Apr 1, 2017

கணவனிருந்தும் விதவைகளாக - மனைவியின் கடமைகள்

கணவனிருந்தும் விதவைகளாக - மனைவியின் கடமைகள்

பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ

பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்

கணவனின் வீட்டில் நடக்கும் கொடுமைகள் காரணமாக கணவனிருந்தும் விதவைகளாக வாழும் பெண்களின் நிலையையும், மனைவியிடம் கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மார்க்கம் வலியுறுத்தும் விஷயங்களையும் கடந்த இதழில் கண்டோம்.

குடும்ப வாழ்வில், ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை மட்டும் இஸ்லாம் கற்றுத் தரவில்லை. பெண்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குகின்றது. அவர்களும் தக்க முறையோடு நடந்திட வேண்டும் என்பதையும் மார்க்கம் கூறவே செய்கிறது.

கட்டுப்பட்டு நடத்தல்
தம்பதியர் கடமைகளில் மிகவும் முக்கியமானது, மார்க்கத்திற்கு முரணில்லாத முறையில் கணவனுக்கு எல்லா வகையிலும்  கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும் இறைவன் இயற்கையிலேயே ஆண்களை வலிமை மிக்கவர்களாகப் படைத்துள்ளான். மேலும் ஆண்கள்பெண்களுக்கும் குடும்பத்திற்கும் செலவு செய்கிறார்கள் என்ற   நிலையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவன் ஆகின்றான். எனவே பெண்கள், தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதையே கீழ் வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறை வானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)

நல்ல மனைவி சிறந்த பொக்கிஷம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.

அறிவிப்பவர்: உமர் (ரலீ)

நூல்: அபூதாவூத் 1412

கட்டுப்படுவதன் உச்சக்கட்டம்

ஒரு மனைவி தனது கணவனுக்கு கட்டுப்படுவது எந்த அளவுக்கென்று அதன் உச்சக்கட்டத்தையே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா

நூல்: திர்மிதி 1079

ஒழுக்கம் பேணுதல்

கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் அம்சம் தனது கணவனின் இடத்தில் வேறொரு ஆடவரை வைக்காமல் இருப்பதாகும்.  இது கணவனுக்குக் கடும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடத்தை வகிக்கும் விஷயமாகும்.  இந்தக் கற்பு ஒழுக்கத்தைப் பேணிக் காப்பதை, பெண்மணிகள்  கவனத்தில் கொள்வது  மிக மிக இன்றியமையாததாகும்.

கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!  (அல்குர்ஆன் 24:30)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண் களும், பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:35)

"உங்கள் படுக்கையை அடுத்தவர் களுக்கு வழங்காமல் இருப்பதும், உங்கள் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக் காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்'' என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலீ)

நூல்: திர்மிதி 1083

அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது

ஒழுக்கத்திற்குக் கேடு விளை விக்கும் எல்லா காரியங்களையும் இஸ்லாம் தடை செய்கிறது.    ஒரு பெண் தன் அலங்காரங்களை கணவனுக்கு மட்டுமே காட்டும் முறையில் நடந்துக் கொள்ள வேண்டும். பிற ஆடவர்களைக் கவரும் வகையில் அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப் படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றி அடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்க முடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:59)

மேற்கூறிய வசனங்கள் பெண்களின் ஒழுக்கம் தொடர்பாக அறிவுரை கூறும் வசனங்களாகும்.

பெண்கள் அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்திக் காட்டக் கூடாது.

அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதையெல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்க விரும்புவானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். காரணம் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். முறையின்றி பார்ப்பவனுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது

ஒழுக்க வாழ்வில் மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்து உள்ளதற்கு முதல்  காரணம் பெண்ணின் அரைகுறை ஆடைகளும் ஆன்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமேயாகும்.

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைளையும் தவிர மற்ற பாகங்களை அந்நிய ஆண்களிட மிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும். புர்கா அணிதல் வேண்டும்

சில பெண்கள் புர்கா அணியாமல் மெல்லிய துணிகளை ஆடையாக அணிந்து கொண்டு வெளியில் நிற்பதும், வெளியில் செல்வதும்  இஸ்லாமிய ஒழுக்க அறிவுரைக்கு முரணாக செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.  ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும்.  அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்.

இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.  இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.  அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும்.  எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்.  ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3971


எனவே எல்லா வகையிலும் இஸ்லாத்தின் அடிப்படையில் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன் மாதிரியின் பிரகாரம் நடந்து இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் நிம்மதியாக வாழ்ந்து  நல் வழி பெறுவோமாக!

EGATHUVAM JUN 2006