தனிமனித வழிபாடு
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு
முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால்
வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே
திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு
அல்லாஹ் கூலி வழங்குவான்.
அல்குர்ஆன் 3:144
இது திருக்குர்ஆனின் ஓர் அற்புதமிக்க வசனமாகும். இந்த வசனத்தின்
முன் பின் வசனங்களை வைத்து இது உஹதுப் போர்க் களத்தின் போது அருளப்பட்டது என்பதை விளங்கிக்
கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், உஹதுப் போர்க்களத்தில்
தான் கொல்லப்பட்டதாகச் செய்தி பரவுகின்றது.
(உஹதுப் போரில்) அபூசுஃப்யான் முன்வந்து (உங்கள்) கூட்டத்தில்
முஹம்மது இருக்கின்றாரா? என்று (பலமுறை) கேட்டார். அப்போது
நபி (ஸல்) அவர்கள், அவருக்குப் பதிலக்க வேண்டாம்
என்று (தம் தோழர்கடம்) கூறினார்கள். மீண்டும், (உங்கள்) கூட்டத்தில்
அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா? என்று கேட்டார்.
அப்போதும் நபி (ஸல்) அவர்கள், அவருக்கு நீங்கள் பதில் தர வேண்டாம்
என்று கூறி விட்டார்கள். பிறகு, கூட்டத்தில் கத்தாபின் மகன்
(உமர்) இருக்கிறாரா? என்று கேட்டு விட்டு (பிறகு
தம் தோழர்கன் பக்கம் திரும்பி) இவர்களெல்லாம் கொல்லப்பட்டு விட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலத்திருப்பார்கள்
என்று சொன்னார். (புகாரி 4043)
இந்தப் போர்க் களம் முஸ்லிம்களுக்குப் பெரும் கவலை அளித்த போர்க்களமாகும்.
நபித்தோழர்கள்,
இனி நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நாம் வாழ்ந்தென்ன பயன்? முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முடிந்தவுடன் இந்த மார்க்கமும்
முடிந்து விட்டது என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் இந்த வசனத்தை அருளுகின்றான்.
தூதர் முஹம்மது இறந்து விடலாம்; ஆனால் அவர் கொண்டு வந்த தூதுச் செய்தி இறக்காது என்று இந்த வசனத்தில்
தெளிவுபடுத்துகின்றான்.
அன்று ஓர் ஒத்திகை மரணம்
உண்மையில் உஹதுப் போர்க்களம் ஓர் ஒத்திகைக் களம் என்றே சொல்ல
வேண்டும்.
அதிரடியாக எதிரிகளை எப்படிச் சந்திப்பது? என்பதற்கு இராணுவ வீரர்களுக்கு முற்கூட்டியே போலி எதிரிகளை வைத்துப்
பயிற்சி ஒத்திகை நடைபெறும்.
ஒரு பேச்சாளர் தொலைக் காட்சியில் பேசப் போகின்றார் என்றால் அதற்காக
அவர் ஒத்திகை பார்த்துக் கொள்கின்றார்.
நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் இந்த மக்கள் என்ன செய்யப்
போகின்றார்கள்?
என்ற ஓர் ஒத்திகையை, ஒரு வித்தியாசமான
பயிற்சியை நபித்தோழர்களுக்கு, நபியவர்களின் வாழ்நாளிலேயே அல்லாஹ்
நடத்திக் காட்டுகின்றான்.
அத்துடன், முஹம்மது கடவுள் அல்லர்! அவர்
மனிதர் தாம். அவர் இயற்கையாக மரணத்தைத் தழுவுவார்; அல்லது
கொல்லப்படுவார். இந்த இரண்டை விட்டும் தப்பி, சாகாவரம் பெற்றவர்
என்று விளங்கி விடாதீர்கள் என்ற ஏகத்துவப் பாடத்தையும் அந்த மக்களுக்குப் படித்துக்
கொடுக்கிறான்.
தூதர் இறந்து விட்டாலும் தூதுச் செய்தி இறக்காது. அந்த தூதுச்
செய்தி குர்ஆன்! அது ஒரு போதும் மரணிக்காது. அது சாகாவரம் பெற்ற சத்திய வேதம்! அதனால்
தூதர் இறந்தவுடன் நீங்கள் வந்த வழியே, அதாவது அசத்திய
வழிக்குத் திரும்பி விடாதீர்கள்; அப்படிச் சென்று விட்டால், மதம் மாறி விட்டால் அதனால் அல்லாஹ்வுக்கு எந்த நஷ்டமும் இல்லை
என்பதையும் இந்த வசனம் கூறுகின்றது.
தூதர் இறந்த பின்னும் மதம் மாறாமல் இருந்தால் நீங்கள் நன்றியுடையவர்கள்; அந்த நன்றியுடையோருக்கு நான் நற்கூலி வழங்குவேன் என்றும் அல்லாஹ்
உறுதியளிக்கின்றான்.
இத்துடன் அல்லாஹ் ஒரு முன்னறிவிப்பும் செய்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்பு சிலர் மதம் மாறுவார்கள் என்பதே
அந்த முன்னறிவிப்பு!
இப்போது அந்த மத மாற்றத்தையும் அதற்குக் காரணமான மரணத்தையும்
பார்ப்போம்.
உண்மை மரணம்
உஹதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தது போன்ற ஒத்திகை
நடந்தது. இப்போது உண்மையில் மரணித்து விடுகின்றார்கள். அவர்கள் இறந்ததும் உமர் (ரலி)
அவர்கள் எழுந்து, நபியவர்கள் இறக்கவில்லை என்று
உரையாற்றுகின்றார்கள்.
அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருந்த நபித் தோழர்களுக்கு மத்தியில்
உமர் (ரலி) உரையாற்றத் தொடங்கினார்கள்.
அந்த உரையில் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ்
உயிருடன் எழுப்புவான். இறந்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தவர்களின் கை கால்களை
வெட்டி விடுவார்கள். இது தான் என் மனதில் படுகின்ற கருத்தாகும் என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இறந்ததை ஒத்துக் கொள்ள மறுத்த நபித்தோழர்களின் உள்ளங்களுக்கு உமர்
(ரலி) யின் இந்த உரை ஓர் ஒற்றடமாக அமைந்திருந்தது.
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததும் நபித்தோழர்கள்
தங்களை மறந்த நிலையில் ஆகி விட்டார்கள். பாசமிகு தாய்ப் பறவையின் கதகதப்பான அரவணைப்பில்
கிடக்கும் குஞ்சுகள் தாய்ப் பறவை இறந்துவிட்டால் எவ்வாறு தவியாய்த் தவிக்குமோ அது போன்ற
தவிப்பிற்கு அவர்கள் உள்ளானார்கள். இந்த நேரத்தில் உமர் (ரலி) அவர்களின் வார்த்தைகள்
அவர்களுக்கு ஆறுதலாகவும், அருமருந்தாகவும் அமைந்தன.
அமைதியாகக் கிடக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீண்டும்
தங்களை அரவணைக்க வரப் போகின்றார்கள் என்ற ஆதரவில், அற்புதம்
நிகழப் போகின்றது என்ற நம்பிக்கைக் கடலில் அமிழ்ந்து போய் விட்டார்கள். அவர்கள் இறந்திருப்பது
நிரந்தரமாக அல்லவே அல்ல! அது தற்காலிகமாகத் தான் என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம்
ஏற்படவில்லை.
இப்படிப்பட்ட அழுத்தமான நம்பிக்கை ஏற்படக் காரணம் அவர்களின்
முன்னால் நின்று சொன்னவர் சாதாரணமானவர் அல்ல! இவரது நாவில் சத்தியம் ஓடுகின்றது என்று
நபி (ஸல்) அவர்கள் யாரைப் பார்த்து சொன்னார்களோ அந்த உமர் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் அடுத்தக் கட்டத் தலைவர் என்ற தகுதியைப் பெற்ற இனிய தோழராவார்.
அதனால் தான் அவர்களுடைய வார்த்தைகள் சோக மயத்தில் நிற்கும் நபித் தோழர்களை வயப்படுத்தும்
அளவுக்கு வைரங்களாக அமைந்து விட்டன.
இறைத்தூதர் இறந்து விட்டார்; அபூபக்ரின்
விளக்கம்!
உமர் (ரலி) அவர்களின் உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை
என்ற எண்ணத்தில் உறைந்து போயிருந்த இந்த நேரத்தில், குழப்பமான
இந்தக் கட்டத்தில் ஒரு குதிரையின் குழம்படிச் சப்தம் கேட்கின்றது. இதமானவர் - இளகிய
மனம் படைத்தவர் என்று எல்லோராலும் கூறப்படுகின்ற அபூபக்ர் (ரலி) அதன் மீது அமர்ந்து
வருகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் சமயத்தில் அபூபக்ர்
(ரலி) அவர்கள்,
தாம் வசித்து வந்த சுன்ஹு என்ற பகுதியில் இருந்தார்கள். அப்போது
தான் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி கிடைக்கின்றது. மரணச் செய்தி கிடைத்த
மாத்திரத்தில் தமது குதிரையைத் தட்டிக் கொண்டு மஸ்ஜிதுந்நபவியை நோக்கி வேகமாக வருகின்றார்கள்.
அவர்களின் பயணக் குதிரை மின்னல் வேகத்தில் தனது ஓட்டத்தைக் கொண்டிருந்த
அவ்வேளையில் அவர்களின் மனக் குதிரை சோகத்திலிருந்த நபித் தோழர்களின் மன ஓட்டத்தைக்
கண்டறிந்தது. இந்த உண்மையை அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து
நிகழும் செயல்கள் நமக்கு உணர்த்திக் காட்டும்.
குதிரை பள்ளியை அடைந்ததும் கூடியிருந்த கூட்டத்திடம் ஒரு வார்த்தை
கூட பேசாமல் பள்ளிக்குள் சென்று ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைந்தார்கள். முதன்
முதலில் நபி (ஸல்) அவர்களின் உடலை நோக்கிச் சென்று அதைத் தழுவியிருந்த போர்வையை நீக்கினார்கள்.
முகிழ் கிழித்து வரும் முழுமதியைப் போன்று காட்சியளித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின்
முகத்தில் முத்த மழை பொழிந்தார்கள். அவ்வளவு தான்! அவர்களின் கண்கள் அருவியானது.
அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!
இருக்கும் போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த பிறகும் நறுமணம் கமழ்கின்றீர்கள் என்று
எடுத்த எடுப்பில் சொல்கின்றார்கள். அவர்களின் இந்தச் சொல் கல்லாகப் பாய்ந்து, நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்ற நபித் தோழர்களின் தவறான
நம்பிக்கையை ஒரு நிமிடத்தில் உடைத்தெறிகின்றது.
என் உயிரைத் தன் கைவசம் வைத்திருக்கும் அந்த இறைவன் மீது ஆணையாக!
ஒரு போதும் அல்லாஹ் இரண்டு மரணங்களை சுவைக்கச் செய்ய மாட்டான். உங்களுக்கென்று விதிக்கப்பட்ட
மரணத்தை நீங்கள் சுவைத்து விட்டீர்கள் என்றும் அபூபக்ர் (ரலி) கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து வந்து மீண்டும் மரணிப்பார்கள்
என்ற கருத்தில் உமர் (ரலி) கூறிய இரு மரணத் தத்துவத்தை அபூபக்ர் (ரலி) அவர்களின் இந்த
வார்த்தைகள் சுக்கு நூறாக்குகின்றன. அது மட்டுமல்ல! இறந்து விட்ட நபி (ஸல்) அவர்களிடம்
அபூபக்ர் (ரலி) அவர்கள் நேர்முகமாக, உங்களுக்கு
இரு மரணத்தைத் தரவில்லை என்று பேசுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தால்
இதற்குப் பதிலளிக்காமல் மவுனமாக இருந்திருப்பார்களா? என்பதையும்
இங்கே தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
இவ்வாறு உணர்த்தி விட்டு நேராக உமர் (ரலி) அவர்களிடம் விரைந்து
வருகின்றார்கள். வந்ததும் அவர்களை நோக்கி, ஆணையிட்டு
உரை ஆற்றுபவரே! அமர்க! அமர்க! என்று கூறுகின்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் இந்த
வார்த்தைகளை உமர் (ரலி) கண்டு கொள்ளாமல் தனது உரையைத் தொடர்கின்றார்கள். இடைவிடாமல்
தனக்கு இடம் கொடாமல் தனது உரையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவ்வேளையில் அபூபக்ர்
(ரலி) இடைமறித்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டி
தனது உரையைத் துவக்கினார்கள்.
யார் முஹம்மதை வணங்க நினைக்கின்றாரோ அவர் அறிந்து கொள்ளட்டும்.
நிச்சயமாக முஹம்மது (ஸல்) இறந்து விட்டார்கள். உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ
அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன், மரணிக்கவே மாட்டான் என்று கூறினார்கள். அதற்கு ஆதாரமாக அல்குர்ஆனின்
வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.
நீரும் மரணிப்பவர். அவர்களும் மரணிப்பவர்களே! (அல்குர்ஆன் 39:30)
முஹம்மது தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன்னர் பல தூதர்கள்
சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப் பட்டு விட்டால் வந்த வழியில்
நீங்கள் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு
எந்தக் கேடும் செய்ய முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் பரிசு வழங்குவான்.
(அல்குர்ஆன் 3:144)
ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
அவ்வளவு தான்! உரத்த குரலில் மக்கள் அழத் துவங்கி விட்டார்கள்.
அது வரை அவர்கள் மவுனம் சாதித்துக் கொண்டிருந்தார்கள். அது வரை உமர் (ரலி)யின் உரையைக்
கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அபூபக்ர் (ரலி)யின் உரையின் பக்கம் சென்று விட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள் என்று உமர்
(ரலி) கூறிய கருத்தை நம்பிக் கொண்டிருந்த மக்கள், அபூபக்ர்
(ரலி) எடுத்து வைத்த வாதத்தின் உண்மையை உணர்ந்து சோகத்தின் உச்சிக்குச் சென்று விட்டார்கள்.
இங்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் சோகமும், சோர்வும் கொண்டு நிற்கும் அம்மக்களிடம் இத்தகைய உண்மையை எடுத்து
வைத்த விதம் ஒரு வித்தியாசமான அம்சமாகும். அவர்களிடம் மிளிர்கின்ற தனிச் சிறப்பு மிக்க
ஆளுமையும் அவர்களிடம் குடி கொண்டிருக்கின்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும் ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மரணம் சாதாரண தலைவரின் மரணமல்ல!
தமது ஆட்காட்டி விரலின் அசைவில் உயிர், உடல், உடைமை அத்தனையையும் அர்ப்பணிக்கின்ற ஒரு தியாகக் கூட்டத்தையே
தன்னகத்தே கொண்ட தன்னலமற்ற தலைவரின் மரணமாகும்.
அப்படிப்பட்ட தலைவரைப் பறி கொடுத்து நிற்கும் அம்மக்களுக்கு
மத்தியில்,
உணர்ச்சிப்பூர்வமான இந்த சோதனையான காலகட்டத்தில் தமக்கே உரிய
நிதானப் போக்குடன் நிலை குலையாத தன்மையுடன் அறிவுப்பூர்வமான வகையில் ஆதாரங்களை எடுத்து
வைத்து அந்த இஸ்லாமிய சமுதாயத்தை, ஏகத்துவத்தை விட்டுத் தடம் புரளாமல்
காத்து நின்றார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.
சாகா வரம் பெற்ற சத்திய வேதம்
யார் முஹம்மதை வணங்குகி றாரோ அவர் அறிந்து கொள்ளட்டும் முஹம்மது
(ஸல்) அவர்கள் நிச்சயமாக இறந்து விட்டார்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பாருங்கள்.
நபித்தோழர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்கும் அளவுக்கா கொள்கையில்
பலவீனர்களாக இருந்தார்கள்? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.
அப்படியானால் இப்படி ஒரு கடினமான வார்த்தைப் பிரயோகத்தை அபூபக்ர் (ரலி) ஏன் கையாள வேண்டும்?
நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று உமர் (ரலி) உரையாற்றியது
மக்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இறப்பின்மை - சாகா தன்மை என்பது இறைவனுக்கு
உரிய தனித் தன்மையாகும். நபி (ஸல்) அவர்கள் எழுந்து வருவார்கள் என்றால் அவர்கள் என்றும்
வாழும் இறைத்தன்மை உடையவர்கள் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவார்கள். இதனால் நபி (ஸல்)
அவர்கள் வணங்கப்படும் தகுதிக்கு உயர்த்தப்படும் பாதக நிலை ஏற்படும்.
எனவே அத்தகைய நிலையை உடைத்தெறியும் விதமாகவே அபூபக்ர் (ரலி)
அவர்கள் தூர நோக்குடன் சிந்தித்து இந்தக் கடின வார்த்தைகளைப் பயன்படுத்து கிறார்கள்.
அத்துடன் நின்று விடாது அதற்கு ஆதாரமாக அல்லாஹ்வின் மேற்கண்ட இரண்டு வசனங்களையும் கொண்டு
வந்து நிறுத்துகின்றார்கள்.
அதிலும் குறிப்பாக அபூபக்ர் (ரலி) ஆலஇம்ரான் 144வது வசனத்தை ஓதிக் காட்டியவுடன் இப்படி ஒரு வசனத்தை அல்லாஹ்
இறக்கியிருப்பதை நாம் அறியாமல் இருந்து விட்டோமே! என்று நபித்தோழர்கள் எண்ணியிருக்கின்
றார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் பிரிவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்
என்பதை விளங்கிக் கொள்ளலாம். அபூபக்ர் (ரலி) இந்த வசனத்தை ஓதியதும் அது எல்லோருடைய
நாவுகளிலும் ஆக்கிரமித்து அலங்கரிக்கத் துவங்கியது. அதை ஓதாத எந்த நபித்தோழரையும் நான்
காணவில்லை. அதை அசை போடாத எந்த நபித்தோழரையும் நான் பார்க்கவில்லை என்று இப்னு அப்பாஸ்
(ரலி) கூறுகின்றார்கள்.
அபூபக்ர் (ரலி)யிடமிருந்து இந்த வசனத்தைச் செவியுற்றதும் உமர்
(ரலி) கூறும் வார்த்தைகள் இதோ:
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓத நான்
கேட்ட போது தான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே அதிர்ச்சி அடைந்தேன். அப்போது என்
கால்களால் என் (உடல்) சுமையையே தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ரலி) ஓதிக் காட்டிய இவ்வசனத்தைக்
கேட்டு நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்து
விட்டேன் (புகாரி)
அபூபக்ர் (ரலி) இந்த வசனத்தை ஓதிய போது தான் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நான் விளங்கிக் கொண்டேன் என்று உமர் (ரலி)
கூறுகின்றார்கள். அப்படியானால் உமர் (ரலி) அவர்களுக்கு இந்த விளக்கம் தெரியாமல் போனது
ஏன் என்ற கேள்வி இயற்கையாகவே எழுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் இறந்த மறுநாள் அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னிலையில்
உமர் (ரலி) மிம்பரில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவர்களிடமே இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகின்றது.
நமக்கெல்லாம் இறுதியாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
இறப்பார்கள். அது வரை அவர்கள் உயிர் வாழ்வார்கள் என்றே நான் எதிர் பார்த்திருந்தேன்.
ஆனால் முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்றாலும் மேலான அல்லாஹ் நீங்கள்
நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் எனும்) ஓர் ஒளியை அமைத்துள்ளான். அதன் மூலம்
தான் அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் நேர்வழியைக் காண்பித்தான் என்று உமர் (ரலி)
பதில் அளிக்கின்றார்கள்.
இவ்வாறு உஹதுப் போர்க்களத்தில் ஒத்திகை மரணத்தில் அல்லாஹ் அருளிய
அந்த வசனம்,
இப்போது முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மையில் இறந்ததும் நபித்தோழர்களைத்
தடம் புரளாமல் காத்தது. இதன் மூலம் இந்த இறைவேதம், தான்
ஒரு சாகாவரம் பெற்ற வேதம் என்பதை நிரூபித்து நிற்கின்றது.
கொள்கையில் உறுதி மிக்க நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்பும் கொள்கையில் குன்றாய் நின்றனர்; நிலைத்தனர். ஆனால் ஒரு கூட்டம் தடம் புரண்டது. அது தான் அல்குர்ஆன்
தெரிவித்த மதமாற்ற முன்னறிவிப்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு)
வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன்
போர் தொடுக்க அபூபக்ர் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள், லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று
கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் -தண்டனைக்குரிய
குற்றம் புரிந்தவரைத் தவிர- அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என நபி (ஸல்) அவர்கள்
கூறியிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன்
போர் செய்ய முடியும்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர்
(ரலி) அவர்கள்,
உமரை நோக்கி, அல்லாஹ்வின்
மீது ஆணையாக,
தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக
நான் போர் செய்வேன். ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த
ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன்
போர் செய்வேன் என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப்
பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள்
கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1400
நாம் இந்த ஹதீஸில் கவனிக்க வேண்டிய விஷயம், மதம் மாறியவர்களைத் தான். இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இருக்கும்
வரை மார்க்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இறந்ததும் மார்க்கத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.
அதாவது முஹம்மது என்ற தனி நபருக்காக மார்க்கத்தில் இருந்தார்கள். அதனால் ஜகாத் கொடுத்தார்கள்.
அல்லாஹ் சொன்னான்; அவனது வேதம் அல்குர்ஆன் சொன்னது
என்பதற்காக இவர்கள் ஜகாத் கொடுக்கவில்லை. அல்லாஹ்வுக்காகக் கொடுப்பவர்கள் முஹம்மது
(ஸல்) இறந்த பின்பும் கொடுப்பார்கள் அல்லவா? அதனால் இவர்கள்
தனிநபர் வழிபாடு செய்த தரங்கெட்ட வழிகேடர்கள்! அவர்களை எதிர்த்துத் தான் ஆட்சித் தலைவர்
அபூபகர் (ரலி) அவர்கள் போர் தொடுத்தார்கள்.
மேற்கண்ட வசனம் மற்றும் ஹதீஸின் பின்னணியில் தவ்ஹீது ஜமாஅத்தில்
உள்ளவர்கள் தங்களிடம் தனிநபர் வழிபாடு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு, தர்ஹா வழிபாடு
கூடும் என்றோ,
அல்லது குர்ஆன் மட்டும் போதும் என்றோ பி.ஜே. கூறுகின்றார் என்று
வைத்துக் கொள்வோம். (அல்லாஹ் காப்பாற்றுவானாக!) அப்போது அவர் கூறும் அந்தக் கருத்துக்கு
நாம் சென்று விடுவோமா? ஒரு போதும் செல்ல மாட்டோம்.
அப்படிச் செல்லக் கூடாது என்பதற்காகத் தான் இந்த விளக்கம்!
இது போன்று தவ்ஹீது ஜமாஅத்தின் தலைவர்களில் ஒருவர் அடுத்தவரது
சொத்தை அபகரித்து விட்டார்கள் என்பதற்காகவோ, அல்லது பாலியல்
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியோ நீக்கப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது
அவருக்குப் பின்னால் ஒரு சிலர் செல்கிறார்கள் என்றால் அவர்களும் நிச்சயமாகத் தனிநபர்
வழிபாடு செய்பவர்கள் தான்; வழிகேட்டில் செல்பவர்கள் தான்.
மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களை நோக்கி நாம் சொல்கின்ற குற்றச்சாட்டு, தனிநபர் வழிபாடு என்ற குற்றச்சாட்டுத் தான்.
உதாரணமாக, ஹனபி மத்ஹபினர் ஃபஜ்ருத் தொழுகைக்கு
இகாமத் சொல்லப்பட்ட பிறகும் முன் சுன்னத் தொழுவது வழக்கம். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு
விட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு எதுவும் தொழக் கூடாது என்ற நபிமொழியை ஆதாரமாகக்
காட்டி இவ்வாறு தொழுவது கூடாது என்று நாம் சொல்கிறோம். ஆனால் ஹனபி மத்ஹபினர் இந்த ஹதீஸை
ஏற்காமல், எங்கள் இமாம் அபூஹனீபா இப்படித் தான் சொல்லியிருக்கிறார் என்று
சொன்னால் அதை நாம் தனிநபர் வழிபாடு என்கிறோம்.
ஹதீசுக்கு மாற்றமாக அமைந்த இந்த இமாம்களின் கருத்தை விட்டு விலகி
தவ்ஹீதுக்கு வந்தோம். ஏன்? இதுவெல்லாம் தனிநபர் வழிபாடு
என்பதால் தான்.
நாம் அது வரை பின்பற்றி வந்த அந்த இமாம்கள் ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்தவர்கள். அவர்களது ஆய்வில் ஏற்பட்ட குறைபாடுகளைத்
தனிநபர் வழிபாடு என்று கூறி அந்த மத்ஹபுகளை விட்டு வெளியே வந்தோம்.
அப்படிப்பட்ட நாம், அல்லாஹ்வுடைய
பயம் ஒருபுறம் இருக்கட்டும்; அடுத்தவர்கள் பார்ப்பார்களே
என்ற பயமும் வெட்கமும் இல்லாமல் ஒழுக்கக் கேட்டில் வீழ்பவர்களுக்குப் பின்னால் செல்வது
தனிநபர் வழிபாட்டிலும் தரங்கெட்ட வழிபாடாகும்.
ஏகத்துவத்தில் கடுகளவு பிடிமானம் உள்ளவர்களிடம் கூட இந்தத் தன்மை
ஏற்பட்டு விடக்கூடாது. இந்தத் தனிநபர் வழிபாடு கொள்பவர்கள் தவ்ஹீதுவாதிகளாக இருக்க
முடியாது. இது போன்ற வழிகேடுகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
EGATHUVAM FEB 2009