பரேலவிகளின் கொள்கைகளில் சில...
1. அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்பதைப் போல்
அவ்லியாக்களிடமும் கேட்கலாம்.
2. இறைநேசர்களின் அடக்கத் தலங்களில் ஸஜ்தா
(சிர வணக்கம்) செய்யலாம்.
3. நபி (ஸல்) அவர்கள் எல்லா இடங்களிலும்
ஆஜராகின்றார்கள். அனைத்தையும் பார்க்கிறார்கள். (இறைவனுடன் பொருத்திப் பார்க்கும்
அபாயகரமான நம்பிக்கை இது)
4. சில இறைநேசர்களுக்கும் கூட இவ்வாறு
ஆஜராகும் தன்மைகள் உள்ளன.
5. மறைவான ஞானம் (இல்முல் கைப்)
நபியவர்களுக்கும் வலிமார்களுக்கும் உண்டு.
6. தர்ஹாக்களில் சந்தனக்கூடு, கொடியேற்றுதல், விளக்கேற்றுதல் போன்றவை நன்மை தரும்
செயல்களாகும்.
7. ஷைக் - ஞான குருவின் காலில் விழலாம்.
ஷைக் பெண்களின் கை பிடித்து பைஅத் - ஒப்பந்தம் செய்யலாம்.
பரீட்சையில்
தோற்கப் போகும் பரேலவிகள்
சாதாரணமாக
உலகத்தில் ஒரு நிறுவனத்தில் ஒரு பணியாளரைச் சேர்க்கும் போது அந்நிறுவனம் அவருக்கு
ஒரு பரீட்சை வைக்கின்றது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் அவரைப் பணியில்
சேர்த்துக் கொள்கின்றது. தேர்வில் தோற்று விட்டால் அவரை ஒதுக்கித் தள்ளி
விடுகின்றது.
நிரந்தரமில்லாத
இந்த நிறுவனத்திற்கு இப்படி ஒரு பரீட்சை எனில், நீடித்த
வாழ்வை அளிக்கும் நிரந்தர சுவனத்திற்கு அல்லாஹ் பரீட்சை வைக்காமல் விடுவானா? ஒரு போதும் விட மாட்டான். ஆனால் அந்தப்
பரீட்சைக்கான தயாரிப்பை திருக்குர்ஆன் நமக்கு இந்த உலகத்தில் தந்து விடுகின்றது.
ரமளான்
மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின்
வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான் கள் விலங்கிடப்படுகின்றார்கள் என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்:
புகாரி 1899
ரமளான் மாதத்தை
குர்ஆன் இறங்கியதற்காக அல்லாஹ் சிறப்பித்து உள்ளான். அந்தச் சிறப்பையொட்டி அல்லாஹ்
சுவனத்தின் வாசல்களைத் திறந்து வைத்திருக்கின்றான். இப்படிப் பட்ட சிறப்பைக் கொண்ட
திருக் குர்ஆன், சுவனத்திற்கு
வருவோருக்கு அல்லாஹ் வைக்கும் பரீட்சையின் விடையை சொல்லாமல் போய் விடுமா?
இந்தப்
பரீட்சைக்கான வினாவையும் அதற்கு மார்க்கம் கூறும் விடையையும் இப்போது பார்ப்போம்.
"அல்லாஹ்வின்
தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், "(மேக
மூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க
நீங்கள் (முண்டியடித்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா?'' என்று கேட்டார்கள். நாங்கள், "இல்லை'' என்று பதிலளித்தோம்.
"இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள்
இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்'' என்று கூறி விட்டு (பின்வருமாறு)
விளக்கினார்கள்.
(மறுமை
நாளில்) அழைப்பாளர் ஒருவர், "ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக்
கொண்டிருந்த வர்களை பின்தொடர்ந்து செல்லட்டும்'' என்று அழைப்பு விடுப்பார். அப்போது
சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவை களுடனும், சிலை
வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில்
அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது
(அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்கள் செய்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள்
மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொண்டு வரப்பட்டு கானலைப் போன்று
அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், "நீங்கள் எதை
வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று
கேட்கப்படும். அதற்கு அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைரை
வணங்கிக் கொண்டிருந்தோம்'' என்று
பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், "நீங்கள்
பொய் உரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ, மக்களோ
இருக்கவில்லை'' என்று
சொல்லப் படும். பிறகு அவர்களிடம், "இப்போது நீங்கள் என்ன விரும்புகின்றீர்கள்?'' என்று வினவப்படும். அதற்கவர்கள், "எங்களுக்கு
(குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!'' என்று கேட்பார்கள். அப்போது (அவர்களிடம்
கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு) "குடியுங்கள்'' என்று கூறப்படும். (அதைக் குடிக்க
முனையும் போது) அவர்கள் நரகத்தில் விழுந்து விடுவார்கள். பின்னர் கிறித்தவர்களிடம், "நீங்கள் எதை
வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று
கேட்கப்படும். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை நாங்கள்
வணங்கிக் கொண்டிருந்தோம்'' என்று
பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், "நீங்கள்
பொய் உரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ, மக்களோ
இருக்கவில்லை'' என்று
சொல்லப் படும். பிறகு அவர்களிடம், "இப்போது நீங்கள் என்ன விரும்புகின்றீர்கள்?'' என்று வினவப்படும். அதற்கவர்கள், "நீ
எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே விரும்புகிறோம்'' என்று பதிலளிப்பார்கள். அப்போது
(அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு) "குடியுங்கள்'' என்று கூறப்படும். (அதைக் குடிக்க
முனையும் போது) அவர்கள் நரகத்தில் விழுந்து விடுவார்கள்.
இறுதியில்
அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்த நல்லோர் அல்லது (அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்த)
தீயோர் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம், "மக்கள்
(அனைவரும் தத்தமது தெய்வங்களின் பின்னால்) சென்று விட்டார்களே! நீங்கள் மட்டும்
ஏன் இங்கேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், "(உலகத்தில்)
நாங்கள் இந்த மக்களிடம் அதிக தேவை உள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி
உறவாடாமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். இங்கு ஓர் அழைப்பாளர், "ஒவ்வொரு
சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து கொள்ளட்டும்' என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள்
(வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்'' என்று கூறுவார்கள்.
அப்போது
சர்வ வல்லமை படைத்தவன், அவனைப்
பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் வந்து, "நானே உங்கள்
இறைவன்''என்று கூறுவான். (உடனே அவர்கள், "உன்னிடமிருந்து
அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள்
இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் நாங்கள் அவனை அறிந்து கொள்வோம்'' என்று கூறுவர். அப்போது இறைவன் அவர்கள்
அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து, "நானே உங்கள்
இறைவன்'' என்பான்.)
அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், "நீயே எங்கள் இறைவன்'' என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம்
இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, "அவனை இனம்
கண்டு கொள்ள ஏதேனும் அடையாளம் உண்டா?'' என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறை
நம்பிக்கையாளர்கள், "கால் (பாதம்) தான்'' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தனது
காலை வெளிப்படுத்துவான். இறை நம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம்
(ஸஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம்
பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள். அவர்கள்
சிர வணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால் அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு)
ஒரே பலகையைப் போன்று மாறி விடும். (அவர்களால் சிர வணக்கம் செய்ய முடியாது). பிறகு
பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின்
மேலே வைக்கப்படும்.
(இவ்வாறு
நபியவர்கள் சொன்ன போது) நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அது என்ன பாலம்?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அது
(கால்கள்) வழுக்குமிடம், சறுக்குமிடம்.
அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள்
வளைந்திருக்கும். நஜ்த் பகுதியில் முளைக்கும் அவை கருவேல மர முற்கள் எனப்படும்'' என்று சொல்லி விட்டு, தொடர்ந்து கூறினார்கள்.
இறை
நம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை, கண்
சிமிட்டலைப் போன்றும், மின்னலைப்
போன்றும், காற்றைப்
போன்றும், பந்தயக்
குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக்
காயமும் இன்றி தப்பி விடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு.
மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள்
கடுமையாக இழுத்துச் செல்லப் படுவார்.
பின்னர் இறை
நம்பிக்கை யாளர்கள், தாம்
தப்பித்து விட்டோம் என்பதைக் காணும் போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும்
படைத்தவனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்)
உங்களுக்குத் தெளிவாகி விட்ட உரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக்
கேட்டிருக்க மாட்டீர்கள். அப்போது அவர்கள், "எங்கள்
இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள். எங்களுடன் நோன்பு
நோற்றார்கள். எங்களுடன் நல்லறங்கள் புரிந்து கொண்டு இருந்தார்கள். (எனவே இவர்களை
நீ காப்பாற்றுவாயாக)'' என்று
வேண்டுவார்கள்.
அப்போது
உயர்ந்தோன் அல்லாஹ், "நீங்கள் சென்று எவருடைய உள்ளத்தில் ஒரு
பொற்காசு (தீனார்) அளவுக்கு இறை நம்பிக்கை இருக்கக் காண்கிறீர்களோ அவர்களை
(நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்'' என்று கூறுவான். அவ்வாறே அவர்களும்
(நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென அல்லாஹ்
நரகத்திற்குத் தடை விதித்து விடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தங்கள்
பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு நரகினுள் கிடப்பார்கள். உடனே அவர்கள் தமக்கு
அறிமுகமானவர்களை (நரகிலிருந்து) வெளியேற்றுவார்கள். பிறகு மீண்டும் (இறைவனிடம்)
செல்வார்கள். "எவரது உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறை நம்பிக்கை
உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்'' என்பான். அவர்கள் அவ்வாறே தமக்குத்
தெரிந்தவர்களை வெளியேற்றி விட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், "எவரது
உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்'' என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து)
தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள்.
இவ்வாறு
இறைத்தூதர்கள், வானவர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தமது)
தகுதிக்கேற்ப பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்தவன், "(இனி) என்
பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கின்றது'' என்று கூறி விட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு
மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள் கரிந்து போயிருப்பார்கள்.
ஆகவே, சொர்க்க
வாசலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள். அதற்கு ஜீவ நீர் (மாவுல் ஹயாத்)
என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று
நதியில் இரு மருங்கிலும் முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள். பாறையின் ஓரத்திலும்
மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில்
பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல்
பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும்.
ஆக, அவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும்
போது முத்தைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில்
(நரகத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு
அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்க வாசிகள், "இவர்கள்
பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்! இவர்கள் எந்த நற்செயலும் செய்யாமல் எந்த
நன்மையும் ஏற்கனவே செய்திராமல் அவனே இவர்களை சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச் செய்தான்'' என்று கூறுவர். பிறகு (அவர்களிடம்)
"நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு. இதைப் போன்று இன்னொரு
மடங்கும் உங்களுக்கு உண்டு'' என்று
சொல்லப்படும்.
அறிவிப்பவர்:
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்:
புகாரி 7439
இந்த
ஹதீஸின்படி அல்லாஹ் வைக்கும் தேர்வில் ஏகத்துவவாதிகள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; பரேலவிகள் தோற்று விடுகின்றனர்.
இந்த ஹதீஸ்
ஒரு தெளிவான பாடத்தை உணர்த்துகின்றது. அல்லாஹ்வின் அடியார்களை, அவ்லியாக்களை அழைத்துப் பிரார்த்தித்த
பரேலவிகள், சிலை
வணங்கிகளைப் போன்று, யூதர்களைப்
போன்று தங்கள் போலி தெய்வங்களுடன் போய் விடுகின்றார்கள். அவர்களைப் போல் இவர்களும்
விசாரணைக்கு ஆளாகி நரகத்தில் வீழ்ந்து விடுகின்றார்கள். அதாவது அல்லாஹ் வைத்த
அந்தப் பரீட்சையில் இவர்கள் வெற்றி பெறாமல் தோற்றுப் போய் விடுகின்றார்கள்.
இவ்வாறு
நாம் சொன்னவுடன் பரேலவிகள் உடனே, "நாங்கள் என்ன ஈஸா, உஸைர்
ஆகியோரைக் கூறியது போன்று அல்லாஹ்வுக்கு மகன் இருக்கின்றான் என்று சொன்னோமா? அந்த மகனை அழைத்துப் பிரார்த்தித்தோமா? அல்லது சிலையை வணங்கினோமா? நாங்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை
செய்ய வில்லையா?'' என்று
கேட்பார்கள். இங்கு தான் நாம் விரிவான பதிலைப் பார்த்தாக வேண்டும்.
இவர்கள் மிக
முக்கியமான ஒன்றைக் கவனிக்கத் தவறி விடுகின்றார்கள். ஈஸாவை வணங்கியவர்களானாலும்
சரி! உஸைரை வணங்கியவர்களானாலும் சரி! அல்லது சிலைகளை வணங்கிய மக்கத்துக்
காபிர்களும் சரி! ஏன்? நூஹ் நபி
அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை உள்ள இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்குகள்) யாரும்
அல்லாஹ்வை விட்டு விட்டு மற்ற தெய்வங்களை வணங்கவில்லை. அல்லாஹ்வையும் வணங்கினர்; மற்ற தெய்வங்களையும் வணங்கினர்.
இதைப்
பின்வரும் வசனங்களின் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
"எங்கள்
முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு, அல்லாஹ்வை
மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு
நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்'' என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்7:70)
இவ்வாறு
அல்லாஹ்வுடன் சேர்த்து மற்ற தெய்வங்களையும் வணங்கி வந்த அவர்களுக்கு வேதனை
ஏற்படும் போது அல்லாஹ்வை மட்டும் வணங்க முன்வந்தனர்.
அவர்களின்
தூதர்கள் அவர் களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது தம்மிடம் உள்ள
கல்வியின் காரணமாக பெருமிதம் கொண்டனர். அவர்கள் எதைக் கேலி செய்து
கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அவர்கள் நமது வேதனையைப்
பார்த்த போது "அல்லாஹ்வை மட்டும் நம்பினோம். நாங்கள் எதை இணையாகக் கருதினோமோ
அதை மறுத்து விட்டோம்'' என்றனர்.
(அல்குர்ஆன் 40:38,39)
அதனால் தான்
இப்ராஹீம் (அலை) அவர்கள், "உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை
விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள்
நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே
பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' (அல்குர்ஆன் 60:4) என்ற வாதத்தை முன் வைக்கின்றார்கள்.
மக்கத்து
முஷ்ரிக்குகளின் கடவுள் நம்பிக்கை
மக்காவிலிருந்து
முஷ்ரிக்குகளின் கடவுள் நம்பிக்கையை எடுத்துக் கொண்டால் இந்த பரேலவிகளின் கொள்கையை
விட அழுத்த மானதாகவும் உயர்ந்ததாகவும் அமைந்திருந்தது. இந்த பரேலவிகளின்
மனைவிமார்கள் பிரசவம், இன்னும் இது
போன்ற கடுமையான நேரங்களில் "யா முஹய்யித்தீன்'' என்று தான் பிராôத்திக்கின்றனர்.
ஆனால் மக்கத்து முஷ்ரிக்குகளோ "அல்லாஹ்வே'' என்று அழைத்துத் தான்
பிரார்த்தித்தார்கள்.
அவர்கள்
கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி
அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும்
அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.
(அல்குர்ஆன் 29:65)
முகடுகளைப்
போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப்
பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில்
நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது
சான்றுகளை நிராகரிப்பதில்லை.
(அல்குர்ஆன் 31:32)
அபாய
நேரத்தில் அபயம் அளிப்பது முஹய்யித்தீன் என்று கருதி இவர்கள் அழைக்கையில், அவர்களோ அபாய நேரத்தில் அபயமளிப்பவன்
அல்லாஹ் தான் என்று நம்பி அழைக்கின்றார்கள் என்றால் இந்த பரேலவிகளை விட அவர்கள்
சிறந்தவர்கள் தானே!
படைப்பாளன்
அல்லாஹ்
அவர்களைப்
படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள்.
எவ்வாறு திசை திருப்பப் படுகின்றனர்?
(அல்குர்ஆன் 43:87)
தங்களைப்
படைத்தவன் அல்லாஹ் தான் என்பதை அம்மக்கள் அறிந்திருந்தனர்.
ஏழு
வானங்களின் இறைவன்
"பூமியும்
அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள்
அறிந்தால் (பதிலளியுங்கள்)'' என்று
கேட்பீராக! "அல்லாஹ்வுக்கே'' என்று கூறுவார்கள். "நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!
"ஏழு
வானங்களுக்கு அதிபதியும், மகத்தான
அர்ஷுக்கு அதிபதியும் யார்?'' என்று
கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?'' என்று
கேட்பீராக! "பாதுகாப்பவனும் (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும் தன் கைவசம்
அனைத்துப் பொருட்களின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்)'' என்று கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று
கூறுவார்கள். "நீங்கள் எவ்வாறு மதிமயக்கப் படுகிறீர்கள்?'' என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 23:84-89)
இவை அன்றைய
மக்கத்து முஷ்ரிக்குகள் கொடுத்த வாக்கு மூலங்கள். அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த
அழுத்தமான, ஆழமான
நம்பிக்கைகள்.
அனைத்துப்
பொருட்களின் ஆட்சியும் அவன் கைவசம் தான் என்று மட்டும் அம்மக்கள் நம்பிடவில்லை.
அர்ஷின் நாயன் அவன் தான் என்பதையும் நம்பியிருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள்
விளக்குகின்றன.
விண்ணையும்
மண்ணையும் படைத்தவன்
"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால்
"மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்'' எனக் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 43:9)
மழையைப்
பொழிவிப்பவன் அல்லாஹ்
"வானங்களையும்
பூமியையும் படைத்தவனும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருப்பவனும் யார்?'' என்று
அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகின்றார்கள்?
(அல்குர்ஆன் 29:61)
வானங்களையும்
பூமியையும் படைத்து, அதில்
சுழல்கின்ற சூரியனைத் தன் கைவசம் வைத்திருப்பவன் அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை அந்த
அரபக இணை வைப்பாளர்களிடம் இருந்தது.
அல்லாஹ்வின்
மீது இந்த பரேலவிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையை விட பலமான நம்பிக்கையை அம்மக்கள்
கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்தக் குர்ஆன் வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன.
இப்படி
அல்லாஹ்வைப் பற்றி நன்கு தெரிந்திருந்த மக்களுக்கு முஹம்மத் (ஸல்) என்ற தூதர்
அனுப்பப்பட வேண்டுமா? என்றால்
நிச்சயமாகத் தேவையில்லை. அம்மக்களிடம் அல்லாஹ்வைப் பற்றி அறிமுகம் செய்து
வைப்பதற்காக முஹம்மத் (ஸல்) அவர்கள் வரவில்லை. மாறாக அந்த மக்கள் அல்லாஹ்வுடன்
மற்ற தெய்வங்களையும் கூட்டாக்கிக் கொண்டனர். அதாவது அந்தத் தெய்வங்கள்
அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள்; நெருக்கி
வைப்பார்கள் என்று கூறினார்கள். இங்கு தான் அரபக முஷ்ரிக்குகளின் கொள்கையும்
பரேலவிகள் கொள்கையும் ஒத்துப் போகின்றது.
அல்லாஹ்வையன்றி
அவர்களுக்குத் தீமையும், நன்மையும்
செய்யாதவற்றை வணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை
செய்பவர்கள்'' என்றும்
கூறுகின்றனர். "வானங்களிலும், பூமியிலும்
அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை
விட்டும் உயர்ந்தவன்'' என்று
கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)
கவனத்தில்
கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை
ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள்
என்பதற் காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று
கூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான்.
(தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 39:3)
மக்கத்து
முஷ்ரிக்குகள் என்ன வாதத்தை எடுத்து வைத்தார்களோ அதே வாதத்தைத் தான் இந்த
பரேலவிகள் எடுத்து வைக்கின்றனர்.
நாங்கள்
என்ன அவ்லியாக்களை அழைத்தா பிரார்த்திக்கிறோம்? அவர்கள்
எங்களுக்குச் சிபாரிசு செய்வார்கள் என்று தானே கூறுகிறோம்! நாமெல்லாம் பாவிகள்!
அதனால் அல்லாஹ்வை நெருங்க முடியாது. அதனால் இவர்கள் மூலம் சீக்கிரம் நெருங்கி
விடலாம் என்று பரேலவிகள் வாதிடுகின்றனர்.
இது புதிய
வாதமல்ல! மக்கத்து முஷ்ரிக்குகள் வைத்த வாதம் தான் என்பதை மேற்கண்ட வசனங்
களிலிருந்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
இறந்து
விட்ட அவ்லியாக்கள் செவியுறுகின்றனர்; பதிலளிக்கின்றனர்
என்று மிகத் தெளிவாக இந்த பரேலவிகள் சொல்கின்றனர். இதுவும் மக்கத்து
முஷ்ரிக்குகளின் நம்பிக்கை தான். அதற்குத் தான் அல்லாஹுத் தஆலா தனது திருமறையில்
பதிலளிக்கின்றான்.
இவர்களுக்கு
உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள்.
(எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள்.
நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக
இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வை
அன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள்
உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப்
பதில் தரட்டும்!
"அவர்களுக்கு
நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது
பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது
பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது
கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள்
தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும்
தராதீர்கள்!'' என்று
கூறுவீராக!"இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே
நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்'' (என்றும்
கூறுவீராக!) அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட
இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.
(அல்குர்ஆன் 7:192-197)
மக்கத்து
முஷ்ரிக்குகளின் நம்பிக்கைக்கு இந்த வசனங்களில் இறைவன் பதிலளித்து அவர்களை
வாயடைக்கச் செய்கிறான்.
சிலைகள்
என்ற செத்த வாதம்
அவ்லியாக்களை
அழைத்துப் பிரார்த்திக்கக் கூடாது என்பதற்கு நாம் இந்த வசனங்களை பரேலவிகளிடம்
எடுத்து வைக்கும் போது, இவையெல்லாம்
சிலைகள் சம்பந்தப் பட்ட வசனங்கள் என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி
விடுகின்றனர்.
அல்லாஹ்வையன்றி
நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள்
உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப்
பதில் தரட்டும்! (அல்குர்ஆன் 7:194)
"உங்களைப்
போன்ற அடியார்கள்'' என்ற இந்த
வார்த்தை ஒரு போதும் கல், களி மண், பொன், வெள்ளி
மற்றும் மெழுகுச் சிலைகளைக் குறிக்காது. மனிதர்களைத் தான் குறிக்கும் என்ற
உண்மைகளைத் தெரிந்தே ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். அதற்கும் அல்லாஹ் பின்வரும் வசனங்களில்
சரியான அடி கொடுக்கின்றான்.
அல்லாஹ்வையன்றி
யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே
படைக்கப்படுகின்றனர்.
அவர்கள்
இறந்தவர்கள்; உயிருடன்
இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படு வார்கள்’என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 16:20,21)
இறந்தவர்கள், உயிர் இல்லாதவர்கள், எப்போது எழுப்பப் படுவார்கள் என்ற இந்த
வார்த்தை அமைப்புகள் உயர்திணையைக் குறிப்பவை.
சிலைகளைக்
குறிப்பவையாக இருந்தால் உயிரில்லாதது என்று அஃறிணையாகக் குறிப்பிட வேண்டும். ஆனால்
மேற்கண்ட வசனத்தில் உயர்திணையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே தெளிவாக, இறந்து விட்ட நல்லடியார்களைத் தான் இந்த
வசனங்கள் குறிப்பிடுகின்றன.
எனவே
சிலைகள் என்ற பரேலவிகளின் வாதம் செத்து மடிந்து
விடுகின்றது.
மேலும்
மக்கத்து முஷ்ரிக்குகள் வணங்கியது சிலைகளை என்றாலும் சிலைகளுக்குரிய
பாத்திரங்களைத் தான் வணங்கினார்கள்.
நபிமார்களின்
சிலைகள்
நபி (ஸல்)
அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து, அவற்றை அப்புறப்படுத்துமாறு
கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி
பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும்
இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்
இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! இவ்விருவரும் அம்புகள் மூலமாக குறி
பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே
வைத்திருக்கிறார்கள்'' என்று கூறி
விட்டு கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்.
அதில் தொழவில்லை.
அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்:
புகாரி 1601
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் நுழைந்த போது, இப்ராஹீம்
(அலை), இஸ்மாயீல்
(அலை) ஆகியோரின் சிலைகள் இருந்தன என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.
நபி (ஸல்)
அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களின்
உருவப் படத்தையும், மர்யம்
(அலை) அவர்களின் உருவப் படத்தையும் கண்டார்கள். உடனே, "உருவம் உள்ள
வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதை இந்தக் குறைஷிகள் கேள்விப்பட்டு
இருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். குறி சொல்பவராக நிற்கிறாரே! (குறி
சொல்வதற்கும்) அவருக்கு(ம்) என்ன (சம்பந்தம்)?'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்:
புகாரி 3351
மர்யம்
(அலை) அவர்களின் சிலையும் இருந்தது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.
எனவே
மக்கத்து முஷ்ரிக்குகள் வணங்கியது சிலைகளை அல்ல! அந்தப் பாத்திரங்களை, அதாவது நபிமார்கள், மர்யம் (அலை) போன்றோரைத் தான் என்பது
நன்றாக விளங்குகின்றது.
இந்தப்
பெரியார்களைத் தான் அல்லாஹ்வுடன் கூட்டாக்கி வணங்கினர்.
எப்போது
இந்தப் பெரியார்களை அழைத்துப் பிரார்த்திக்க ஆரம்பித்து விடுகின்றார்களோ அப்போதே
தன்னை மட்டும் அழைப்பவர்களின் பட்டியலிலிருந்து அல்லாஹ் அவர்களை நீக்கி
விடுகின்றான். தன்னிடம் கேட்க வேண்டியதை தன்னுடைய அடியார்களிடம் கேட்க
ஆரம்பித்ததும் அல்லாஹ் கடுமையாகக் கோபம் கொள்கின்றான். தன்னிடம்
பிரார்த்திக்காதவர்களின் பட்டியலில் அவர்களைச் சேர்த்து விட்டு, அவர்களது மரண வேளையில் "எங்கே
அந்தப் பெரியார்கள்?'' என்று
கேட்கிறான்.
அல்லாஹ்வின்
மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது
அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு
அவர்களுக்குக் கிடைக்கும். "அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக்
கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று நமது
தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். "அவர்கள்
எங்களை விட்டும் மறைந்து விட்டனர்'' என அவர்கள் கூறுவார்கள். "நாங்கள்
(ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம்'' என தமக்கு எதிராக சாட்சி கூறுவர்.
(அல்குர்ஆன் 7:37)
எனவே
அல்லாஹ்வையும் சேர்த்து இவர்கள் வணங்கியது இவர்களுக்குப் பயனளிக்காது போய்
விடுகின்றது.
அல்லாஹ்வுடன்
பெரியார்களையும் கூட்டாக்கி அழைக்கும் இவர்களின் இந்தக் கூட்டை உடைத்து அல்லாஹ்வை
மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காகத் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூதராக
அனுப்பப்பட்டார்கள்.
மக்கத்து
முஷ்ரிக்குகளுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் நடந்த போராட்டமே இதை
ஒட்டித் தான்.
குர்ஆனில்
உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.
(அல்குர்ஆன் 17:46)
இறைச்
செய்தி வரும் வரை மதித்து, அன்பு
செலுத்திக் கொண்டிருந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது மக்கத்து முஷ்ரிக்குகள்
வெறுப்பு கொள்ளக் காரணம் அல்லாஹ்வை மட்டும் தனித்து வணங்க வேண்டும் என்று சொன்னது
தான்.
முகத்தில்
சிரிப்பு அகத்தில் நெருப்பு
அல்லாஹ்
மட்டும் கூறப்படும் போது, மறுமையை
நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே
அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
(அல்குர்ஆன்39:45)
மக்கத்து
முஷ்ரிக்குகள் மகிழ்ச்சி தொலைந்து போனதற்குக் காரணமே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை
மட்டும் வணங்க வேண்டும் என்று சொன்னதால் தான். இதை உடைத்துத் தான் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் வெற்றி கண்டார்கள். மக்கத்து முஷ்ரிக்குகளின் அந்தக் கொள்கை
இன்று இஸ்லாத்திற்குள் பரேலவிஸம் என்ற பெயரில் பயங்கர விஷமாக நுழைந்து விட்டது.
பரேலவிகளுக்கும்
நமக்கும் இடையே நடக்கும் போராட்டமும் அது தான். மேற்கண்ட வசனத்தில் கூறப்படுவது
போல் அல்லாஹ் என்று சொல்லும் போது இவர்களது முகங்கள் சுருங்கி விடுகின்றன. ஆனால்
அதே சமயம் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்று சொல்லும் போது, அகங்கள் குளிர்ந்து விடுகின்றன; முகங்கள் ஜொலிக்கின்றன. கத்தஸல்லாஹு
ஸிர்ரஹுல் அஸீஸ் என்று வாய்கள் கூறுகின்றன.
மேற்கண்ட
வசனத்தில் உள்ள தன்மைகளை அப்படியே இவர்களிடம் பார்க்கிறோம். எனவே இவர்கள் இந்த
அடிப்படையிலும் மக்கத்து முஷ்ரிக்குகளுக்கு அப்படியே நூறு சதவிகிதம்
ஒத்திருக்கின்றனர்.
மக்கத்து
முஷ்ரிக்குகள் போன்ற இவர்கள் அல்லாஹ்வை வணங்கியது பயனளிக்காத வகையில் ஆகி
விடுகின்றது. அதனால் மறுமையில் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களது
உருவம் போலி தெய்வமாகக் காட்டப்பட்டு அதனுடன் சேர்ந்து நரகப் படுகுழியில்
இவர்களும் வீழ்ந்து விடுவர். இவர்கள் மறுமையில் அல்லாஹ் வைக்கும் பரீட்சையில்
தோற்று விடுவார்கள். ஏகத்துவவாதிகள் நஜாத் (பாஸ்) ஆகி விடுகின்றனர்.
இவர்கள்
எல்லாம் தங்கள் தெய்வங்களுக்குப் பின்னால் செல்லும் போது ஏகத்துவவாதிகள் அவர்களைத்
தொடர்ந்து செல்லவில்லை.
"(உலகத்தில்)
நாங்கள் இந்த மக்களிடம் அதிக தேவை உள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி
உறவாடாமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம்'' என்று கூறி மறுத்து விடுகின்றார்கள்.
புறக்கணிப்பும்
பூரண பலனும்
இதன்
காரணமாகத் தான் இன்று இவர்கள் பின்னால் நின்று நாம் தொழுவதில்லை.
இவர்கள்
குடும்பத்தில் சம்பந்தம் வேண்டாம் என்கிறோம்.
இவர்களது
கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கிறோம்.
அதாவது
இப்ராஹீம் (அலை) அவர்கள் அனுசரித்த அந்தப் புறக்கணிப்பை அப்படியே எடுத்து
நடக்கிறோம். அதன் பயனாக ஏகத்துவவாதிகளாகிய நாம் இன்ஷா அல்லாஹ் மறுமையில்
இவர்களுக்குப் பின்னால் செல்லாதிருப்போம். இது புறக்கணிப்பின் காரணமாகக்
கிடைக்கும் பூரண பலனாகும்.
இந்தப்
பரீட்சைக்குப் பின்னாலும் இன்னொரு பரீட்சை உண்டு. அது தான் அல்லாஹ் தன் கெண்டைக்
காலை வெளிப்படுத்துவதாகும். அதிலும் இறையருளால் ஏகத்துவவாதிகள் வெற்றி பெற்று
விடுகின்றனர்.
அதற்கு
அடுத்து பாலத்தைத் தாண்டுதல். இதிலும் ஏகத்துவவாதிகள் வெற்றி பெறுகின்றனர். இந்தப்
பரீட்சைகளுக்கு எல்லாம் முந்தி, முதன்
முதலில் உள்ள பரீட்சை கப்ரில் உள்ள பரீட்சையாகும்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கப்ரில் ஒரு
முஃமின் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரு மலக்குகளைக்) கொண்டு
வரப்(பட்டு கேள்வி கேட்கப்)படும். பிறகு அந்த முஃமின், "வணக்கத்திற்கு
உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது
தூதராவார்கள்'' என்று
சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ், "நம்பிக்கை கொண்டோரை உறுதியான சொல்லின்
மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும்
அல்லாஹ் நிலைப்படுத்துகிறான்'' (14:27) எனக்
குறிப்பிடுகின்றான்.
அறிவிப்பவர்:
பராஃ பின் ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 1369, 4699
இதிலும்
ஏகத்துவவாதிகள் அல்லாஹ்வின் உறுதியான வார்த்தையைக் கொண்டு உறுதிப்
படுத்தப்படுகின்றார்கள்.
ஆக, ஏகத்துவவாதிகள் இந்த முதல் பரீட்சையில்
வெற்றி பெற்ற பின் மறுமையில் நடக்கும் இரண்டாவது பரீட்சையிலும் வெற்றி
பெறுகின்றார்கள். பரேலவிகள் இங்கும் தோற்று, அங்கு
தோற்று விடுகின்றார்கள்.
எனவே
பரேலவிகளின் கொள்கைக்கு மக்கள் பலியாகி விடாமல் பாதுகாப்பது ஏகத்துவ வாதிகளின்
தலையாய கடமையாகும். அந்தப் பணியை என்றும் தொடர்வோமாக!
EGATHUVAM NOV 2006