Apr 6, 2017

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி ஒரு ஹெர்குலியன் பார்வை

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி ஒரு ஹெர்குலியன் பார்வை

எம். ஷம்சுல்லுஹா

மனித ஆற்றலுக்கு மேலான ஆற்றல் படைத்த ஒருவரை ரோமனில் "ஹெர்குலிஸ்'' என்று குறிப்பிடுவர். இந்தப் பெயர் ரோமா புரியின் ஆட்சியளார்களுக்கும் பின்னர் வழங்கப் பெறலாயிற்று!

மிக ஆற்றல் மிக்க, வலிமை பொருந்திய, சாதனைப் படைப்புக்கும் ஹெர்குலியன் டாஸ்க் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல் வழக்காற்றின் அடிப்படையில் கீழே இடம் பெறும் ஹதீசுக்கு ஹெர்குலியன் பார்வை என்று குறிப்பிடப்படுகின்றது. ஹெர்குலிஸ் என்ற பெயர் அரபியில் ஹிர்கல் எனப்படுகின்றது.

இந்த விபரங்களைக் கவனத்தில் கொண்டு, புகாரியில் இடம் பெறும் நீண்ட ஹதீஸைப் பார்ப்போம். ஏகத்துவத்தின் பரிணாம வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள இந்த ஹதீஸை முழுமையாகக் காண்பது அவசியம்.

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும், குறைஷி இறை மறுப்பாளர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியா நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராக அபூ சுஃப்யானும் சென்றிருந்தார்.

பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், அபூ சுஃப்யானைத் தம்மிடம் அழைத்து வரும்படி  தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும்  தம் அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரக் கூறினார்.

அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறியதாவது:

(எங்களிடம்) மன்னர் "தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?'' எனக் கேட்டார். "நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன்'' எனக் கூறினேன். உடனே மன்னர் (தம் அதிகாரியிடம்) "அவரை என் அருகே அழைத்து வாருங்கள்! அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள்'' என்று ஆணையிட்டார்.

பின்னர் தம் மொழி பெயர்ப்பாளாரிடம் "நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ சுஃப்யானாகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல்'' என ஆணையிட்டார்.

நான் பொய் கூறி விட்டேன் என இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பொய் உரைத்திருப்பேன்.

பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: "உங்களில் அவரது குலம் எத்தகையது?'' அதற்கு, "அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர்'' என்றேன். "இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா?'' என்று கேட்டார். இல்லை என்றேன். "இவரது முன்னோர்களில் எவரேனும் மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன்.

"அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?'' என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். "அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?'' என்று வினவினார். "அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்'' என்றேன். "அவரது மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்றனரா?'' என்று கேட்டார். நான் இல்லை என்றேன்.

"அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?'' என்றார். நான் இல்லை என்றேன். "அவர் வாக்கு மீறியது உண்டா?'' என்றார். (இது வரை) இல்லை என்று சொல்லி விட்டு, "நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது'' என்றேன். அப்போதைக்கு (நபி (ஸல்) மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையை விட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை!

"அவருடன் நீங்கள் போரிட்டிருக்கிறீர்களா?'' என்று கேட்டார். ஆம் என்றேன். "அவருடன் நீங்கள் நடத்திய போரின் முடிவுகள் எவ்வாறிருந்தன?'' என்றார். "எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்திருக்கின்றன. சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார்; சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம்'' என்றேன். "அவர் உங்களுக்கு என்ன தான் போதிக்கிறார்?'' என்று கேட்டார். "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறி வந்தவற்றையெல்லாம் விட்டு விடுங்கள்'' என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கி இருத்தல் போன்ற பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்'' என்றேன்.

மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம் மொழி பெயர்க்கச் சொன்னதாவது:

"அவரது குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத் தூதர்களும் அப்படித் தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில் தான் அனுப்பப் பட்டுள்ளார்கள்.

உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இந்த வாதத்தைச் செய்திருந்தால் முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின்பற்றித் தான் இவரும் செய்கின்றார் என்று நான் கூறியிருப்பேன்.

இவரது முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கின்றார்களா? என்று உம்மிடம் நான் கேட்ட போது இல்லை என்று சொன்னீர். இவரது முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருந்தால் தம் முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒரு மனிதர் இவர் என்று சொல்லியிருப்பேன்.

இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று கூறினீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணிய மாட்டார் என்றே நான் உறுதியாக நம்புகின்றேன்.

மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றார்களா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தான் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தான் இறைத் தூதர்களைப் பின்பற்றுவோராய் இருந்துள்ளனர்.

அவரைப் பின்பற்றுகின்றவர்கள் அதிகரிக்கின்றார்களா? அல்லது குறைகின்றார்களா? என்று கேட்டேன். அவர்கள் அதிகரிக்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நிறைவு பெறும் வரை அப்படித் தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும்.

அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கிறார்களா? என்று கேட்டேன். இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித் தான். இதயத்தில் நுழைந்து விட்ட இறை நம்பிக்கையின் எழில் (உறுதியானது).

அவர் (எப்போதாவது) வாக்கு மீறியதுண்டா? என்று என நான் உம்மிடம் கேட்ட போது, இல்லை என்றீர். திருத்தூதர்கள் அப்படித் தான் வாக்கு மீற மாட்டார்கள்.

அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும், அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும், சிலை வணக்கத்தில் இருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும், தொழுகை, உண்மை, கற்பு நெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர்.

நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆட்சி செய்வார். (இப்படிப்பட்ட) ஓர் இறைத் தூதர் தோன்றுவார் என்று நான் முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப் பட்டாவது அவரைச் சந்தித்து இருப்பேன். நான் அவருக்கு அருகே இருந்தால் அவரது பாதங்களை நான் கழுவி விடுவேன்''

இவ்வாறு மன்னர் ஹெர்குலிஸ் கூறினார்.

புஸ்ராவின் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி (ஸல்) அவர்கள் கடிதம் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தைத் தம்மிடம் தருமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில்..

"அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்கு-ஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக!  நிற்க!  இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)'' என்று கூறப்பட்டிருந்தது.

மன்னர் தாம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைப் படித்து முடித்ததும் அங்கே ஒரே கூச்சலும் குழப்பமும் மிகுந்து, குரல்கள் உயர்ந்து கொண்டே போயின. நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். அப்போது என்னுடன் வந்தவர்களிடம், "ரோமர்களின் மன்னன் முஹம்மதைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அவரது காரியம் இப்போது மேலோங்கி விட்டது'' என்று கூறினேன். (முஹம்மது நபி) அவர்கள் தாம் வெற்றியடைவார்கள் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்குள்ளேயும் இஸ்லாத்தை நுழைத்து விட்டான்.

(எங்கள் மன்னர் அழைத்த காரணம் பற்றி) சிரியாவிலுள்ள கிறித்தவர்களின் தலைமைக் குருவும், ரோமாபுரியின் மன்னர் ஹெர்குலிஸின் அருமை நண்பரும் அல்அக்ஸா ஆலயத்தின் நிர்வாகியுமான இப்னு நாத்தூர் என்பார் கூறினார்.

''மன்னர் அல் அக்ஸா ஆலயத்திற்கு வருகை தந்த போது ஒரு நாள் கவலை தோய்ந்த முகத்தினராகக் காணப்பட்டார். அப்போது அவரது அரசவைப் பிரமுகர்களில் சிலர் மன்னரிடம், "தங்களின் கவலை தோய்ந்த இந்தத் தோற்றம் எங்களுக்குக் கவலையைத் தருகிறது'' என்று கூறினார்கள்.

ஹெர்குலிஸ் மன்னர் விண் கோள்களை ஆராய்ந்து சோதிடம் சொல்வதில் வல்லவராயிருந்தார். மன்னரின் கவலைக்குக் காரணம் என்னவென்று வினவியவர்களிடம் அவர், "இன்றிரவு நான் நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்து கொண்டிருந்த போது விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களின் மன்னர் தோன்றி விட்டதாக அறிந்தேன்'' என்று கூறி விட்டு, "இக்கால மக்களில் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கம் உடையவர் யார்?'' என வினவினார்.

"யூதர்களைத் தவிர வேறு யாரும் விருத்த சேதனம் செய்து கொள்வதில்லை அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்குக் கடிதம் எழுதி, அங்குள்ள யூதர்களைக் கொன்று விடுமாறு கட்டளையிடுங்கள்'' என்றார்கள். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே நபி (ஸல்) அவர்களைப் பற்றிய தகவல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கும் ஒரு மனிதரை "கஸ்ஸான்'' என்ற கோத்திரத்தின் குறுநில மன்னர் ஹெர்குலிஸிடம் அனுப்பியிருந்தார். அம்மனிதர் அவர் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். அவரிடம் தகவல்களைப் பெற்ற ஹெர்குலிஸ் "இவரை அழைத்துச் சென்று இவர் விருத்த சேதனம் செய்திருக்கிறாரா? இல்லையா? சோதியுங்கள்'' என்று ஆணையிட்டார். அவரை அழைத்துச் சென்று பரிசோதித்தவர்கள் அவர் விருத்த சேதனம் செய்திருப்பதாகக் கூறினார்கள். அவரிடம் அரபிகளின் வழக்கம் பற்றி மன்னர் விசாரித்த போது, "அவர்கள் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கம் உடையவர்கள் தாம்'' என்றார். உடனே ஹெர்குலிஸ் ''அவர் தாம் (முஹம்மத்) இக்காலத்தின் மன்னராவார்; அவர் தோன்றி விட்டார்'' என்று கூறினார்.

பின்னர் ரோமாபுரியிலிருந்த, தமக்கு நிகரான கல்வியறிவும் ஞானமும் பெற்றிருந்த தம் நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதி விட்டு "ஹிம்ஸ்'' என்ற நகரத்திற்குப் பயணமானார். அவர் ஹிம்ஸுக்குப் போய் சேர்வதற்குள் பதில் கடிதம் வந்தது. அக்கடிதத்தில் ஹெர்குலிஸின் கருத்துப்படியே இறைத்தூதரின் வருகை பற்றியும் அத்தூதர் இவர் தாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.

(இதன் பிறகே மன்னர் எங்களைத் தமது அவைக்கு அழைத்தார். எங்களைச் சந்தித்த பின் நடந்ததாவது:)

ஹிம்ஸ் நகரிலிருந்த தம் கோட்டை ஒன்றிற்கு வருமாறு ரோமாபுரியின் பிரமுகர்கள் அனைவருக்கும் மன்னர் ஆணையிட்டார். (அவர்கள் வந்து சேர்ந்ததும்) அந்தக் கோட்டையின் வாயில்களை எல்லாம் பூட்டி விடும்படி உத்தரவிட்டார். கோட்டையின் வாயில்கள் அடைக்கப்பட்டன. பின்னர் மன்னர் அப்பிரமுகர்கள் முன் தோன்றி, "ரோமாபுரியினரே! நீங்கள் வெற்றியும், நேர்வழியும் பெற வேண்டும் என்றும், உங்கள் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் இந்த இறைத்தூதரை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

(இதைக் கேட்டவுடனே) காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதைப் போன்று கோட்டை வாசல்களை நோக்கி அவர்கள் வெருண்டோடினார்கள். வாசல் அருகில் சென்றதும் அவை தாளிடப்பட்டிருப்பதை அறிந்தார்கள். அவர்கள் வெருண்டோடியதையும் நபி (ஸல்) அவர்களின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதையும் மன்னர் பார்த்ததும், "அவர்களை என்னிடம் திருப்பியனுப்புங்கள்'' என்று (காவலர்களுக்குக்) கட்டளையிட்டார். (அவர்கள் திரும்பி வந்ததும்) "நீங்கள் உங்கள் மதத்தில் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்கள் என்பதைச் சோதிப்பதற்காகவே நான் சற்று முன்னர் கூறிய வார்த்தைகளைக் கூறினேன். (இப்போது உங்கள் உறுதியை) சந்தேகமற அறிந்து கொண்டேன்'' என்று அவர் கூறியதும் அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்தனர். அவரைப் பற்றித் திருப்தியுற்றார்கள். ஹெர்குலிஸ் மன்னரைப் பற்றிக் கிடைத்த கடைசித் தகவல் இதுவாகவே இருக்கிறது'' என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 7

இந்த ஹதீஸில் நம்முடைய கவனத்தை ஈர்க்கும் பல செய்திகள் உள்ளன. இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி அவர் தனது கண்ணோட்டத்தில் ஓர் ஆய்வை மேற்கொள்கிறார். இஸ்லாம் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதை அவர் மேற்கொண்ட ஆய்வு உணர்த்துகிறது. இந்த ஹெர்குலியன் பார்வையை நாம் நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பொருத்திப் பார்க்கிறோம்.

ஹெர்குலிஸ் மன்னரின் இந்த வார்த்தைகள் வேத வரிகள் கிடையாது. எனினும் சத்தியக் கருத்தை ஏற்றுக் கொள்வதற்குரிய அடிப்படை விதிகளை, அளவு கோலை அவர் தெரிவிக்கிறார். இது குர்ஆன், ஹதீசுக்கு ஒத்திருப்பதால் இந்த ஆய்வை நாம் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

நபி (ஸல்) அவர்களின் குலம், பண்புகள் போன்றவற்றை அவர் முதலில் ஆய்வு செய்கிறார். அதன் பின்னர் சத்தியத்தை அறிந்து கொள்ளும் பொதுவான ஆய்வுக்குள் வருகிறார்.

இக்கருத்தைப் பின்பற்றுபவர்கள் சாமானியர்களா? அல்லது சிறப்பு வாய்ந்தவர்களா? என்று ஹெர்குலிஸ் கேட்கிறார்.

சாமானியர்கள் தான் சத்தியக் கருத்தைப் பின்பற்றுவார்கள் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

"எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 11:27)

1980க்குப் பின்னால் தமிழகத்தில் தவ்ஹீதின் கால்கோள் நாட்டப் பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த ஏகத்துவத்தில் இணைபவர்கள் சாமானியர்கள் தான். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லர். பாட்டாளி வர்க்கத்தினர் தான். பணக்கார வர்க்கத்தினர் அல்லர். இன்று வரை இந்த நிலை தான் நீடிக்கின்றது. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஹெர்குலிஸின் அடுத்த ஆய்வு, இந்தக் கருத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கிறார்களா? அல்லது குறைகிறார்களா? என்பதாகும். நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை இந்தக் கருத்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. இதை வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32)

ஏகத்துவப் பிரச்சாரம் காலூன்றத் துவங்கியதிலிருந்து இன்று வரை எழுச்சியுடன் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்தச் சத்தியக் கருத்தில் மக்கள், கூட்டம் கூட்டமாக இணைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இந்தச் சத்தியக் கொள்கை நாளுக்கு நாள் இமாலய வளர்ச்சி அடைகின்றது என்பதை மாற்றுக் கூடாரத்தில் உள்ளவர்கள் கூட மறுக்க மாட்டார்கள்.

அடுத்த ஆய்வு, இந்தக் கருத்தை ஏற்றவர்கள் மதம் மாறுகின்றார்களா? என்பதாகும்.

ஈமான் ஒருவரின் இதயத்தில் இடம் பிடித்து விட்டால் இரும்புச் சீப்பு கொண்டு அவருடைய எலும்புக்கும், சதைக்கும் இடையில் செருகப்பட்டாலும் அவர் தனது மார்க்கத்தை விட்டு வெளியேறுவ தில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (பார்க்க: புகாரி 3612)

நபி (ஸல்) அவர்களின் இந்தச் செய்தியைத் தான் ஹெர்குலிஸ் தமது கருத்தில் பிரதிபலிக்கின்றார்.

ஏகத்துவ வேடம் போட்ட நயவஞ்சகர்களைத் தவிர்த்து, வேறு யாரும் இந்தக் கொள்கையை விட்டு வெளியேறவில்லை; சுன்னத் வல் ஜமாஅத்தில் இணையவில்லை. ஆனால் அதே சமயம் சுன்னத் வல் ஜமாஅத் என்ற கூடாரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி ஏகத்துவத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள். அவ்வாறு அடியெடுத்து வைத்தவர்கள் அசைவதில்லை. அழுத்தமாகவே இருக்கின்றார்கள். நிரந்தரமாக நீடித்து நிற்கின்றார்கள்.

ஹெர்குலிஸ் மன்னரும், அபூ சுஃப்யானும் இந்த ஹதீஸில் முத்தாய்ப்பாகத் தெரிவிப்பது இது தான்.

1. "எனது இரு பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆட்சி செய்வார்'' என்று மன்னர் ஹெர்குலிஸ் கூறுகிறார்.

அவர் கூறிய படியே அவர் ஆட்சி செய்த பகுதிகள் அனைத்தும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தன.

2. "(முஹம்மது நபி) அவர்கள் தாம் வெற்றியடைவார்கள் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே இருந்து வந்தேன்'' என்று அபூ சுஃப்யான் கூறுகிறார்.

மன்னருடைய கருத்து அபூ சுஃப்யானுடைய உள்ளத்திலும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இஸ்லாம் மாபெரும் சக்தியாகப் பரிணமிக்கும் என்று அவரும் கணிக்கிறார். அவ்விருவருடைய கணிப்பும் அப்படியே நடந்தேறுகிறது.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஒட்டு மொத்த தமிழகத்தையும் தவ்ஹீத் ஜமாஅத் தனது கொள்கை அடிப்படையில் தன் வசப்படுத்தி விடும் என்று தமிழக முஸ்லிம்கள் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ? ஆனால் தமிழக முஸ்லிம்களின் உள்ளங்களை தவ்ஹீத் ஜமாஅத் ஆட்சி செய்யப் போகின்றது என்று மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

அரபுலக மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு, மக்கா வெற்றி கொள்ளப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், "மக்களுக்கு என்னமக்களுக்கு என்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?'' என்று கேட்டுக் கொண்டிருந்தோம்.

அதற்கு அவர்கள், "அந்த மனிதர் தம்மை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக... அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார்'' என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.

அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், "அவரை அவருடைய குலத்தாருடன் விட்டு விடுங்கள்.  ஏனெனில் அவர்களை அவர் வென்று விட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)'' என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றியான சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்...

அறிவிப்பவர்: அம்ர் பின் சலிமா (ரலி)

நூல்: புகாரி 4302

மக்கா வெற்றியைப் போன்ற ஒரு நிகழ்வைத் தான் தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர். மக்கா வெற்றிக்கு நிகரான ஒரு நிகழ்வு இனி நிகழப் போவதில்லை. அதைப் பெறுவதற்கான போர்க்களங்கள் இங்கு இல்லை. இருப்பினும் தமிழக மக்கள் எதிர்பார்ப்பது ஒரு மக்கள் சக்தியைத் தான். ஜன சமுத்திரத்தைத் தான்.


மக்கள் இப்படியொரு மனிதக் கடலைச் சந்திக்கின்ற போது, அவர்களும் தங்களை இந்தத் தவ்ஹீதில் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் நிலை வெகு சீக்கிரமாக நிகழும். அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக!

EGATHUVAM JAN 2008