Apr 1, 2017

கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம்

கட்டாய மத மாற்றத்   தடைச் சட்டம்

இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் கிடையாது.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை.

(அல்குர்ஆன்  2:256)

இந்த வசனத்தின்படி கட்டாய மத மாற்றம் என்பது இஸ்லாத்தில் இல்லை. எனவே இந்தச் சட்டத்தால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும் இந்தச் சட்டத்தை நாமும் சேர்ந்தே எதிர்த்திருக்கின்றோம். ஆனால் ஓர் உண்மையை உணர்ந்தாக வேண்டும். முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்கள் உட்பட பல ஊர்களில் இன்று பல ஏக்கர் கணக்கில் நிலத்தை வளைத்துப் போட்டு அங்கு தேவாலயம் நிறுவப் பட்டு கிறித்தவம் பரப்பப்படுகின்றது.

ஓர் ஊருக்குள் ஒரு கோயில் வரலாம்! அதனால் மத மாற்றம் என்ற பிரச்சனை ஏற்படப் போவதில்லை. ஆனால் தேவாலயம் நுழைந்து விட்டால் அவர்களது பிரச்சாரம் மிகக் கடுமையாகவே இருக்கின்றது. ஈஸா (அலை), மர்யம் (அலை) ஆகியோர் தொடர்பான குர்ஆன் வசனங்களை எடுத்துப் போட்டு, ஏதேனும் ஒரு முஸ்லிம் பெயரில் பிரசுரம் வெளியிட்டு, முஸ்லிம்களையே கிறித்தவ மதத்தின் பால் ஈர்க்கும் அக்கிரமம் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் வறுமையில் வாழும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு பணத்தை வாரி இறைத்து கிறித்தவம் பரப்பப்படுகின்றது. இதை எந்த முஸ்லிமும் மறுக்க முடியாது. இந்த அடிப்படையில் அதிமுக அரசு கொண்டு வந்த மத மாற்றத் தடைச் சட்டத்தை ஒரு முஸ்லிம் வரவேற்கத் தான் வேண்டும். இதற்காக ஒட்டு மொத்தமாக ஒருமித்து முஸ்லிம்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வாக்களிக்கவில்லை.

ஆனால் கிறித்தவ சமுதாயம் இந்த விஷயத்தில் கவனமாக இருந்துள்ளது. இந்தச் சட்டத்திற்குப் பழி வாங்கும் விதமாக கிறித்தவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு அதிமுகவை தோற்கடித்துள்ளனர். கிறித்தவர்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தேர்தல் முடிவைப் பார்த்தால் இது விளங்கும்.

இந்த மத மாற்றத் தடைச் சட்டத்தால் அதிமுக அரசு தோற்றிருக்கின்றது. இது உண்மையில் தோல்வியாக ஆகாது.

அரசியல் கண்ணோட்டத்தில் தோல்வி

அதிமுகவின் தோல்வியை அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அது தோல்வியல்ல! காரணம், சுதந்திர இந்தியாவில் 69 பேர் கொண்ட ஓர் எதிர்க் கட்சி இது வரை தமிழக சட்டமன்றத்தில் இருந்ததில்லை. அதனால் அதிமுகவுக்கு இது பெரும் வெற்றி என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றார்கள்.

அடுத்து திமுகவுக்கு இது வெற்றியும் கிடையாது. தமிழக சட்டசபை வரலாற்றில் இது வரை இல்லாத வகையில், பெரும்பான்மை பலம் இல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைத்திருக்கின்றது. காங்கிரஸ், பாமக, ஆகிய கூட்டணிக் கட்சிகளின் தயவில் திமுக ஆட்சியமைத்துள்ளது. எந்தச் சமயத்திலும் காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் காலை வாரலாம்.

மேலும் 15 எம்.பி.க்களை வைத்துக் கொண்டு மத்தியில் ஆட்டம் போட்டு வந்த திமுக, இன்று ஆட்சியமைக்க காங்கிரஸின் கையை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் மத்திய அரசில் திமுகவின் கொட்டம் அடக்கப்பட்டிருக்கின்றது. எனவே திமுகவுக்கு இது உண்மையில் வெற்றி என்று கூற முடியாது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் வெற்றி

உண்மையில் திமுகவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் காரணமாக இருந்துள்ளது.

கூட்டணி பலம், நம்ப முடியாத வாக்குறுதிகள், பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற நாற்பதுக்கு நாற்பது வெற்றி போன்றவற்றை முன்னிறுத்தி, தனிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்று விடலாம் என்று கனவு கண்ட திமுகவுக்கு, அதன் வாக்கு வங்கியான முஸ்லிம்கள் வாக்களிக்காதது தான் இந்த நிலை ஏற்படக் காரணம்.

சென்னையில் கிடைத்த வாக்குகளை வைத்து இதை திமுக தலைமை நன்கு உணர்ந்தே இருக்கின்றது. கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்ட அந்தக் கட்சியின் பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் இழுபறியைச் சந்தித்துள்ளனர்.

திமுகவின் வாக்கு வங்கியை உடைத்தெறிந்து, கூட்டணி ஆட்சி ஏற்படுவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரமே காரணம்.

அந்த வகையில் இந்தத் தேர்தலில் முழுமையான வெற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் தான்.

எனவே இந்தத் தேர்தல் களத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அல்லாஹ் மாபெரும் வெற்றியையே தந்துள்ளான். அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவோம்.

EGATHUVAM JUN 2006