இப்ராஹீம் நபியின் இரு துணைவியர்
பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானீ, பேராசிரியர், இஸ்லாமியக்
கல்லூரி
இப்ராஹீம் (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமயத்தில் பூமியில்
முஸ்லிம்களே இல்லை. மக்களை நல்வழிப்படுத்த இப்ராஹீம் நபியவர்கள் பெரும் உழைப்புச் செய்தார்கள்.
அதன் பரிசாக அவரது மனைவி சாரா முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். பிறகு லூத்
(அலை) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
சாரா (அலை) அவர்கள் இறையச்சம் நிறைந்த பெண். குழந்தையின்மை அவரது
வயோதிகம் வரை தொடர்ந்தது. இப்ராஹீம் (அலை) அவர்களோடு காலத்திற்கேற்ப ஊர் விட்டு ஊர்
மாறிச் சென்று வாழும் நிலை! இப்ராஹீம் (அலை) அவர்கள் எங்கு அழைத்துச் செல்கிறாரோ அங்கு
சாரா (அலை) அவர்களும் சென்று வாழ்ந்தார்கள்.
கொடுங்கோலனின் பிடியில்...
இப்ராஹீம் (அலை) அவர்களும் சாரா (அலை) அவர்களும் எகிப்தில் பயணம்
செய்த போது அங்கு கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அழகான பெண்களை அவன்
அபகரித்துக் கொள்வான் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கூறப்பட்டது.
புகாரியில் அபூஹுரைரா (ரலி) அவர்களின் மூலமாக இந்தச் சம்பவம்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும்
பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்க நலன் காக்கும்) விஷயத்தில் பேசியதாகும்.
அவை: 1. (மக்கள் அவரைத் திருவிழாவிற்கு அழைத்த போது) "நான் நோயுற்றிருக்கின்றேன்'' என்று கூறியதும், 2. (சிலைகளை
உடைத்து விட்டு,
மக்களிடம்) "இவற்றில் பெரிய சிலை தான் இதைச் செய்தது'' என்று கூறியதுமாகும்.
ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும், சாரா அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனது வழியாகச் சென்றார்கள்.
அப்போது அந்த மன்னனிடம், "இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்; அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள்'' என்று கூறப்பட்டது. உடனே இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச்
சொல்லி ஆளனுப்பினான். அவர்களிடம் சாராவைப் பற்றி, "இவர் யார்?'' என்று விசாரித்தான். இப்ராஹீம்
(அலை) அவர்கள்,
"என் சகோதரி'' என்று பதிலளித்தார்கள்.
பிறகு சாராவிடம் சென்று, "சாராவே!
பூமியின் மேல் உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கையுடையவர் எவரும் இல்லை. இவனோ
என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நீ என் சகோதரி என்று நான் அவனுக்குத் தெரிவித்து
விட்டேன். ஆகவே நீ என்னைப் பொய்யனாக்கி விடாதே!'' என்று
கூறினார்கள். அந்த மன்னன் சாரா அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா அவர்கள் அவனிடம்
சென்ற போது,
அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே அவன் தண்டிக்கப்பட்டான்.
"அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று சொன்னான். உடனே சாரா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க
அவன் விடுவிக்கப் பட்டான். பிறகு இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு
போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான்.
அப்போது "அல்லாஹ்விடம் எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய
மாட்டேன்'' என்று சொன்னான். உடனே சாரா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க
அவன் விடுவிக்கப்பட்டான். பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து "நீங்கள் என்னிடம்
ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைக் கொண்டு வந்துள்ளீர்கள்'' என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை சாரா அவர்களுக்குப் பணியாளாகக்
கொடுத்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது சாரா அவர்கள் வந்தார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, "என்ன
நடந்தது?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ் இறை நிராகரிப்பாளனின் அல்லது தீயவனின் சூழ்ச்சியை முடியடித்து
அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப் பெண்ணாக அளித்தான்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3358
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஸாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன்
ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர்.
"அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்'' என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. இப்ராஹீம் (அலை) அவர்களை மன்னன்
அழைத்து வரச் செய்து, "இப்ராஹீமே! உம்முடன் இருக்கும்
இந்தப் பெண் யார்?'' எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை)
அவர்கள், "என் சகோதரி'' என்று சொன்னார்கள்.
பிறகு ஸாராவிடம் திரும்பிய இப்ராஹீம் (அலை) அவர்கள், "நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான்
அவர்களிடம் கூறியிருக்கிறேன். உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறை நம்பிக்கை
கொண்டவர் யாரும் இல்லை'' என்று சொன்னார்கள்.
பிறகு ஸாராவை மன்னனிடத்தில் அனுப்பினார்கள். அவன் அவரை நோக்கி
எழுந்து வந்தான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு, "இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி
இருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்னை ஆட்கொள்ள விடாதே!'' என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பு நோயால்)
கால்களை உதைத்துக் கொண்டான்.
மன்னனின் இந்த நிலையைக் கண்ட ஸாரா, "இறைவா! இவன் இறந்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று
மக்கள் கூறுவர்''
என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்குத் திரும்பி, மீண்டும் ஸாராவை நெருங்கினான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுது
விட்டு, "இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி
இருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்னை ஆட்கொள்ள விடாதே!'' என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களை உதைத்துக்
கொண்டான்.
மன்னனின் இந்த நிலையைக் கண்ட ஸாரா, "இறைவா! இவன் இறந்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று
மக்கள் கூறுவர்''
என்று பிரார்த்தித்தார். இப்படி இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து
எழுந்து, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பி
இருக்கின்றீர்கள். எனவே இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு ஹாஜரைக்
கொடுத்து விடுங்கள்'' என்று மன்னன் சொன்னான். ஸாரா
இப்ராஹீம் (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, "அல்லாஹ்
இந்த இறை மறுப்பாளனை வீழ்த்தி, நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப்
பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2217 முஸ்லிம்
4371
அநதப் பணிப்பெண் தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் இன்னொரு
துணைவியார் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள்.
பிறகு இருவரையும் அழைத்துக் கொண்டு ஃபலஸ்தீன் பயணமானார்கள்.
கணவன் மனைவியாக வாழ்ந்து, கிழட்டுத் தன்மையை அடைந்த இப்ராஹீம்
நபியும் சாராவும் குழந்தையின்மையை நினைத்து விரக்தியின் உச்சக்கட்டத்தை அடைந்த போது
அல்லாஹ் அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட நாடினான்.
ஓரினச் சேர்க்கையை விரும்பிய லூத்தின் கூட்டத்தினரை அழிப்பதற்கு
அனுப்பிய அதே வானவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களிடமும் சாராவிடமும் அனுப்பி, அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்குமென்ற நற்செய்தியைச் சொல்லி
வரும்படி அல்லாஹ் கட்டளையிட்டான்.
கிழவியான பிறகு குழந்தை பெற முடியாது; இளமையானவர்கள் தான் பெற முடியும் என்ற மக்கள் கூற்றை அல்லாஹ்
பொய்யாக்கினான். மலக்குகள் அந்நிய மனிதர்கள் தோற்றத்தில் இப்ராஹீமைச் சந்திக்க வந்து
சலாம் உரைத்தனர். பதிலளித்த இப்ராஹீம் நபியவர்கள் வந்தவர்களில் எவரையும் விசாரித்துக்
கொள்ளாமல் விருந்துபசாரம் செய்தார்கள்.
நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம்
என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியை தாமதமின்றிக்
கொண்டு வந்தார். (அல்குர்ஆன் 11:69)
இப்ராஹீம் அவர்களைச் சாப்பிடும்படி வேண்டினார்கள். அவர்கள் மலக்குகளாயிருந்த
காரணத்தால் சாப்பிடாமல் இருந்தனர். இதைக் கண்ட இப்ராஹீம் அவர்கள் நமக்கு ஏதும் தீங்கு
செய்ய வந்திருப்பார்களோ அல்லது இவர்களை வரவேற்பதில் குறை ஏற்படுத்தி விட்டோமோ என்று
தனக்கு தானே கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட
போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர் களைப் பற்றி மனதுக்குள்
பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப் பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 11:70)
"அவ்வூரார் அநியாயக் காரர்களாக உள்ளனர்; அவ்வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம்'' என்றனர். (அல்குர்ஆன் 29:31)
லூத் கூட்டத்தாரின் அழிவுச் செய்தி கேட்ட இப்ராஹீம் லூத் (அலை)
அவர்களைப் பற்றியும், அவர்களை நமபியவர்களைப் பற்றியும்
கவலை அடைந்தார்கள். மனிதனின் இயற்கை நிலை மாறியதை எண்ணி வேதனைப் பட்டார்கள் ஆனால் சாராவோ
பாவிகளின் அழிவுச் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
சாராவின் மனம் குளிரும் ஆண் குழந்தை பிறப்புச் செய்தியை அறிவித்த
மலக்குகள் அக்குழந்தையின் பெயர் இஸ்ஹாக் என்றும்
அவருக்குப் பிறக்கும் குழந்தையின் பெயர் யஃகூப் என்றும் கூறினார்கள்.
அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு
இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப்
பற்றியும் நற்செய்தி கூறினோம். (அல்குர்ஆன் 11:71)
சாராவுக்கு சந்தோஷமான செய்தி என்றாலும் அதை மறைத்துக் கொண்டு, "இது எப்படி சாத்தியம்?'' எனக் கேட்டார்.
"இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்'' என்று
அவர் கூறினார். (அல்குர்ஆன் 11:72)
எனினும் மனிதர்களின் எஜமானனும் அனைத்து ஆதிக்கத்திற்கும் சொந்தகாரனுமான
அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்:
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன்
நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான்
நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண் களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை
மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 42:49.50)
உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, "நான் மலட்டுக் கிழவியாயிற்றே'' என்றார்.
அதற்கவர்கள் "அப்படித்தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன்'' என்றனர். (அல்குர்ஆன் 51:29,30)
இது வல்ல நாயன் ரப்புல் ஆலமீனுக்குப் பெரிய காரியமே இல்லை. அவன்
ஒன்றைச் செய்ய நாடினால் "ஆகு' என்றால் ஆகிவிடும்.
பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் பரிசாக இப்ராஹீம் சாரா தம்பதியினருக்கு, இஸ்ஹாக் என்ற குழந்தையை வழங்கி, தான் நினைத்தால் எதையும் சாதிக்க வல்லவன்; ஆக்கவும் அழிக்கவும் சக்தி மிக்கவன் என்பதை உலக மக்களுக்கு உணர்த்திக்
காட்டினான்.
தியாகக்தின் உருவமான இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவியான சாரா
(அலை) அவர்களும் சாடிக்கு ஏற்ற மூடியைப் போல பொறுமையின் சொரூபமாய் திகழ்ந்தார்கள்.
தள்ளாத வயதிலும் கணவனின் பொருத்தத்தைப் பேணி நல்ல மனையாளிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள்.
கணவனைப் பொருந்தி வாழ்ந்த காரணத்தால் தள்ளாத வயதிலும் அன்பு
செரிந்த வாழ்வை மேற்கொண்டதால் அல்லாஹ் அவர்களுக்கு மலடான நிலையிலும் குழந்தை இஸ்ஹாக்
(அலை) அவர்களை அருள் பாக்கியமாகத் தந்தான். மேலும் பின்பு வந்த அவர்களின் சந்ததியில்
யஃகூப் என்ற நபியையும் பின்னால் ஒரு பெரும் இறைத் தூதர்கள் சந்ததிக்கு அவர்களைத் தாயாகவும்
ஆக்கினான்.
இறைவனைப் பயந்து, இப்ராஹீம்
(அலை) அவர்களின் ஏகக்துவத்தை ஏற்று, அவர்களுடன்
இனிய முறையில் வாழ்ந்து வந்தார்கள்.
"அல்லாஹ்வையே (தவக்கல் வைத்துச்) சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்'' என அல்லாஹ் தன் குர்ஆனில் (65:3) கூறுகிறான். இந்த வகையில் சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீதே
முழுமையாக தவக்கல் வைத்த காரணத்தால் கொடுங்கோலனான அந்த அரசன் அவரை நெருங்க இயலவில்லை.
அதே நேரம் இப்ராஹீம் (அலை) அவர்களும் அல்லாஹ்விடம் தொழுது துஆச் செய்து கொண்டிருந்தார்கள்.
இதுவும் அல்லாஹ் கூறும் நடைமுறை தான்.
"நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்!
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' என அல்லாஹ்
தன் திருக்குர்ஆனில் (2:153) கூறுகிறான்.
நமக்கு ஏதேனும் துன்பம், துயரம், இன்னல், இடையூறுகள் ஏற்பட்டால் அல்லாஹ்வின்
பக்கமே திரும்ப வேண்டும்; அவனிடமே கேட்க வேண்டும்; உதவியும் தேட வேண்டும்.
குழந்தையில்லையா? இன்னபிற குறைகளா? எதுவாக இருந்தாலும் அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்
அல்லாத வேறு யாரிடமும் கேட்கக் கூடாது. வேறு யாரிடமும் எதனிடமும் நாட்டம் கூட வைத்திடக்
கூடாது. பொறுமையாக இருந்து அல்லாஹ்விடமே உதவி தேட வேண்டும்.
சாரா அவர்களுக்குக் குழந்தை இல்லாத வேளையிலும் கணவனைக் குத்திப்
பேசவோ அல்லாஹ்வை பழித்துப் பேசவோ இல்லை. அல்லாஹ் அல்லாத யாரிடமும் கேட்கவுமில்லை. அல்லாஹ்வின்
அருள் வாக்கான,
"வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே
உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான்.
தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை
மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 42:49,50)
என்ற சிந்தை அவர்களிடமிருந்தது.
அல்லாஹ் நமக்குத் தராத அருட்கொடையைப் பற்றி கவலைப் படாமல் பொறுமையுடன்
இருக்கும் போது அல்லாஹ் அறியாத புறத்திலிருந்து பல அருள் வளங்களை வாரி வாரி வழங்குவான்.
மலடியான, கிழவியான சாராவுக்கு அந்தப் பருவத்திலும் குழந்தையைக் கொடுத்து
பனூ இஸ்ராயீல்களில் உள்ள நபிமார்களுக்குத் தாயாய் ஆகும் பேற்றை வழங்கினான் அல்லாஹ்!
அன்னை ஹாஜர் (அலை)
இப்ராஹீம் (அலை) அவர்கள் இராக்கிலிருந்து எகிப்துவிற்கு பயணமான
போது, சாராவின் அழகைப் பார்த்து வியந்த எகிப்து மன்னன் சாராவை அடைய
விரைந்தான். அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்து அங்கிருந்து வெளியேற்றி வேறொரு பகுதியில்
வாழச் செய்து இப்ராஹீமுக்கு ஹாஜர் என்ற பெண்ணையும் அன்பளிப்பாகக் கிடைக்கச் செய்தான்
என்ற விபரங்களைக் கண்டோம்.
அந்த ஹாஜர் (அலை) அவர்களோடு இணைந்து வாழ்ந்த வாழ்வில் தான் நபி
இஸ்மாயீல் பிறக்கப் போவதாக இறைவன் நற்செய்தி சொன்னான். இனிதே குழந்தையும் பிறந்தது.
மகிழ்ச்சியும் பிறந்தது; ஆனால் நீடிக்கவில்லை.
காரணம், அங்கிருந்து தன் மனைவி ஹாஜர்
அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அழைத்துக் கொண்டு பாரஹான் பெருவெளியில் (தற்பொழுது
கஃபா இருக்கும் இடத்தில்) கொண்டு விடச் சொல்லிக்
கட்டளையிட்டான் அல்லாஹ்!
அவ்வாறு பாலைவனத்தில் விட்டு விட்டு, மீண்டும் ஃபலஸ்தீன் திரும்பிவிடும் படி கட்டளை வந்தது.
தன் உணர்வுகளை வென்றிட நபி இப்ராஹீம் (அலை) கொஞ்சமும் தயங்கவில்லை.
இருவரையும் அழைத்துக் கொண்டு செடி, கொடியில்லாத
வறண்ட பாலைப் பகுதியை நோக்கிப் பயணமானார்கள்.
யார் பார்வையும் படாத ஓரிடத்தில் அவர்களை விட்டு விட்டு உறுதிப்பாட்டுடனும் உள்ளச்சத்துடனும் இறைவனிடத்தில்
பிரார்த்தித்தார்கள்.
"இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!''
இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப்
பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன்.
எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக!
இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக
எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்திய வற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.
(அல்குர்ஆன் 14:35-38)
இவ்வாறு இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜரா
அம்மையார் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது இருவரையும் கொண்டு வந்து
அவர்களை கஅபாவின் மேற்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின்
அருகே வைத்து விட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர்
கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே
பேரிச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர் பை ஒன்றையும் வைத்தார்கள்.
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அப்போது
அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் பின் தொடர்ந்து வந்து, "இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில்
எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள்.
ஆகவே, அவர்களிடம் ஹாஜரா (அலை) அவர்கள், "அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?'' என்று கேட்க, அவர்கள் ஆம்
என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், "அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்'' என்று சொல்லி விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது) நடந்து சென்று மலைக்குன்றின்
அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்த போது தம் இரு கரங்களையும்
உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்.
"எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன்.
எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக!
இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக'' என்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14:37)
இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்குப்
பாலூட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள்.
தண்ணீர்ப் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்து விட்ட போது அவரும் தாகத்திற்குள்ளானார். அவருடைய
மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை... அல்லது
தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை... அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப்
பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள்.
பூமியில் தமக்கு மிக அண்மையில் உள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள்.
அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா? என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள்.
எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே, ஸஃபாவிலிருந்து
இறங்கி விட்டார்கள்.
இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தன் மேலங்கியை உயர்த்திக்
கொண்டு ஓடும் ஒரு மனிதனைப்போன்று ஓடிச் சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். பிறகு மர்வா
மலைக்குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டர்கள்.
எவரையும் காணவில்லை. இவ்வாறு ஏழு முறை செய்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "இதுதான்
(இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற ஸஃயு (தொங்கோட்டம்)
ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்ட போது ஒரு குரலைக்
கேட்டார்கள். உடனே, சும்மாயிரு என்று தமக்கே கூறிக்
கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள்.
அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, "நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும்
இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)'' என்று சொன்னார்கள்.
அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம்
(கிணற்றின்) அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார்.
(அல்லது தமது இறக்கையினால் தோண்டினார்கள் என்று அறிவிப்பாளர் சொல்லி இருக்கலாம்) அதன்
விளைவாக தண்ணீர் வெளிப்பட்டது.
உடனே, ஹாஜரா (அலை) அவர்கள் அதை ஒரு
தடாகம் போல் (கையில்) அமைக்கலானார்கள். அதை தம் கையால் இப்படி ("ஓடி விடாதே, நில்' என்று சைகை செய்து) சொன்னார்கள்.
அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள்.
அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடி இருந்தது.
"அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்குக்
கருணை புரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டு விட்டிருந்தால் அல்லது அந்தத் தண்ணீரிலிருந்து
அள்ளியிருக்காவிட்டால் ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் ஊற்றாக மாறி விட்டிருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் அறிவித்தார்கள்.
பிறகு அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் தாமும் அருந்தி, தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், "நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய் விடுவீர்கள் என்று
அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய
தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் ஆலயம் உள்ளது. அல்லாஹ்
தன்னைச் சார்ந்தோரைக் கைவிட மாட்டான்'' என்று சொன்னார்.
இறையில்லமான கஅபா, மேட்டைப் போன்று பூமியிலிருந்து
உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் (வழந்து)
சென்று விடும். இவ்வாறே அன்னை ஹாஜிரா (அலை) அவர்கள் இருந்தார்கள்.
இந்நிலையில் ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் அவர்களைக் கடந்து
சென்றனர். அவர்கள் கதா எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில்
தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் ஒரு வகைப் பறவையைக் கண்டு, "இந்தப் பறவை தண்ணீரின் மீது தான் வட்டமடித்துக் கொண்டிருக்க
வேண்டும். நாம் இந்தப் பள்ளத்தாக்கை முன்பே அறிந்திருக்கிறோம். அப்போது இதில் தண்ணீர்
இருந்ததில்லையே''
என்று பேசிக் கொண்டார்கள்.
பிறகு அவர்கள் ஒரு தூதரை அல்லது இரு தூதர்களை செய்தி சேகரித்து
வர அனுப்பினார்கள். அவர்கள் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் திரும்பிச்
சென்று (தம் குலத்தாரிடம்) தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள்.
உடனே அக்குலத்தார், இஸ்மாயீலின்
அன்னை தண்ணீருக்கு அருகே இருக்க, முன்னே சென்று, "நாங்கள் உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதி
அளிப்பீர்களா?''
என்று கேட்டார்கள். (ஹாஜரா) அவர்கள், "ஆம்! ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது'' என்று சம்மதித்தார்.
அந்தச் சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயார் மக்களுடன் கலந்து வாழ்வதை
விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது.
ஆகவே அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும்
சொல்லியனுப்ப அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச்
சேர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றி விட்டன. குழந்தை இஸ்மாயீல் வாலிபரானார். ஜுர்ஹும்
குலத்தாரிடமிருந்து அவர் அரபு மொழியைக் கற்றுக் கொண்டார்.
அவர் வாலிபரான போது அவர்களுக்குப் பிரியமானவராகவும், மிக விருப்பமானவராகவும் ஆகி விட்டார். பருவ வயதை அடைந்த போது
அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார்
(ஹாஜர்) இறந்து விட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம்
(அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (மனைவி, மகன் ஆகிய)வர்களின்
நிலையை அறிந்து கொள்வதற்காக வந்தார்கள்...
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3364
இது தான் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் குறித்து புகாரியில் இடம்
பெறும் செய்தியாகும். அவர்களின் இந்தச் சோதனையான வாழ்க்கையை நினைவு கூரும் விதமாக இன்று
ஹஜ்ஜின் வணக்கங்கள் அமைந்துள்ளன.
அவர்களின் தாகம் தீர்ப்பதற்காகப் பொங்கிய நீரூற்றான ஸம்ஸம் நீர்
இன்றளவும் அல்லாஹ்வின் அற்புதத்தைப் பறைசாற்றும் அத்தாட்சியாகத் திகழ்கின்றது.
பால்குடி மறவாத பாலகனுடன், தன்னந்தனியாகப்
பாலைவனத்தில் அன்னை ஹாஜரா அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்கள் விட்டுச் சென்ற போது, அவர்கள் கேட்ட வார்த்தைகளை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
"அல்லாஹ் தான் இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டானா?'' என்பது தான் அந்தக் கேள்வி.
அதற்கு இப்ராஹீம் நபியவர்கள் ஆம் என்றதும் "அப்படியென்றால்
அவன் எங்களை கைவிடமாட்டான்'' என்று அன்னை ஹாஜரா அம்மையார்
கூறுகின்றார்கள்.
இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்பதில் அவர்களுக்கு இருந்த
உறுதியான நம்பிக்கை நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது. இந்தச் சோதனையில் வெற்றி பெற்றதற்குப்
பரிசாகத் தான்,
இன்றளவும் உலகம் உள்ள வரையிலும் அவர்களது தியாகத்தை மக்கள் நினைவு
கூருமாறு இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.
ஏகத்துவ ஏந்தல் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போன்றே அவர்களுக்கு
வாய்த்த இரு துணைவியரும் ஈமானிய உறுதி கொண்டவர்களாய் திகழ்ந்துள்ளனர் என்பதை இந்தச்
சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
எந்தச் சோதனை வந்தாலும், இறைவனிடமே
உதவி தேட வேண்டும் என்ற உறுதியையும், அவ்வாறு உறுதியாக
இருக்கும் போது இறைவன் நமக்கு நிச்சயம் உதவுவான் என்ற படிப்பினையையும் இந்த இரு பெண்மணிகளின்
வாழ்க்கையிலிருந்து நாம் பெற முடிகின்றது.
அல்லாஹ் அது போன்ற ஈமானிய உறுதி கொண்டவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக!
EGATHUVAM JAN 2007