Apr 19, 2017

பெருநாள் தொழுகை தக்பீர்கள்

பெருநாள் தொழுகை தக்பீர்கள்

ஆதாரமற்ற ஹனபிச் சட்டம்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

முஸ்லிம்கள் பல்வேறு வணக்க வழிபாடுகளில் தங்களுக்குள் வேறுபட்டு இருப்பதைப் போன்று, இஸ்லாத்தின் அடிப்படைத் தூண் என வர்ணிக்கப்படும் தொழுகை முறையிலும் பிளவுபட்டே இருக்கின்றனர்.

வருடத்திற்கு இரு முறை தொழப்படும் பெருநாள் தொழுகையைக் கூட நபிகளார் கற்றுத் தந்த முறையில் நிறைவேற்றுவதில்லை. ஒவ்வொரு மத்ஹபினரும் வெவ்வேறான முறையில் பெருநாள் தொழுகையை தொழுகின்றனர்.

குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இவ்விரண்டு மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருந்திருந்தால் பெருநாள் தொழுகை முறை உட்பட எதிலும் ஆளுக்கொரு முறையைத் தேர்வு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. அனைவரும் ஒரே முறையில் அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றுபவர்களாக இருந்திருப்பார்கள்.

பெருநாள் தொழுகையில் எத்தனை தக்பீர்கள் கூறவேண்டும்? என்று மத்ஹபைப் பின்பற்றுவோரிடம் கேட்டால் ஷாஃபி மத்ஹபினர் ஒரு விதமாகவும், ஹனபி மத்ஹபினர் வேறு விதமாகவும் பதிலளிக்கின்றனர்.

எனவே தேவையற்ற இக்குழப்பத்தை போக்கும் விதமாக பெருநாள் தக்பீர் தொடர்பான தெளிவான நபிவழியை இங்கே காண்போம்.

நபிவழி தக்பீர்கள் 7+5

பெருநாள் தொழுகையை நபியவர்கள் எவ்வாறு தொழுதுள்ளார்கள் என்பதைப் பல்வேறு ஹதீஸ்கள் மிகத் தெளிவாக, குழப்பத்திற்கு இடமில்லாத வகையில் தெளிவுபடுத்துகின்றன. முதல் ரக்அத்தில் தக்பீர் தஹ்ரீமா தவிர கூடுதலாக ஏழு தக்பீர்களையும், இரண்டாவது ரக்அத்தில் கூடுலாக ஐந்து தக்பீர்களையும் கூறுவார்கள். இவைகளைக் கூறிய பிறகே அல்ஹம்து சூராவை ஓத ஆரம்பிப்பார்கள். இவ்வாறு தான் நபிகளாரின் பெருநாள் தொழுகை முறை அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),

நூல்கள்: அபூதாவூத் 971, பைஹகீ 6392

பெருநாள் தக்பீர் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களில் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாகும். இமாம் புகாரி அவர்கள் தக்பீர் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களில் இதை விட மிக ஆதாரப்பூர்வமான செய்தி வேறெதுவும் இல்லை என குறிப்பிடுகிறார்.

நூல்: தர்தீபுல் இலலில் கபீர்

இமாம் ஷாஃபி அவர்களும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் கூற வேண்டும் என கூறியுள்ளார்கள்.

(பார்க்க: அல் உம்மு, பாகம்: 1, பக்கம்: 193)

ஹனபி மத்ஹபினரின் அறியாமை

7+5 என்ற எண்ணிக்கையில் தான் தக்பீர் கூற வேண்டும், இதுவே நபிவழி என்பதைக் கண்டோம். ஷாபி மத்ஹபினர் உட்பட பலரும் இந்த வழிமுறையைத் தேர்வு செய்து தான் பெருநாள் தொழுகை தொழுகின்றனர். ஆனால் ஹனபி மத்ஹபினர் இந்நபிவழிக்கு மாற்றமான முறையில் தொழுது வருகின்றனர்.

முதல் ரக்அத்தில் தக்பீர் தஹ்ரீமாவிற்குப் பிறகு கூடுதலாக மூன்று தக்பீர்கள் என மொத்தம் நான்கு தக்பீர்கள் கூறி, பிறகு ஓத ஆரம்பம் செய்கின்றனர். இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து, துணை சூரா ஆகியவற்றை ஓதிவிட்டு, பிறகு மூன்று தக்பீர் கூறுகின்றனர்.

இவர்கள் இவ்வாறு தொழுவதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக குறிப்பிடுகின்றனர்.

"இரு பெருநாள் தொழுகைகளில் நபிகள் நாயகம் (ஸல்) எவ்வாறு தக்பீர் கூறுவார்கள்?'' என அபூ மூஸா, ஹுதைஃபா இருவரிடமும் ஸயீத் பின் அல்ஆஸ் கேட்டார். அதற்கு, "ஜனாஸா தொழுகையில் கூறுவதைப் போன்றே (ஒரு ரக்அத்திற்கு) நபியவர்கள் நான்கு தக்பீர்கள் கூறுவார்கள்'' என அபூ மூஸா பதிலளித்தார்.

அறிவிப்பவர்: அபூ ஆயிஷா

நூல்; அபூதாவூத் 973

கூடுதலான தக்பீர்களை சேர்த்து மொத்தம் ஒரு ரக்அத்திற்கு நான்கு தக்பீர்கள் நபியவர்கள் கூறியதாக இந்தச் செய்தியில் அபூமூஸா அறிவிக்கின்றார். இதை ஆதாரமாகக் கொண்டு தான் தாங்கள் கூடுதலாக 3+3 தக்பீர்கள் கூறுவதாகத் தெரிவிக்கின்றனர். பல்வேறு காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

1. இந்த செய்தியின் நான்காவது அறிவிப்பாளரான அப்துர் ரஹ்மான் பின் ஸவ்பான் என்பார் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.

இவரது ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியதாகும் என இமாம் அஹ்மத் விமர்சித்துள்ளார், அபூ ஜூர்ஆ, அஜலி, நஸயி போன்ற அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என குறை கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 21, பக்கம்: 150, 151

எனவே இவரது செய்தி ஏற்கத்தக்கதல்ல என்பது நிரூபணமாகிறது.

2. இதே அறிவிப்பாளர் தொடரில் அபூ ஆயிஷா என்பார் ஏழாவது அறிவிப்பாளராக இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார்.

இப்னுல் கத்தான், இப்னுல் ஹஸ்ம் ஆகிய அறிஞர்கள் இவர் யாரென்று அறியப்படாதவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 38, பக்கம்: 147

இப்னு ஹஜர் மற்றும் தஹபீ ஆகியவர்களும் இவரை அறியப்படாதவர் என்றே குறை கூறுகின்றனர். ஹதீஸ் கலை விதிப்படி அறியப்படாதவர் ஹதிஸின் அறிவிப்பாளராக இடம் பெற்றால் அந்த ஹதீஸ் பலவீனமானதாகக் கருதப்படும். இது மேலும் இச்செய்தியின் பலவீனத்தை அதிகரிக்கின்றது.

3. இது போக இந்தச் செய்தியில் குழப்பம் உள்ளதாக இமாம் பைஹகீ குறிப்பிடுகின்றார். அறிவிப்பாளர் இரு விஷயத்தைத் தவறுதலாக அறிவித்திருக்கிறார்.

நபிகள் நாயகம் கூறியதாக அபூமூஸா கூறினார் என்பது ஒரு தவறு. ஏனெனில் இதை நபிகள் நாயகம் கூறியதாக அபூமூஸா கூறவில்லை. மாறாக இப்னு மஸ்ஊத் கூறியதாகவே அவர்கள் அனைவர்களும் கூறுகின்றனர்.

ஸயீத் பின் அல்ஆஸ் என்பார் ஹுதைஃபா, அபூ மூஸா இருவரிடமும் பெருநாள் தொழுகையின் தக்பீரைப் பற்றி விளக்கம் கேட்டு ஆளனுப்பினார். அதற்கு அவ்விருவரும் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் இது பற்றி கேட்கச் சொல்ல, அதற்கு இப்னு மஸ்ஊத் தக்பீர் கூறும் முறையை தெரிவிக்கின்றார். இதுவே இச்சம்பவத்தின் உண்மை நிலை.

மற்றொரு தவறு:  அவ்வாறு இப்னு மஸ்ஊத் தக்பீர் கூறும் முறையை கூறும் போது முதல் ரக்அத்தில் 4 தக்பீர்களை ஓதுவதற்கு முன்பும், இரண்டாவது ரக்அத்தில் ஓத வேண்டியவற்றை ஓதிவிட்டு ருகூவில் இணையும் முன் நான்கு தக்பீர்கள் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட சம்பவம் இப்னு மஸ்ஊத் கூறியதாக பைஹகீ பாகம்: 3, பக்கம்: 289ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இப்னு மஸ்ஊத் கூறியதை நபிகள் நாயகம் கூறியதாக அறிவிப்பாளர் தவறாக அறிவித்து விட்டார். மேலும் தக்பீரின் எண்ணிக்கை விஷயத்திலும் தவறாகவே கூறியுள்ளார். இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள் என்பதே பிரபலமானது  என்று இமாம் பைஹகீ குறிப்பிடுகின்றார்.

குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டு மட்டும் தான் மார்க்கக் கடமைகளை, வணக்க வழிபாடுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவையாகும். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒன்றைக் கூறினார் என்பதால் அது வணக்கம் என்ற தகுதியை அடையாது.

இவர்கள் ஆதாரமாக மேற்கோள் காட்டும் ஹதீஸினை இமாம் நவவீ அவர்கள் உட்பட பல அறிஞர்கள் பலவீனமானது என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வளவு பலவீனம் நிறைந்த ஒரு ஹதீஸை இவர்கள் தூக்கிப் பிடித்து நிறுத்தப் பார்ப்பது, அவர்கள் தங்கள் மத்ஹபின் மீது கொண்டுள்ள வெறியை, தீராத மோகத்தைப் பளிச்சிடுகின்றது.

ஹனபி மத்ஹபினர் ஆதாரமாகக் காட்டும் இந்த ஹதீஸ் ஆதாரத்திற்குத்  தகுந்ததல்ல. இது மிகவும் பலவீனமான செய்தி என்பதை அறியலாம்.

வளீன் பின் அதாஃ என்பாரின் அறிவிப்பு

எங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பெருநாள் தொழுகையை தொழுவித்தார்கள். முதல் ரக்அத்தில் நான்கு தக்பீர்கள் இரண்டாம் ரக்அத்தில் நான்கு (என மொத்தம் எட்டு) தக்பீர்கள் கூறினார்கள். தொழுகையை முடித்து எங்களிடையே முன்வந்து "ஜனாஸா தொழுகையின் தக்பீரைப் போன்று தான் மறந்து விடாதீர்கள்'' என்று கூறினார்கள்

அறிவிப்பாளர்; சில நபித்தோழர்கள்

நூல்: ஷரஹ் மஆனில் ஆஸார், பாகம்: 4, பக்கம்: 345

ஹனபி மத்ஹபினர் கூறும் எட்டு தக்பீர்களுக்கு இந்தச் செய்தியும் ஒரு ஆதாரமாக இருப்பதைக் காணலாம். எனினும் இதுவும் ஏற்கத்தக்க செய்தியல்ல. இதன் அறிவிப்பாளர் வரிசையில் வளீன் பின் அதாஃ என்பவர் இடம் பெறுகின்றார். இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்று குறிப்பிட்டாலும் இவர் பலவீனமானவர் ஆவார்.

இமாம் இப்னு ஸஃத், "இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர்' என்று குறிப்பிட்டுள்ளார். "ஹதீஸ் துறையில் மோசமானவர்' என இமாம் ஜவ்ஸஜானி குறிப்பிடுகின்றார். இவரை பலவீனமானவர் என்று இப்னு கானிஃ என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

இவர் மனனக் கோளாறு உள்ளவர் என்று வலீத் பின் முஸ்லிமும், ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களும் குறை கூறியுள்ளனர்.


ஆக ஹனபி மத்ஹபினரின் தக்பீர் முறைக்கு எந்தவொரு ஆதாரப்பூர்வமான ஹதீசும் இல்லை. நபிவழி எதுவென்பதை அறிந்த பிறகும் அதைப் புறக்கணிப்பவர் நரகில் நுழையப் போதுமானதை பெற்றுக் கொண்டு விட்டார். அல்லாஹ் நம்மை காப்பானாக!

EGATHUVAM NOV 2010