Apr 11, 2017

வாழ்க்கையே வணக்கமாக....

வாழ்க்கையே வணக்கமாக....

எம். ஷம்சுல்லுஹா

துறவுடன் அறத்தைச் சேர்த்து, துறவறம் என்று கூறி, தமிழ் மொழியில் துறவுக்கு மகிமை சேர்க்கிறார்கள். உலகமெங்கும் உள்ள மதங்களில், மார்க்கங்களில் துறவுக்கு ஒரு மரியாதை இருப்பதால் தான் துறவறம் என்று கூறி தமிழ் மக்கள் அழகு பார்க்கின்றனர்.

ஆனால் இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்த வரை துறவுக்கு அரைக் காசுக்கு மதிப்பில்லை என்பது மட்டுமல்ல! அதற்கு அனுமதியும் கிடையாது.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக் கொண்டனர். அவர்கல் ஒருவர், (இனி மேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டு விடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 5063

துறவு மேற்கொள்வதற்கு இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தர்மமாகும் தாம்பத்தியம்

உலக மக்களில் சிலர் துறவைத் தேர்வு செய்வதற்குக் காரணம் திருமணம் என்பது இறை அன்பைப் பெறுவதற்கு ஒரு தடை என்று கருதுவது தான். ஆனால் இஸ்லாம் இந்தச் சித்தாந்தத்தைத் தகர்த்தெறிகின்றது.

நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! வசதி படைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய் விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தான தர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தான தர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!) என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ் மாலையும் (அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு ஓரிறை உறுதி மொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு என்று கூறினார்கள்.

மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக் கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1832

இஸ்லாம் தாம்பத்தியத்தையே தர்மமாக ஆக்கி விட்டது. அதற்கு இறைவனின் பதிவேட்டில் நன்மையும் பதியப்படுகின்றது என்று இஸ்லாம் கூறுகின்றது.

இறை அன்பு இல்லையேல் இந்த இல்லறத்திற்கு அவனது ஏட்டில் நன்மை பதியப்படுமா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

உணவு ஊட்டி விடுவதற்கும் கூலி

உடலுறவை விடுங்கள்! மனைவிக்கு உண்வு ஊட்டுவதற்குக் கூட இறைவனிடத்தில் கூலி வழங்கப்படுகின்றது.

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)

நூல்: புகாரி 56

நமது நாட்டில் கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் தான் மனைவி உணவு உண்ண வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகின்றது. ஆனால் இஸ்லாம் மார்க்கமோ மனைவியுடன் ஒன்றாக இருந்து உண்ணுதல் என்ற நிலையைத் தாண்டி, மனைவிக்கு ஊட்டி விடச் சொல்கின்றது.

இவ்வாறு உணவு ஊட்டுகின்ற இந்தச் செயலுக்கு இறைவனால் நன்மையும் அளிக்கப்படுகின்றது. ஆம்! மனைவியின் மீது பொழிகின்ற இந்த அன்பு இறைவனின் அன்பைப் பெற்றுத் தருகின்றது.

அன்பில்லாருக்கு அருளில்லை

மனைவியின் மீது பொழிகின்ற அன்பு மட்டுமல்ல! பெற்ற பிள்ளைகள் மீது பொழிகின்ற அன்பும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹசன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள், எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்கல் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5997

பெற்றோர் தங்கள் பிள்ளைச் செல்வங்கள் மீது முத்த மாரி பொழிகின்ற போது அந்த அன்பு மழைக்காக அல்லாஹ்வின் அருள் மழை பொழிகின்றது.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கடம் வந்து, நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5998

பிள்ளைகள் மீது அன்பு செலுத்தாதவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் இல்லை என்பதை இந்த நபிமொழிகள் எடுத்துக் காட்டுகின்றன.



குடும்பச் செலவுக்கும்  கூலி உண்டு

பிள்ளைகளைக் கொஞ்சுவதற்கும் அவர்கள் மீது முத்த மாரி பொழிவதற்கும் மட்டும் கூலி வழங்கப்படுவதில்லை. மனைவி, மக்களுக்குச் செலவு செய்வதற்கும் இறைவனிடம் கூலி வழங்கப் படுகின்றது.

அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் செய்வதற்கு) நீ செலவழித்த ஒரு தீனார்! அடிமையை விடுதலை செய்வதற்கு நீ செலவழித்த ஒரு தீனார்! ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு தீனார்! உனது குடும்பத்திற்கு நீ செலவு செய்த ஒரு தீனார்! இவற்றில் மாபெரும் கூலியைக் கொண்டது உனது குடும்பத்தாருக்கு நீ செலவழித்த தீனார் தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1661

உடல் பசியைத் தணிக்கின்ற தாம்பத்தியத்திற்கும் நன்மை! செல்லமாகத் தன் பிள்ளைக்குக் கொடுக்கும் முத்தத்திற்கும் நன்மை! மனைவிக்கு உணவு ஊட்டுவதற்கும் நன்மை! குடும்பத்திற்குச் செலவு செய்வதற்கும் நன்மை என்று சொல்லும் ஒரே மார்க்க நெறி உலகில் இஸ்லாம் மட்டும் தான்.

திருமணம் என்பது இறைவனின் அன்பைப் பெறுவதற்குத் தடைக்கல் அல்ல என்பதையே மேற்கண்ட நபிமொழிகள் நமக்கு ஐயத்திற்கு இடமின்றி நிரூபித்து நிற்கின்றன.


சன்னியாசம், துறவு போன்றவற்றில் இறையன்பு இல்லை. சம்சார உறவில் தான் இறையன்பு உள்ளது என்பதை இஸ்லாம் உலகுக்கு உணர்த்தி, வாழ்க்கையையே ஒரு வணக்கமாக அமைத்திருக்கின்றது.

EGATHUVAM JAN 2009