Apr 27, 2017

ஈமானை இழக்க வைக்கும் எம்.எல்.ஏ. சீட்டுகள்

ஈமானை இழக்க வைக்கும் எம்.எல்.ஏ. சீட்டுகள்

தமிழகத்தில் சமுதாய இயக்கங்கள் என்றழைக்கப்படும் முஸ்லிம் லீக்குகளில், ஒரு லீக் திமுகவுடன் இருக்கும் போது மற்றொரு லீக் அதிமுகவுடன் இருக்கும்.

ஒவ்வொரு அணியும் தாங்கள் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகள் சமுதாயத்திற்குத் துரோகமிழைத்தாலும் அதற்கு ஆதரவளித்து முட்டுக் கொடுத்துக் கொண்டு தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துவர்; தங்கள் அடிமை சாசனத்தை உறுதி செய்வர். அத்துடன் வஞ்சகமில்லாமல் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களை வானத்திற்கும் பூமிக்குமாகப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

தங்களுக்குக் கிடைக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றப் பதவிகளுக்காக தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களைக் கடவுளாக்கி மகிழ்வார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் பேராசிரியர் காதர் மைதீன் ஒரு தேர்தல் கூட்டத்தில் கருணாநிதியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசியதாகும்.

சிறுபான்மை சமுதாயத்தின் உள்ளத்தில் உள்ளதை நீங்கள் அறிபவர்' என்று கருணாநிதியை நோக்கி அவரை மேடையில் வைத்துக் கொண்டு இந்த இணை வைப்பு, இறை மறுப்பு வார்த்தையைக் குறிப்பிட்டார். இது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். காதர் மைதீன் வார்த்தையை குர்ஆன் வார்த்தையில், அரபியில் சொல்ல வேண்டுமானால் அலீமுன் பிதாத்திஸ் ஸுதூர்' என்று குறிப்பிடலாம். இது படைத்த இறைவனுக்கு மட்டும் சொந்தமான தனிப் பண்பு! இந்தப் பண்பில் வேறு யாரையும் கூட்டாக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. இருப்பினும் இவ்வாறு இவர்களைப் பேச வைப்பவது எது? ஒரு சில எம்.எல்.ஏ. சீட்டுகள், எம்,பி. சீட்டுகள்.

லீக்குகள் நிலை தான் இப்படி என்றால் சமுதாய மானம் காக்கப் புறப்பட்டதாகக் கூறிக் கொண்டு கிளம்பிய, சாக்கடையைச் சந்தனமாக்கக் களமிறங்கிய மாமாகவின் வாத்தியாரைப் பாருங்கள்.

மூன்று சீட்டுகள் தருகின்ற அம்மா'விடம் அவர் காட்டுகின்ற முத்துப் பல்வரிசையைப் பார்த்தீர்களா? அரசியல் களத்தில் உங்களைப் போன்று இளிக்கின்ற எத்தனையோ பேரைப் பார்த்து விட்டேன்; உங்களைப் போன்ற எச்சில் பேர்வழிகளை நான் பார்த்ததில்லை' என்று கூறுவது போன்று அந்தப் பெண்மணியின் முகத்தில் ஒரு நமட்டுச் சிரிப்பு உருவாவதை யாரும் காணலாம். சரி! மூணு சீட்டு மோகத்தில் இப்படி ஒரு இளிப்பு வந்திருக்கலாம் என்று விட்டு விடுவோம். இவரது கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடந்த கோவை பொதுக்கூட்டத்தில் இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவர் பேசிய பேச்சைப் பார்த்தால் இவர்கள் எம்.எம்.ஏ. சீட்டுக்காக ஈமானை இழக்கவும் துணிந்து விட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வருங்கால முதல்வர் ஜெயலலிதா தான் என்று அடித்துச் சொல்கின்றார். ஒரு கட்டத்தில் இன்ஷா அல்லாஹ் என்று சொல்ல வந்தவர் இன்ஷா என்ற சொல்லோடு நிறுத்திக் கொண்டார். அல்லாஹ் நாடத் தேவையில்லை, அவர் தான் முதல்வர் என்று வாத்தியார் முடிவு செய்தால் போதும் என்று நினைத்துக் கொண்டார் போலும்.

மறைவான ஞானத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு இறை மறுப்பு வார்த்தைகளை அவிழ்த்து விடுகின்றார். இவ்வாறு அவரைப் பேசத் தூண்டியது எது? இந்த எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுக்கள் தான்.

அத்துடன் அன்புச் சகோதரரி என்று பாசம் பொங்க அழைத்து, மோடியின் சகோதரியான ஜெயலலிதாவை தனது சகோதரியாக ஆக்கிக் கொண்டார். இவரும் மோடியின் சகோதரராகத் தன்னை ஆக்கிக் கொண்டார்.

பதவி ஆசையும் பாத பூஜையும்

பதவிக்காக இவர்கள் எதையும் இழக்கத் தயார் என்று இறங்கி விட்டார்கள். அந்தப் பதவி சுகத்திற்காகப் பாத பூஜையும் செய்வதற்குத் தயார் என்பதற்கு இதோ எடுத்துக்காட்டு!

டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வெற்றிக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்:  மனிதநேய மக்கள் கட்சி

எதற்கும் விலை போக மாட்டோம் என்று மார் தட்டியவர்கள் கேவலம் மூன்று சீட்டுக்காக ஈமானையும் இழக்கத் தயார், எங்களுக்கு விலை எம்.எல்.ஏ. சீட் போதும் என்று தெளிவாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர்.

அவர்களே, நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர். (அல்குர்ஆன் 2:16)


இவர்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற நிலையை அடைவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

EGATHUVAM MAY 2011