்தனையோ வார்த்தைகளை எல்லாம்
பெண்களையும் வைத்துக் கொண்டு இவர்கள் கூறியதை நாம் நம் காதுகளால் கேட்க முடிந்தது.
முஸ்லிம்களுக்கு என்று ஒரு பண்பாடு உள்ளது. வாரியப் பதவிகளைப்
பெற வேண்டும் என்பதற்காக, அற்ப ஓட்டுக்களுக்காக
அந்தப் பண்பாட்டையெல்லாம் காற்றில் பறக்க விட்டுத் தரம் தாழ்ந்து பேசிய இவர்களை நாம்
என்னவென்று சொல்வது?
இவர்கள் நம்முடைய தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயர்ந்த
நற்குணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவர்களாக
இல்லை. செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவர்களாக இல்லை''
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)
நூல்: புகாரி 6029
நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபம் இடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்
போது கூட "அவருக்கு என்ன நேர்ந்தது? அவருடைய நெற்றியில் மண் படட்டும்'' என்று கூறுபவர்களாகவே இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 6031
கொள்கையை காற்றில் பறக்க விட்டவர்கள்
குர்ஆன், ஹதீஸ்
மட்டும் தான் நம்முடைய மார்க்கம். தர்ஹா வழிபாடுகள், தாயத்து, தகடுகள், மத்ஹபு பிரிவினைகள், மவ்லித்கள், கத்தம் பாத்திஹாக்கள், வரதட்சனை கொடுமைகள் இவையெல்லாம் மார்க்கத்திற்கு மாற்றமானவை.
இவை நம்மை நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடியவை என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக மக்களுக்கு மத்தியில் இன்று வரை பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இதனால் சத்தியவாதிகளுக்கும், அசத்தியவாதிகளுக்கும் மத்தியில் பிரிவினைகள் ஏற்படத் தான் செய்கின்றன.
நாம் இந்தப் பிரச்சாரத்தை மக்களுக்கு மத்தியில் எடுத்துரைத்த போது இதை ஜீரணித்துக்
கொண்ட சில இயக்கத்தவர்கள் இன்று தேர்தலிலே ஓட்டுகளுக்காகக் கொள்கைகளை எல்லாம் காற்றில்
பறக்க விட்டதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
"ஃபாதிஹா
ஓதக் கூடாது என்று சொல்கிறார்களே அந்த நஜாத் காரர்களுக்கா உங்கள் ஓட்டு''
"விரலை ஆட்டித் தொழுகின்றார்களே அந்த நஜாத்காரர்களுக்கா
உங்கள் ஓட்டு'' "சமுதாயத்தைப்
பிரித்தார்களே, அவர்களுக்கா உங்கள் ஓட்டு''
"இவர்கள் தங்களுக்கு மட்டும் தான் குர்ஆன், ஹதீஸ் இறங்கியதாகப் பேசுவார்கள்''
"ஜெயலிலிதாவை ஆதரிக்க வேண்டும் என்று புகாரியில்
இருக்கின்றது என்று பி.ஜே. சொல்வார்'' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி, தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் நிற்பதைப் போன்று பேசி இவர்கள் மக்களிடம்
பிரச்சாரம் செய்தார்கள்.
நாம் ஃபாதிஹா ஓதக் கூடாது என்று சொல்ல என்ன காரணம்? அது மார்க்கத்தில் இல்லாதது, பித்அத்தான காரியம் என்பதால் தானே? இதை அவர்களும் தான் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று ஓட்டுகளுக்காக
மாற்றிப் பேசுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலை அசைத்துத் தொழுதார்கள் என்பதால்
தான் நாமும் விரலசைக்கின்றோம்? இதை
இந்த இயக்கத்தவர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று வாரியப் பதவிகளுக்காக விரலசைப்பவர்களை
வசை பாடுகிறார்கள்.
நாம் தர்ஹா வழிபாடு, தாயத்து தகடுகள், மத்ஹபு பிரிவினைகள், பித்அத்தான காரியங்கள், வரதட்சணை கொடுமைகள் இவற்றை எதிர்த்ததால் தான் சத்தியவாதிகளுக்கும், அசத்திய வாதிகளுக்கும் மத்தியில் பிரிவினை ஏற்பட்டது. இது தவறு
என்றால் இவர்கள் இந்த இணை வைப்புக் காரியங்களையெல்லாம் ஆதரிக்கக் கூடியவர்களாகி விட்டார்களா?
பதவி ஆசை வந்து விட்டால்
மனிதன் கொள்கையைக் கூட காற்றில் பறக்க விட்டு விடுவான் என்பதைத் தான் இந்தத் தேர்தல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.
மொத்தத்தில் கொள்கைப் பிடிப்பும், மார்க்கப் பற்றும், சரியான வழி காட்டுதலும் இல்லாதவர்கள் இது போன்ற அரசியல் சாக்கடையில்
தலை காட்டினால் தரம் தாழ்ந்து விடுவார்கள் என்பதைத் தான் இந்தத் தேர்தல் நமக்குப் பல
படிப்பினைகளில் மிக முக்கியமான ஒன்றாகத் தருகின்றது.
EGATHUVAM JUN 2006