Apr 12, 2017

அழைப்பாளன் ஓர் அழகிய முன்மாதிரி

அழைப்பாளன் ஓர் அழகிய முன்மாதிரி

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! அல்குர்ஆன் 3:110

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 3:104

இந்த வசனங்களின் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு இயக்கமும் தாங்கள் தான் இப்பணியைச் செய்கிறோம் என்று உரிமை கொண்டாடுவதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் அவ்வாறு உரிமை கொண்டாடும் தகுதி அவர்களுக்கு இல்லை என்பதை அவர்களின் பணிகளிலிருந்தும், செயல்பாடு களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு தப்லீக் இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். இவர்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற ஒட்டுமொத்த பணியையும் குத்தகைக்கு எடுத்தது போன்று பேசுவார்கள். மக்கள் எதை நன்மை என்று ஒத்து, உடன்பாடு கொண்டிருக்கிறார்களோ அதையே ஏவுவார்கள்.

உதாரணத்திற்கு ஐங்காலத் தொழுகையை ஏவுவார்கள். இது நன்மை என்பதில் எந்தவொரு முஸ்லிமும் கருத்து வேறுபாடு கொள்ளவே இல்லை. அதனால் தொழாதவனைத் தொழுகைக்கு அழைக்கும் போது அவன் அதில் எதிர்ப்பு காட்டுவதும் இல்லை. இவர்கள் வட்டியை விட்டும் முஸ்லிம்களைத் தடுப்பார்கள். வட்டி ஒரு தீமை என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அதனால் வட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம் கூட வட்டியை விட்டுத் தடுக்கும் போது எதிர்ப்பதில்லை.

ஆனால் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களை, தர்ஹா வழிபாட்டை விட்டுத் தடுக்கும் போது அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தப் பிரச்சாரத்தைச் செய்வோரைக் கொலை செய்யவும் துணிகின்றனர். ஏன்? தீமையான தர்ஹா வழிபாட்டை அவர்கள் நன்மை என்று கருதுவதால் தான். எனவே இவ்வாறு தர்ஹா வழிபாட்டைத் தடுக்கும் பணியை தப்லீக் ஜமாஅத் ஒரு போதும் செய்வதில்லை. அந்தப் பணியை தவ்ஹீது ஜமாஅத் மட்டுமே செய்கின்றது.

தவ்ஹீதில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கின்ற மற்ற இயக்கங்களும் இந்தப் பணியைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற இரு அடிப்படைகளைத் தாண்டி ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அடிப்படையையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதனால் இவர்கள் இந்தப் பணிக்குத் தகுதியற்ற வர்களாகி விடுகின்றனர்.

தவ்ஹீது ஜமாஅத் மட்டுமே இந்தத் தகுதியைப் பெற்றிருக்கின்றது என்பதால் அதன் ஒவ்வொரு அழைப்பாளரின் செயல்பாடும் மக்களின் ஆந்தைப் பார்வைக்கு உள்ளாகின்றது.

எனவே இந்த இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு அழைப்பாளரும் தங்களுடைய வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

திறந்த புத்தகமான திருநபியவர்கள்

நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அவசரப் படாதே! நானும் உன்னோடு வருகிறேன்! என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்து விட்டுக் கடந்து சென்றனர்.

நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்! எனக் கூறினார்கள். அவ்விருவரும் சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்)-அல்லாஹ்வின் தூதரே! என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன் என்று தெளிவுபடுத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

நூல்: புகாரி 2038, 2039, 3281, 6219

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையை எந்த அளவு திறந்த புத்தகமாக வைத்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தம் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் பார்ப்பவர்களிடம் ஷைத்தான் விளையாடி விடக் கூடாது என்பதால் அவர்களை அழைத்து, இது என் மனைவி என்று தெளிவு படுத்துகின்றார்கள்.

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இவ்வளவு பேணுதலாக இருக்கும் போது, நாம் எந்த அளவுக்குப் பேணுதலாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மார்க்கம் தடுத்திருக்கின்ற காரியங்களான இணை வைத்தல், வட்டி, கொலை போன்ற பெரும்பாவங்களை விட்டும் ஓர் அழைப்பாளன் முற்றிலும் விலகி இருக்க வேண்டும்.

இணை வைப்பு நடக்கும் நிகழ்ச்சிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்கப்படும் திருமணங்கள், வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களை விட்டும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். புகை பிடிக்கும் பழக்கம் கூட இருக்கக் கூடாது. அந்த அளவுக்கு அவருடைய வாழ்க்கை சிறந்த முன்மாதிரியாகத் திகழ வேண்டும். குறிப்பாக பெண் விவகாரத்தில் ஒழுக்கம் மிக்கவராக இருக்க வேண்டும்.

செல்போனில் செக்ஸ் பேச்சு

ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசினால் கூட கவனமாகப் பேச வேண்டும். அந்தப் பெண்ணுடன் பேசுகின்ற அந்தப் பேச்சு, மற்றவர்களுக்கு முன்னால் பேசப்படும் போது குறை காணப்படாத அளவுக்கு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்னால் பேசப்படுவதற்குத் தகுதியில்லாத ஒரு பேச்சை ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசினால் அது ஆபாசப் பேச்சாகும்.

ஆணும் பெண்ணும் சந்திக்காமல் தூரத்தில் இருந்து கொண்டு செல்போனில் பேசினாலும் அவர் அந்தப் பெண்ணுடன் தனியாக சந்தித்துப் பேசுவதைப் போன்றது தான்.

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3006

செல்போனை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இது தான் தீமைகளின் திறவுகோலாக அமைந்துள்ளது.

ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது அல்லது அருகருகே அமர்ந்து பேருந்தில் பயணம் செய்வது என்பதெல்லாம் ஓர் அழைப்பாளனை விட்டு விடுவோம்; சாதாரண முஸ்லிமுக்குக் கூட இது ஒரு பெரிய பாவ காரியமாகத் தெரியும். ஆனால் செல்போனில் ஆபாசமாகப் பேசுவதை சாதாரண காரியம் என்று கருதிக் கொண்டிருக்கின்றனர் என்பதால் இதை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.

பாவத்தைப் பற்றிய பார்வை

இறை நம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்து விடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தனது மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 6308

இதன்படி செல்போனில் ஆபாசமாகப் பேசுவதே ஓர் அழைப்பாளனுக்கு மலை போல் தெரிய வேண்டும். இது போன்று சர்வ சாதாரணமாகத் தெரியும் பாவமான சினிமா பார்ப்பது போன்ற தீமையும் ஓர் அழைப்பாளனுக்கு மலை போல் தெரிய வேண்டும்.

இந்தச் சிறு சிறு பாவங்கள் மலை போல் தெரிய ஆரம்பித்து விட்டால் விபச்சாரம், பொருளாதார மோசடி போன்ற பெரும் பாவங்களுக்கு ஓர் அழைப்பாளன் ஆளாக மாட்டான். ஆளாகவும் கூடாது. ஏனெனில் அழைப்பாளன் ஓர் அழகிய முன்மாதிரியாவான். இந்த இயக்கத்தில் ஆலிம்கள் மட்டும் அழைப்பாளர்கள் அல்லர்! ஒவ்வொரு மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகளும், ஒவ்வொரு செயல் வீரரும் ஓர் அழைப்பாளரே!

அவர்கள் இந்தப் பண்புகளைக் கொண்ட மணிகளாக, மாணிக்கங் களாகத் திகழ வேண்டும். சொல்லால் அழைக்கும் பணியை விட, செயலால் அழைக்கும் அழைப்புப் பணியே வலுவானதாகும். இதையே அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?


அல்குர்ஆன் 41:33

EGATHUVAM FEB 2009