Apr 11, 2017

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு – 7

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு – 7

பி. ஜைனுல் ஆபிதீன்

முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களால் விளங்கிக் கொள்ளத்தக்கவையே என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம். இதுவரை ஐந்து ஆதாரங்களைக் கண்டுள்ளோம்.

ஆறாவது ஆதாரம்

திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டதாக இறைவன் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். மக்கள் விளங்குவதற்காகவே அரபு மொழியில் அருளப்பட்டதாகவும், அரபு மொழியில் அமைந்த அதன் வசனங்கள் தெளிவாக்கப்பட்டு விட்டதாகவும் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.

அல்குர்ஆன் 26:195

நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம்.

அல்குர்ஆன் 12:2

இவ்வாறே அவர்கள் (இறைவனை) அஞ்சுவதற்காகவும், அல்லது அவர்களுக்குப் படிப்பினை உண்டாக்கவும் குர்ஆனை அரபு மொழியில் அருளினோம். அதில் தெளிவாக எச்சரித்துள்ளோம்.

அல்குர்ஆன் 20:113

அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)

அல்குர்ஆன் 39:28

(இது) விளங்கிக் கொள்ளும் சமுதாயத்திற்காக வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்ட வேதம். அரபு மொழியில் அமைந்த குர்ஆன்.

அல்குர்ஆன் 41:3

(மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், சந்தேகமே இல்லாத ஒன்று திரட்டப்படும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும் உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம்.

அல்குர்ஆன் 42:7

நீங்கள் விளங்குவதற்காக அரபு மொழியில் அமைந்த குர்ஆனாக இதை நாம் ஆக்கினோம்.

அல்குர்ஆன் 43:3

இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (இது) அரபியல்லாததாகவும், (இவர்) அரபியராகவும் இருக்கிறாரே? என்று கூறுவார்கள். அல்குர்ஆன் 41:44

ஒரு மொழியில் அருளப்பட்டது என்றால், அந்த மொழி அறிந்தவர்களால் அதனை அறிய முடியும் என்பது தெளிவு. அதை வேறு மொழிகளில் மாற்றம் செய்யும் போது மற்றவர்களும் அதை அறிந்து கொள்ளலாம் என்பதும் தெளிவு.

அல்லாஹ், திருக்குர்ஆனை அரபு மொழியில் அருளியதாக மட்டும் கூறவில்லை; அதற்கும் மேலாக, தெளிவான அரபு மொழியில் அருளி இருப்பதாகக் கூறுகின்றான். முஹ்கம் வசனங்கள் மட்டுமல்லாது முதஷாபிஹ் வசனங்களும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப்பட்டிருக்கின்றன.

அரபு மொழியில், தெளிவான அரபு மொழியில் அருளப்பட்ட முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்குமே விளங்காது என்றால், அவற்றை விளங்குவதற்காக முயற்சிப்பவர்களுக்குக் கூட விளங்காது என்றால் எத்தகைய விபரீதமான எண்ணத்தை ஏற்படுத்தி விடும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்று கூறுவதன் மூலம், திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டது என்பதையே மறுக்கும் நிலை ஏற்படும்.

திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் ஒரு மொழியில் அருளப்பட்டிருப்பதே அது விளங்கிக் கொள்ளக் கூடியது என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது.

ஏழாவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்பதற்குச் சான்றாகத் திருக்குர்ஆனை மக்கள் முன் சமர்ப்பித்த போது மக்கத்துக் காஃபிர்கள், திருக்குர்ஆன் இறை வேதம் அல்ல என்று சாதிக்கும் முயற்சிகளில் இறங்கினார்கள். கவிதை என்றார்கள். நபி (ஸல்) அவர்களைக் கவிஞர் என்றும் பைத்தியக்காரர் என்றும் பறைசாற்றினார்கள். நாங்கள் நினைத்தால் இது போல் நாங்களும் கொண்டு வருவோம் என்றார்கள். (பார்க்க: அல்குர்ஆன் 8:31)

இந்தத் திருக்குர்ஆனில் ஏதேனும் ஒரு குறைபாடு தென்படாதா? அதை வைத்து முஹம்மது நபியல்ல என்று நிரூபிக்க முடியாதா? என்றெல்லாம் அலைந்து கொண்டிருந்தார்கள்.

குர்ஆனில் விளங்காதவைகளும் உள்ளன என்று தெரிய வந்தால் இந்த வாய்ப்பை அவர்கள் நழுவ விடுவார்களா? குர்ஆனை ஏற்றுக்கொண்டவர்கள் வேண்டுமானால், குர்ஆனில் விளங்காதவை இருந்தாலும் கூட அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டு விடக் கூடும். குர்ஆனை நம்பாதவர்கள் நிச்சயம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். எவருக்குமே விளங்காதவை குர்ஆனில் உண்டு என்றால் நிச்சயமாக அது உளறல் தான் என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள். முஹம்மது உளறுகிறார் என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருப்பார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் காஃபிர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் குர்ஆனில் விளங்காதவை உள்ளன என்ற பிரச்சனையைக் கிளப்பியதே இல்லை. எவருக்குமே விளங்காதவை குர்ஆனில் உள்ளதாக வைத்துக் கொண்டால் அவர்கள் பார்வையில் இது பெரிய பலவீனம். குர்ஆன் இறை வேதம் அல்ல என்ற தங்களின் வாதத்தை இதன் மூலம் அவர்கள் நிரூபிக்க முயன்றிருப்பார்கள். அப்படி எதுவும் நடக்காமல் இருந்ததே குர்ஆன் அனைத்தும் விளங்கும் என்பதற்குத் தகுந்த சான்றுகளாகும்.

எட்டாவது ஆதாரம்

சட்ட திட்டங்களைக் கூறக்கூடிய முஹ்கம் வசனங்கள் மட்டுமே விளங்கும்; சட்ட திட்டங்களைக் கூறாத முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்பதும் இவர்களின் வாதம்.

திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் 6666 ஆகும். இவற்றில் சட்ட திட்டங்களைக் கூறும் வசனங்கள் சுமார் 500 வசனங்கள் மட்டுமே! மீதமுள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் இவர்களின் பார்வையில் முதஷாபிஹ் வசனங்களாகும். இந்தக் கணக்கின்படி திருக்குர்ஆனில் சுமார் 8 சதவிகித வசனங்களே மனிதர்கள் விளங்கக்கூடியவை. மீதி 92 சதவிகித வசனங்கள் எவருக்குமே விளங்காதவை என்ற கருத்து ஏற்படுகின்றது.

திருக்குர்ஆனில் முக்கால் பாகத்துக்கும் மேல் விளங்க முடியாதவை என்பதை விட வேறு விபரீதமான முடிவு என்ன இருக்க முடியும்? இதை விடக் குர்ஆனுக்கு வேறு களங்கம் என்ன இருக்க முடியும்?

ஒன்பதாவது ஆதாரம்

மற்றொரு கோணத்தின்படிப் பார்த்தால் இதை விட இன்னொரு விபரீதம் ஏற்படும்.

இவர்களின் வாதப்படி முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே விளங்க முடியாது.

இந்த வாதத்தின்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூட இதை விளங்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் கூட முதஷாபிஹ் வசனங்களை விளங்க மாட்டார்கள். ஏனெனில் முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே விளங்க முடியாது என்பது இவர்களின் வாதம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் விளங்காது என்றால் நபியவர்களுக்கும் விளங்காது என்ற விபரீதமான நிலை உருவாகும். நபி (ஸல்) அவர்களுக்கே விளங்காது என்றால் அவர்களிடம் பாடம் பெற்ற எந்தவொரு நபித்தோழருக்கும் அவை விளங்காது என்றாகும்.

ஆம்! திருக்குர்ஆனின் 92 சதவிகித வசனங்கள், அதைக் கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கும் விளங்காது. அதைப் பெற்றுத் தந்த அல்லாஹ்வின் தூதருக்கும் விளங்காது. அவர்களிடம் நேரடியாகப் பாடம் பயின்ற அன்றைய சமுதாயம் முழுமைக்கும் விளங்காது என்பதைத் தவிர விபரீதமான முடிவு வேறு என்ன இருக்க முடியும்?

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் 16:44

எந்தத் திருப்பணிக்காக முஹம்மது (ஸல்) அவர்களைத் தேர்வு செய்து இறைவன் அனுப்பினானோ, எந்தக் குர்ஆனை மக்களுக்கு விளக்குவதற்காக அவர்களை நியமனம் செய்தானோ அந்தத் தூதருக்கு திருக்குர்ஆனின் முக்கால் பாகத்திற்கு மேல் விளங்காது என்ற முடிவை உண்மையான முஸ்லிம்கள் எவரேனும் ஒப்புக் கொள்ள முடியுமா?

திருக்குர்ஆனின் முக்கால் பாகத்தை நபியும் விளங்கவில்லை, நபித்தோழர்களுக்கும் விளக்கி வைக்கவில்லை என்ற நச்சுக் கருத்தை யார் தான் ஒப்புக் கொள்ள முடியும்?

அல்லாஹ்வையும், அவன் அருளிய வேதத்தையும், அது அருளப்பட்ட நோக்கத்தையும், அல்லாஹ்வின் தூதருடைய பொறுப்புக்களையும் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே திருக்குர்ஆனில் ஒரு வசனம் கூட நபியவர்களுக்கு விளங்காது என்று கூறத் துணிய மாட்டார். தம் தோழர்களில் எவருக்குமே நபி (ஸல்) அவர்கள் அதை விளக்கவில்லை, விளக்க முடியவில்லை என்று கூற மாட்டார்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM JAN 2009