என்றும் தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை
அபூஉஸாமா
நம்மிடம் வருகை தந்த இனிய ரமளான் நமக்குத் தலை சிறந்த பள்ளிக்கூடமாகத்
திகழ்ந்தது. அந்தப் பள்ளிக்கூடம் நம்மைக் குர்ஆனுக்கு மிக அருகில், அண்மையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இரவுத் தொழுகைகளின்
மூலம் குர்ஆனுடன் உளப்பூர்வமான உறவையும் ஒன்றுதலையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த
இரவுத் தொழுகையை நாம் இஷாவுக்குப் பிறகு தொழுது கொண்டிருக்கிறோம். ஆனால் இதை ஸஹர் நேரத்தில்
தொழுவது மிகவும் சிறந்ததாகும்.
நான் உமர் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச்
சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது
கொண்டிருந்தனர். சிலரைப் பின்பற்றி சிறு கூட்டத்தினர் தொழுது கொண்டிருந்தனர். அப்போது
உமர் (ரலி) அவர்கள், "இவர்கள் அனைவரையும் ஓர்
இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே'' என்று
கூறி விட்டு,
அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை பின் கஅபு (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள்.
பின்னர் மற்றொரு இரவில் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது
கொண்டு இருந்தார்கள். அப்போது உமர் (ரலி), "இந்தப்
புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை
விட, உறங்கி விட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்'' என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்துல் காரீ
நூல்: புகாரி 2010
மக்கள் முன்னிரவில் தொழுவதற்கு ஆர்வம் காட்டுவதைப் பார்த்த உமர்
(ரலி) அவர்கள் பின்னிரவில் தொழுவது தான் சிறந்தது என்று ஆர்வமூட்டுகின்றார்கள். அவர்கள்
இவ்வாறு ஆர்வமூட்டுவதற்குக் காரணம், அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் பின்னேரத்தில், அதாவது ஸஹர்
நேரத்தில் தொழுவதைத் தான் வாழ்நாள் முழுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
"நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "இரவில் ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின்
கடைசி நேரத்தில் எழுந்து தொழுவார்கள். பிறகு படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின்
பாங்கு சொன்னதும் விழித்து, குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால்
குளிப்பார்கள். இல்லாவிட்டால் உளூச் செய்து விட்டுப் புறப்படுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அஸ்வத்
நூல்: புகாரி 1146
இந்த ஹதீஸிலும் இன்னும் ஏராளமான ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்கள்
பிந்திய இரவில் தான் இரவுத் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பதைக் காணலாம். இதன்
அடிப்படையில் தான் இன்று நம்முடைய தவ்ஹீது மர்கஸ்கள் பலவற்றில் பிந்திய பத்து இரவுகளில்
பின்னேரத் தொழுகை அறிமுகப் படுத்தப்பட்டு, தொழப்படுகின்றது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மேலப்பாளையம்
மஸ்ஜிதுர்ரஹ்மானில் பிந்திய பத்து நாட்களில் பின்னேரத் தொழுகை அறிமுகப்படுத்தப்பட்டது. நள்ளிரவு இரண்டு மணிக்குத் துவங்கி, நான்கு மணிக்கு முடிவடையும் இந்த இரவுத் தொழுகையில் இன்று பெண்கள்
தங்கள் குழந்தை குட்டிகளுடன் பங்கெடுக்கின்றார்கள். 500 பெண்கள் உட்பட 1800 பேர் வரை
மக்கள் பெருங்கூட்டமாகக் கலந்து கொண்டது உண்மையில் ஆச்சரியமான விஷயமாக உள்ளது.
நமது பள்ளியில் இரவுத் தொழுகைக்கு மக்கள் வெள்ளமாகப் பெருக்கெடுத்து
வருவதைக் கண்டு பொறுக்க முடியாத குராபி ஆலிம்கள், இந்த
மக்கள் கூட்டத்தைத் தடுக்கும் விதமாக, தங்கள் பள்ளிவாசல்களிலும்
பின்னேரத்தில் தொழத் துவங்கி விட்டார்கள். முன்னேரத்தில் தொழும் தொழுகைக்கு தராவீஹ்
என்றும் பின்னேரத்தில் தஹஜ்ஜத் என்றும் ஒரு வியாக்கியானம் கொடுக்கின்றனர்.
அவர்கள் இதற்கு என்ன தான் வியாக்கியானம் கொடுத்தாலும் இத்தனை
ஆண்டு காலமாகத் தொழாமல் இன்று இவர்கள் தொழுவதற்குக் காரணம் தவ்ஹீது சகோதரர்கள் நபிவழியின்
அடிப்படையில் இரவுத் தொழுகையை அறிமுகப்படுத்தியது தான்.
பிந்திய பத்து இரவுகளில் இவ்வாறு குறிப்பிட்டுத் தொழுவதற்குக்
காரணம், அந்த இரவுகளில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ர்
எனும் இரவு அமைந்திருப்பதால் தான்.
ஏற்கனவே நோன்பின் போது, ஸஹர் சாப்பிடுவதற்காக
எழுந்தாக வேண்டும். அந்த நேரத்திற்குக் கொஞ்சம் முன்பாக எழுந்து இரவுத் தொழுகையையும்
நிறைவேற்றுவதன் மூலம் ரமளான் என்ற பள்ளிக்கூடம் இரவுத் தொழுகை தொழும் பழக்கத்தை நமக்கு
ஏற்படுத்தித் தருகின்றது.
இந்தத் தொழுகையை ரமளானுக்குப் பின்னரும் நாம் தொழுதால் என்ன? என்று ஒரு சிந்தனையை நம்மிடம் ஏற்படுத்தி விடுகின்றது. எனவே
ஏகத்துவ வாதிகளாகிய நாம் இரவுத் தொழுகையை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
11 அல்லது 13 ரக்அத்துக்கள் தான் தொழ வேண்டும்
என்பதல்ல. குறைந்தபட்சம் மூன்று அல்லது ஐந்து ரக்அத்துக்கள் தொழும் பழக்கத்தை நாம்
கடைப்பிடிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை
அறை போல் ஆக்கிக் கொண்டு தொழுவார்கள். அதைப் பகல் நேரத்தில் விரித்துக் கொண்டு அதன்
மீது அமர்வார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள்.
இறுதியில் மக்கள் அதிகமாகி விடவே, நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, "மக்களே! உங்களால் இயன்ற செயல்களையே செய்து வாருங்கள். ஏனெனில்
நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
(நற்)செயல் யாதெனில் குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: 5862
இதன்படி குறைந்ததாக இருந்தாலும் அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.
எனவே இரவுத் தொழுகையை நாம் ரமளானுக்குப் பிறகும் தொடர வேண்டும். அல்லாஹ் இவ்வாறு இரவில்
எழுந்து தொழுவதை மிகவும் பாராட்டிச் சொல்கின்றான்.
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும்
தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்.
நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள்.
(அல்குர்ஆன் 32:16)
இவ்வாறு இரவில் தொழும் மக்களுக்கு அல்லாஹ் சிறந்த ஏற்பாடுகளைச்
செய்து வைத்து இருப்பதாகக் கூறுகின்றான்.
அவர்கள் செய்து கொண்டு இருந்ததற்குப் பரிசாக கண் குளிரும் வகையில்
அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
(அல்குர்ஆன் 32:17)
அல்லாஹ் கூறும் இந்தப் பரிசுகளை நாம் அடைய வேண்டும் என்றால்
இந்த இரவுத் தொழுகையை நாம் தொடர்ந்து தொழ முன்வர வேண்டும். இதை எந்த நேரத்தில் தொழ
வேண்டும்?
(அவர்கள்) பொறுமையாளர் களாகவும், உண்மை பேசுவோரா கவும், (இறைவனுக்கு)
கட்டுப் பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)
(அல்குர்ஆன் 3:17)
இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில்
பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
(அல்குர்ஆன் 51:17,18)
இறை நம்பிக்கையாளர்களின் நல்ல பண்புகளையும் அவர்கள் பாவமன்னிப்பு
தேடுகின்ற நேரத்தையும் இவ்விரு வசனங்களில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.
லூத் (அலை) அவர்களின் சமுதாய மக்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட
போது, அவர்களை அழித்த அல்லாஹ், அந்தச் சமுதாயத்தில்
உள்ள நல்லவர்களை ஸஹர் நேரத்தில் காப்பாற்றியதாகச் சொல்கின்றான்.
முதல் வானத்திற்கு வருகையளிக்கும் அல்லாஹ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில்
மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, "என்னிடம்
யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால்
நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவ மன்னிப்புக் கோரினால் அவரை
நான் மன்னிக்கின்றேன்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1145
ஆட்சியாளனிடம் நாம் விரும்பிய நேரத்தில் மனு கொடுப்பதற்கும்
அவன் அழைத்த நேரத்தில் நாம் மனு கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். இதுபோல்
நாம் அல்லாஹ்விடம் எப்போதும் துஆ கேட்கலாம், அதாவது மனு
போடலாம். ஆனால் அவன் விரும்பும் நேரத்தில் மனு போடுவது, துஆ கேட்பது உண்மையில் கேட்டதை உடனே கிடைப்பதற்கு வழிவகை செய்யும்
அல்லவா? அவன் விரும்பும் நேரத்தில் நாம் பிரார்த்தனை செய்வதற்கு இந்த
இரவுத் தொழுகை நமக்கு வழி வகுக்கின்றது.
உரியது கிடைக்கும் உரிய நேரம்
"நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக
இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை
வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1259
இந்த ஹதீஸ் அந்த நேரத்தை எதுவென்று குறிப்பிடாமல் பொதுவாகக்
கூறுகின்றது. நாம் மேலே பார்த்த ஹதீஸ்களும், வசனங்களும்
அது இன்ன நேரம் என்று குறிப்புப்படுத்தி விடுகின்றது. இத்தகைய நேரத்தை, உரிய இந்த நேரத்தை உறக்கத்தில் கழிக்கலாமா? என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
நரகத்திலிருந்து காக்கும் நல்லமல்
நரகத்திலிருந்து பாதுகாவல் பெறுவதற்கும், சுவனத்தில் நுழைவதற்கும் தான் நாம் ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றுகின்றோம்.
அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமல்லவா? அதற்கு இது
ஓர் அரிய வாய்ப்பு!
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்)
அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன். அப்போது
நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும் இருந்தேன். இரண்டு மலக்குகள் என்னைப்
பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல்
அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன. இதில் எனக்குத்
தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான், "நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்'' என்று கூறினேன். அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து, "நீர் பயப்படாதீர்'' என்று கூறினார்.
இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி)யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது
நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக
இருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!'' என்று
கூறினார்கள். அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1121, 1122
"ஸலாமைப் பரப்புங்கள்! ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும்
போது தொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)
நூல்: திர்மிதீ 2409
நரகத்திலிருந்து நம்மைப் பாதுகாத்து, சுவனத்தில் நுழையச் செய்யும் இந்த அரிய வாய்ப்பை நாம் நழுவ விடலாமா?
கடமையான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்து
"ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான
முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்'' என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1982
அண்மையில் சுனாமி என்ற ஆழிப் பேரலை ஊருக்குள் நுழைந்து பல உயிர்களை
ஆட்கொண்டதை நாம் அறிவோம். ஆனால் அந்த ஆழிப் பேரலை மரங்கள் நிறைந்த கரை ஓரங்களில் அட்டகாசம்
செய்யவில்லை. இதற்குக் காரணம், கரையில் நின்ற மரங்கள் காவல்
கூடமாக அமைந்தது தான். இதுபோல் தூக்கம் என்ற சுனாமி சுப்ஹ் தொழுகையை ஓய்த்து விடாமல்
இருக்க வேண்டுமானால் இரவுத் தொழுகையை நாம் கடைப்பிடித்தாக வேண்டும்.
ஆம்! இரவுத் தொழுகை தொழுபவர்களுக்கு சுப்ஹுத் தொழுகை ஒருபோதும்
தவறுவதில்லை. ஏனெனில் அவரது குறியீடு இரவுத் தொழுகை! அதற்கு எழாமல் அவர் உறங்கி விட்டாலும்
சுப்ஹுத் தொழுகைக்கு எழுந்து விடுவார். இரவுத் தொழுகை தப்பி விட்டாலும் சுப்ஹுத் தொழுகை
தவறுவதில்லை.
தூக்கம் என்ற சுனாமி கரையோடு, அதாவது, இரவுத் தொழுகையை மட்டும் அமுக்கி விடுகின்றது. சுப்ஹ் தொழுகையை
விட்டு விடுகின்றது. இப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பு அரண் இந்த இரவுத் தொழுகை மூலம் கிடைக்கின்றது.
எனவே ரமளான் எனும் பள்ளிக் கூடத்தில் பயின்ற பாடமாக இரவுத் தொழுகையைத்
தொடர நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
துவங்கியதைத் தொடர்தல்
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப்
போல் ஆகி விடாதீர்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல்: புகாரி 1152
ரமளானில் தொடங்கிய இரவுத் தொழுகையை நாம் இடையில் பாதியாக நிறுத்தி
விடக் கூடாது. ரமளானில் பெற்ற இந்தப் பயிற்சியை அடுத்த ரமளான் வரை தொடர வேண்டும். இதில்
போட்டி போட்டுக் கொண்டு அமல் செய்ய வேண்டும் என்று மார்க்கம் நமக்குக் கட்டளையிடுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர்
இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல்
எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி 5025
இப்படிப்பட்ட சிறப்பைத் தரும் இந்த நன்மையை ரமளான் தந்த பரிசாக, பாடமாக எடுத்துக் கொண்டு தொடர்வோமாக! முனைப்புடன் உடனே செயல்படுத்துவோமாக!
EGATHUVAM NOV 2006