தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!
கடந்த செப்டம்பர் 29 அன்று மகராஷ்ட்ரா
மாநிலம், பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள கைர்லாஞ்சியில் நான்கு தலித்துக்கள்
பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். யாரால்? மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால்!
ஏன் இந்த மிருக வெறித் தாக்குதல்? இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கின்றதா? என்று கேட்க வைக்கும் இந்தக் கோர சம்பவம் எதற்காக நடைபெற்றது?
பையா லால் போட்மாங்கே என்பவரின் மனைவி சுரேகா (வயது 45), மகள் பிரியங்கா (வயது 17), மகன்கள்
ரோஷன் (23), சுதீர் (21) ஆகிய நால்வரும் படிப்பறிவு பெற்றுள்ளனர்.
இது தான் இந்தத் தலித்துகள் செய்த பாவமாகும். இது தான் கொலையாளிகள் இவர்களைக் கொல்வதற்குக்
காரணம் என்று நாம் சொல்லவில்லை. 20.11.06 அன்று ஹிந்து நாளேட்டில்
வெளியான தலையங்கம் இதைத் தான் தெரிவிக்கின்றது. தினமணியில் நீரஜா சவுத்ரி என்ற கட்டுரையாளர்
கூறுவதையும் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்.
தலித் சமூகத்தில் மஹர் பிரிவைச் சேர்ந்த போட்மாங்கே குடும்பத்தினர்
ஓரளவுக்கு வசதியானவர்கள்; படிப்பறிவு பெற்றவர்கள். அக்கிராமத்தில்
குன்பி மராத்தா என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசிக்கின்றனர். அவர்களில் சிலர் மீது
போட்மாங்கேவின் மனைவி சுரேகா அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளார். இதனால் குன்பி மராத்தா
சமூகத்தைச் சேர்ந்த கிராமப் பெரியவர்கள் அவர் மீது கோபமாக இருந்தனர்.
செப்டம்பர் 29ம் தேதி இரவு
போட்மாங்கே வீட்டில் இல்லாத போது அவர்களது வீட்டிற்குக் குடிபோதையில் சிலர் வந்துள்ளனர்.
சுரேகாவையும்,
அவருடைய மகள் பிரியங்கா, மகன்கள் ரோஷன், சுதீர் ஆகியோரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தனர்.
இரும்புக் கம்பிகளாலும், சைக்கிள் செயின்களாலும் அவர்களை
அடித்தனர். இரு பெண்களையும் நிர்வாணப்படுத்தி தெருக்களில் இழுத்து வந்தனர். பிறகு அடித்துக்
கொன்று விட்டு கிராமத்துக்கு வெளியே சடலங்களைப் போட்டு விட்டனர். இரு பெண்களும் கற்பழிக்கப்பட்டதாகவும்
குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீடு திரும்பிக் கொண்டிருந்த போட்மாங்கே வேதனையுடனும் அச்சத்துடனும்
அந்த அக்கிரமங்களை ஒரு புதரின் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். கிராம நிர்வாகமும்.
காவல்துறையும் இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசும்
மெத்தனமாகவே இருந்தது...
(தினமணி 5.12.06)
தலித்துகள் தாக்கப்படுதல் தனி நிகழ்வல்ல!
இந்தியாவில் தலித் மக்கள் தாக்கப் படுவதென்பது தனி நிகழ்வல்ல!
இது அன்றாடம் நடைபெறும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.
1968ம் ஆண்டு கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்டார்கள்
என்ற காரணத்திற்காக 44 தலித்துக்களை, உயர்ஜாதி நிலச் சுவான்தார்கள் எரித்துக் கொன்ற வடு இன்னும் ஆறவில்லை.
அதன் நினைவு தினம் டிசம்பர் 25ம் தேதி அனுசரிக்கப்பட்டது.
இப்படி தமிழகத்தில் நடைபெற்ற அநியாயங்களைப் பட்டியல் போட்டால்
கூட இந்த ஏடு தாங்காது. அனைத்திந்திய அளவில் எனும் போது அதை அளவிட முடியாது.
2002ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ஹரியானா
மாநிலத்திலுள்ள துலினி கிராமத்தில், இறந்து விட்ட
மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக 5 தலித்துகள்
அடித்துக் கொல்லப்பட்டனர்.
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சம்பவங்கள் இங்கு குறிப்பிடப் பட்டுள்ளன.
ஆனால் இந்தக் கொடூரங்கள் அனுதினமும் நடந்தேறிய வண்ணம் இருக்கின்றன.
அடிப்படைக் காரணங்கள்
இதற்கு அடிப்படைக் காரணம் என்ன?
இந்துக்களின் வேத நூலான மனு சாஸ்திரம் தான்.
அது பிராமணரை உயர் குலத்தோர் என்று சித்தரித்தது.
பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார். (மனு தர்மம் 2:35)
பிராமணரைச் சூத்திரர் கையாலேனும், கருவியாலேனும் தாக்கினால் பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோ, அடித்தவனின் உறுப்புகளைக் குறைப்பதே தக்க தண்டனையாகும்.
பிராமணனுக்குச் சமமாக அகங்காரத்தோடு அமர்கின்ற சூத்திரனுக்கு
உயிருக்குத் தீங்கற்ற தண்டனை தருக. இடுப்பில் சூடு போடுக. உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக.
ஊரை விட்டும் அவனைத் துரத்துக.
பிராமணன் மீது காறி உமிழ்பவன் உதடுகளை அறுத்திடு. மூத்திரம்
பெய்தால் குறியை வெட்டு. மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்து விடு.
சூத்திரன் பிராமணனின் குடுமி, மீசை, தாடி, கழுத்து, குறி முதலியவற்றைப் பற்றியிழுத்தால் அவன் கையைத் துண்டித்து
விடுக.
சூத்திரன் பிராமணனைக் கடுமையாக வைதால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும்.
பிராமணனின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்து அங்குல நீளக் கம்பியைப் பழுக்கக்
காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும்.
(மனு தர்மம் 9:263-267)
வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம்.
சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை.
(மனு தர்மம் 10:276)
பிராமண, சத்திரிய, வைசியர்க்கு ஒருவரில்லாவிடில் அடுத்தருக்குத் தொண்டு புரிவதே
சூத்திரருக்குத் தர்மம் ஆகும்.
(மனுதர்மம் 10:277)
இழி பிறப்பாளன் ஒருவன் பிராமணப் பணியைப் புரியும் போதும் அவன்
இழி பிறப்பாளன் தான். இழி தொழில் யாது புரிந்தாலும் பிராமணன் ஒரு போதும் இழி பிறப்பாளன்
ஆகான். அவன் பிறப்பு உயர் பிறப்பு தான். பிரமனின் ஆணை அவ்வாறு.
(மனு தர்மம் 11:33)
பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு
பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு
அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும்.
(மனு தர்மம் 3:23)
மக்களை இப்படி வர்ணாஸ்ரம
அடிப்படையில் பல கூறுகளாகப் பிரித்து வைத்திருப்பதால் தான் தீண்டாமை எனும் நுகத்தடியில் இந்தியா சிக்கித் தவிக்கின்றது.
பிராமணர்கள், சூத்திரப்
பெண்களைத் திருமணம் முடிக்கக் கூடாது.
சூத்திரர்கள் கல்வி கற்கக் கூடாது; மீறிக் கற்றால் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.
உயர்ஜாதிக்காரர்களின் தெருக்களில் நாய்கள், பன்றிகள் செல்லலாம்; ஆனால் தாழ்த்தப்பட்ட
மக்கள் செல்லக் கூடாது.
உயர்ஜாதிக்காரர்களின் குளத்தில் குளிக்கக் கூடாது; குளத்தில் தண்ணீர் அள்ளக் கூடாது.
தாழ்த்தப்பட்டவர்கள் வேத மந்திரங்கள் ஓதக் கூடாது; பூஜை செய்யக் கூடாது; ஏன்? கோயில்களுக்குள் நுழையவே கூடாது.
இப்படி ஆண்டாண்டு காலம் மக்களை மனு தர்ம வர்ணங்களின் அடிப்படையில்
பிரித்து வைத்துள்ளனர். தொட்டால் தீட்டு! பட்டால் பாவம்! என்று தீண்டாமை தலைவிரித்தாடுகின்றது.
இது தான் இந்தியாவின் நிலை!
தீர்வு காண வந்த திருத்தவாதிகள்
இந்தியாவில் புறையோடிப் போன இந்தத் தீண்டாமையைக் களைய, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த, பிற இனங்களைச் சார்ந்த சீர்திருத்த வாதிகள், புரட்சியாளர்கள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தனர்.
1. நாத்திகம்
கடவுள், விதி, பாவம், புண்ணியம், வேதம் போன்றவற்றின் மீது கொண்ட நம்பிக்கையும் தீண்டாமைக்கு ஒரு
காரணம் என்று முடிவு கட்டி, கடவுள் கிடையாது என்று கூறி
நாத்திகத்தின் பால் சென்றார் ஈ.வெ. ராமசாமி.
கடவுள் கிடையாது; கடவுளைக் கற்பித்தவன்
முட்டாள்; காட்டு மிராண்டி என்று அவர் தமிழக மக்களிடம் போதிக்கலானார்.
சாதிய ஒழிப்புக்கு அவர் எடுத்துக் கொண்ட இந்த ஆயுதத்திற்கு, படித்தவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. பல அறிஞர்கள் இந்தக்
கொள்கையில் விரைவாகக் கவரப்பட்டனர்.
இதற்காக இவர் திராவிடர் கழகம் என்ற அமைப்பைக் கண்டார். அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், எம்.என். நடராஜன்
போன்றோர் இந்த இயக்கத்தில் ஐக்கியமாயினர். தமிழகமெல்லாம் இந்தப் புரட்சித் தீயைக் கொண்டு
சென்றனர்.
புரட்சித் தீயில் பொசுங்கிய புராணங்கள்
அவர்கள் கொளுத்திய புரட்சித் தீயில் புராணங்கள் பொசுங்கின. அவர்களின்
எரிமலைப் பேச்சுக்களில் இதிகாசங்கள் எரிந்தன. பூணூல் போட்ட பார்ப்பனர் இவர்களது பொறி
பறக்கும் பேச்சில் பொரிந்து போனான்.
"பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பை அடிக்காதே! பார்ப்பனனை
அடி!'' என்ற பெரியாரின் பேச்சின் வீரியத்தால் பாம்பு விஷத்தை விடவும்
கொடிய விஷமான ஆதிக்க வெறி அடங்கியது. அண்ணாத்துரை எழுதிய ஆரிய மாயை என்ற நூல் ஆரியத்தை
அரவமில்லாமல் ஆக்கியது. நாத்திகக் கொள்கை இந்த வகையில் ஓரளவு பலனளித்தது; சாதி ஒழிப்பு இதன் மூலம் நடைபெற்றது.
சாதிக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று! ஆரியம் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அஸ்திவாரமாக இருக்கும் வர்ணாஸ்ரம தர்மம் துடைக்கப்பட
வேண்டும்; தூக்கியெறியப்பட வேண்டும். ஆனால் அதற்காகக் கடவுள் இல்லை என்ற
கொள்கையை ஏற்க முடியுமா? என்று நாத்திகக் கொள்கையைப்
பலரால் ஏற்க முடியவில்லை. அத்துடன் திராவிடர்
கழகத்தில் பிளவு ஏற்பட்டு தி.மு.க. உருவானது. அதிலிருந்து அ.தி.மு.க. உருவானது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொள்கை பின்னுக்குப் போனது. ஆட்சியைத்
தக்க வைப்பது தான் அதன் குறியானது. இறுதியில், ஆரியத்தை வீழ்த்தப்
புறப்பட்ட திராவிடம், ஆரியத்திடம் தோற்றுப் போனது.
ஆம்! ஆரிய பி.ஜே.பி.யிடம் கூட்டணி வைத்து, செயல்பாட்டில்
மட்டுமல்ல! சிந்தனையளவிலும் ஆரியமெனும் ஆக்டோபஸிடம் மாட்டிக் கொண்டது.
தீண்டாமையை ஒழிப்பதற்கு நாத்திகம் என்ற வாகனத்தில் புறப்பட்டு
வந்த திராவிட இயக்கங்கள் அரை நூற்றாண்டு காலத்திற்குள் சாதியத்தை உயிர் மூச்சாகக் கொண்ட
ஆரியத்திடம் சரணாகதி அடைந்தன. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றத் தான்
முடிந்ததே தவிர அனைவரும் பிராணமர் ஆகலாம் என்ற மாற்றத்தைத் தர முடியாமல் ஆனது.
2. கல்வி
தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற்று விட்டால் சாதியம் கரைந்து
விடும் என்று கருதி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக் கண் திறப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும்
புரட்சியாளர்கள், புதிய சிந்தனை வாதிகள் செய்தனர்.
காலங்காலமாக அழுத்தப்பட்ட இந்த மக்கள் ஏற்கனவே முன்னேறிய சமுதாயத்தவருடன்
போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முடியாது. அதற்கு இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதி
இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தனர்.
நாடு விடுதலை பெற்று அரை நூற்றாண்டைத் தாண்டி விட்டது. கல்வியாலும்
தீண்டாமை ஒழிந்தபாடில்லை; ஒழியப் போவதுமில்லை. அதற்குச்
சிறந்த எடுத்துக்காட்டு தான் கைர்லாஞ்சி சம்பவம். அவர்கள் கல்வியறிவு பெற்றது அந்தச்
சமூகத்தில் கவுரவம் பெறுவதற்கு வழிவகுக்கவில்லை; அவர்கள்
களப்பலி ஆவதற்குத் தான் வழிவகுத்திருக்கின்றது. எனவே கல்வியறிவு பெற்றுவிட்டால் சாதியம்
ஒழிந்து விடும் என்று நாம் கனவு காண முடியாது.
3. பொருளாதாரம்
தாழ்த்தப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்று விட்டால் சாதியம்
ஒழிந்து போகும் என்று கருதி அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து
வாசல்களும் திறக்கப் பட்டன; வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட
மக்களில் இன்று பொருளாதாரத்தில் சிகரத்தைத் தொட்டவர்கள் இருக்கிறார்கள்; இமயத்தில் ஏறியவர்களும் இருக்கிறார்கள்.
என்ன தான் பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் ஒரு
பிராமண வீட்டில் போய் திருமணம் செய்ய முடியுமா? பிராமண ஆச்சாரம்
அவர்களிடத்தில் சம்பந்தம் கொள்ள அனுமதிக்குமா? ஆசீர்வதிக்குமா? ஒருபோதும் அனுமதிக்காது.
ஒரு தாழ்த்தப்பட்டவரிடம் சரியான பண வசதியிருக்கலாம். ஆனால் அதன் மூலம் பிராமண குடும்பத்தில் சம்பந்தம் பண்ண
உதவாது. எனவே இந்த வகையில் பொருளாதார
முன்னேற்றத்தினால் சாதியம் ஒழிந்து விடாது. சமூக அந்தஸ்து கிடைத்து விடாது.
4. ஆட்சியதிகாரம்
இவ்வளவு காலம் அடங்கிப் போன மக்களிடம் ஆட்சி, அதிகாரம் வந்து விட்டால் இந்த இழிநிலை மாறிப் போய் விடும்; தீண்டாமையெனும் கோட்டை தகர்ந்து போய் விடும் என்றெண்ணி தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு அரசியல் கட்சிகள் உயர் பதவிகள் அளித்தன. இட ஒதுக்கீட்டிலும் பதவிகள் வழங்கப்பட்டன.
ஆனால் அவற்றால் எதிர்பார்த்த தீர்வைத் தர முடியவில்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத்
திகழ்பவர்,
இந்திரா காந்தி அமைச்சரவையில் இராணுவ அமைச்சராகப் பணி புரிந்த
பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள்.
இராணுவ அமைச்சர் என்பது இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பாகும்.
இப்படிப்பட்ட பொறுப்பை வகித்த ஒருவர், ஒரு சிலை திறப்பு
விழாவில் கலந்து கொள்கிறார்; ஒரு தாழ்த்தப்பட்டவர் அந்தச்
சிலையைத் திறந்து வைத்ததால் அது தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி உயர்ஜாதிக்காரர்கள்
கங்கை நீரால் அதைக் கழுவினார்கள். இந்த நிகழ்வை இந்தியா மறந்திட முடியுமா?
இங்கே ஆட்சி, அதிகாரத்தில்
இருந்து விட்டால் தீண்டாமை தொலைந்து விடும் என்பது தொலைவான கருத்து என்பதை நாம் உணரலாம்.
எனவே அமுக்கப்பட்ட ஓர் இனம் ஆளும் வர்க்கமாகி விட்டால் அதற்கு அந்தஸ்து வரும்! ஆனால்
தீண்டாமை அகலாது; அழியாது என்பதற்கு ஜெகஜீவன்
ராமின் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு!
இட ஒதுக்கீடு முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளில்
கூட பார்ப்பனர்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சியினர் ஜெயித்து விடுகின்றார்கள். அதன்
பின் அவர்கள் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராகவே போராடுகின்றார்கள். இது தான் அரசியலில்
இட ஒதுக்கீடு பெற்ற தலித்துகளின் நிலை.
5. கலப்புத் திருமணம்
கலப்புத் திருமணம் செய்தால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று கூறி
அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவும் எடுபடாமல் போனது.
தமிழகத்தில் சாதியக் கட்சிகள் பெருக்கெடுத்து, அவற்றின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றது. தேவர் சமுதாயம் தங்களுக்கென
ஒரு அமைப்பையும், நாடார் சமுதாயம் தங்களுக்கென
ஒரு பேரவையையும் வன்னியர்கள் தங்களுக்கென ஒரு கட்சியையும் உருவாக்கி சமுதாயத்தின் வாக்குகளை
தங்கள் கட்சிகளுக்கு வாரிக் கொண்டிருக்கின்றனர்.
"வன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லை'' என்பது ஒரு சமுதாயத்தின் முழக்கம். வாக்கே அடுத்தவருக்கு இல்லை
எனும் போது வாழ்க்கை அடுத்த சமுதாயத்திற்கு எப்படிக் கிடைக்கும்? அது எப்படித் தாரை வார்க்கப்படும்?
எனவே கலப்புத் திருமணமும் கானல் நீரானது; கால வேகத்தில் சாதிய கட்சிகளின் வெள்ளப் பெருக்கில் கரைந்து
போனது.
ஆக, கல்வி, பொருளாதாரம், ஆட்சியதிகாரம், கலப்புத் திருமணம் என்று தீண்டாமைக்கு எதிராகக் கிளம்பிய திட்டங்கள்
எதுவும் தீர்வாகவில்லை; திருப்புமுனை ஆகவில்லை. அதிலும்
அண்மையில் தமிழகத்தில் விஷ விருட்சங்கள் போல் முளைத்துக் கிளம்பி, பெருகி வரும் சாதிக் கட்சிகளும் அவற்றின் சாம்ராஜ்யங்களும் இங்கு
சாதிகள் ஒழியாது என்பதற்குச் சரியான சாட்சிகள். திராவிட இயக்கங்களின் சாதிய ஒழிப்பு
தோல்வி கண்டதற்கு இவை தலைசிறந்த எடுத்துக்காட்டுகள்.
EGATHUVAM JAN 2007