Apr 6, 2017

இறையில்லங்களைப் பாழாக்கும் அநியாயக்காரர்கள்

இறையில்லங்களைப் பாழாக்கும் அநியாயக்காரர்கள்

"நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள், தொழுகையில் நெஞ்சின் மீது கைகட்டக் கூடியவர்கள், தொழுகையின் இருப்பில் விரலை அசைப்பவர்கள்தொப்பி அணியாதவர்கள் இந்தப் பள்ளிக்கு வரக் கூடாது''

இப்படியொரு அறிவிப்பு தமிழகத்தில் தவ்ஹீது பிரச்சாரம் துவங்கியதும் 90 சதவிகிதம் பள்ளிவாசல்களின் பலகைகளில் எழுதப்பட்டன. இன்று வரை அந்த அறிவிப்புக்கள் அழிக்கப்படவில்லை.

தவ்ஹீது வளர்ச்சி கண்ட ஊர்களைத் தவிர்த்து ஏனைய ஊர்களில், அதிலும் குறிப்பாக, இந்தக் கொள்கை புதிதாக முளைக்கின்ற ஊர்களில் கொள்கைச் சகோதரர்கள் இன்றும் பள்ளிக்குச் சென்று தொழ முடியாமல் தடுக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் பல தவ்ஹீது பள்ளிவாசல்கள் எழுந்தமைக்குப் பல்வேறு அடிப்படைக் காரணங்கள் உண்டு. அவற்றில் முதல் அடிப்படைக் காரணமே பள்ளி வாசலில் தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டது தான். இந்தத் தடை ஏன் விதிக்கப்பட்டது?

1. நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்.

2. இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் என்று சப்தமிட்டுக் கூறுதல். ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஆமீன் சொல்வதற்குத் தடையில்லை. ஹனபி பள்ளிகளில் ஆமீன் சொல்வதற்குத் தடை!

3. அத்தஹிய்யாத்தின் போது ஆட்காட்டி விரலை அசைத்தல். ஷாபி, ஹனபி என்ற வேறுபாடின்றி எல்லாப் பள்ளிகளிலும் நபி (ஸல்) அவர்களின் இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்குக் கடுமையான தடை!

4. தலையைத் திறந்து தொழுவதற்குத் தடை!

5. பல பள்ளிகளில் உள்ள இமாம்கள் இறைவனுக்கு இணை வைப்பவர்கள்; தொழுகை முடிந்தவுடன் பக்கத்திலிருக்கும் கப்ருக்குச் சென்று அதில் அடங்கியிருப்பவரிடம் உதவி தேடக் கூடியவர்கள். அதனால் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழ முடியாமல், ஜமாஅத்தில் சேராமல் ஜமாஅத் முடிந்ததும் தனி ஜமாஅத் நடத்தினால் அடி உதை! இரண்டாம் ஜமாஅத் நடத்தாமல் தனியாகத் தொழுதாலும் அடி விழாமல் இருக்காது.

இப்படிப் பல்வேறு காரணங்களால் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்குத் தடை! மீறித் தொழுதால் அடி, உதை! இந்த அநியாயங்களை எதிர்த்துக் காவல் துறையில் புகார்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நீதிமன்ற வழக்குகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கொடுமைகளை எதிர்த்து ஏகத்துவ வாதிகள் மிகக் கடுமையாகக் குரல் கொடுத்தனர்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

அல்குர்ஆன் 2:114

இந்த வசனம் மொழியப்படாத மேடைகள் கிடையாது என்ற அளவுக்கு பள்ளிவாசல் பிரவேசத் தடையை எதிர்த்துப் பிரச்சாரம் நடைபெற்றது. இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

இவை தான் தவ்ஹீதுவாதிகள் தனிப் பள்ளிவாசல் காண்பதற்குக் காரணமாக அமைந்தன.

தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரான கொடுமைகள், பள்ளியில் தொழுவதற்குத் தடை என்பதுடன் நின்று விடவில்லை.

திருமணப் பதிவேடு கொடுக்க மறுத்தல், ஜனாஸா எடுப்பதற்கு சந்தூக்கு தர மறுத்தல், கப்ருஸ்தானில் இடம் தர மறுத்தல் போன்ற கொடுமைகளும் அரங்கேற்றப்பட்டன. இந்தக் கொடுமைகளின் காரணத்தால் தனிப் பள்ளி காண்பது தவிர்க்க முடியாததானது.

இப்படிப் பல்வேறு தியாகங்களை  பின்னணியாகக் கொண்டு தான் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் தமிழகத்தில் அமைந்தன.

விழுங்க நினைக்கும் வக்ஃபு வாரியம்

இந்தப் பள்ளிவாசல்களைத் தான் வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிவாசல்கள் வக்ஃப் வாரியத்தின் கையில் போனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

முதல் விளைவு, நிர்வாக மாற்றம். தான் நினைத்த ஆட்களை, இமாம்களை, முஅத்தின்களை நுழைக்க முயற்சிக்கும்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

திருக்குர்ஆன் கூறும் இந்த அஸ்திவாரம் தகர்த்தெறியப்படும்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் 9:17, 18

இந்த வசனம் இடுகின்ற கட்டளைக்கு மாற்றமானவர்கள் நிர்வாகத்தின் உள்ளே வருவார்கள்.

இணை வைக்கும் இமாம், முஅத்தின்கள் பணிகளில் நியமிக்கப்படுவார்கள். அப்படியே ஒவ்வொரு தீமையாகக் குடியேறி, அல்லாஹ்வை மட்டும் தனித்து அழைப்பதற்காகக் கட்டப்பட்ட தவ்ஹீது பள்ளிவாசல்கள் குராபிகளின் கூடாரமாக மாறும். அல்லாஹ் காப்பானாக!

அம்பை பள்ளிவாசலில் அரங்கேறிய அநியாயம்

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் நடந்த நிகழ்வைப் படிப்பினையாகக் கொண்டே சொல்கிறோம். மஸ்ஜிதுர்ரஹ்மான் வக்ஃப் வாரியத்தின் கீழ் வராத ஒரு பள்ளிவாசலாகும். ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதற்காக, அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்காக அமைக்கப்பட்ட பள்ளிவாசல்.

இங்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல், நோட்டீஸ் இல்லாமல் பள்ளி நிர்வாகத்தைக் கையில் எடுக்க வக்ஃப் வாரியம் முயன்றது. இவ்வாறு கையில் எடுக்க முயலும் போதே இமாமையும், முஅத்தினையும் நியமனம் செய்து கையுடன் கூட்டியே வந்தது.

அதிகார பலத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வாரியத்தின் கீழ் வராத ஒரு பள்ளிவாசலை, அதன் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கையில் எடுக்க வந்த வக்ஃப் வாரியம், தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் நிர்வாகத்தைக் கையிலெடுக்க அதிக நேரமா ஆகும்?

இவ்வாறு கூறுவதால் வக்ஃப் வாரியத்திற்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைக்க வேண்டாம். இதற்கான எந்த அதிகாரமும் இல்லாமலேயே அதிகார துஷ்பிரயோகம் நடந்தது. (இந்த நடவடிக்கை செல்லாது என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது வேறு விஷயம்.) இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் எந்தப் பள்ளியிலும் எப்போதும் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் என்ற ஊரில் ஒரு பள்ளிவாசலின் நிர்வாகத்தில் ஊழல் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நிர்வாகத்தை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கு நடைபெற்ற தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை; தேர்தலில் முறைகேடுகளையும் தில்லுமுல்லு களையும் செய்து அதே நிர்வாகம் பொறுப்புக்கு வந்து விட்டதாக அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்த நிர்வாகம் மீண்டும் பொறுப்புக்கு வந்தது எப்படி? வக்ஃப் வாரிய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியதை வழங்கி மீண்டும் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து அவ்வூர் மக்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

தவ்ஹீது பள்ளிவாசல் வக்ஃப் நிர்வாகத்தின் கீழ் போனால், அந்தப் பள்ளி நிர்வாகத்தில் வக்ஃப் வாரியம் எப்படியெல்லாம் தன் வேலையைக் காட்டும் என்பதற்கும், எத்தகைய ஊழல் பேர்வழிகள் பொறுப்புக்கு வருவார்கள் என்பதற்கும் இது சிறந்த உதாரணமாகும்.

இப்போது சொல்லுங்கள்! வக்ஃப் வாரியத்தின் கையில் தவ்ஹீது பள்ளிவாசல்கள் சென்றால் என்ன கதிக்கு உள்ளாகும் என்று?

ஏகத்துவப் பிரச்சாரம் முழுமையாக அழிக்கப்படும். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

அதிகார போதை தலைக்கேறியதால் தட்டழிந்து தடுமாறி ஏகத்துவப் பிரச்சாரத்தையே அழிக்க முனைந்துள்ளனர் இந்த நவீன ஃபிர்அவ்ன்கள்.

இந்தப் பதவியில் இவர்கள் இன்று இருக்கலாம்; நாளைக்கே தூக்கி எறியப்படலாம். பக்கா கப்ரு வணங்கிகள் இந்தப் பதவிக்கு வந்து விட்டால் அப்போது தவ்ஹீது பள்ளிவாசல்களின் கதியை நினைத்துப் பாருங்கள்.

அல்லாஹ்வின் ஆலயத்தைக் காக்க தவ்ஹீத் ஜமாஅத் எந்த தியாகத்துக்கும் தயாராக உள்ளது என்பதையும், இதனால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாகாது என்பதையும் தமிழக அரசுக்குச் சொல்லி வைக்கிறோம்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். வக்ஃப் என்பது வேறு! வக்ஃப் வாரியம் என்பது வேறு!

அல்லாஹ்வுக்காக ஒன்றை அர்ப்பணித்து விடுவது வஃக்ப் எனப்படும்.

ஆனால் வக்ஃப் வாரியம் என்பது முஸ்லிமல்லாத அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு தான். இதன் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டவை என்று சொல்ல முடியாது. அரசு நினைத்தால் அந்தச் சொத்துக்களை எதற்கும் தாரை வார்க்க முடியும்.

இன்று பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்கள் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குத்தகை, தரை வாடகை என்ற பெயர்களில் ஒரு அற்பத் தொகையைக் கொடுத்து விட்டு கோடிக்கணக்கான சொத்துக்களை அனுபவிக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கப் பட்ட இந்த வக்ஃப் சொத்துக்களில் இன்று கோயில்கள் கூட அமைந்துள்ளதை நம்மால் காட்ட முடியும்.

இதற்கெல்லாம் காரணம் அவை வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தான். அந்தச் சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்படாமல் ஒரு குறிப்பிட்ட ஜமாஅத்தினரால், ஊர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தால் இது போன்ற ஆக்கிரமிப்புக்கு அவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.

வாரியம் என்று வருகின்ற போது அதிலுள்ள ஊழல் பெருச்சாளிகள் தங்களுக்கு வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு அல்லாஹ்வின் சொத்துக்களைத் தாரை வார்க்கத் துணிகின்றனர். இது கற்பனையல்ல! எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.

இதே வரிசையில் தற்போது தவ்ஹீது பள்ளிவாசல்களையும் அபகரித்து, அவற்றைப் பாழாக்க முனைவோருக்கு அல்லாஹ் விடுக்கும் இந்த எச்சரிக்கையை மீண்டும் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.


அல்குர்ஆன் 2:114

EGATHUVAM FEB 2008