Apr 1, 2017

தமிழகத் தேர்தலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வெற்றியும்

தமிழகத் தேர்தலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வெற்றியும்

கடந்த மே 8 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்று, கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த கொள்கைச் சகோதரர்களின் முகங்களில் சோக ரேகைகள் படர்ந்து வாடிய மலர்களாகி விட்டன.

நமது நிலைபாட்டை பெரும் பான்மையான முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டு, திமுகவின் வாக்கு வங்கியை உடைப்பதற்கு நமது பிரச்சாரம் காரணமாக இருந்தாலும் நாம் ஆதரித்த அணி ஆட்சியமைக்க முடியாமல் போனதில் நம்மவர்களின் உள்ளம் சோகத்தில் மூழ்கிப் போய் விட்டது.

அதிலும் நம்முடைய இரத்தத்தை உறிஞ்சி வளர்ந்த முன்னாள் சகாக்கள் அதிமுக தோற்றவுடன் நம்மைப் பார்த்து கிண்டலடிப்பதும், அல்லாஹ்வை மறந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் நமது சகோதரர்களின் வேதனை மேலும் அதிகமானது.

தேர்தலும் ஆறுதலும்

நாம் ஆதரவு கொடுத்த அணியினர் இவ்வாறு தோற்றதும் நமக்கு இப்படியொரு வேதனை ஏற்படுவது இயற்கை தான். இதை நம்மால் மறுக்க முடியாது; மறைக்க முடியாது. இது போன்று நமது உள்ளத்தில் ஏற்படும் ரணத்திற்கு அரு மருந்தாக, இதமளிக்கும் ஒற்றடமாக இருப்பது அல்லாஹ்வின் அற்புத வேதமான அல்குர்ஆனும், ஹதீஸும் தான். எதற்கும் தீர்வு அளிக்கின்ற குர்ஆன், ஹதீஸ் நமக்குத் தீர்வளிக்காதா? இந்தத் தேர்தல் காயத்திற்குத் ஆறுதல் தராதா? நிச்சயமாகத் தரும்.

நாம் நமக்குள் யதார்த்தமாக, இது எப்படி நடந்தது? என்று பேசிக் கொள்கிறோம். இது போன்ற ஒரு கட்டம் இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. அது தான் உஹதுப் போர். அந்த உஹதுப் போர், பத்ருப் போரைப் போல் திருப்புமுனையாக அல்லாமல், தோல்வி முனையாக, சோதனைக் களமாக அமைந்து விட்டது. அதைத் தான் நபித் தோழர்கள் இவ்வாறு பேசிக் கொண்டார்கள்.

(பத்ருப் போரில்) இது போன்ற இரு மடங்குகளை (எதிரிகளுக்கு) அளித்த நீங்கள், உங்களுக்கு (உஹதுப் போரில்) துன்பம் ஏற்பட்ட போது "இது எப்படி ஏற்பட்டது?'' என்று கேட்டீர்கள். "இது உங்களிடமிருந்தே ஏற்பட்டது'' என்று கூறுவீராக! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன்.

(அல்குர்ஆன் 3:164)

இந்த வசனத்தில் இடம் பெறும் இரு மடங்கு என்றால் என்ன? சற்று பத்ருக் களம் நோக்கிச் செல்வோம்.

பத்ருடைய நாளின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களை நோக்கிப் பார்த்தார்கள். அப்போது அவர்கள் ஆயிரம் பேர் இருந்தனர். தன்னுடைய தோழர்களோ 319 பேர் தான். உடனே நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கித் தம் இரு கைகளையும் நீட்டி, "அல்லாஹ்வே! நீ வாக்களித்ததை எனக்கு நிறைவேற்று! அல்லாஹ்வே! நீ வாக்களித்ததை எனக்குக் கொடுத்து விடு! அல்லாஹ்வே! முஸ்லிம்களின் இந்தக் கூட்டத்தை நீ அழித்து விட்டால் உனக்கு இந்தப் பூமியில் வணக்கம் செலுத்தப்படாது'' என்று அபயக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்களுடைய மேலாடை அவர்களது புஜங்களிலிருந்து கீழே விழுந்து விட்டது.

அப்போது அவர்களிடம் அபூபகர் (ரலி) வந்து, மேலாடையை எடுத்து நபி (ஸல்) அவர்களது புஜங்களின் மீது போட்டார்கள். பிறகு அவர்களுக்குப் பின்னால் நின்று அதைப் பிடித்துக் கொண்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவான்'' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்கள். அப்போது மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது "உங்களுக்குப் பின்னால் அணி வகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்'' என்று உங்களுக்குப் பதிலளித்தான்' (அல்குர்ஆன் 8:9) என்ற வசனத்தை அருளினான். அது போல் அல்லாஹ் மலக்குகளை அனுப்பி அவர்களுக்கு உதவினான்.

அன்றைய தினம் தனக்கு முன்னால் செல்கின்ற ஒரு இணை வைப்பாளரை ஒரு முஸ்லிம் துரத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த இணை வைப்பாளருக்கு மேலிருந்து ஒரு சாட்டையடி விழுவதையும், "ஹைசுமே! (வானவரின் குதிரையின் பெயர்) விரைக!'' என்று குதிரை வீரர் விரட்டுகின்ற சப்தத்தையும் செவியுற்றார். உடனே அவர் அந்த இணை வைப்பாளரைப் பார்த்த போது அவர் மல்லாக்க வீழ்ந்து கிடந்தார். அவரது மூக்கு காயப்படுத்தப்பட்டு, சாட்டையடி விழுந்ததைப் போன்று கோரப் பட்டிருந்த காட்சியையும் அவர் கண்டார்.

இக்காட்சியைக் கண்ட அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ சொன்னது உண்மை தான்! அது மூன்றாம் வானத்திலிருந்து வந்த உதவி'' என்று சொன்னார்கள். முஸ்லிம்கள் (அந்தப் போரில்) எழுபது பேரைக் கொன்றனர். எழுபது பேரைக் கைது செய்தனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 3309

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்த அல்லாஹ் உடனே மலக்குகளை அனுப்பி வைத்து விடுகின்றான். அதன் பலனாக முஸ்லிம்கள் 70 பேரைக் கொன்று, 70 பேரைக் கைது செய்கின்றனர். இது முஸ்லிம்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

மலக்குகள் வந்து குவிந்த காரணத்தால் 319 பேர் கொண்ட முஸ்லிம்கள் ஆயிரம் பேர் கொண்ட எதிரிப் படையினரை எளிதில் தோற்கடித்தனர். எதிரிகளில் 70 பேரைக் கொன்று, 70 பேரைக் கைது செய்த இந்த நிகழ்வைத் தான் அல்லாஹ் இரு மடங்கு வெற்றி என்று குறிப்பிடுகிறான்.

பத்ரில் இப்படியொரு வெற்றி ரிஸல்ட் கிடைத்த முஸ்லிம்களுக்கு உஹதில் மாற்றமான ரிஸல்ட் கிடைத்தது.

உஹதில் ஒரு மடங்கு

பத்ரு நடந்து முடிந்த மறு ஆண்டு உஹதுப் போர் நிகழ்கின்றது. ஹிஜ்ரி 2ம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் பத்ருப் போர் நடைபெற்றது. ஹிஜ்ரி 3ம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் உஹதுப் போர் நிகழ்ந்தது. அந்த உஹதுப் போர் முஸ்லிம்களுக்குச் சோதனைக் களமாக ஆகி விட்டது. இந்தச் சோதனை எப்படி ஏற்பட்டது?

உஹதுப் போரின் போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் அவர்களை நபி (ஸல்) அவர்கள் காலாட் படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். "(நாங்கள் போரில் கொல்லப்பட்டு) எங்களைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பும் வரை உங்களுடைய இந்த இடத்தை விட்டு நகராதீர்கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து, (அவர்களை) மிதித்துக் கொண்டு செல்வதை நீங்கள் பார்த்தாலும் கூட நான் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தை விட்டு நகராதீர்கள்'' என்று அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்கள் இணை வைப்பவர் களைத் தோற்கடித்து விட்டனர். பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்திவர்களாக, அவர்களுடைய கால் தண்டைகளும் கால்களும் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களின் சகாக்கள், "போர்ச் செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இன்னும் எதைத் தான் நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?'' என்று கூறலாயினார்.  (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மக்களிடம் சென்று போர்க் களத்தில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்வோம்'' என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடம் சென்ற போது அவர்களின் முகங்கள் திருப்பப்பட்டு தோற்றுப் போய் சென்று விட்டனர். அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலிருந்து அவர்களைப் போர்க் களத்திற்குத் திரும்பி வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த போது இது நடந்தது. அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறு எவரும் எஞ்சி இருக்கவில்லை. எதிரிகள் எங்களில் எழுபது பேரைக் கொன்று விட்டார்கள்.

அறிவிப்பவர்: பராஃ பின்  ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 3039

நபி (ஸல்) அவர்களின் பல் உடைதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தலைக் கவசம் அவர்களுடைய தலையில் வைத்தே உடைக்கப்பட்டது. அவர்களுடைய முகத்தில் இரத்தம் வழிந்தது. அவர்களுடைய பல் ஒன்று உடைக்கப்பட்டது. அப்போது அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் எடுத்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். இரத்தம் தண்ணீரையும் மீறி அதிகமாகக் கொட்டுவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் பாய் ஒன்றை எடுத்து அதை எரித்து அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள். உடனே இரத்தம் நின்று விட்டது.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாயிதீ (ரலி)

நூல்: புகாரி 5722

அம்பு மன்னர் அபூதல்ஹா

உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை விட்டு விட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள். மேலும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவராக  இருந்தார்கள். (அவ்வாறு வேகமாக இழுக்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் உடைத்து விடுவார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், "அதை அபூதல்ஹாவிடம் போடு!'' என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமல் இருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயமாக) இருக்கும்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3811

முஸ்லிம்களே முஸ்லிம்களைக் கொல்லுதல்

உஹதுப் போரில் இணை வைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். உடனே இப்லீஸ், "அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் பாருங்கள்'' என்று கத்தினான். முஸ்லிம்களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று தங்கள் பின்னணிப் படையினருடன் போரிட்டனர். அப்போது அங்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், தமக்கருகேயிருந்த தம் தந்தை யமான் (ரலி) அவர்கள் (முஸ்லிம் படையினரிடம்) சிக்கிக் கொண்டதைப் பார்த்து விட்டு, "அல்லாஹ்வின் அடியார்களே! இது என் தந்தை! இது என் தந்தை!'' என்று கத்தினார்கள். ஆனால் அல்லாஹ்வின் மீதாணையாக, அவர்கள் அவரை விட்டு வைக்கவில்லை. இறுதியில் அவரைக் கொன்று விட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3290

இவ்வாறாக உஹதுப் போரில் முஸ்லிம்கள் கடும் சோதனையைச் சந்தித்தனர். முஸ்லிம்களில் மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தான் நபித்தோழர்கள், இது எப்படி நடந்தது? என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டதாக 3:165 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இந்தத் தோல்வி எப்படி ஏற்பட்டது?

இப்படிப்பட்ட இழப்பு எப்படி ஏற்பட்டது? மலக்குகள் வரவில்லையா? என்று கேட்டால் மலக்குகள் வந்தனர். வானவர் ஜிப்ரீல் வந்து இறங்கியிருந்தார். (புகாரி 4041)

மனித வடிவில் புனித மலக்குகள்

உஹதுப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை நிற உடை அணிந்திருந்தார்கள். அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: புகாரி 4054

இப்படி மலக்குகள் களத்தில் நின்றும் தோல்வியா? அதிலும் குறிப்பாக பத்ருப் போரில் இணை வைப்பாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையை அல்லாஹ் விடுக்கின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போரே! நீங்கள் தீர்ப்பைத் தேடுவீர்களானால் இதோ தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டீர்களானால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் மீண்டும் போரிட வந்தால் நாமும் வருவோம். உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. அல்லாஹ், நம்பிக்கை கொண்டோருடன் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 8:19)

இவ்வாறு அல்லாஹ் கூறக் காரணம், "முஹம்மது சத்தியத்தில் இருந்தால் அவர் ஜெயிப்பார். நாம் சத்தியத்தில் இருந்தால் நாம் ஜெயிப்போம்'' என்று இணை வைப்பாளர்கள் பத்ருப் போரை அளவு கோலாக்கியிருந்தனர். பத்ரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்ததும், இது சத்தியத்திற்குக் கிடைத்த வெற்றி என்று உணர வேண்டும் என்பதற் காகவும், மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் கிளம்பக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்து இந்த வசனத்தை இறக்கியிருந்தான். இந்த எச்சரிக்கையையும் தாண்டி அபூ சுஃப்யான் தலைமையில் படை திரண்டு உஹதுக்கு வந்தனர். அப்படியிருந்தும் முஸ்லிம்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.

முஸ்லிம்களைப் போன்று இணை வைப்பாளர்கள் ஏன் இழப்பைச் சந்திக்கவில்லை என்று கேட்கும் போது, முஸ்லிம்களுக்கு முதலில் வெற்றி தான் கிடைத்தது. எதிரிகள் தோற்று ஓடியிருந்தனர். அதைத் தான் புகாரி 3039 ஹதீஸ் கூறுகின்றது.

பின்னர் ஏன் தோல்வி ஏற்பட்டது?

அல்லாஹ்வின் விருப்பப்படி அவர்களை நீங்கள் கருவறுத்த போது தனது வாக்குறுதியை உங்களுக்கு உண்மைப்படுத்தினான். தளர்ந்து போய் இவ்விஷயத்தில் முரண்பட்டீர்கள்! நீங்கள் விரும்பியதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் (அவனுக்கு) மாறு செய்தீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருந்தீர்கள். மறுமையை விரும்புவோரும் இருந்தீர்கள். உங்களைச் சோதிப்ப தற்காக அவர்களை (வெற்றி கொள்வதை) விட்டும் அவன் உங்களைத் திருப்பினான். உங்களை மன்னித்தான். நம்பிக்கை கொண் டோர் மீது அல்லாஹ் அருளுடை யவன்.

(அல்குர்ஆன் 3:152)

மலக்குகள் வந்து நின்றதன் மூலம் வாக்குறுதி நிறைவேறியதையும், வெற்றிக் கனியை முஸ்லிம்கள் கண்டார்கள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான். அதன் பின் தோல்விக்கான காரணங்கள் இரண்டை குறிப்பிடுகின்றான். நீங்கள் தூதருக்கு மாறு செய்து முரண்பட்டது, தோல்விக்கான முதல் காரணம் என்கிறான். இரண்டாவது, இணை வைப்பாளர்களை வெற்றி கொள்ளாமல் முஸ்லிம்களைச் சோதிப்பதற்காக இவ்வாறு திருப்பியதையும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அந்தச் சோதனை என்ன?

பொதுவாக எந்த ஓர் அமைப்பிலும் இயக்கத்திலும் உள்ள உறுப்பினர்கள், வெற்றியை மட்டும் கண்டு பழக்கப் பட்டிருந்தால், தோல்வி என்று வருகின்ற போது ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்காது ஓட்டமெடுத்து விடுவார்கள். தோல்வி என்றதும் துவண்டு விடுவார்கள்.

எனவே அந்தத் தோல்வியைச் சந்திக்கும் மனப் பக்குவத்தை நபித்தோழர்களுக்குப் பயிற்றுவிக்கின்றான். இஸ்லாம் எனும் பேரியக்கத்தின் உறுப்பினர்களான ஸஹாபாக்கள் பத்ரு எனும் வெற்றியைக் கண்டதும் இருந்தார்கள். உஹத் என்ற தோல்வியைக் கண்டதும் ஓடி விடுகின்றார்களா? என்று பார்க்கிறான்.

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

(அல்குர்ஆன் 3:179)

சந்தேகத்தைக் கிளப்பும் சரமாரியான கேள்விகள்

இப்படி மாற்றமான ஒரு முடிவைக் கண்டு முஸ்லிம்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் போது எதிரிகளின் கேள்விக் கணைகள், அவர்கள் சத்தியத்தில் தான் இருக்கிறார்களோ? என்று சந்தேகப்பட வைத்து விடும். அப்படி விஷம் தோய்ந்த கேள்விக் கணைகள் இதோ:

அபூசுஃப்யானின் அம்புகள்

(உஹதுப் போரில்  முஸ்லிம் களுக்குச் சோதனை ஏற்பட்டதும்) அபூ சுஃப்யான், (களத்தில் இறங்கி) "கூட்டத்தில் முஹம்மத் இருக்கின்றாரா?'' என்று மூன்று முறை கேட்டார். அவருக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்து விட்டார்கள். மீண்டும், "கூட்டத்தில் அபூகுஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கின்றாரா?'' என்று மூன்று முறை கேட்டார். பிறகு, "கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கின்றாரா?'' என்று மூன்று முறை கேட்டார். பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, "இவர்களெல்லாம் கொல்லப்பட்டு விட்டனர்'' என்று சொன்னார். உடனே உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், "பொய் சொன்னாய், அல்லாஹ்வின் விரோதியே! நீ எண்ணியவர்கள் எல்லோருமே உயிரோடு தான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பம் அளிக்கும் ஒரு விஷயம் தான் இப்போது எஞ்சியுள்ளது'' என்று சொன்னார்கள்.

அதற்கு அபூசுஃப்யான், "இந்த நாள் பத்ருப் போர் நாளுக்குப் பதிலாகும். போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகின்றது. (உங்கள்) கூட்டத்தாரில், அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களை நீங்கள் காண்பீர்கள். அப்படிச் செய்யும் படி நான் கட்டளை இடவுமில்லை. (அப்படிச் செய்தால்) அது எனக்கு மனத் துன்பத்தையும் அளிக்காது'' என்று சொல்லி விட்டுப் பிறகு, "ஹுபலே! உன் கட்சி மேலோங்கி விட்டது. ஹுபலே! உன் கட்சி மேலோங்கி விட்டது'' என்று கவிதை பாடத் துவங்கினார்.

நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), "இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். தோழர்கள், "நாம் என்ன பதில் சொல்வது? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்! மிக மேலானவன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள்.

அபூசுஃப்யான், "எங்களுக்கு உஸ்ஸா (எனும் தெய்வம்) இருக்கின்றது. உங்களிடம் உஸ்ஸா இல்லையே?'' என்று கவிதை பாடினார்.

நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். தோழர்கள், "நாம் என்ன பதில் சொல்வது? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வே எங்கள் உதவியாளன். உங்களுக்கு உதவியாளனே இல்லையே! என்று சொல்லுங்கள்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: பராஃ பின்  ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 3039

வெற்றி என்பது மாறி மாறி வரும். நீங்கள் என்னவோ பத்ரில் கிடைத்த வெற்றியை சத்தியத்திற்குக் கிடைத்த வெற்றி என்று பறை சாற்றுகின்றீர்களே? இப்போது இதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள்? இது தான் அபூசுஃப்யான் வீசியெறிகின்ற அழுத்தமான கேள்விக் கணைகள்.

ஆனால் நபித் தோழர்கள் இந்தத் தோல்வியைத் தங்களின் குறைபாட்டால் வந்தது என்பதை விளங்கிக் கொண்டு பத்ரில் வெற்றியைத் தந்த அதே நாயன் தான் நமக்குத் தோல்வியைத் தந்துள்ளான் என்று எடுத்துக் கொண்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கின்றார்கள். இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள், ஒரு கட்சி தோற்றதும் அடுத்தக் கட்சிக்குத் தாவுவது போன்று தாவவில்லை. சத்தியக் கொள்கையைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

இது போன்று தான் ஏகத்துவக் கொள்கைவாதிகளாகிய நாம் நமது பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத் துவங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் அதற்கு அல்லாஹ் மகத்தான வெற்றியைக் கொடுத்தான்.

குடந்தை பேரணி

சத்தியப் பணிக்கு ஒரு கலம், சமுதாயப் பணிக்கு ஒரு கலம் என்று இரு வேறு கப்பல்களில் மாறி மாறிப் பயணம் செய்த நாம் சத்தியப் பணியும் சமுதாயப் பணியும் இனி ஒரே கலத்தில் தான் என்று அறிவித்து, மக்கள் மத்தியில் பயணம் செய்யத் துவங்கினோம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இரு முகம் காட்டாமல் ஒரு முகம் காட்டத் துவங்கியதன் வெளிப்பாடு, எங்கு சென்றாலும் தேனடையை மொய்க்கும் தேனீ படை போன்று ஏகத்துவக் கூட்டங்களில் மக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும் கண் கொள்ளாக் காட்சி! இது அல்லாஹ் தந்த மாபெரும் வெற்றியாகும். இது சத்தியப் பிரச்சாரத்திற்குக் கிடைத்த பரிசாகும்.

சமுதாயப் பிரச்சனைக்காக, இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக நாம் குடந்தையில் நடத்திய பேரணி, வஞ்சகர்களுடன் சேர்ந்து நாம் தஞ்சையில் நடத்திய பேரணியை விட பன்மடங்கு பரிமாணம் கொண்டது. பல இலட்சங்களை உள்ளடக்கியது. இது தவ்ஹீத் ஜமாஅத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி! உண்மையில் இது பத்ர் வெற்றியைப் போன்றது.

அந்த வெற்றியை எண்ணி பூரிப்பு அடைந்த நாம், தேர்தலில் ஆதரித்த அணி கண்ட தோல்வி நமக்கு உஹத் களத்தைப் போன்றது.

பத்ரு, உஹத் என்று இங்கு ஓர் ஒப்பீடு காட்டியதும், பத்ருப் போரை குடந்தைப் பேரணியுடன் எப்படி ஒப்பிடலாம்? உஹதுப் போரை, தேர்தலுடன் எப்படி ஒப்பிடலாம்? என்று குள்ள நரிக் கூட்டம் இப்படி ஒரு குருட்டுத்தனமிக்கக் கேள்வியை எழுப்பலாம்.

இங்கு நாம் எடுத்துக் காட்டும் இந்த ஒப்பீடு ஓர் இயக்கம் சந்திக்கின்ற வெற்றி! அதன் பின் அது சந்திக்கின்ற தோல்வி என்ற கண்ணோட்டத்தில் தான்.

இந்தக் கண்ணோட்டத்தின் படி, தவ்ஹீத் ஜமாஅத் என்ற ஈராண்டு கால இயக்க உறுப்பினர்கள் வெற்றி, புகழ் கிடைக்கும் போது இருந்து விட்டு, தோல்வி வரும் போது, அதிலும் எதிரிகள் தொடுக்கின்ற கேள்விகள் மூலம் துவண்டு ஓடுகின்றனரா? மாற்று முகாமுக்குத் தாவுகின்றனரா? என்று பார்ப்பதற்குத் தான் இப்படி ஒரு சோதனை!

சோதனையில் வெல்வோம்.

இந்தச் சோதனையெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது! நாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்போம்! கண்ட கூடாரத்திற்கும் தாவி விட மாட்டோம் என்று உறுதி பூண வேண்டும்.

பத்ர் களத்தில் முஸ்லிம்களை எதிர்த்துப் படை நடத்தி வந்த விரோதியாகிய அபூஜஹ்ல், போரில் கொல்லப்பட்டு "கலீப் பத்ர்'' என்னும் பத்ரின் பாழுங்கிணற்றில் தூக்கி எறியப்பட்டான்.

ஆனால் உஹதில் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை நடத்தி வந்த அபூசுஃப்யான், காலித் பின் வலீத், இக்ரிமா பின் அபூஜஹ்ல் ஆகியோர் நபி (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவும் முன்னர், மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்று மாபெரும் சாதனை படைத்தனர். குறிப்பாக, இக்ரிமா, காலித் பின் வலீத் ஆகியோர் இஸ்லாத்திற்கு எதிரான எத்தனையோ போர்களில் இஸ்லாமியப் படை களுக்குத் தலைமை தாங்கி வெற்றி வாகை சூடியுள்ளனர். இங்கு தான் உஹத் போரின் போது ஏற்பட்ட தோல்வியின் மர்ம முடிச்சு அவிழ்கின்றது. அது போன்று இந்தத் தேர்தல் முடிவுகளில் நன்மை இருக்கலாம், அதை அல்லாஹ்வே அறிந்தவன்.

எனவே அல்லாஹ் இந்தத் தேர்தல் களத்தில் நமக்கு நன்மையையே தந்துள்ளான் என்று எடுத்துக் கொண்டு நமது அழைப்புப் பணியில் நம்மை முழுமையாக அர்ப்பணிக்கத் தயாராவோமாக!

உண்மையில் இது தோல்வியா?

இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் அடைந்தது தோல்வியல்ல! காரணம், அசத்தியத்தை, அநியாயத்தை, அதர்மத்தை எதிர்த்து நடத்தும் யுத்தத்தில் அசத்தியம் ஜெயித்து விட்டால் அதை யாரும் வெற்றி என்று சொல்வதில்லை.

இதை முஸ்லிமல்லாதோரும், "தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்'' என்று சொல்கின்றனர்.


கடந்த கால ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா லாட்டரி, மணல் குவாரி, கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து, சாராயம் ஆகியவற்றை எதிர்த்து ஒரு போரே நடத்தியிருக்கிறார். இந்தத் தொழில்களில் கொடி கட்டிப் பறந்தவர்கள் தேவர் சமுதாயத்தினர். இதில் சாராயம் என்பது இஸ்லாத்தின் பார்வையில் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றாலும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பிடியிலிருந்து அதை மீட்டது, மணல் குவாரியை மீட்டது, கந்து வட்டியை ஒழித்தது இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மகா யுத்தம். அந்த யுத்தத்தில் பழி வாங்கும் விதமாகத் தான் அதிமுகவின் வாக்கு வங்கியாகத் திகழ்ந்த தேவர் சமுதாயம் திமுகவுக்கு வாக்களித்து இருக்கின்றது.

EGATHUVAM JUN 2006