Apr 3, 2017

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

கடந்த செப்டம்பர் 29 அன்று மகராஷ்ட்ரா மாநிலம், பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள கைர்லாஞ்சியில் நான்கு தலித்துக்கள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். யாரால்? மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால்!

ஏன் இந்த மிருக வெறித் தாக்குதல்? இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கின்றதா? என்று கேட்க வைக்கும் இந்தக் கோர சம்பவம் எதற்காக நடைபெற்றது?

பையா லால் போட்மாங்கே என்பவரின் மனைவி சுரேகா (வயது 45), மகள் பிரியங்கா (வயது 17), மகன்கள் ரோஷன் (23), சுதீர் (21) ஆகிய நால்வரும் படிப்பறிவு பெற்றுள்ளனர். இது தான் இந்தத் தலித்துகள் செய்த பாவமாகும். இது தான் கொலையாளிகள் இவர்களைக் கொல்வதற்குக் காரணம் என்று நாம் சொல்லவில்லை. 20.11.06 அன்று ஹிந்து நாளேட்டில் வெளியான தலையங்கம் இதைத் தான் தெரிவிக்கின்றது. தினமணியில் நீரஜா சவுத்ரி என்ற கட்டுரையாளர் கூறுவதையும் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்.

தலித் சமூகத்தில் மஹர் பிரிவைச் சேர்ந்த போட்மாங்கே குடும்பத்தினர் ஓரளவுக்கு வசதியானவர்கள்; படிப்பறிவு பெற்றவர்கள். அக்கிராமத்தில் குன்பி மராத்தா என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசிக்கின்றனர். அவர்களில் சிலர் மீது போட்மாங்கேவின் மனைவி சுரேகா அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளார். இதனால் குன்பி மராத்தா சமூகத்தைச் சேர்ந்த கிராமப் பெரியவர்கள் அவர் மீது கோபமாக இருந்தனர்.

செப்டம்பர் 29ம் தேதி இரவு போட்மாங்கே வீட்டில் இல்லாத போது அவர்களது வீட்டிற்குக் குடிபோதையில் சிலர் வந்துள்ளனர். சுரேகாவையும், அவருடைய மகள் பிரியங்கா, மகன்கள் ரோஷன், சுதீர் ஆகியோரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். இரும்புக் கம்பிகளாலும், சைக்கிள் செயின்களாலும் அவர்களை அடித்தனர். இரு பெண்களையும் நிர்வாணப்படுத்தி தெருக்களில் இழுத்து வந்தனர். பிறகு அடித்துக் கொன்று விட்டு கிராமத்துக்கு வெளியே சடலங்களைப் போட்டு விட்டனர். இரு பெண்களும் கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீடு திரும்பிக் கொண்டிருந்த போட்மாங்கே வேதனையுடனும் அச்சத்துடனும் அந்த அக்கிரமங்களை ஒரு புதரின் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். கிராம நிர்வாகமும். காவல்துறையும் இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசும் மெத்தனமாகவே இருந்தது...

(தினமணி 5.12.06)

தலித்துகள் தாக்கப்படுதல் தனி நிகழ்வல்ல!

இந்தியாவில் தலித் மக்கள் தாக்கப் படுவதென்பது தனி நிகழ்வல்ல! இது அன்றாடம் நடைபெறும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

1968ம் ஆண்டு கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்டார்கள் என்ற காரணத்திற்காக 44 தலித்துக்களை, உயர்ஜாதி நிலச் சுவான்தார்கள் எரித்துக் கொன்ற வடு இன்னும் ஆறவில்லை. அதன் நினைவு தினம் டிசம்பர் 25ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

இப்படி தமிழகத்தில் நடைபெற்ற அநியாயங்களைப் பட்டியல் போட்டால் கூட இந்த ஏடு தாங்காது. அனைத்திந்திய அளவில் எனும் போது அதை அளவிட முடியாது.

2002ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ஹரியானா மாநிலத்திலுள்ள துலினி கிராமத்தில், இறந்து விட்ட மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக 5 தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்டனர்.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சம்பவங்கள் இங்கு குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால் இந்தக் கொடூரங்கள் அனுதினமும் நடந்தேறிய வண்ணம் இருக்கின்றன.

அடிப்படைக் காரணங்கள்

இதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

இந்துக்களின் வேத நூலான மனு சாஸ்திரம் தான்.

அது பிராமணரை உயர் குலத்தோர் என்று சித்தரித்தது.

பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார். (மனு தர்மம் 2:35)

பிராமணரைச் சூத்திரர் கையாலேனும், கருவியாலேனும் தாக்கினால் பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோ, அடித்தவனின் உறுப்புகளைக் குறைப்பதே தக்க தண்டனையாகும்.

பிராமணனுக்குச் சமமாக அகங்காரத்தோடு அமர்கின்ற சூத்திரனுக்கு உயிருக்குத் தீங்கற்ற தண்டனை தருக. இடுப்பில் சூடு போடுக. உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக. ஊரை விட்டும் அவனைத் துரத்துக.

பிராமணன் மீது காறி உமிழ்பவன் உதடுகளை அறுத்திடு. மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு. மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்து விடு.

சூத்திரன் பிராமணனின் குடுமி, மீசை, தாடி, கழுத்து, குறி முதலியவற்றைப் பற்றியிழுத்தால் அவன் கையைத் துண்டித்து விடுக.

சூத்திரன் பிராமணனைக் கடுமையாக வைதால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும். பிராமணனின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்து அங்குல நீளக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும்.

(மனு தர்மம் 9:263-267)

வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம். சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை.

(மனு தர்மம் 10:276)

பிராமண, சத்திரிய, வைசியர்க்கு ஒருவரில்லாவிடில் அடுத்தருக்குத் தொண்டு புரிவதே சூத்திரருக்குத் தர்மம் ஆகும்.

(மனுதர்மம் 10:277)

இழி பிறப்பாளன் ஒருவன் பிராமணப் பணியைப் புரியும் போதும் அவன் இழி பிறப்பாளன் தான். இழி தொழில் யாது புரிந்தாலும் பிராமணன் ஒரு போதும் இழி பிறப்பாளன் ஆகான். அவன் பிறப்பு உயர் பிறப்பு தான். பிரமனின் ஆணை அவ்வாறு.

(மனு தர்மம் 11:33)

பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும்.

(மனு தர்மம் 3:23)

மக்களை இப்படி வர்ணாஸ்ரம  அடிப்படையில் பல கூறுகளாகப் பிரித்து வைத்திருப்பதால் தான்  தீண்டாமை எனும் நுகத்தடியில் இந்தியா சிக்கித் தவிக்கின்றது.

பிராமணர்கள், சூத்திரப் பெண்களைத் திருமணம் முடிக்கக் கூடாது.

சூத்திரர்கள் கல்வி கற்கக் கூடாது; மீறிக் கற்றால் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.

உயர்ஜாதிக்காரர்களின் தெருக்களில் நாய்கள், பன்றிகள் செல்லலாம்; ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லக் கூடாது.

உயர்ஜாதிக்காரர்களின் குளத்தில் குளிக்கக் கூடாது; குளத்தில் தண்ணீர் அள்ளக் கூடாது.

தாழ்த்தப்பட்டவர்கள் வேத மந்திரங்கள் ஓதக் கூடாது; பூஜை செய்யக் கூடாது; ஏன்? கோயில்களுக்குள் நுழையவே கூடாது.

இப்படி ஆண்டாண்டு காலம் மக்களை மனு தர்ம வர்ணங்களின் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தொட்டால் தீட்டு! பட்டால் பாவம்! என்று தீண்டாமை தலைவிரித்தாடுகின்றது. இது தான் இந்தியாவின் நிலை!

தீர்வு காண வந்த திருத்தவாதிகள்

இந்தியாவில் புறையோடிப் போன இந்தத் தீண்டாமையைக் களைய, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த, பிற இனங்களைச் சார்ந்த சீர்திருத்த வாதிகள், புரட்சியாளர்கள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தனர்.

1. நாத்திகம்

கடவுள், விதி, பாவம், புண்ணியம், வேதம் போன்றவற்றின் மீது கொண்ட நம்பிக்கையும் தீண்டாமைக்கு ஒரு காரணம் என்று முடிவு கட்டி, கடவுள் கிடையாது என்று கூறி நாத்திகத்தின் பால் சென்றார் ஈ.வெ. ராமசாமி.

கடவுள் கிடையாது; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; காட்டு மிராண்டி என்று அவர் தமிழக மக்களிடம் போதிக்கலானார். சாதிய ஒழிப்புக்கு அவர் எடுத்துக் கொண்ட இந்த ஆயுதத்திற்கு, படித்தவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. பல அறிஞர்கள் இந்தக் கொள்கையில் விரைவாகக் கவரப்பட்டனர்.

இதற்காக இவர் திராவிடர் கழகம் என்ற அமைப்பைக் கண்டார். அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், எம்.என். நடராஜன் போன்றோர் இந்த இயக்கத்தில் ஐக்கியமாயினர். தமிழகமெல்லாம் இந்தப் புரட்சித் தீயைக் கொண்டு சென்றனர்.

புரட்சித் தீயில் பொசுங்கிய புராணங்கள்

அவர்கள் கொளுத்திய புரட்சித் தீயில் புராணங்கள் பொசுங்கின. அவர்களின் எரிமலைப் பேச்சுக்களில் இதிகாசங்கள் எரிந்தன. பூணூல் போட்ட பார்ப்பனர் இவர்களது பொறி பறக்கும் பேச்சில் பொரிந்து போனான்.

"பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பை அடிக்காதே! பார்ப்பனனை அடி!'' என்ற பெரியாரின் பேச்சின் வீரியத்தால் பாம்பு விஷத்தை விடவும் கொடிய விஷமான ஆதிக்க வெறி அடங்கியது. அண்ணாத்துரை எழுதிய ஆரிய மாயை என்ற நூல் ஆரியத்தை அரவமில்லாமல் ஆக்கியது. நாத்திகக் கொள்கை இந்த வகையில் ஓரளவு பலனளித்தது; சாதி ஒழிப்பு இதன் மூலம் நடைபெற்றது.

சாதிக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று! ஆரியம் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அஸ்திவாரமாக இருக்கும் வர்ணாஸ்ரம தர்மம் துடைக்கப்பட வேண்டும்; தூக்கியெறியப்பட வேண்டும். ஆனால் அதற்காகக் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்க முடியுமா? என்று நாத்திகக் கொள்கையைப் பலரால் ஏற்க முடியவில்லை.  அத்துடன் திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டு தி.மு.க. உருவானது. அதிலிருந்து அ.தி.மு.க. உருவானது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொள்கை பின்னுக்குப் போனது. ஆட்சியைத் தக்க வைப்பது தான் அதன் குறியானது. இறுதியில், ஆரியத்தை வீழ்த்தப் புறப்பட்ட திராவிடம், ஆரியத்திடம் தோற்றுப் போனது. ஆம்! ஆரிய பி.ஜே.பி.யிடம் கூட்டணி வைத்து, செயல்பாட்டில் மட்டுமல்ல! சிந்தனையளவிலும் ஆரியமெனும் ஆக்டோபஸிடம் மாட்டிக் கொண்டது.

தீண்டாமையை ஒழிப்பதற்கு நாத்திகம் என்ற வாகனத்தில் புறப்பட்டு வந்த திராவிட இயக்கங்கள் அரை நூற்றாண்டு காலத்திற்குள் சாதியத்தை உயிர் மூச்சாகக் கொண்ட ஆரியத்திடம் சரணாகதி அடைந்தன. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றத் தான் முடிந்ததே தவிர அனைவரும் பிராணமர் ஆகலாம் என்ற மாற்றத்தைத் தர முடியாமல் ஆனது.

2. கல்வி

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற்று விட்டால் சாதியம் கரைந்து விடும் என்று கருதி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக் கண் திறப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் புரட்சியாளர்கள், புதிய சிந்தனை வாதிகள் செய்தனர்.

காலங்காலமாக அழுத்தப்பட்ட இந்த மக்கள் ஏற்கனவே முன்னேறிய சமுதாயத்தவருடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முடியாது. அதற்கு இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதி இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தனர்.

நாடு விடுதலை பெற்று அரை நூற்றாண்டைத் தாண்டி விட்டது. கல்வியாலும் தீண்டாமை ஒழிந்தபாடில்லை; ஒழியப் போவதுமில்லை. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு தான் கைர்லாஞ்சி சம்பவம். அவர்கள் கல்வியறிவு பெற்றது அந்தச் சமூகத்தில் கவுரவம் பெறுவதற்கு வழிவகுக்கவில்லை; அவர்கள் களப்பலி ஆவதற்குத் தான் வழிவகுத்திருக்கின்றது. எனவே கல்வியறிவு பெற்றுவிட்டால் சாதியம் ஒழிந்து விடும் என்று நாம் கனவு காண முடியாது.

3. பொருளாதாரம்

தாழ்த்தப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்று விட்டால் சாதியம் ஒழிந்து போகும் என்று கருதி அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து வாசல்களும் திறக்கப் பட்டன; வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்களில் இன்று பொருளாதாரத்தில் சிகரத்தைத் தொட்டவர்கள் இருக்கிறார்கள்; இமயத்தில் ஏறியவர்களும் இருக்கிறார்கள்.

என்ன தான் பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் ஒரு பிராமண வீட்டில் போய் திருமணம் செய்ய முடியுமா? பிராமண ஆச்சாரம் அவர்களிடத்தில் சம்பந்தம் கொள்ள அனுமதிக்குமா? ஆசீர்வதிக்குமா? ஒருபோதும் அனுமதிக்காது.

ஒரு தாழ்த்தப்பட்டவரிடம் சரியான பண வசதியிருக்கலாம். ஆனால்  அதன் மூலம் பிராமண குடும்பத்தில் சம்பந்தம் பண்ண உதவாது. எனவே          இந்த வகையில் பொருளாதார முன்னேற்றத்தினால் சாதியம் ஒழிந்து விடாது. சமூக அந்தஸ்து கிடைத்து விடாது.

4. ஆட்சியதிகாரம்

இவ்வளவு காலம் அடங்கிப் போன மக்களிடம் ஆட்சி, அதிகாரம் வந்து விட்டால் இந்த இழிநிலை மாறிப் போய் விடும்; தீண்டாமையெனும் கோட்டை தகர்ந்து போய் விடும் என்றெண்ணி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் உயர் பதவிகள் அளித்தன. இட ஒதுக்கீட்டிலும் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றால் எதிர்பார்த்த தீர்வைத் தர முடியவில்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர், இந்திரா காந்தி அமைச்சரவையில் இராணுவ அமைச்சராகப் பணி புரிந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள்.

இராணுவ அமைச்சர் என்பது இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பாகும். இப்படிப்பட்ட பொறுப்பை வகித்த ஒருவர், ஒரு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்; ஒரு தாழ்த்தப்பட்டவர் அந்தச் சிலையைத் திறந்து வைத்ததால் அது தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி உயர்ஜாதிக்காரர்கள் கங்கை நீரால் அதைக் கழுவினார்கள். இந்த நிகழ்வை இந்தியா மறந்திட முடியுமா?

இங்கே ஆட்சி, அதிகாரத்தில் இருந்து விட்டால் தீண்டாமை தொலைந்து விடும் என்பது தொலைவான கருத்து என்பதை நாம் உணரலாம். எனவே அமுக்கப்பட்ட ஓர் இனம் ஆளும் வர்க்கமாகி விட்டால் அதற்கு அந்தஸ்து வரும்! ஆனால் தீண்டாமை அகலாது; அழியாது என்பதற்கு ஜெகஜீவன் ராமின் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு!

இட ஒதுக்கீடு முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளில் கூட பார்ப்பனர்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சியினர் ஜெயித்து விடுகின்றார்கள். அதன் பின் அவர்கள் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராகவே போராடுகின்றார்கள். இது தான் அரசியலில் இட ஒதுக்கீடு பெற்ற தலித்துகளின் நிலை.

5. கலப்புத் திருமணம்

கலப்புத் திருமணம் செய்தால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று கூறி அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவும் எடுபடாமல் போனது.

தமிழகத்தில் சாதியக் கட்சிகள் பெருக்கெடுத்து, அவற்றின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றது. தேவர் சமுதாயம் தங்களுக்கென ஒரு அமைப்பையும், நாடார் சமுதாயம் தங்களுக்கென ஒரு பேரவையையும் வன்னியர்கள் தங்களுக்கென ஒரு கட்சியையும் உருவாக்கி சமுதாயத்தின் வாக்குகளை தங்கள் கட்சிகளுக்கு வாரிக் கொண்டிருக்கின்றனர்.

"வன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லை'' என்பது ஒரு சமுதாயத்தின் முழக்கம். வாக்கே அடுத்தவருக்கு இல்லை எனும் போது வாழ்க்கை அடுத்த சமுதாயத்திற்கு எப்படிக் கிடைக்கும்? அது எப்படித் தாரை வார்க்கப்படும்?

எனவே கலப்புத் திருமணமும் கானல் நீரானது; கால வேகத்தில் சாதிய கட்சிகளின் வெள்ளப் பெருக்கில் கரைந்து போனது.

ஆக, கல்வி, பொருளாதாரம், ஆட்சியதிகாரம், கலப்புத் திருமணம் என்று தீண்டாமைக்கு எதிராகக் கிளம்பிய திட்டங்கள் எதுவும் தீர்வாகவில்லை; திருப்புமுனை ஆகவில்லை. அதிலும் அண்மையில் தமிழகத்தில் விஷ விருட்சங்கள் போல் முளைத்துக் கிளம்பி, பெருகி வரும் சாதிக் கட்சிகளும் அவற்றின் சாம்ராஜ்யங்களும் இங்கு சாதிகள் ஒழியாது என்பதற்குச் சரியான சாட்சிகள். திராவிட இயக்கங்களின் சாதிய ஒழிப்பு தோல்வி கண்டதற்கு இவை தலைசிறந்த எடுத்துக்காட்டுகள்.

குறைபட்ட சிந்தனையும் குறுகிய வட்டமும்

தீண்டாமை என்பது தமிழகத்தில் மட்டுமோ, அல்லது இந்தியாவில் மட்டுமோ தொற்றி நிற்கும் நோயல்ல! உலகமனைத்திலும் பற்றிப் பரவி மக்களை அழிக்கும் ஒரு கொடிய, கோரத் தீ! எனவே அதற்குரிய தீர்வு ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கக் கூடாது. தீண்டாமையை ஒழிக்க நாம் மேலே கண்ட தீர்வுகள் எல்லாம் தமிழக அளவில், அல்லது இந்திய அளவில் தான் அமைந்திருக்கின்றன. உலக அளவில் தீண்டாமை ஒழிப்பிற்குப் பொருந்தக் கூடியவையாக இல்லை.

ஆப்பிரிக்கா இதுவரை தீண்டாமை எனும் தீயில் எரிந்து, கரிந்து கொண்டிருக்கின்றது. இதற்கு யார் தீர்வு தருவது? ஆப்பிரிக்கா மட்டுமல்ல! அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் அனைத்துக் கண்டங்களிலும் நிலவுகின்ற தீண்டாமையைத் துடைத்தெடுக்கும் வகையில் உலகளாவிய தீர்வாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழி, இனம், வட்டாரம் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அப்படி இருக்குமானால் அது குறைவுபட்ட குறுகிய சிந்தனையாகவே அமையும்; தூர நோக்குடன் கூடிய சிந்தனையாக அமையாது.

அப்படிப்பட்ட தூர நோக்குள்ள திட்டம் எங்கு இருக்கின்றது? எதில் இருக்கின்றது?

மனு தர்மம்

இந்து மதத்தில் இருக்கின்றதா? என்று பார்த்தால் அங்கு இல்லை  என்று சொல்வதை விட அது தான் சாதியத்தின் வேராகவும், விருட்சமாகவும் அமைந்திருக்கின்றது.

புத்த மதம்

சட்ட மேதை என்று வர்ணிக்கப்படும் டாக்டர் அம்பேத்கார் தீண்டாமைக்குத் தீர்வு புத்த மதம் தான் என்று தன்னுடைய தொண்டர்களுடன் புத்த மதம் புகுந்தார்.

அக்டோபர் 2ம் தேதியன்று அம்பேத்காரின் புத்த மதப் பிரவேசத்தின் அடையாள நாள். ஆம்! லட்சக்கணக்கான தொண்டர்களுடன் அம்பேத்கார் புத்த மதம் புகுந்ததன் ஐம்பதாவது ஆண்டு நினைவு நாள். அந்த நினைவு நாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் கைர்லாஞ்சி சம்பவம் நடைபெறுகின்றது. அதைத் தொடர்ந்து இரண்டு ரயில்கள் கொளுத்தப்படுகின்றன. மகராஷ்ட்ரா முழுவதும் வன்முறை பற்றி எரிகின்றது.

மகராஷ்ட்ராவில் தான் அம்பேத்காரின் புத்த மதத் தழுவல் நடைபெற்றது. இந்த மதமாற்றம் நடந்து அரை நூற்றாண்டுகள் ஆன    பின்னர் அதே மகராஷ்ட்ராவில் நடைபெற்றுள்ள இந்த வன்முறைச் சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன? அம்பேத்காரின் புத்த மதத் தழுவல் தீண்டாமைக்குத் தீர்வாகவில்லை என்பதையே காட்டுகின்றன.

யூத, கிறித்தவ மதங்கள்

யூத மதத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனியத்தின் மறு பதிப்பு தான் அது! பிறப்பால் தான் யூதராக முடியுமே தவிர மத மாற்றம் அங்கு இல்லை. கிறித்தவ மதத்திலும் தீண்டாமைக்குத் தீர்வு இல்லை.

அன்னியன் ஒருவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. ஆசாரியன் வீட்டில் தங்கி இருக்கிறவனும் கூலி வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது. (லேவியராகமம் 22:10)

ஆசாரியனுடைய குமாரத்தி அன்னியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது. (லேவியராகமம் 22:12)

ஆசாரியர் (புரோகிதர்) குலத்தில் பிறந்து விட்ட பெண், அன்னிய ஜாதிக்கு வாழ்க்கைப்பட்டு விட்டால் அவளும் அந்த ஜாதியில் சேர்ந்து விடுவாள் என்று பைபிள் கூறுகின்றது.

அப்போது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் (இயேசுவிடம்) வந்து, "ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள்'' என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்திரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

அப்போது அவருடைய சீடர்கள் வந்து, "இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே! இவளை அனுப்பி விடும்'' என்று அவரை வேண்டிக் கொண்டார்கள்.  அதற்கு அவர் "காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப் பட்டேனே அன்றி மற்றபடி அல்ல'' என்றார்.

அவள் வந்து, "ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும்'' என்று அவரை நோக்கிப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி, "பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல'' என்றார். அதற்கு அவள், "மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க் குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே!'' என்றாள். (மத்தேயு 15:22-27)

இந்தச் சம்பவத்தில், இஸ்ரவேல் புத்திரர்களை பிள்ளைகள் என்றும், கானானிய இனத்தவர் நாய்களைப் போன்றவர்கள் என்றும் பைபிள் கூறுகின்றது. வர்க்க பேதத்தை, வர்ணாசிரம தத்துவத்தை பைபிள் ஆதரிப்பதற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

மேலும் இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாருக்காகவும் தாம் அனுப்பப்படவில்லை என்று இயேசு கூறியதாகவும் மேற்கண்ட வசனம் கூறுகின்றது. இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்வதற்குக் கிறித்தவ மார்க்கம் தயாராக இல்லை.

கடவுள் என்பவன் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் தான். பூமியில் வேறு யாருக்கும் இல்லை. (செகண்ட் கிங் 5:15)

நாம் பிறப்பால் யூதர்கள். நாம் யூதரல்லாத பாவிகள் இல்லை.    (கேல் 2:15)

இதனால் தான் தாழ்த்தப்பட்டவர்கள் இன்று கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் அங்கு தலித் கிறித்தவர்களாகவே வாழ்கின்றனர். நாடார்கள் கிறித்தவ மதத்திற்குச் சென்றாலும் கிறித்தவ நாடார்கள் ஆகின்றனர்.

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

இவ்வாறு உலகத்தில் எங்கு பார்ப்பினும் தீண்டாமைக்குத் தீர்வு இல்லை. அதற்குரிய திட்டமும் இல்லை. தீண்டாமைக்குரிய தீர்வும் திட்டமும் திருக்குர்ஆனில் மட்டும் தான் இருக்கின்றது. வாய் இனிக்கும் வகையில் ஏட்டளவில் நிலைத்திருக்கும் தத்துவார்த்தமாக மட்டுமில்லாமல் நடைமுறை வாழ்க்கையின் செயல்பாடாக அமைந்திருக்கின்றது.

இந்தத் தீர்வு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு - குலத்தாருக்கு - கோத்திரத்தாருக்கு - நிறத்தாருக்கு - மொழியினருக்கு என்று பார்க்கவில்லை.

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னால் இருந்த அரபிகள், பாரசீகர்கள், ரோமாபுரியினர், கிரேக்கர்கள், இந்தியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களிடம் ஈரடுக்கு வர்க்கங்கள், மூன்றடுக்கு வர்க்கங்கள், நான்கடுக்கு வர்க்கங்கள் இருந்தன. எனவே அப்போது அருளப்பெற்ற திருக்குர்ஆன் அரபகத்தை மட்டும் குறியீடாகக் கொள்ளவில்லை. முழு மனித சமுதாயத்தையும் குறியீடாகக் கொண்டது.

மனித குலத்தில் உள்ள இந்த வேறுபாடுகளின் வேரை நோக்கி குர்ஆன் தனது தூர நோக்குப் பார்வையை, தீர்க்கமான சிந்தனையைச் செலுத்தியது. தீண்டாமை என்ற நோயின் காரணத்தைக் கண்டறிந்தது.

அன்றிருந்த ஆளும் வர்க்கங்கள் தங்களிடம் தெய்வீகத் தன்மை இருப்பதாகப் பறை சாற்றினர். குடிமக்களின் உள்ளங்களிலும், உணர்வுகளிலும் அதை உறையச் செய்தார்கள். இதன் விளைவாக அந்த மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை, சாதாரண ஆட்சியாளர்கள் என்று பார்க்காமல் கடவுளர்களாகப் பார்த்தனர். அவர்களுக்கு வணக்கமும் செலுத்தினார்கள்.

ஆட்சியாளர்கள் தெய்வங்கள் ஆயினர்; மக்கள் அடிமைகளாயினர். ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கையில் திளைத்தார்கள்; குடிமக்களோ சுரண்டப்பட்டார்கள்.

ஒருவனே தேவன்

சுருங்கக் கூறின், மனிதன் மனிதனைக் கடவுளாக்கினான். இங்கு தான் தெய்வீகத்தன்மை யாருக்குச் சொந்தம் என்பதைத் திருக்குர்ஆன் விளக்கியது. தெய்வீகம் என்பது படைத்த இறைவனுக்கு மட்டும் சொந்தம்; அவனுடைய தனித்தன்மை; அந்தத் தனித்தன்மையில் மனிதனுக்கு எள்ளளவும் சம்பந்தமில்லை என்று முழங்கியது.

இதோ திருக்குர்ஆன் கடவுள் கொள்கையைப் பற்றி முழங்குகின்றது.

"மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:158)

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

(அல்குர்ஆன் 35:3)

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதாவது அவன் மட்டுமே கடவுள் தன்மை உள்ளவன். அவனது கடவுள் தன்மையில் வேறு யாரும் கூட்டாளி இல்லை; அவனுக்கு நிகரில்லை; இணையில்லை என்று இந்த வசனம் கூறுகின்றது.

தாயின் வயிற்றில் உருவாக்கியவன் அவனே!

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

(அல்குர்ஆன் 39:6)

"அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்'' என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

(அல்குர்ஆன் 21:29)

 மேற்கண்ட இந்த வசனங்கள் மனிதர்களில் எவரும் கடவுளாக முடியாது; கடவுளைத் தவிர்த்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை; எனவே அவையும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றன.

தான் ஒருவன் மட்டுமே கடவுள்! தன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; எதுவுமில்லை என்று இறைவன் தெளிவுபடுத்தி விடுகின்றான்.

இப்போது உலக மக்கள் அனைவரும் வெள்ளையர், கருப்பர் என்று வேறுபாடு எதுவுமின்றி அல்லாஹ்வின் அடிமை என்றாகி விடுகின்றனர். வல்ல இறைவனைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எஜமானர்கள் யாரும் இல்லை. அவன் ஒருவன் தான் அவர்களுக்கு எஜமானன். அதாவது அவன் ஒருவனே தேவன்; மற்றவர்கள் அனைவரும் அடிமைகளே!

இதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் உள்ள இனம், மொழி, குலம், கோத்திரம், கலாச்சாரம் என்ற அனைத்துத் திரைகளும், வேறுபாடுகளும் அகன்று விடுகின்றன. அனைத்துத் தடைகளும் அடித்து நொறுக்கப்பட்டு விடுகின்றன.

இப்படிக் கடவுள் கொள்கையில் ஓர் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு ஏற்பட்டவுடன் அங்கே மக்கள் தாமாகவே ஒரே குலம், ஒரே இனம் என்றாகி விடுகின்றார்கள்.

ஒன்றே குலம்

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று மற்றவர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால் இஸ்லாம், "ஒருவனே தேவன், ஒன்றே குலம்' என்று கூறுகின்றது.

ஒரே கடவுள் என்ற வட்டத்திற்குள் உலக மக்கள் வந்து விட்டால் கடவுள் நம்பிக்கையில் அவர்களுக்கு மத்தியில் ஓர் இணக்கம், ஐக்கியம் ஏற்பட்டு அதன் மூலம் தத்துவ ரீதியில் அவர்கள் ஒரே குலமாகி விடுகின்றனர். அந்த ஒற்றுமை வெறும் சிந்தனையாக ஏட்டளவில் இருக்கக்கூடாது. அது செயல்பாட்டளவில் வந்து விட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அதைத் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன் 49:13)

மனித இனம் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஒரே ஜோடியிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இனம், நிறம், நாடு, மொழி, கலாச்சார அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.

ஒரு மனிதனுக்கு மரியாதை, அந்தஸ்து, தகுதி அனைத்தும் அவன் தன்னைப் படைத்த இறைவனை எந்த அளவுக்கு அஞ்சுகின்றானோ அதைப் பொறுத்து தான். பிறப்பால், பணத்தால், நிறத்தால், இனத்தால் உயர்வு, தாழ்வு ஏற்படுவதில்லை என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

இறைவனின் மதிப்பு, மரியாதை ஒரு குறிப்பிட்ட நாட்டவருக்கு - இனத்தவருக்கு - குடும்பத்தாருக்கு - மொழியினருக்குத் தான் கிடைக்கும் என்பதில்லை.

ஒரு வெள்ளையன் இறைவனுக்கு மாற்றமாக நடந்தால் அவன் இறைவனின் அன்பை, மரியாதையைப் பெற முடியாது. அதே சமயம் ஒரு கருப்பன் இறைவனை அஞ்சி நடந்தால் அவன் இறைவனின் அன்பை, மரியாதையைப் பெற முடியும்.

அதே போல் வெள்ளையனும் இறைவனைப் பயந்து நடக்கும் போது இறைவனிடம் உயர்ந்தவனாகி விடுகின்றான். ஒரு கருப்பன் இறைவனுக்கு மாற்றமாக நடந்தால் அவன் இறைவனிடம் தாழ்ந்தவனாகி விடுகின்றான்.

தூய்மையான துலாக்கோல்

ஒரு சாராரை நெற்றியில் பிறக்க வைத்து, அவர்களுக்கு உயர்வையும் மற்றொருவரைக் காலில் பிறக்க வைத்து அவர்களுக்குத் தாழ்வையும் கொடுப்பது இறைப்பண்பு அன்று! இது ஓர் அநியாய அளவுகோல் ஆகும். ஆனால் திருக்குர்ஆன் கூறுவதோ தூய்மையான துலாக்கோல் ஆகும்.

மனு தர்மம், பைபிள் போன்று இறைவனை ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் திருக்குர்ஆன் சொந்தமாக்கவில்லை. உலகில் உள்ள மனித இனம் அனைத்தும் அவனது படைப்பு! அந்த மனித இனம் ஒரேயொரு ஜோடியிலிருந்து பிறந்திருக்கின்றது என்று கூறி ஒரு நொடியில் உலகில் உள்ள நிறம், மொழி, குலம், கோத்திரம், கலாச்சாரம் என்ற அனைத்து பேதங்களையும் தகர்த்தெறிந்து விடுகின்றது.

குலம், கோத்திரம்

மனிதன் ஒரு சமூகப் பிராணி! அவன் கூட்டாகத் தான் வாழ்ந்தாக வேண்டும். அந்தக் கூட்டு வாழ்க்கைக்கு யாராவது ஒருவன் தலைமைப் பொறுப்பேற்கின்றான். சமூகத்தில் இதனால் அவனது குடும்பத்திற்கு ஒரு மதிப்பு கிடைக்கின்றது. பிறகு அந்த ஊரை, அந்த நாட்டை, தலைமுறை தலைமுறையாக அந்தக் குடும்பம் ஆண்டு வருகின்றது. அது மன்னர் பரம்பரை என்று அழைக்கப் படுகின்றது.

அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் ஒரு சீர்திருத்தச் சிந்தனைவாதி தோன்றியிருப்பான். அதனால் அந்தக் குடும்பம் மதிக்கப்படும். இந்தச் சமூக அந்தஸ்து தலைமுறை தலைமுறையாகத் தொடரும்.

இப்படிப் பல்வேறு காரணங்களால் ஒரு குடும்பம் சமுதாயத்தில் மரியாதையைப் பெறுகின்றது. இப்படி மரியாதை பெறும் இந்தக் குடும்பம் தங்களுக்கு மத்தியில் மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்கின்றது. மற்ற குடும்பங்களில் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்வது கிடையாது. தங்கள் குடும்பங்களுக்கென்று சில மரபுகளையும் விதிமுறைகளையும் வைத்துக் கொண்டு, வரம்புகளை வகுத்துக் கொண்டு தங்களைச் சிறந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.

குரைஷிக் குலம்

இதற்கு உதாரணமாக அரபியாவின் குரைஷிக் குலத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்தக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள்.  இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர்.

இவர்கள் தங்களை ஹுமுஸ் என்று அழைத்துக் கொண்டனர். ஹுமுஸ் என்றால் கடுமை, கடினம் என்று பொருளாகும். குரைஷிகள் தங்கள் மார்க்கத்தில் பிடிப்பாக இருப்பதால் அவர்களுக்கு இந்தப் பெயர். (நவவீயின் முஸ்லிம் விரிவுரை)

இவர்கள் ஹஜ், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டால் இறைச்சி சாப்பிட மாட்டார்கள்; முடி, கம்பளியினால் ஆன ஆடைகளை அணிய மாட்டார்கள். மக்காவுக்கு வந்தால் இந்த ஆடைகளைக் களைந்து விடுவர். இது அப்துல் அஜீஸ் பின் இம்ரான் அல்மதனீ என்பார் கூறும் விபரமாகும்.

குரைஷிகளிடம் குரைஷி அல்லாதவர் யாரேனும் பெண் பேசி வந்தால், தங்கள் பிள்ளை தங்கள் மார்க்கத்தில் தான் இருப்பாள் என்று நிபந்தனையிட்டே திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் சம்பந்தம் கொள்கின்ற கிளையாரில் தாய்கள் மட்டும் ஹுமுஸைச் சார்ந்தவர்கள் ஆவர். (பத்ஹுல் பாரி)

தனித்துவத்தைத் தக்க வைத்தல்

ஆரம்ப காலத்தில் இவர்களது முன்னோர்கள் சீர்திருத்தவாதிகளாக, இறைத்தூதர்களாக இருந்ததால் கஅபா எனும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெறுகின்றனர். அதை வைத்துத் தங்கள் குடும்பத்தின் தனித்தன்மையை அப்படியே தலைமுறை தலைமுறையாகத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஹஜ் என்பது மக்கள் அனைவரும் மக்காவில் ஒன்று கூடுவதாகும். அப்படி ஒன்று கூடும் மக்கள், மக்காவில் கஅபா எனும் ஆலயத்திற்கும், முஸ்தலிபா என்ற இடத்திற்கும், அரஃபா என்ற இடத்திற்கும் கண்டிப்பாக வருகையளிக்க வேண்டும்.

ஆனால் இந்தக் குரைஷிகளோ மற்ற மக்களைப் போன்று அரஃபாவுக்கு வர மாட்டார்கள். முஸ்தலிபா என்ற இடத்திற்கு மட்டும் வருகையளிப்பார்கள்.

மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே கஅபாவைச் சுற்றி வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையாரைத் தவிர. ஹும்ஸ் என்றால் குரைஷிகளும் அவர்களது சந்ததிகளும் ஆவர். அவர்களில் ஓர் ஆண் இன்னோர் ஆணுக்கு தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார். மேலும் மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1665

அல்குர்ஆன் வைக்கும் ஆப்பு

இந்த அறியாமைக் காலப் பழக்கத்திற்கு, அகந்தைக்கு, குல வெறிக்குத் தான் அல்குர்ஆன் ஆப்பு வைக்கின்றது.

மக்கள் எங்கிருந்து புறப்படு கிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! (2:199) என்ற வசனம் குரைஷிகள் தொடர்பாக இறங்கியது தான். (புகாரி 1665)

அல்குர்ஆனின் இந்த ஆணைப் படி குரைஷிகளின் குடும்ப வெறி அடித்து உடைத்துத் தரைமட்டமாக்கப் படுகின்றது. அதன்படி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும் போது அவர்கள் குரைஷிக் குடும்பத்தவராக இருந்தாலும் அரஃபாவில் வந்து நிற்கின்றார்கள்.

அதைப் பார்த்து மற்ற குரைஷிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள்  அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், "இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?'' என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)

நூல்: புகாரி 1664

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் வழக்கத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வார்கள் என்று குரைஷிகள் எதிர்பார்த்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமைக் காலத்துப் பழக்கத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப ஆப்பு வைத்து விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள்.  குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்! அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள்.  நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப் பட்டுத் தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

சம்பந்தியும் சமபந்தியும்

எண்பதுகளில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது. தாழ்த்தப் பட்ட மக்கள் தங்கள் மதத்தை விட்டு வெளியே போய் விடக் கூடாது என்பதற்காக இந்து மதத் தலைவர்கள் சமபந்தி போஜனம் நடத்தினார்கள். அப்போது அந்த மக்கள் எழுப்பிய கேள்வி இது தான். சமபந்தி போஜனம் வேண்டாம்! சம்பந்தி போஜனம் நடத்த முடியுமா?

அந்தக் கேள்வியைக் கேட்பதற்கு நமக்குத் தார்மீக உரிமை இருக்கிறது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்தக் குடும்ப வெறியைத் தகர்க்கும் வகையில், தன்னிடம் வளர்ந்த ஸைத் என்ற அடிமைக்குத் தனது அத்தை மகள் ஸைனபைத் திருமணம் செய்து வைக்கின்றார்கள். இது அரபுலகிற்கு ஓர் அதிசய நிகழ்வாகும். இவ்விருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு விவாக விலக்கு நிகழ்ந்தாலும், அரபகத்தில் நிலவிய "உயர் குலத்தவர்கள் தங்களுக்குள் தான் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும்' என்ற மரபு உடைக்கப்பட்டு விட்டது.

அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்று திருக்குர்ஆன் கூறுவது போல் குலம் குறுக்கே நிற்காத வண்ணம் இறையச்சம் தான் சம்பந்தத்திற்குரிய அளவுகோல் என்று நிலைநாட்டி, தீண்டாமையைத் தகர்த்தெறிந்தார்கள்.

தாழ்த்தப்பட்டவர் தளபதியான அதிசயம்

தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷிகளின் குருட்டு எண்ணத்தையும் நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள். அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ர-) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள்.  அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3730

பிரஞ்சுப் புரட்சி

குலம், கோத்திரத்தால் தீண்டாமை ஏற்படுவது போல் செல்வத்தாலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரஞ்சுப் புரட்சி ஏற்பட்டதற்குக் காரணம், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்பட்ட வேறுபாடு தான். பிரான்ஸ் தேசிய சட்டசபையில் பாதிரியார்கள், பிரபுக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று மூன்று சாரார் இருந்தனர். இம்மூன்று சாராரில் ஆளும் வர்க்கத்தினருக்கும், பணக்கார வர்க்கத்தினருக்கும் ஜால்ரா போடும் பாதிரியார்கள் மற்றும் பிரபுக்கள் ஆகியோருக்குத் தான் வாக்குரிமை இருந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கு வாக்களிக்க உரிமை இல்லை.

வாக்களிக்கும் போது தலைகளை எண்ணுங்கள்; தரத்தை எண்ணாதீர்கள் என்று நடுத்தர வர்க்கத்தினர் கோரினர். ஆனால் மன்னர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தோன்றியது தான் பிரஞ்சுப் புரட்சி!

இப்படி செல்வம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்களால் உருவாக்கப் படும் ஏற்றத்தாழ்வுகளையும் இஸ்லாம் தகர்க்கின்றது.

முளையிலேயே கிள்ளிய திருக்குர்ஆன்

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன் 18:28)

காலையிலும் மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தாருடன் இருக்குமாறும், மனோ இச்சையைப் பின்பற்றியவனுக்குக் கட்டுப்பட வேண்டாம் எனவும் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றது.

இறைவனைக் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தார் எனக் குறிப்பிடப்படுவோர் இவ்வுலகின் புகழ், வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களாக இருந்தனர் எனவும் மனோ இச்சையைப் பின்பற்றியோர் செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களாக இருந்தனர் எனவும் இந்த வசனத்தி-ருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.  "இவ்வுலகின் கவர்ச்சியின் பால் உமது கண்களைத் திருப்ப வேண்டாம்' என்ற சொற்றொடரி-ருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற கருத்தை 6:52 வசனமும் கூறுகின்றது.

(முஹம்மதே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!  (அல்குர்ஆன் 6:52)

இவ்வசனத்தில் காலையிலும் மாலையிலும் இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களை விரட்டியடிக்க வேண்டாம் எனவும் அவ்வாறு விரட்டினால் அநீதி இழைத்தவராவீர் எனவும் கூறப்படுகின்றது.

இது போன்ற கருத்து மேலும் இரண்டு வசனங்களிலும் கூறப் பட்டுள்ளது.

அவர்களில் பல்வேறு கூட்டத்தினர் அனுபவிப்பதற்காக நாம் வழங்கியுள்ளதை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! அவர்களுக் காகக் கவலைப்படாதீர்! நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக (அல்குர்ஆன் 15:88)

(முஹம்மதே!) சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.  (அல்குர்ஆன் 20:131)

சாமான்யர்களையும் ஏழைகளையும் அடிமைகளையும் செல்வந்தர்களுக்காக, செல்வாக்குடையோருக்காக இழந்து விடக் கூடாது என்பது இவ்வசனங்கள் கூறும் சாராம்சம்.

இது எந்தச் சந்தர்ப்பத்தில் கூறப்பட்ட அறிவுரை என்பதைப் பின்வரும் நபிமொழியி-ருந்து அறிந்து கொள்ளலாம்.

நான், இப்னு மஸ்ஊத், ஹுதைல் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர், பிலால் மற்றும் இருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம்.  அவ்விருவரின் பெயரை நான் மறந்து விட்டேன்.  அப்போது இணை வைப்பவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸல்) அவர்களிடம் வந்தனர்.  "இவர்களை விட்டு விடுவீராக! இல்லாவிட்டால் எங்கள் விஷயத்தில் இவர்களுக்குத் துணிச்சல் வந்து விடும்'' என்று கூறினார்கள்.  அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் எது ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அது ஏற்பட்டு விட்டது.  அப்போது தான் இந்த (6:52) வசனம் அருளப்பட்டது என்று ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல் : முஸ்லிம் 2413

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களுக்கு நபிகளார் மீது நம்பிக்கை இருந்தது.  நாற்பது வருடங்களாக அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையைப் பார்த்த அம்மக்கள், இறைத்தூதர் என்று முஹம்மது பொய் சொல்கின்றார் என நினைக்கவில்லை.

அவர்களிடம் உள்ள முக்கியமான தயக்கம் காலா காலம் கட்டிக் காத்து வந்த சாதி அமைப்பை இவர் உடைத்தெறிகின்றார்.  உயர் குலத்தைச் சேர்ந்த இவர் இழிகுலத்தைச் சேர்ந்தவர்களைத் தம்மோடு சமமாக அமர வைக்கின்றார்.  இவரோடு நாமும் சேர்ந்தால் அனைவரையும் சமமாக ஆக்கி விடுவார் என்ற அச்சம் தான் நபிகள் நாயகத்தை ஏற்பதற்குப் பெரிய தடையாக அம்மக்களுக்கு இருந்தது.

எனவே தான் பலவீனர்களை விரட்டினால் அல்லது அவர்களுக்குத் தனி சபையையும் தங்களுக்குத் தனி சபையையும் ஏற்படுத்தினால் இஸ்லாத்தை ஏற்கத் தயார் என்று அவர்கள் கோரினார்கள்.

செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் இஸ்லாத்தில் சேர்வது பலம் சேர்க்கும் என்று நினைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதைச் சரி என நினைத்தார்கள்.  இஸ்லாத்தை ஏற்ற பின் அவர்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளலாம் என்பது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.  காரணம் எதுவாக இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு நினைத்தார்கள் என்பதை மேற்கண்ட முஸ்-ம் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இறைவனுக்கு அதில் உடன்பாடில்லை.  இஸ்லாத்தை ஏற்பதாக இருந்தால் அனைவரும் சமம் என்ற அடிப்படையையும் சேர்த்து ஏற்றாக வேண்டும். தமக்கு வசதியானதை மட்டும் ஏற்று, மற்றதை ஏற்க மறுப்பவர்களுக்காக வளையத் தேவையில்லை. அவர்கள் வரத் தேவையில்லை என்பது தான் அல்லாஹ்வின் நிலையாக இருந்தது.

எனவே தான் இவ்வசனங்களில் கடுமையாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான்.  ஏற்கனவே முழு இஸ்லாத்தை ஏற்றவர்களுடன் தான் இருக்க வேண்டுமே தவிர பாதி இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறுவோரின் செல்வம், செல்வாக்கு போன்றவற்றால் கவரப் பட்டுவிட வேண்டாம் என்று கண்டிக்கின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

கண் தெரியாத தோழருக்குக் கண்ணியம் கொடுத்த குர்ஆன்

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார்.  எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார்.  அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள்.  "நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?'' என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார்.  அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் 10 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.

ஆதாரம் : திர்மிதி - 3452, 3328, முஸ்னத் அபூயஃலா - 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

(அல்குர்ஆன் 80:1-10)

ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்ற பலவீனரை விட இஸ்லாத்தை ஏற்காதவர் பிரமுகர் என்பதற்காக நபிகள் நாயகம் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதால் எவ்வளவு கடுமையான சொற்களால் இறைவன் கண்டிக்கிறான் என்பதைக் காணும் போது இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக குலத்தால் உயர்வு கற்பித்தல் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் காரியம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த விஷயத்திற்காக மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளதால் தான் முஸ்-ம்கள் சாதி, குலம், நிறம், மொழி, இனம், தேசம் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பிப்பதைக் காண முடியவில்லை. எத்தனையோ சட்டங்கள் போட்டு ஒழிக்க முடியாத தீண்டாமையை அடியோடு இஸ்லாம் ஒழித்துக் கட்டியதற்கு இத்தகைய கடுமையான நிலைபாடே காரணமாக இருக்கின்றது.

சாதாரண மக்களுக்காக தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்பதால் தான் மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பித்தல் கூடாது என்பது முஸ்-ம்களின் இரத்தங்களில் இரண்டறக் கலந்து விட்டது.

தொண்டருக்கு ஸலாம் கூறும் தலைவர்

செல்வம், செல்வாக்கு மிக்கவர்களுக்காக ஏழைகளின் உணர்வைக் காயப்படுத்தும் அந்தக் காட்டுத்தன்மை, ஏழைகளின் இயக்கமான இஸ்லாமிய மார்க்கத்தை உலகுக்குக் கூற வந்த உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக அதை முளையிலேயே கிள்ளி எறிகின்றான். ஒரு தலைவர் தொண்டரிடத்தில் பார்க்க வேண்டியது இறையச்சம், மார்க்கப் பற்று ஆகிய அம்சங்களைத் தானே தவிர செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை அல்ல என்று வல்ல அல்லாஹ் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறான். அத்துடன் இன்னொரு விஷயத்தையும் தன் தூதரிடம் அழுத்தமாகப் பதிவு செய்கின்றான்.

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் "உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:54)

இன்று உலகில் தொண்டர்கள் தான் தலைவருக்கு முகமன், வாழ்த்துச் சொல்ல வேண்டும். மாணவர் தான் ஆசிரியருக்கு முகமன் சொல்ல வேண்டும். மனைவி தான் கணவனுக்கு முகமன் சொல்ல வேண்டும்.

இந்தக் கலாச்சாரத்தையெல்லாம் மாற்றியமைத்து தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தொண்டர்களுக்கு ஸலாம் சொல்லுமாறு இறைவன் கட்டளையிடுகின்றான்.

ஏழைகளுக்கு இந்த இஸ்லாமிய மார்க்கம் கொடுக்கும் மரியாதையைப் போன்று வேறு எந்த இயக்கமும் மரியாதை வழங்குமா? இந்த இயக்கத்தில் தீண்டாமை எள்ளளவு, எள் முனையளவாவது தலை காட்ட முடியுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆட்சியாளர்களும் அடிமைகளும்

தீண்டாமையை உருவாக்குவதில் ஆட்சியதிகாரம் ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. பொதுவாக ஒருவனுக்கு அதிகாரம் வந்தவுடனேயே அவன் மற்றவர்கள் தனக்குப் பணிய வேண்டும்; பாதத்தில் விழ வேண்டும் என்று நினைக்கத் துவங்கி விடுகின்றான்.

எனவே ஆள்பவன் கடவுள் நிலைக்கும், ஆளப்படுபவன் அடிமை நிலைக்கும் போய் விடுகின்றான். இதனால் ஆள்பவனின் குடும்பத்தார் உயர் ஜாதியினராகவும், ஆளப்படுபவனின் குடும்பத்தார் தாழ்ந்தவர்களாகவும் கருதப்படும் நிலை உருவாகி விடுகின்றது. இந்த வாசலையும் இஸ்லாம் அடைக்கின்றது.

சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக   இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 41:37)

படைப்பினங்கள் எதற்கும் சிரம் பணியக்கூடாது; அவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே சிரம் பணிய வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கட்டளையிடுகிறது.

தரை மட்டமாக்கப்படும் தனி மனித வழிபாடு

அரசனுக்கு சிரம் பணிதல் என்ன? அவன் வரும் போது எழுந்து கூட நிற்கக் கூடாது என்று கட்டளையிட்ட மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம்.

மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக் காரராகத் திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமக்காக மற்றவர்கள் எழுந்து நிற்பதைத் தடை செய்கின்றார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள்

நூல்: முஸ்லிம் 701

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை என்றாலும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அஹ்மது 12068, திர்மிதி 2678

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் அமருங்கள் என்றார். "தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்)       அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.

நூல்: அபூதாவூத் 4552 

தொண்டன் எப்படி இந்திரியத் துளியிலிருந்து படைக்கப் பட்டிருக்கின்றானோ அப்படித் தான் தலைவனும் படைக்கப்பட்டிருக்கிறான். எனவே ஒரு குடிமகன் தன்னுடைய ஆட்சியாளனிடம் ஒரு நொடிப் பொழுது கூட தனது தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்கின்ற தூய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான். உலகில் எந்தவொரு மார்க்கமும் சொல்லாத ஓர் உயரிய ஒப்பற்ற தன்மான உணர்வை இஸ்லாம் போதிக்கின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

இத்தகைய உயர்ந்த, அழுத்த மிக்க கொள்கைகளால் தான் தீண்டாமையைத் தன் பக்கம் அண்ட விடாமல் இஸ்லாம் தடுத்து வைத்துள்ளது. அதன் ஓரம்சமாக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நெறியை இஸ்லாம் வலுவாகப் பற்றிப் பிடித்து நிற்கின்றது.

மனிதர்கள் அனைவரும் கடவுளின் அடிமைகள்! அந்த அடிமைகளில் ஆள்வோருக்கு ஒரு சட்டம்; ஆளப்படுவோருக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தவில்லை. மனு தர்மத்தைப் போல் பிராமணர்களுக்கு ஒரு சட்டம்; சூத்திரர்களுக்கு ஒரு சட்டம் என்று வேறுபாடு காட்டவில்லை.

திருக்குர்ஆனின் சட்டத்தைச் செயல்படுத்திக் காட்டிய திருத்தூதர் (ஸல்) அவர்கள், சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதைக் கடுகளவு கூட அனுமதிக்கவில்லை.

குரைஷ் குலத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப் படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது.)

இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்?'' என்று கருதினார்கள். உஸாமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீரா?'' என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்.

"உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்'' என்று பிரகடனம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3475

உயர்குலத்தவர்களாக இருந்தால் அவர்களுக்குத் தனிச் சட்டம் இல்லை; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைத் தன் மகளை முன்னிறுத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கின்றார்கள்.

தேசியம், மொழி உணர்வுகள்

மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திடும் தீய சத்துக்களாக தேசப் பற்றும், மொழி வெறியும் திகழ்கின்றன.

இலங்கை பற்றி எரிவதற்கும், இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கும் இந்த மொழி வெறி தான் காரணம். நமது நாட்டிலேயே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த மொழி வெறி தான் காரணம்.

இந்தக் குறுகிய சிந்தனையை உள்ளத்திலிருந்து இஸ்லாம் கழற்றி விடுகின்றது. இஸ்லாத்தில் இருந்து கொண்டு யாராவது ஒருவர் மொழி, தேசியம் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டார் என்றால், அந்தச் சண்டையில் உயிர் துறப்பார் என்றால் அவர் முஸ்லிமாக மரணிக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

"(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)

நூல்: முஸ்லிம் 3440

இரு சமுதாயங்களுக்கு மத்தியில் ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் நியாயம், அநியாயம் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இவர் நம் இனத்தவர், இவர் நம் எதிரி இனத்தார் என்று பார்க்கக் கூடாது.

அப்படிப் பார்க்கின்ற அந்த உணர்வுக்குப் பெயர் தான் தேசியம்! மொழி உணர்வு! என் நாடு உயர்ந்தது, என் மொழி உயர்ந்தது என்ற சிந்தனையால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.  தீமைக்கு வித்திடும் இந்தக் குறுகிய சிந்தனையை, தேசியம் மற்றும் மொழி வெறியின் குரல்வளையைப் பிடித்து திருக்குர்ஆன் நெறித்து விடுகின்றது.

எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் உலகில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆதமின் மகன் தான்; அவனும் உன் சகோதரன் தான். எனவே நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒரு குலத்தார் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.

உங்களில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவதால் ஒருவர் உயர்ந்தவர் ஆகி விட மாட்டார்.

"மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!''

(நூல்: அஹ்மத் 22391)

என்று மொழி வெறி பிடித்த அரபியரைப் பார்த்து, உலக மக்கள் அனைவரும் கூடி நிற்கும் ஹஜ்ஜின் போது இந்தச் சகோதர முழக்கத்தை, தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள்.

தீண்டாமையைப் பெயரளவுக்கு இல்லாமல் செயலளவில் ஒழித்து காட்டியது திருக்குர்ஆனும், அதைப் போதிக்க வந்த திருத்தூதர் (ஸல்) அவர்களும் தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் தீண்டாமையை அல்ல, உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் பல்வேறு கோணங்களில் பரவிப் பீடித்துள்ள இந்தத் தீண்டாமை நோயைத் தீர்க்கும் மருந்து திருக்குர்ஆனிலும், அது கூறும் திருத்தூதரின் பாதையிலும் தான் உள்ளது.

அடிமை விலங்குகளை உடைத்தெறிய வந்தவர் தான் அந்தத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். இதோ திருக்குர்ஆன் கூறுகின்றது.


எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்ற வைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப் படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 7:157)

EGATHUVAM JAN 2007