Apr 2, 2017

நாங்கள் பின்பற்றுவது தூதரைத் தான்! யூதரையல்ல!

நாங்கள் பின்பற்றுவது தூதரைத் தான்! யூதரையல்ல!

பிறை விஷயத்தில் கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு நடைபெறுவதைக் கண்டித்து, கடந்த அக்டோபர் மாத இதழில் நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக, பிறையை முன் கூட்டியே கணித்துத் தீர்மானிப்பவர்கள் தெளிவாக யூத, கிறித்தவ கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றார்கள் என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கியிருந்தோம்.

சவூதிய சம்பளத்திற்காகப் பிறையின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் கூட்டத்தின் சாயம் வெளுத்து விட்டதால் அதைக் கண்டு பொறுக்க முடியாமல் மேற்படி கூட்டத்தினர் தங்கள் ஜும்ஆ மேடைகளில் நம்மை திட்டித் தீர்த்துள்ளனர்.

இந்த யூதக் கலாச்சாரக் கூட்டம் தங்களின் நிலைபாட்டிற்குக் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டி விளக்குவதை விட்டு விட்டு நம்மை திட்டித் தீர்ப்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

"பி.ஜே.(டி.என்.டி.ஜே.)வும் நோன்புப் பெருநாளும்'' என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளனர். இந்தப் பிரசுரத்திலும் தங்கள் நிலைபாட்டிற்கு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. எனவே இவர்கள் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகின்றார்கள் என்பது தெளிவாகி விட்டது.

இந்தப் பிரசுரத்தில் நம்மை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டுள்ளனர்.

"அந்தந்த பகுதிகளில் பிறை பார்த்து பெருநாள் கொண்டாட வேண்டும் என்று சொன்ன தவ்ஹீது ஜமாஅத்தினரே! தற்போது எந்த ஊரில் பிறை பார்த்ததன் அடிப்படையில் 24.10.06 அன்று பெருநாள் கொண்டாடினீர்கள்?''

இது தான் அந்தக் கேள்வி.

இதையே ஐந்தாகப் பிரித்து, ஐந்து கேள்விகளைப் போல் கேட்டுள்ளனர்.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள்... என்று தவ்ஹீது ஜமாஅத் தனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை. அல்லது இவர்களைப் போல் சவூதி அபிமானத்தின் அடிப்படையிலும் சொல்லவில்லை.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தான் தவ்ஹீது ஜமாஅத் கூறியது என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்றுப்படி தத்தமது பகுதிகளில் பிறை பார்க்க வேண்டும் என்பதைத் தான் அன்றிலிருந்து இன்று வரை கூறி வருகின்றோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

24.10.2006 அன்று பெருநாள் கொண்டாடியதும் இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்துத் தான் கொண்டாடினோம்.

சென்னை, மதுரை, கோவை போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிறை பார்க்கப்பட்டதால் அதை அடிப்படையாக வைத்துத் தான் அன்றைய தினம் பெருநாள் கொண்டாடினோம்.

ஆனால் இந்த யூதக் கலாச்சாரக் கூட்டமோ பிறையைப் பார்க்காமல் பெருநாள் கொண்டாடியதைப் போல் பிரசுரம் வெளியிட்டு மக்களை திசை திருப்பியுள்ளது.

பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும், பிறை பார்த்துப் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற ஹதீஸை நாம் எடுத்துக் காட்டிய போது, அது அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தை என்று கூட பார்க்காமல் கேலி செய்தவர்கள் தான் இவர்கள்.

பிறை பார்க்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டுமாபிறையைப் பார்க்காதவர்கள் நோன்பு வைக்கக் கூடாதா?

15 நாட்களுக்குப் பிறை தெரியா விட்டால் 15 நாள் கழித்துத் தான் பெருநாள் கொண்டாட வேண்டுமா? என்றெல்லாம் கேலி செய்தார்கள்.

அதே நடைமுறையைத் தான் இப்போதும் கையாண்டுள்ளார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது தெரிந்திருந்தும் மன முரண்டாக இந்தப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளார்கள்.

இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள்?

அந்தந்த பகுதிகளில் பிறை பார்க்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் பார்த்திருக்க வேண்டும். ஆனால் சில குறிப்பிட்ட பகுதிகளில் பார்த்து விட்டு தமிழகம் முழுவதும் எப்படிப் பெருநாள் கொண்டாடலாம்? இது தான் இவர்களது கேள்வி.

"பிறை ஓர் ஆய்வு'' என்ற தலைப்பில் 1999ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் அல்முபீன் சிறப்பிதழ் வெளியிட்டோம். பிறை குறித்த எல்லா கருத்துக்களையும் பரிசீலித்து, எல்லா விதமான ஆதாரங்களையும் ஆய்வு செய்து அந்த இதழ் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் இன்று வரை நாம் செயல்பட்டு வருகின்றோம். இவர்கள் செய்வதைப் போன்று பிறை பார்த்தல், உலகத் தகவல், சவூதியைப் பின்பற்றுதல், அறிவியல் கணிப்பு என்று நேரத்திற்கு ஒன்றைச் சொல்லி மக்களைக் குழப்பவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பிறை விஷயத்தில் தூதர் வழியைத் தான் நாங்கள் பின்பற்றுகின்றோம்; இவர்களைப் போல் யூதர்களின் வழியை அல்ல!

இந்த யூதக் கலாச்சாரக் கூட்டத்தினரின் பிரசுரத்தில் எழுப்பப் பட்டுள்ள கேள்விக்கும் 1999ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த அல்முபீன் இதழிலேயே விளக்கம் அளித்துள்ளோம். அதை அப்படியே இங்கு தருகின்றோம்.

நாமே தீர்மானிக்கலாமா?

பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.

"நீங்கள் நோன்பு என்று முடிவு செய்யும் நாளில் தான் நோன்பு. நோன்புப் பெருநாள் என்று நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் நோன்புப் பெருநாள். ஹஜ்ஜுப் பெருநாள் என்று நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 633

நாமே தீர்மானிக்கலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. தீர்மானிக்கும் பொறுப்பை நம்மிடமே ஒப்படைத்து உள்ளதால் நமது விருப்பம் போல் தீர்மானிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.

இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மூலம் நாம் தீர்மானிப்பதற்கு எதையும் நபி (ஸல்) அவர்கள் மீதம் வைக்கவில்லை. எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள்.

சவூதியில் காணப்படும் பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று நாம் தீர்மானித்தால் அந்தத் தீர்மானம் குப்பைக் கூடைக்குத் தான் போக வேண்டும். ஏனெனில் ஒரே நாளில் அனைவருக்கும் தலைப்பிறை ஏற்படாது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

28 நோன்பு முடிந்தவுடன் தலைப்பிறை என்று தீர்மானிக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. அதுபோல் முப்பது முடிந்த பிறகும் அந்த மாதம் நீடிக்கிறது என்று தீர்மானிக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. ஏனெனில் மாதம் 29 அல்லது 30 நாட்கள் என்பது தெளிவான ஹதீஸ் மூலம் முடிவு செய்யப்பட்டு விட்டது.

கண்ணால் பிறையைக் கண்ட பிறகு, அல்லது காண்பதற்கு ஏற்ற நாளில் கண்டவர் சாட்சி கூறிய பிறகு அதை நம் வசதிப்படி மறுக்க முடியாது. தக்க சாட்சிகள் கூறும் போதும், நாமே கண்ணால் காணும் போதும் ஏற்க வேண்டும் என்று மார்க்கத்தில் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை மீறி நாம் தீர்மானிக்க முடியாது.

இதுபோல் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டவை தவிர நாம் தீர்மானிக்க அனுமதிக்கப்பட்ட அம்சமும் இருக்கின்றது.

இதை நாமே ஏற்றுக் கொண்டிருக்கின்ற மற்றொரு சட்டத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு கிலோ மீட்டர் பயணம் செய்தால் நான்கு ரக்அத்களை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழலாம் என்று மார்க்கம் அனுமதித்துள்ளது.

காயல்பட்டணத்திலிருந்து ஒருவர் தூத்துக்குடிக்குப் புறப்பட்டு வருகின்றார். இவர் கஸர் தொழலாம். ஆனால் இதே அளவு தூரம் ஒருவர் சென்னையில் பயணம் செய்கின்றார். இவர் கஸர் தொழ மாட்டார். ஏனெனில் ஊருக்குள் தான் இவர் சுற்றுகின்றார். பயணம் என்றால் ஊரை விட்டுத் தாண்ட வேண்டும் என்று கூறுவோம்.

ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான் தீர்மானம் செய்கிறோம்.

(பிறை விஷயத்திலும்) இது போன்ற தீர்மானம் செய்வது மட்டுமே நம்மிடம் ஒப்படைக்கப் பட்டது.

எந்தக் கிராமத்தில் தெரியும் பிறை நமது ஊருக்குத் தெரியும் வாய்ப்புள்ளது? எந்தக் கிராமங்களில் காணப்பட்டால் அது நம்மைக் கட்டுப்படுத்தும்? என்பன போன்ற விபரங்களை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஊரையும் அதனுள் கட்டுப்படும் கிராமங்கள் பட்டியலையும் அன்றைக்கே கூற இயலாது.

இந்த ஒரு விஷயத்தை மட்டும் நாம் தான் முடிவு செய்ய வேண்டும்?

அந்த ஊரில் பார்த்ததாகக் கூறுகிறார்கள்; இதை ஏற்கலாம். இந்த ஊரில் பார்த்ததாகக் கூறுகிறார்கள்; இதை ஏற்கக் கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை மட்டும் தான் மிச்சமாக உள்ளது.

மற்ற அனைத்தும் நபியவர்களால் முடிவு செய்யப்பட்டு விட்டது.

அல்முபீன், நவம்பர் & டிசம்பர் 1999

மேலே நாம் கூறியுள்ள கருத்துக்களை நன்றாகப் படித்துப் பாருங்கள்.

நி         தலைப்பிறையைப் பார்க்காமல் அறிவியல் அடிப்படையில் கணித்து நோன்பு மற்றும் பெருநாட்களைத் தீர்மானிக்கக் கூடாது.

நி         சவூதியைப் பின்பற்றி நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்யக் கூடாது.

நி         உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்ட தகவலை வைத்து உலகம் முழுவதும் நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்யக் கூடாது.

நி         அந்தந்த பகுதியில் பிறை பார்த்து நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்ய வேண்டும்.

நி         ஓர் ஊரில் பார்க்கப்பட்ட பிறை தங்களது பகுதியைக் கட்டுப்படுத்துமா? என்பதை அந்தப் பகுதி மக்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

இது தான் பிறை குறித்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து அல்முபீன் இதழில் நாம் வெளியிட்ட கருத்துக்களின் சாராம்சம்.

இதன் அடிப்படையில் தான் இன்றும் செயல்பட்டு வருகின்றோம். அதனால் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திலிருந்து, கிளைகள் முழுவதும் குறிப்பிட்ட நாளில் பெருநாள் கொண்டாடச் சொல்லி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தலைமையகத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட மக்களிடமும், உங்கள் பகுதியில் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த யூதக் கலாச்சாரக் கூட்டமோ பிறை விஷயத்தில் ஆரம்பத்திலிருந்து பல்வேறு குழப்பங்களைச் செய்து வருகின்றது.

உலகின் எந்தப் பகுதியில் பிறை பார்க்கப்பட்ட தகவல் வந்தாலும் அதை ஏற்று நோன்பு வைக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அதை அவர்களே செயல்படுத்தவில்லை.

லிபியாவில் பிறை பார்த்ததாக ஏர்வாடியில் இவர்களது கிளை நிர்வாகிகளே 26.12.2000 அன்று பெருநாள் அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் சவூதியைப் பின்பற்றி அடுத்த நாள் பெருநாள் கொண்டாடினார்கள்.

அதுவரை அடுத்தடுத்த இரண்டு நாட்கள் மட்டுமே தமிழகத்தில் பெருநாள் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் பாவிகள் செய்த குழப்பத்தின் காரணமாக நாகர் கோவிலில் ஒரு நாள், ஏர்வாடியில் ஒரு நாள், கடையநல்லூரில் ஒரு நாள் என வெவ்வேறு நாட்களில் மூன்று பெருநாள்கள் கொண்டாடப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறு மூன்று தனித்தனி நாட்களில் பெருநாள் கொண்டாடப்பட்டது இவர்களால் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தான். இவர்கள் தான் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டு வரப் போகின்றார்களாம்.

அதுபோன்று கடந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாளிலும் இதே குழப்பத்தைச் செய்தார்கள்.

"20.01.05 வியாழனன்று ஹாஜிகள் அரபா மைதானத்தில் ஒன்று கூடுவதால் அன்றைய தினம் ஹாஜிகள் அல்லாத முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும். அதை அடுத்த நாளான 21.01.05 அன்று வெள்ளியன்று ஹஜ்ஜுப் பெருநாள் அனுஷ்டிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது''

என்று தங்கள் கிளைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி விட்டு,

பெருநாளைக்கு நான்கு நாட்களுக்கு முன்னால், "19ந்தேதி அரஃபாவில் கூடுவதால் 20ந் தேதி எல்லா கிளைகளிலும் பெருநாள் அனுசரிக்க வேண்டும்'' என்று 17.01.05 அன்று தினமணியில் அறிக்கை வெளியிட்டார்கள்.

தற்போது எல்லாவற்றையும் தாண்டி, 23.09.06 அன்று நோன்பு என்பதை 06.09.06 அன்றே அறிக்கை வெளியிட்டதன் மூலம் யூத, கிறித்தவ கலாச்சாரத்தைப் பின்பற்றி கணிப்பில் இறங்கியுள்ளனர்.

இப்படி பிறை விஷயத்தில் குர்ஆன் ஹதீஸைப் புறம் தள்ளி விட்டு, முன்னுக்குப் பின் முரணாக, தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்பி வருபவர்கள் இந்த யூதக் கலாச்சாரக் கூட்டம் தான். இவர்களை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

முஸ்லிம் என்ற பெயரை வைத்துக் கொண்டு இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களில் ஈடுபடும் பெயர் தாங்கிகளைப் போன்று, குர்ஆன் ஹதீஸ் இயக்கம் என்ற பெயரை வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாக இவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள் என்பதற்கு இவர்களின் பிறைக் குழப்பமே போதுமான சான்றாகும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.


(அல்குர்ஆன்  33:36)

EGATHUVAM NOV 2006