விவாதமும் விதண்டாவாதமும்
சமரசம் எனும் மாதம் இருமுறை பத்திரிக்கையில் 16-31 ஆகஸ்டு 2010 இதழில் "விதண்டாவாதக்
கலாச்சாரம்'
என்ற தலைப்பில் உமர் அலீ என்பவர் தமது ஆத்திரத்தைக் கொட்டியுள்ளார்.
"எங்களோடு விவாதம் செய்யத் தயாரா? சமீப காலமாகத் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க விளக்கக்
கூட்டங்களில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் வாசகம்தான் இது!' என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை.
"தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபடுவதால் நமது ஆற்றல்களும் செல்வங்களும்
நேரங்களும் விரயமாக்கப்பட்டு வருகின்றன. நாம் முன்னேறாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக்
காரணமாகும்'
என்று கட்டுரை தொடர்வதைப் பார்த்தால், வீண் விவாதம், விதண்டா வாதம், குதர்க்கமான சர்ச்சைகள் போன்ற அர்த்தமற்ற விவகாரங்களைத் தான்
கட்டுரையாளர் கடுமையாகச் சாடுகிறார் என்று நாம் கருதலாம். அவர் குறிப்பிட்டுள்ள குர்ஆன்-ஹதீஸ்
ஆதாரங்களும் இக்கருத்தையே பிரதிபலிக்கின்றன. ஆனால்...
"கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழகத்தில் விவாதங்களின் மூலமாக
இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கையை விட ஃபத்வாக்களின் மூலம் முஷ்ரிக்குகளாகவும் காஃபிர்களாகவும்
ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்' என்ற அவரது
ஆவேச வசனங்கள் விஷமத்தைப் பிரதிபலிக்கின்றன.
விதண்டா வாதங்களைச் சாடிய கட்டுரையாளர் "விவாதங்களின் மூலமாக
இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கை குறைவு, முஷ்ரிக்குளாகவும்
காஃபிர்களாகவும் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்' என்று கூறுவதன் வாயிலாக
சத்தியப் பிரச்சாரத்தின் ஒரு மகத்தான யுக்தியைக் கொச்சைப்படுத்துகிறார்.
ஆம், விவாதம் என்பது ஒரு பிரச்சார
யுக்தியல்லவா!
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும்
உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!
உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் 16:125
விவேகம், அழகிய அறிவுரைகள் மட்டுமன்றி
விவாதமும் பிரச்சாரத்திற்கான ஒரு வழி என்று
அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது உமர் அலீ பாயின் கவனத்திற்கு ஏன் வரவில்லை?
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது
இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச்
செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச்
செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச்
செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று
இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த
கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 2:258
எத்துணை அற்புதமான நிகழ்ச்சி இது!
திருக்குர்ஆனின் 25:63ஆம்
வசனத்தைக் குறிப்பிட்ட ஆத்திரக்கார உமர் அலீக்கு 2:258 மற்றும் 16:125 ஆகிய வசனங்கள் கண்களில்
தென்படாமல் போனது ஏனோ!
31 ஆண்டுகளில் சமரசத்தால் சாதிக்க இயலாமற் போனதையெல்லாம் 25 ஆண்டுகளில் ஏகத்துவப் புரட்சி சாதித்து விட்டதால் தான் விவாதத்தைப்
பற்றிப் போதிக்கிறார். காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும் தான் இவரைக் கண்டபடி எழுதத்
தூண்டியுள்ளது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற பெயரில் இவர்கள் முஷ்ரிக்குகளுடனும்
காஃபிர்களுடனும் சமரசம் செய்து கொள்வார்கள். மாநாடு என்ற பெயரில் மக்களைக் கூட்டி மாற்று
மதத்தினரைக் கொண்டு மார்க்கம் பேசச் சொல்வார்கள்.
சொல்வதைத் தெளிவாக - நேரடியாகச் சொல்லுங்கள் என்ற குர்ஆன் வசனத்தைப்
பத்திரிக்கை தலையங்கத்தின் தலைப்பில் போட்டு விட்டு கவிதை - சிறுகதை என கற்பனைகளைக்
காகிதங்களில் கொட்டி விற்பனை செய்வார்கள்.
மானுட வசந்தம் - தர்பியா என்ற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம்
நபிமொழி என்று கூறி வசனம் பேசுவார்கள்.
சுதந்திரமாகச் சுற்றித் திரியும் புறாக்களைப் பிடித்து வைத்து, பின்னர் எந்த பயனுமின்றி சமாதான அடையாளமாக பறக்கவிட்டு சடங்குகளுக்கும்
சம்பிரதாயங்களுக்கும் சாமரம் வீசுவார்கள்.
இவர்களுக்கென்று ஒருமித்த கருத்து எதுவுமில்லை. அதனால் தான்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழக அமைப்பு விவாதம் கூடாதென்று கூறும் நிலையில் கேரள
அமைப்பு விவாதம் செய்கின்றது.
ஐயா, உமர் அலீயாரே! 25 ஆண்டுகள் என்று காலக் குறிப்பு கொடுத்துள்ளீரே! உமக்கு வரலாறு
தெரியுமா?
எண்பதுகளின் மத்தியில் தவ்ஹீத் எழுச்சி ஏற்பட்டபோது தான் இஸ்லாத்தின்
வடிவமே சிதைக்கப்பட்டிருந்த நிலை மக்களுக்குத் தெரிய வந்தது. அப்போது தான் அனாச்சாரங்களையே
மக்களிடம் ஆச்சாரங்களாக அறிமுகப்படுத்திய உலமா சபையோரிடம் 48 பக்கங்களில் விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டது.
உலமாக்கள் குமுறினார்கள். பதில் எழுதத் திராணியில்லாததால் கேள்விகளை
அலட்சியம் செய்தார்கள். சத்தியத்தை மக்களிடம் தெளிவாகப் பேசிய எங்களை மக்களிடம் தவறாகச்
சித்தரித்தார்கள். வஹ்ஹாபிகள், யூதர்களின் கைக்கூலி, இஸ்லாத்தின் விரோதிகள், அரபு நாட்டுப்
பணத்திற்கு அடிமைப்பட்டு முன்னோர்களைக் கேவலப்படுத்துகிறார்கள், அவ்லியாக்களை அவமதிக்கிறார்கள், இமாம்களை இழிவுபடுத்துகிறார்கள் என்றெல்லாம் மக்களிடம் எடுத்துக்
கூறி சதிவேலைகளில் ஈடுபட்டார்கள்.
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க விவேகத்துடனும் அழகிய அறிவுரைகள்
மூலமாகவும் அல்லாஹ்வின் உண்மையான பாதைக்கு மக்களை அழைத்த போது தான், "அவர்களின் பேச்சைக் கேட்காதே! பத்திரிக்கைகளைப் படிக்காதே!' எனக் கூறி சத்தியப் பிரச்சாரத்தையும் பிரசுரத்தையும் முடக்க
முயன்றனர். இத்தனைத் தடைகளையும் மீறி பொதுமக்களே தவ்ஹீத் பிரசுரங்களில் உள்ள விவரங்களை
- ஆதாரங்களைப் படித்துவிட்டு உலமாப் பெருமக்களிடம் கேள்விகளைக் கேட்டபோது - ஆதாரம்
கேட்ட போது அந்த உலமாக்கள் மழுப்பினார்கள். மார்க்க ஆதாரங்கள் அரபியில் உள்ளன எனக்
கூறி குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களைக் கொச்சைப்படுத்தி சத்தியத்தைப் பொய்ப்பித்த போது தான்
விவாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அடிப்படை ஆதாரங்களை அலட்சியப்படுத்தி விட்டு முன்னோர்கள் சென்டிமெண்டில்
சமுதாயத்தை எங்கோ ஓட்டிச் செல்ல முயன்ற உலமாக்களை இனங்காட்டவே விவாதம் அரங்கேறியது.
அதுவும் நாகரிகமாக!
கோட்டாறில் நடந்த விவாதம் ஷிர்க்குக்கு சமாதி கட்டியது. ஜெபமணியுடன்
நடந்த விவாதம் கிறிஸ்தவர்களின் சவடாலுக்கு முடிவு கட்டியது. காதியானிகளுடன் நடந்த விவாதம்
தடம்புரண்டவர்களை மீட்டெடுத்தது.
சுன்னத் ஜமாஅத்தினருடன் நடந்த விவாதம் சத்தியத்தைச் சாமானியர்களுக்கும்
உணர்த்தியது. நாத்திகவாதிகளுடன் நடந்த விவாதம் முஸ்லிம்களைத் தலை நிமிரச் செய்தது.
இவை போக...
சத்தியப் பிரச்சாரம் சதிகளை முறியடித்து இளைஞர்களையும் சமூக
சீர்திருத்தக் காரியங்களில் ஈடுபட வைத்தது. வரதட்சணைக் கொடுமையை ஏகத்துவப் எழுச்சி
விரட்டியடித்ததால் புரட்சிகரமான திருமணங்கள் மலர்ந்தன.
கதாகாலட்சேபங்களை ஹதீஸ்களாகக் கேட்டுவந்த பாமர முஸ்லிம்களுக்கு
ஹதீஸ் கலை பற்றிய பாடம் நடத்தப்பட்டது சாதனையில்லையா?
அரபி பூச்சாண்டி காட்டிய பண்டிதர்களின் சமாளிப்பை அடையாளம் காட்ட
பாமரர்களும் புரியும் வகையில் ஆதார அடிப்படைகளைத் தமிழாக்கம் செய்தது சாதனை தானே!
அரபி இலக்கணம், தர்க்க சாஸ்த்திரம், ஃபிக்ஹு சட்டங்களைப் பாடத்திட்டங்களாக வைத்திருந்த அரபுக்கல்லூரிகள்
தஃப்ஸீர் மற்றும் ஹதீஸ் நூல்களைத் தூசி தட்டியது எப்போது? எண்பதுகளின் இறுதியில் தானே!
கட்டுரைகளில் குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களைக் கூறுவதும் அவற்றிற்கான
இலக்கங்களைக் குறிப்பிடுவதும் ஏகத்துவப் புரட்சி ஏற்படுத்திய மாற்றமல்லவா?
எனவே கண்ணாடிக் கூண்டில் இருந்து கொண்டு கல்கோட்டையை நோக்கிக்
கல்லெறிய வேண்டாம்! உண்மையை உணர்ந்து செயல்படுங்கள் என்பதை மடடும் இப்போதைக்குச் சொல்லி
வைக்கின்றோம்.
மற்றபடி அவர் எடுத்தாண்டிருக்கும் ஆதாரங்கள் யாவும் விதண்டாவாதங்களைக்
கண்டிக்கும் வகையில் அமைந்தவை என்பதால் அதற்குப் பதில் சொல்லத் தேவையில்லை.
ஒரு வேளை, அவை விவாதத்தையே கண்டிக்கும்
என்று அவர்கள் கருதினால் அதைப் பற்றி விவாதம் செய்யத் தயாரா என்று கேட்பதைத் தவிர வேறு
வழியில்லை.
- லப்பைக்குடிக்காட்டிலிருந்து அம்சம்
EGATHUVAM NOV 2010