Apr 1, 2017

மார்க்கக் கட்டளையும் மார்க்கம் படித்தவளின் நிலையும்

மார்க்கக் கட்டளையும் மார்க்கம் படித்தவளின் நிலையும்

குர்ஷித் பானு

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்

திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் உள்ளதாகும். இன்று திருமணம் பற்றிப் பேசுவதற்குப் பல பேர் ஒன்று கூடிப் பேசுவது என்னவென்றால், மாப்பிள்ளைக்கு இரண்டு லட்சம் தொகை, நூறு பவுன் நகை, மாருதி கார் என்றெல்லாம் மாப்பிள்ளையின் பெற்றோர் கேட்பார்கள். மாப்பிள்ளை யின் சொந்த பந்தங்களுக்கெல்லாம் பெண் வீட்டார் விருந்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு.

இப்போது வல்ல நாயனின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில், "நான் வரதட்சணை வாங்க மாட்டேன்; மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்வேன்'' என்று ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆண்கள் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு ஏகத்துவத்தின் மூலம் வல்ல நாயன் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான்.

ஆனால் வரதட்சணை வேண்டாம், மஹர் கொடுக்கிறேன் என்று சொல்லக் கூடிய ஆண்கள் தேடிப் போவது, மார்க்கம் தெரியாத பணக்காரப் பெண்களையும், அழகான பெண் களையும் தான். அழகு மற்றும் செல்வத்தில் குறைந்த நிலையில் உள்ள மார்க்கம் தெரிந்த எத்தனையோ பெண்கள் இருந்தும் அவர்களை விட்டு விடுகின்றார்கள் என்று பரவலாகப் பேசப்படுகின்றது. இது ஓரளவு உண்மை தான். அழகு, பணத்தை விட மார்க்கத்திற்கே முன்னுரிமை கொடுக்கும் படி குர்ஆனும், ஹதீஸும் கூறுகின்றன.

மார்க்கத்திற்கே முன்னுரிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் நான்கு நோக்கங் களுக்காக மண முடிக்கப்படுகிறாள்.  1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்ப பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே, மார்க்க நெறியுடையவளை (மணம் முடித்து) வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன் இரு கைகளும் மண்ணாகட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5090

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்.

(அல்குர்ஆன் 2:221)

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள் நல்ல ஆண் களுக்கும், நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தம் இல்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

(அல்குர்ஆன் 24:46)

மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஹதீஸின் படி மார்க்கத்திற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அத்துடன் அழகும், அந்தஸ்தும் இருந்தால் நல்லது தான், தடையில்லை.

பெண்களுக்குத் தனிச் சட்டமா?

இப்படி அழகையும் செல்வத்தையும் பார்க்கும் ஆண்கள் சிலர் இருந்தாலும், எங்களுக்கு மார்க்கம் தான் வேண்டும் என்று கேட்கும் ஆண்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

இவர்கள் இவ்வாறு கேட்பதற்குக் காரணம், தங்களுக்கு அந்தப் பெண்கள் சம்பாதித்துப் போடுவார்கள் என்பதற்காக அல்ல. மாறாக மார்க்கம் தெரிந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தங்கள் பெற்றோரிடமும் குடும்பத்தாரிடமும் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள்; தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை நல்ல முறையில், இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்ப்பார்கள்; தங்களிடமும் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தான்.

ஓர் ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டும் தான். ஒரு பெண் கல்வி கற்றால் அது ஒரு குடும்பத்திற்கே பலனளிக்கும் என்பதை அறிந்தே மார்க்கக் கல்வி பயின்ற பெண்களை சிலர் திருமணம் முடிக்கின்றார்கள்.

ஆனால் ஆலிமா படித்த பெண்களில் சிலரின் நிலை என்னவென்றால், நம் எதிர்பார்ப்பின் படி ஏகத்துவக் கொள்கையை ஏற்ற மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்றால் நீண்ட நாட்களாகும் என்பதால் தாங்கள் படித்த கல்வியை மறந்து விட்டு, தங்களது பெற்றோரின் பேச்சைக் கேட்டு வரதட்சணை கொடுத்துத் திருமணம் முடித்துக் கொள்கிறார்கள்.

இன்னும் சில ஆலிமாக்கள் தங்களுக்கு தவ்ஹீத் சிந்தனையுள்ள மாப்பிள்ளைகள் வந்தாலும் சில ஆண்கள் எதிர்பார்ப்பது போல் அழகையும் படிப்பையும் செல்வத் தையும் குலப் பெருமையையும் எதிர்பார்க்கின்றனர். அந்த ஆண் களிடம் இருக்கும் கடின உழைப்பு, கலப்பற்ற ஈமானிய உறுதியை      இந்த ஆலிமாக்கள் உணர்ந்து கொள்வதில்லை.

நாம் மேலே எடுத்துக் காட்டிய வசனங்களிலும் ஹதீஸிலும் சொல்லப் பட்ட செய்திகள் ஆண்களுக்கு மட்டும் தானா? பெண்களுக்கும் அது தானே சட்டம்?

இறைவன் தன் திருமறையில் பல இடங்களில், தொழுகையை நிலை நாட்டுங்கள், ஜகாத் கொடுங்கள் என்று ஆண்களைக் குறிக்கும் வார்த்தை களைப் போட்டுக் கூறுகின்றான். இதை நாம் ஆண்களுக்கு மட்டும் உரிய கட்டளை; பெண்களுக்கு இந்தக் கடமைகள் இல்லை என்று எடுத்துக் கொள்ள மாட்டோம். இரு பாலருக்கும் உள்ள கட்டளைகள் தான் என்றே எடுத்துக் கொள்வோம். அது போன்று தான் நாம் மேலே காட்டிய ஆதாரங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எதிர்பார்ப்புகள் ஆண்களிடமும் பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்று தான். ஆனால் அதை விட மார்க்கத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

விதண்டாவாதம் பேசும் ஆலிமாக்கள்

இன்னும் சில ஆண்கள் தங்களுக்கு ஆலிமாப் பெண்கள் தான் வேண்டும் என்று திருமணம் செய்து கொள்கின்றார்கள். திருமணம் செய்த பிறகு, "நாம் ஏன் ஆலிமாப் பெண்ணைத் திருமணம் செய்தோம்? சாதாரண பெண்ணைத் திருமணம் செய்திருக்கக் கூடாதா?''' என்று வருத்தப்படுகின்றனர்.

இன்று ஆலிமா படித்த பெண்களில் சிலர், தங்கள் கணவனின் குடும்பத்தாரிடம் நடக்கக் கூடிய விதம் தான் இதற்குக் காரணம். கணவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டால் போதும், அவனது பெற்றோருக்கோ, சகோதர சகோதரிக்கோ கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கணவனின் குடும்பத்தாருக்கு வேலை பார்க்கும் படி மார்க்கம் சொல்லவில்லை என்று விதண்டாவாம் செய்கின்றனர்.

தங்கள் குடும்பத்தினரிடம் நல்ல முறையில் தன் மனைவி நடந்து கொள்ள வேண்டும் என்று தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவான். அவ்வாறு விரும்பும் ஆண்களையும் இந்தப் பெண்கள் எதிர்த்துப் பேசுகின்றனர். இது ஒரு நல்ல மனைவிக்கு அழகல்ல!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.

அறிவிப்பவர்: உமர் (ரலீ)

நூல்: அபூதாவூத் 1412

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும்  பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ)

நூல்: புகாரீ 5200

இந்த ஹதீஸில் நபியவர்கள் சொல்லும் போது ஒரு பெண் தன் கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி என்று கூறுகின்றார்கள். பொறுப்பாளி என்றால் கணவனின் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அவளே பொறுப்பு ஆவாள். இந்தப் பொறுப்பு பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவருடைய கருவூலக் காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "அடிமைகளுக்கு உணவு கொடுத்து விட்டாயா?'' என்று கேட்டார்கள். அவர் "இல்லை'' என்றார். "உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடு'' என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறி விட்டுப் பின்வருமாறு கூறினார்கள். "ஒருவரின் உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர் அந்த மனிதருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் அப்துர்ரஹ்மான்

நூல்: முஸ்லிம் 996

தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கு உணவளிக்க மறுப்பவரைப் பாவி என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். கணவனின் வீட்டிற்கு மனைவி தான் பொறுப்பாளியாவாள் என்ற ஹதீஸின் படி அவள் தன்னுடைய கடமையைச் செய்தாக வேண்டும்.

பொதுவாக மார்க்கக் கல்வி பயின்ற பெண்களுக்கென்றே தனிச் சிறப்பு சமுதாயத்தில் உண்டு. ஆனால் இது போன்று தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாக இருந்து கொண்டு, தன் பொறுப்பில் வெறுப்பைக் காட்டும் போது, அந்தப் பெண்கள் தாங்கள் பெற்ற சிறப்பை இழந்து விடுகின்றனர். இவ்வாறு சில பெண்கள் செய்வது ஒட்டு மொத்தமாக ஆலிமாக்களே இப்படித் தான் என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகின்றது.

"எவரது நாவு மற்றும் கைகளின் தீங்கிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வினால் தடுக்கப் பட்டவற்றை விட்டும் ஒதுங்கிக் கொள்கின்றாரோ அவரே முஹாஜிர் ஆவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 10

தன்னால் பிறருக்கு எந்தச் சிரமும் ஏற்படாதவாறு ஒரு முஸ்லிம் நடக்க வேண்டும் என்றால் மார்க்கம் படித்த ஒரு பெண் இந்த விஷயத்தில் மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும்.

இது போன்ற குறைகள் மார்க்கம் படித்த பெண்களிடம் இனிமேலாவது ஏற்படாமல் பாதுகாப்பாக நடக்க வேண்டும். ஏனெனில் மார்க்கம் பயின்றவர்களுக்கென்று சமுதாயத்தில் ஒரு தனி அந்தஸ்து இருக்கின்றது. அவர்கள் செய்யும் சிறு தவறானாலும் அது வெளிப்படுத்தப்படும்.


எனவே நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவது போல் மார்க்கம் உடைய நல்ல பெண்ணாக இருந்து, அதன் மூலம் நம் கணவராக வரவிருப்பவர் வெற்றியடையக் கூடிய நிலையை இறைவன் உதவியால் உருவாக்குவோம்.

EGATHUVAM JUN 2006