தன்னைக் காக்காதவர் தரணியைக் காப்பாரா?
தன்னையும் காத்து, தரணியையும்
காப்பவன் தான் கடவுள். இது குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்த விபரமாகும். ஆனால் பருவமடைந்த
பெரியவர்கள் மட்டுமல்ல! பண்டிதர்களுக்கும் இந்த விபரம் புரியாமல் இருப்பது வேதனையும்
வினோதமும் ஆகும்.
தன்னைக் கடவுள் என்று பீற்றியும், பிதற்றியும் கொண்டிருந்த சாய்பாபா தன்னையும் காக்காதவர் என்பது
அவருடைய வாழ்க்கையில் வெளிப்படையாக, வெள்ளிடை மலையாகத்
தெரிந்த ஒன்று.
கடலில் ஒரு கப்பல் மூழ்குகின்றது. அந்தக் கப்பலில் உள்ளவர்கள்
மூழ்கப் போகும் மற்றொரு கப்பலில் உள்ளவர்களைப் பார்த்து, நான் உங்களைக் காக்கப் போகின்றேன் என்று சொன்னால் அதைக் கேலிக்
கூத்து என்று உலக விஷயத்தில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆன்மீக விஷயத்தில் இதைப்
புரிந்து கொள்வதில்லை.
கடவுளைக் கைவிட்ட உடல் உறுப்புக்கள்
சாய்பாபாவின், அதாவது கடவுளின்
உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக அவருக்கு உதவி செய்ய மறுக்க ஆரம்பித்தன.
1963ஆம் ஆண்டு சாய்பாபாவைப் பக்கவாதம் தாக்கியது. மூளையில் இரத்த
உறைவு ஏற்படும் போது கை கால்கள் செத்து விடுகின்றன. இது தான் வாதம் எனப்படுகின்றது.
அதாவது கடவுளின் மூளையே வேலை நிறுத்தத்தில் இறங்கியதால் கை கால்களும் வேலை நிறுத்தம்
செய்ய ஆரம்பித்து விட்டன.
இயங்க மறுத்த இறைவனின் (?) இதயம்
ஒருவரின் உடலை இயக்குவது இதயம் தான். இந்தக் கடவுளுக்கோ அந்த
இதயம் நான்கு முறை இயங்க மறுத்துள்ளது. வாத நோய் ஏற்பட்ட அதே ஆண்டு கடவுளுக்கு மாரடைப்பும்
ஏற்படுகின்றது. இயங்க மறுத்த இதயத்துடன் மருந்துகளைக் கொண்டு சமாதான உடன்படிக்கை செய்த
பின்னர் தான் கடவுள் இயங்கத் துவங்கினார்.
புட்டி உடைந்த புட்டபர்த்தியார்
2005ஆம் ஆண்டு சாய்பாபா தனது பக்தர்களை பரிபாலணம் செய்து கொண்டிருந்த
போது ஒரு குட்டிப் பையன் இரும்பு நாற்காலியிலிருந்து அவர் மேல் விழுந்ததால் கடவுளின்
புட்டி உடைந்தது. ஆம்! இறைவனின் இடுப்பு முறிந்தது. தன் பக்தன் மூலம் தனக்கு இப்படி
ஒரு ஆபத்து ஏற்படப் போகின்றது என்று அறிய முடியாதவர் ஒரு கடவுளா? இதற்குப் பிறகு பாபாவின் கால்கள் தரையில் பாவ மறுத்தன. பாதங்கள்
தரையில் பதியத் தவறின. அதனால் சக்கர நாற்காலியில் கட்டுண்டு கிடக்க ஆரம்பித்தார்.
பரவசத்துடன் வந்த பக்த கோடிகளை நகரும் நான்கு சக்கர நாற்காலியில்
இருந்து கொண்டு ஆசி (?) வழங்கிக் கொண்டிருந்தார். பாவம்
அந்த பக்தர்கள். பக்தர்கள் என்று சொல்வதை விட பைத்தியங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இதுவரை திடமாக நடமாடிய சாய்பாபா சக்கர நாற்காலியில் உட்கார்ந்து
நடைப்பிணமாகக் கிடக்கின்றாரே! இவர் எப்படிக் கடவுளாக முடியும் என்ற சிந்தனை பறி போன
இவர்களைப் பைத்தியங்கள் என்று குறிப்பிடாமல் வேறென்ன சொல்ல முடியும்?
மீண்டும் இயங்க மறுத்த இதயம்
மார்ச் 2011ல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு
புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார்.
படிப்படியாக ஒவ்வொரு உறுப்பும் செயல்படாமல் கடவுளுக்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றது.
கல்லீரல் கழுத்தறுத்தது. சிறுநீரகம் செயல்படாமல் படுத்துக் கொண்டது.
அடுத்து தலைமை இயக்குனரான இதயமும் செயல்பட மறுத்தது. இயற்கை சுவாசம் போய், கடவுளுக்கு செயற்கை சுவாசம் உயிர்ப் பிச்சை கொடுத்தது. கடைசியில்
இந்தக் கடவுள் மரணத்தைத் தழுவுகின்றார். மரணம் என்ற கழுகு கடவுளின் உயிரைக் கொத்திக்
கொண்டு பறந்து விட்டது.
கவலைக்கிடமான கடவுள்
கவலைக்கிடமானவர்களைக் காப்பவர் தான் கடவுள். ஆனால் அந்தக் கடவுளே
கவலைக்கிடமானது பக்தர்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியது. கடவுளின் ஒவ்வொரு உறுப்பும்
இவ்வாறு செயல்பட மறுத்துக் கொண்டிருக்கும் போது புட்டபர்த்திக்கும் சேர்த்து ஒளியைக்
கொடுத்துக் கொண்டிருக்கும் சூரியன் அன்றாடம் உதித்து, தன்னுடைய கடமையைச் செய்து கொண்டு தான் இருந்தது.
இரவில் சந்திரன் தன் பாட்டுக்குத் தன் பாட்டையில் பவனி வந்து
பணி செய்து கொண்டிருந்தது.
காற்று சாய்பாபாவைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சுவாசத்தையும்
கொடுத்து தனது சூறாவளி சுழல் பணியைச் செய்து கொண்டிருந்தது.
புட்டபர்த்தியை உள்ளடக்கிய பூமி தன்னையும் சுற்றிக் கொண்டு சூரியனையும்
சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் செயல்படாமல் போனது கடவுளின் உறுப்புக்கள் மட்டும் தான்.
இது எதைக் காட்டுகின்றது?
சாய்பாபாவின் உயிர் ஒருவனின் கைவசமிருக்கின்றது. அந்த ஒருவன்
தான் சூரியன்,
சந்திரன், பூமி, காற்று அனைத்தையும் தன் கைவசத்தில் வைத்திருக்கின்றான். அவன்
தான் உண்மையான கடவுள். அவனிடம் தான் இந்த சாய்பாபாவின் உயிரும் உள்ளது. அந்த உண்மையான
இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.
எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன்
ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக
மரணத்தையும்,
வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
அல்குர்ஆன் 67:1, 2
உயிரினங்களின் உயிர்களைக் கைவசத்தில் வைத்திருப்பவன் தான் உண்மையான
கடவுள் என்று குறிப்பிடுகின்றான். அவன் தான் சாய்பாபாவின் உயிரைப் பறித்துள்ளான்.
இங்கு ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும்.
(நபி (ஸல்) இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர்
(ரலி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்)
பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள்
உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே
அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள்
உமர் (ரலி) பக்கமிருந்து அபூபக்ர் (ரலி) பக்கம் திரும்பி விட்டனர். அப்போது அபூபக்ர்
(ரலி) அவர்கள் "உங்களில் யார் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தார்களோ
அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்து விட்டார். யார் அல்லாஹ்வை
வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும்
உயிரோடிருப்பவன்; மரணிக்கவே மாட்டான். மேலும்
அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு
முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால்
வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே
திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு
அல்லாஹ் கூலி வழங்குவான் (3:144)'' என்றார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு
ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை
என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத் தான் இதையவர்கள் அறிந்து கொண்டதைப்
போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக்கொண்டிருந்தனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
(ரலி)
நூல்: புகாரி 1242
அபூபக்ரின் அசத்தல் வார்த்தைகள்
தங்களின் உயிரினும் மேலான இறைத் தூதரைப் பிரிந்த சோகத்தில் உறைந்து
போயிருந்த நபித்தோழர்கள் சற்று உணர்ச்சி வசமாகி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை
என்று எண்ணத் தலைப்பட்டனர்.
அந்த வேளையில் திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி அபூபக்ர்
(ரலி) அவர்கள்,
இறவாமை என்பது இறைத் தன்மை, மனிதன்
என்றால் மரணிக்கக் கூடியவன் தான்' என்பதை உரிய நேரத்தில் பதிய
வைக்கின்றார்கள். மயக்கத்தில் இருந்த மக்களை மீட்டெடுக்கின்றார்கள்.
நபித்தோழர்கள் கடவுள் தன்மைக்கும் மனிதத் தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தை
நன்கு விளங்கி வைத்திருந்ததாலும், குர்ஆன் கூறும் இறைக் கோட்பாட்டை
உள்ளத்தில் நன்கு பதிய வைத்திருந்ததாலும் எளிதில் மீண்டு விட்டனர்.
தான் ஒரு மனிதன் தான், கடவுள் அல்ல' என்று முஹம்மத் (ஸல் அவர்கள் விதித்து வைத்த கோட்பாட்டின் அடிப்படையில்
நபித்தோழர்கள் நேர்வழியில் நிலைத்து நின்றனர். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் - ஷியாக்கள், பரேலவிகள் போன்ற வழிகேடர்களைத் தவிர உள்ள அனைத்து முஸ்லிம்களும்
- முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
இந்த நம்பிக்கை இல்லாவிட்டால், சாய்பாபாவைப் போன்று ஏமாற்று வித்தைகள் செய்யாமல் உண்மையான அற்புதங்களை
நிகழ்த்திக் காட்டிய, உண்மையையே பேசிய, ஒழுக்க சீலராக வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் கடவுளாக்கியிருப்பார்கள்.
ஆனால் முஸ்லிம் சமுதாயம் அவரைக் கடவுளாக்கவில்லை. ஆக்கவும் செய்யாது. காரணம், முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர். அவரையும் படைத்து, உலகிலுள்ள அனைத்தையும் படைத்த ஒரே இறைவனை மட்டுமே முஸ்லிம்கள்
வணங்குகின்றனர். இந்தப் பகுத்தறிவுப் பாதையை பாபாவின் பக்தர்கள் பின்பற்ற முன்வர வேண்டும்.
பணம் கொட்டும் கடவுள் தொழில்
பொருள் முதலீடு இல்லாமல் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டுமா? அதுவும் கொள்ளை லாபம் தருகின்ற, கோடிக்கணக்கில் பணம் கொட்டுகின்ற தொழில் வேண்டுமா? அது மூடத்தனத்தை மூலதனமாகக் கொண்ட கடவுள் தொழில் தான். பொதுவாக
முதலீடு செய்து நடத்தப்படும் தொழில்களில் லாபமும் ஏற்படும்; நஷ்டமும் ஏற்படும். சாய்பாபா செய்த இந்தக் கடவுள் தொழிலில் கிடைத்த
லாபம் 40,000 கோடி (நாற்பதாயிரம் கோடி) ரூபாய். உலகெங்கும் உள்ள மூன்று கோடி
பக்தர்கள்'
இந்த வியாபாரத்தில் அவருக்குக் கிடைத்திருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியை வைத்து அவரைக் கடவுள் என்று நம்ப முடியுமா? ஒருபோதும் முடியாது. இதோ திருக்குர்ஆன் கூறும் பிரகடனத்தைப்
பாருங்கள்.
"கெட்டதும், நல்லதும் சமமாகாது'' என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த
போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
அல்குர்ஆன் 5:100
எவ்வளவு தான் கோடான கோடி பக்தர்கள் இருந்தாலும், கோடான கோடி செல்வம் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரு கெட்டதை, நல்லதாக்கி விட முடியாது. இது தான் நீதியான, நியாயமான பார்வையாகும். பகுத்தறிவுப் பார்வையாகும். அல்குர்ஆன்
இந்தப் பார்வையைத் தான் பார்க்கின்றது.
கோடான கோடி பணத்தைத் திருடுபவன், அந்தப் பணத்தை கல்லூரிகள், பல்கலைக்
கழகங்கள், பல்நோக்கு மருத்துவமனைகள், குடிநீர்
குழாய்கள் போன்றவற்றை அமைத்து அதை ஏழைகளுக்குக் கொடுத்து விட்டால் சமூகத்தின் பார்வையில்
அவன் நல்லவனாகி விடுவான்.
அதனால் தான் ஆந்திரத்தில் சாய்பாபாவுக்காக அரசு விடுமுறையும், அரசு மரியாதையுடன் அடக்கமும் நடைபெறுகின்றது.
ஆனால் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பார்வையில்
நல்லவர்களாகி விடுவார்களா? சாய்பாபாவின் நிலை இது தான்.
சாய்பாபா, மக்களின் அறியாமையை முதலீடாக்கி, மூடத்தனத்தை மூலதனமாக்கி, சில
ஏமாற்று வித்தைகளைச் செய்து தன்னைக் கடவுள் என்று காட்டிய பொய்யர்.
பொய்: 1
தேள் கொட்டிய பின் தேவன்?
சத்ய நாராயண ராஜுவுக்கு (சாய்பாபாவின் இயற்பெயர் அது தான்) 14 வயது இருக்கும் போது புட்டபர்த்திக்கு அருகேயுள்ள உரவகொண்டா
என்ற இடத்தில் தேள் கடித்து மயக்கடைந்தானாம். மயக்கம் தெளிந்து எழுந்ததும் சிரித்தானாம்; அழுதானாம்; பாடினானாம். அவனது செயல்கள்
எல்லாம் புரியாத புதிராக இருந்ததாம். அன்று முதல் தான் அவரது வாழ்க்கை திசை மாறி விட்டது
என்று கூறுகிறார் அவரது சகோதரர் சீஷம்மா ராஜு.
சாதாரண கூலித் தொழிலாளி ஒருவன் இதைப் போன்று கூத்துப் போட்டால்
அவனை எந்த முதலாளியாவது வேலைக்கு வைத்துக் கொள்வானா?
ஆனால் இப்படி ஒரு கூத்துப் போட்ட சாய்பாபா கடவுளாகி இருக்கின்றார்.
அதுவும் தேள் கொட்டியவுடன் தெய்வீக வசனம் பேசி தேவனாகியிருக்கின்றார். சமஸ்கிருதம்
பேசத் தெரியாத அவர் திடீரென சமஸ்கிருதம் பேசத் தொடங்கினாராம். அவர் பேசியது சமஸ்கிருதம்
தானா என்று அந்த மொழி அறிஞர் யாரையேனும் வைத்து ஒப்பு நோக்கினார்களா? இது ஓர் அபத்தமான, அப்பட்டமான
பொய்!
பொய்: 2
அவதாரம்
சிறுவன் சத்ய நாராயணா தனது பெற்றோர், சகோதரர்கள் அனைவரையும் அழைத்தானாம். அனைவரின் முன்னிலையில் காற்றிலிருந்து
விபூதி, இனிப்பு போன்றவற்றை வரவழைத்துக் கொடுத்தானாம். இதைப் பார்த்த
அவனது தந்தை தனது மகனுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று நினைத்து, பிரம்பை எடுத்து, யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டாராம்.
அதற்கு சத்ய நாராயணா, "நான் தான் சாய்பாபா. ஷீரடி
சாய்பாபாவின் அவதாரம்'' என்று கூறினானாம். அன்று முதல்
அந்தச் சிறுவனை சாய்பாபா என்று அழைக்க ஆரம்பித்தார்களாம்.
ஷீரடி சாய்பாபா என்பவர் இறந்து போய் வெகு நாட்கள் ஆகி விட்டன.
இறந்து போன ஒருவர் எழுந்து வர முடியும் என்றால் அவர் தன்னுடைய உருவத்திலேயே வரலாம்.
அது தான் அவருக்கு மரியாதையையும் மதிப்பையும் தரும். அந்த சாய்பாபா ஏன் இவரிடத்தில்
ஊடுறுவ வேண்டும்? ஒரிஜினல் சாய்பாபாவின் கடவுள்
தன்மையே கேள்விக்குறியானது. சூரத்துல் பாத்திஹா மூலம் ஓதிப் பார்த்தவர் காலப்போக்கில்
பரதேசி போன்று திருவோடு ஏந்தி பிச்சையெடுக்க ஆரம்பித்தார் என்று அவரது வரலாறு கூறுகின்றது.
தன்னுடைய தேவைக்காகப் பிறரிடத்தில் கையேந்திய ஷீரடி சாய்பாபா எப்படிக் கடவுளாக முடியும்? அவர் எப்படி இன்னொருவரிடம் புகுந்து அவதாரம் எடுக்க முடியும்?
அறிவியல் அடிப்படையில் ஒருபோதும் ஒருவர் அடுத்தவர் மீது ஊடுறுவவோ, மேலாடவோ முடியாது. எனவே இதுவும் அப்பட்டமான பொய்யாகும்.
பொய்: 3
அற்புதங்கள்
சாய்பாபா சில அற்புதங்களை (?) நிகழ்த்தியிருக்கின்றார்.
அதனால் அவர் கடவுள் என்று அவரது பக்தர்கள் வாதிடுகின்றனர். அந்த அற்புதங்கள் என்னென்ன?
விபூதி (அதாவது திருநீறு எனும் சாம்பல்), மோதிரம், தங்கச் சங்கிலி, சந்தனம், ஹெச்.எம்.டி. வாட்சுகள் போன்றவற்றை
எடுத்துக் காட்டுவது தான் அந்த அற்புதங்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவர் தந்திரக் கலையில் வல்லுநர்!
அதைப் பயன்படுத்தி லிங்கம் கக்குவது, கையிலிருந்து
திருநீறு கொண்டு வருவது போன்றவற்றைச் செய்து காட்டி மக்களை மயக்கினார் என்பது தான்
உண்மை.
விபூதி
டாக்டர் ஆபிரஹாம் கோவூர் என்பவர் 1976ஆம் ஆண்டு சாய்பாபாவின் ஆசிரமத்திற்குச் சென்று சாய்பாபாவை நேரிலேயே
சந்தித்து சவால் விடுத்தார். அந்தச் சவாலைச் சந்திக்க சாய்பாபா மறுத்து விட்டார். உண்மையில்
இவர் ஒரு கடவுள் என்றால் டாக்டர் கோவூரின் சவாலை ஏற்றுக் கொண்டு, தான் கடவுள் என்று நிரூபிக்க வேண்டியது தானே! அவ்வாறு நிரூபிக்காததன்
மூலம் தான் ஒரு போலிக் கடவுள் என்று ஒப்புக் கொண்டு விட்டார்.
சாய்பாபாவின் மோசடியை அம்பலப்படுத்த வேண்டும் என்று பிரபல தந்திரக்
கலை நிபுணர் பி.சி. சர்க்கார் ஒரு திட்டம் போட்டார். சாய்பாபாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு
கடிதம் எழுதினார். சாயிபாபா அவருக்கு நேரம்
ஒதுக்கித் தரவில்லை. பி.சி. சர்க்கார் என்ன செய்தார்? அசாம் வியாபாரி என்று சொல்லி சாய்பாபாவைச் சந்திக்க நேரமும்
பெற்று விட்டார்.
சாய்பாபா கை அசைப்பில் சந்தனத்தை வரவழைத்துக் கொடுத்து ஆசீர்வதித்தார்.
பி.சி. சார்க்காரும் அவ்வாறே கையிலிருந்து சாய்பாபாவுக்கு ஒரு ரசகுல்லாவை வரவழைத்துக்
கொடுத்தார். சாயிபாபா கூச்சல் போட்டார். "நான் தான் பி.சி. சர்க்கார்!'' என்று கம்பீரமாகக் கூறி வெளியேறினார். (இம்பிரிண்ட் 1983 ஜூன்) ஹெச்.எம்.டி. வாட்சுகள்
ஒரு முறை சாய்பாபா காற்றில் கையைச் சுழற்றி, அந்தரத்திலிருந்து 200 ஹெச்.எம்.டி.
வாட்சுகள் வரவழைத்துக் கொடுத்தார். இதையறிந்த ஆந்திராவைச் சேர்ந்த நரசய்யா என்பவர்
அந்தப் பகுதியில் எந்த இடத்தில் 200 ஹெச்.எம்.டி. வாட்சுகள் வாங்கப்பட்டன
என்று விசாரித்த போது, பெங்களூரில் ஒரு கடையில் வாங்கப்பட்டதற்கான
ஆதாரங்களை ரசீதுடன் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார் நரசய்யா! ஆனால் நீதிமன்றமும் அதிலிருந்த
நீதிமான்களும் பெரும்பான்மையானவர்கள் பாபா பக்தர்கள் என்பதால் அதைக் கண்டு கொள்ளவில்லை.
கடைசியில் நரசய்யா பொது மேடையில் ஒரு சவால் விட்டார். ஆனால் அந்த சவால் இன்று வரை ஏற்றுக்
கொள்ளப்படாமல் அந்தரத்தில் நிற்கின்றது.
பெங்களூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் இயற்பியல் வேந்தருமான
ஹெச். நரசிம்மையா என்பவர் சாய்பாபாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு
உட்பட்ட சூழலில் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுமாறு அந்தக் கடிதத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் சாய்பாபா ஏற்க மறுத்து விட்டார்.
இவர் உண்மையான கடவுள் என்றால் நரசிம்மையாவின் அழைப்பை ஏற்று
அவர் கூறிய நிபந்தனைப்படி அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டியது தானே! ஏன் மறுத்தார்? அவர் ஒரு போலிக் கடவுள் என்பதால் தானே! அவர் ஒரு பொய்யர் என்பதற்கு
இவற்றை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
பொய்: 4
ஞானக் கண்ணா? ஊனக் கண்ணா?
1993ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாய்பாபாவின் பிரசாந்தி நிலையத்தில் உள்ள
ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர். நான்கு இளைஞர்கள் உள்ளே நுழைந்து அவரது இரு காவலாளிகளைச்
சுட்டுத் தள்ளினர். பதிலுக்கு அந்த நால்வரும் காவல்துறையினரால் சுட்டுத் தள்ளப்பட்டனர்.
(சாய்பாபாவே,
அதாவது கடவுளே இந்தக் கொலைச் சதியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டும்
உள்ளது.)
இப்போது இங்கு எழுகின்ற கேள்வி:
கொலையாளிகள் உள்ளே வருகின்றனர் என்ற விபரம் ஏன் கடவுளுக்குத்
தெரியாமல் போனது? அப்படியானால் அதிலும் இவரது
போலித்தனம் தெளிவாகப் புலனாகின்றது. இவர் ஒரு பக்கா ஏமாற்றுப் பேர்வழி என்பது உறுதியாகின்றது.
பொய்: 5
முன்னறிவிப்பு
இந்தக் கடவுள் ஜென்மம் ஒரு முன்னறிவிப்புச் செய்ததாம்.
"தங்களுக்குப் பின் அறக்கட்டளையை நிர்வகிப்பது யார்? அந்தப் பொறுப்புக்குத் தாங்கள் இப்போது ஆளை நியமியுங்கள்'' என்று பக்தர்கள் கேட்டதற்கு இந்தப் பகவான், "நான் 96 வயது வரை வாழ்வேன்; அதனால் கவலைப்படாதீர்கள்; கலங்காதீர்கள்!'' என்று ஆறுதல் சொன்னாராம். ஆனால் வாக்களித்தபடி 96 வயதிற்கு 12 ஆண்டுகளுக்கு
முன்பே, 84 வயதிலேயே பக்க வாத பகவான் பரலோகம் போய் விட்டார்.
இந்த லட்சணத்தில் இந்த ஜென்மம் கர்நாடக மாநிலம், பாண்டியா நகரில் பரத்வாஜா கோத்திரத்தில் பிரேம, பிரேம சத்ய சாய்பாபாவாக மறு ஜென்மம் எடுக்கப் போகின்றதாம். எடுத்த
ஒரு பிறவியிலேயே கொடுத்த வாக்கு ஒரு துளி கூட நிறைவேறவில்லை. இது மறு பிறவி எடுக்கப்
போகின்றதாம்.
இது இந்தக் கடவுள் கூறுகின்ற பிரம்மாண்ட பொய்யாகும். இத்தனை
பொய்களையும் புளுகுகளையும் அவிழ்த்து விட்ட இந்த சாய்பாபா ஒரு பொய்க் கடவுள்; போலிக் கடவுள்! இத்தகைய போலிக் கடவுள்கள் இந்த உலகில் தப்பி
விடலாம். ஆனால் மறு உலகில் உண்மையான கடவுளின் தண்டனையை விட்டுத் தப்ப முடியாது. அவ்வளவு
ஏன்? மரணத்திற்கு முன்பு மலக்குகளிடமிருந்து மரண அடி வாங்கி விட்டுத்
தான் சாய்பாபா கூட மரணத்தைத் தழுவினார்.
இதோ திருக்குர்ஆன் சொல்கின்றது:
"அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்'' என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு
இவ்வாறே கூலி வழங்குவோம்.
அல்குர்ஆன் 21:29
சாய்பாபாவைப் போன்று இஸ்லாமிய சமுதாயத்திலும் தங்களை அல்லாஹ்வின்
அடிமைகள் என்று கூறிக் கொண்டே தங்களுக்குக் கடவுள் தன்மைகளைக் கற்பிக்கின்ற போலிக்
கடவுள்கள் இருக்கின்றார்கள்.
இதுபோன்ற போலிக் கடவுள்கள் எந்தச் சமுதாயத்தில் தோன்றினாலும்
அவர்களை அடையாளம் காட்டுவது தான் ஏகத்துவம் இதழின் தூய பணி! அந்தத் தூய பணியின் ஓரம்சமாகத்
தான் சாய்பாபாவைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான்
உலகத்தில் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர்களில் ஆட்சி அதிகாரத்தைப்
பெற்ற தூதர்கள் தாவூத் (அலை) அவர்களும், அவரது மகன்
சுலைமான் (அலை) அவர்களும் ஆவர். அவ்விரு தூதர்களுக்கும் அளித்த அருட்கொடைகளைப் பற்றி
அல்லாஹ் கூறுகிறான்.
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும்
கல்வியை அளித்தோம். "நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று அவ்விருவரும் கூறினர்.
அல்குர்ஆன் 27:15
பறவைகளின் மொழி அறிந்தவர்
தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். "மக்களே! பறவையின் மொழி
எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது.
இதுவே தெளிவான அருட் கொடையாகும்'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 27:16
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.
"அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக்
கொண்டு வர வேண்டும்'' (என்றும் கூறினார்).
(அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. "உமக்குத் தெரியாத ஒன்றைத்
தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு
வந்துள்ளேன்''
என்று கூறியது.
"நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள்.
அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது''
அல்குர்ஆன் 27:20-23
ஜின்களின் அரசர்
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.
அல்குர்ஆன் 27:17
ஜின்களின் பணிகள்
தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர்.
அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்
செய்வோம்.
அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப்
போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. "தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன்
செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்'' (என்று கூறினோம்.)
அல்குர்ஆன் 34:12, 13
காற்று ராஜா
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு
மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அல்குர்ஆன் 34:12
வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.
அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும்
அறிவோராக இருக்கிறோம்.
அல்குர்ஆன் 21:81
அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்
படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.
அல்குர்ஆன் 38:36
எறும்புகளின் பேச்சையும் அறிபவர்
அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே!
உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை
சிந்தி சிரித்தார். அல்குர்ஆன் 27:18, 19
செம்பு ஊற்று
அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம்.
அல்குர்ஆன் 34:12
இம்மாபெரிய அதிகாரத்தையும் ஆட்சியையும், இறைத் தூதையும் ஒருசேர இணையப் பெற்ற ஒரு பாக்கியமிக்க, பாராண்ட மன்னர் சுலைமான், நான்
கடவுள்' என்று ஒருபோதும் வாதித்ததில்லை. இதோ அவர் எறும்புகளின் பேச்சை
ரசித்தவாறு பணிந்து, கனிந்து உதிர்த்த பிரார்த்தனையைப்
பாருங்கள்.
"என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர்
மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக!
உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!'' என்றார்.
அல்குர்ஆன் 27:19
இம்மாமன்னரையும் மரணம் தழுவிக் கொண்டது.
அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும்
உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச்
சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு
தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள்
விளங்கிக் கொண்டன.
அல்குர்ஆன் 34:14
இது ஒரு நல்லடியாரின் வாழ்க்கை! ஒரு நபியின் வாழ்க்கை! நல்ல
முன்மாதிரியை,
நல்ல எடுத்துக்காட்டைக் கொண்டது.
இப்போது ஒரு தீய அடியானைப் பற்றி இங்கு பார்ப்போம். ஆணவ அரசனான
அவன் தான் ஃபிர்அவ்ன்! அவனும் தன்னைக் கடவுள் என்று வாதிட்டான்.
(மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான்.
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ்
பிடித்தான்.
அல்குர்ஆன் 79:23-25
அவனை அல்லாஹ் கடலில் மூழ்கடித்து அவனது உடலைப் பாதுகாத்து வைத்துள்ளான்.
தன்னைக் கடவுள் என்று சொன்னவனின் கதியைப் பாருங்கள் என்று கூறி அதைப் பாடமாக்கி வைத்துள்ளான்.
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை
இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம்
செய்வோராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 10:90, 91
போலிக் கடவுளின் உடல் இங்கே! உயிர் எங்கே? அவனது உயிர் என்னிடம் தான் உள்ளது என்று உண்மையான கடவுள் உலகுக்கு
உணர்த்திக் கொண்டிருக்கின்றான்.
ஃபிர்அவ்னாவது ஓர் ஆட்சியாளன். ஆனால் சாய்பாபாவோ சாதாரண குடிமகன்
தான். இவர் தன்னைக் கடவுள் என்று கூறியது வெட்கக் கேடு! இவரையும் கடவுளாக பக்தர்கள்
நம்புவது ஒரு கேலிக் கூத்து!
EGATHUVAM MAY 2011