Apr 11, 2017

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்

மீராள் மைந்தன், கடையநல்லூர்

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு

பெண் புத்தி பின் புத்தி

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

என்றெல்லாம் பெண்ணினத்தை இழிவுபடுத்திப் பல்வேறு பழமொழிகள் நடைமுறையில் கூறப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்ட காலம் அது. இன்றைய காலத்திலும் பெண்கள் போகப் பொருளாகத் தான் கருதப்படுகின்றனர். ஆனால் உண்மையிலேயே பெண்களுக்குரிய உரிமைகளை வழங்கி, அவர்களுக்குரிய கடமைகளையும் தெளிவுபடுத்திய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். பெண்ணுரிமை பறிக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன (அல்குர்ஆன் 2:228) என்று பெண்ணுரிமை போற்றிய மார்க்கம் தான் இஸ்லாம். நம்முடைய சமுதாயத்திலும் மார்க்கம் தெரியாத காரணத்தினால் பெண்களுக்குப் பல்வேறு விதமான கொடுமைகள் இழைக்கப்பட்டன. பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது. பள்ளியில் சென்று தொழுவது, மனதிற்குப் பிடித்த ஆண்மகனைத் திருமணம் செய்தல், மஹர் எனும் மணக்கொடை மறுக்கப்பட்டு பெண்களே இலட்சக் கணக்கில் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்யும் அவல நிலை, இத்தா என்ற பெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பது இன்னும் எவ்வளவோ கொடுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இன்றைக்கு தவ்ஹீத் பேரெழுச்சிக்குப் பின்னால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்றே கூற வேண்டும். இன்று பெண்கள் மதரஸாக்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஆண்களை விட பெண் ஆலிமாக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள இளம் பெண்களில் ஓரளவினர் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்தே வைத்துள்ளனர்.

ஆனால் சில விஷயங்களை மார்க்கத்தின் பெயரால் தவறாகவும் விளங்கி வைத்துள்ளனர்.

இன்றைக்கு அனைத்துச் சமுதாயங்களிலும் மாமியார் கொடுமை என்பது எழுதப்படாத ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. தன்னுடைய மகனுக்கு மனைவியாக வந்து விட்ட காரணத்தினால் தன்னுடைய மருமகளை ஒரு அடிமைப் பெண்ணைப் போன்று, ஒரு வேலைக்காரியைப் போன்று நடத்தக்கூடிய அவல நிலை காணப்படுகிறது. தன்னுடைய மருமகள் தெரியாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டாலும் அதை ஊதிப் பெரிதாக்கி பஞ்சாயத்தைக் கூட்டக்கூடிய நிலையை சில மாமியார்கள் உருவாக்கி விடுகின்றனர். மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்ற வழக்கத்தில் உள்ள இந்தப் பழமொழி மாமியார்களின் ஆதிக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. ஆனால் அனைத்து மாமியார்களும் இப்படித் தான் என்று கூறிவிட முடியாது. தான் பெற்ற மகளை விட மருமகள்களை நேசிக்கின்ற குணவதிகளும் பலர் இருக்கத் தான் செய்கின்றனர்

மாமியார் கொடுமை பரவலாக இருக்கின்ற காரணத்தினால் பல மருமகள்கள் முன்னெச்சரிக்கையாக மாமியார் விஷயத்தில் கடுமை காட்டத் துவங்கி விடுகின்றனர். தன்னுடைய மாமனார், மாமியாருக்குப் பணிவிடைகள் செய்வது தனக்குக் கடமையில்லை; கணவனுக்கு மட்டும் தான் பணிவிடை செய்வது கடமை; இவ்வாறு தான் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் என்று சில பெண்கள் மாமனார் மாமியார்களைத் தவியாய் தவிக்க விட்டு விடுகின்றனர். இதனால் அவர்கள் வயதான பருவத்தில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். பலர் மருமகள் கொடுமை தாங்க முடியாமல் முதியோர் இல்லங்களுக்குச் செல்ல நேரிடுகிறது.

என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா? என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.

அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார். சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை மாரடித்து விட்டு மனக் கஷ்டத்துடன் திரும்பும் ஆசிரியராகக் கூட அவர் இருப்பார். அல்லது குழப்பவாதிகள் பேசும் ஃபித்னா, ஃபஸாதுகளைப் பற்றி சங்கடப்பட்டுக் கொண்டே திரும்பும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவராக இருப்பார். அல்லது இரவெல்லாம் கண் விழித்து காரோட்டி விட்டு வீடு திரும்பும் ஒரு டிரைவராகக் கூட அவர் இருப்பார்.

இப்படிப்பட்டவர்கள் மன அமைதியையும் நிம்மதியையும் தங்கள் மனைவியரிடம் நாடியே வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்.

ஆனால் மாமனார் மாமியாருக்குப் பணிவிடை செய்தல் என்பதும் மருமகளுக்குக் கடமை தான் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது.

கணவனுடைய செல்வம், கணவனுடைய வீட்டிலுள்ளவர்கள் அனைத்திற்கும் பொறுப்பு அவனுடைய மனைவி தான். கணவனின் தாயும், தகப்பனும் அவனது பொறுப்பிலுள்ளவர்களே எனும் போது கணவன் சார்பாக அவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அவன் மனைவியைச் சார்ந்தது தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். நூல்: புகாரி 2554

பின்வரும் ஹதீஸ் மாமனார் மாமியார் மட்டுமல்ல! கணவனுடைய சகோதர சகோதரிகளுக்கும் உதவி செய்ய வேண்டிய நிலையிருந்தால் ஒரு பெண் செய்து தான் ஆக வேண்டும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  நான்   நபியவர்கடம், அல்லாஹ்வின் தூதரே! நான் புது மாப்பிள்ளை என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதி அத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்கடம் மதீனாவுக்கு சீக்கிரமாகச் செல்ல அனுமதி கேட்ட போது அவர்கள் என்னிடம், நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மண முடித்துக் கொண்டேன் என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே! என்று  கூறினார்கள்.

நான், அல்லாஹ்வின் தூதரே! எனக்குச்  சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்து விட்டார்கள். அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன் என்று பதிலத்தேன். நூல்: புகாரி 2967

கணவனுடைய சகோதரிகளைக் கூட பராமரிப்பது அவனுடைய மனைவிக்குரிய கடமை என்றால் அவனுடைய தாய் தந்தையர்களுக்குப் பணிவிடை செய்வது மருமகளுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் ஜாபிர் (ரலி) இவ்வாறு கூறும் போது நபியவர்கள் சரியான செயல் என்று அதை ஆமோதித்துள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நான், அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை (அப்துல்லாஹ்-ரலி அவர்கள்) ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், நீ செய்தது சரி தான் என்று கூறினார்கள். நூல்: புகாரி 4052

ஒரு பெண் தன் கணவணைத் தவிர மற்றவர்களுக்குப் பணிவிடை செய்தல் கடமையில்லை என்றிருக்குமானால்  நபியவர்கள் நீ எப்படி மற்றொரு வீட்டுப் பெண்ணை உன் மனைவி என்பதற்காக உன் சகோதரிகளுக்குத் தலைவாரி விடுமாறு கூறலாம்? அதற்கொரு வேலைக்காரியை வைத்துக் கொள்ள வேண்டியது தானே? என்றே கேட்டிருப்பார்கள். மாறாக நபியவர்கள்  நீ செய்தது சரி தான் என்றே கூறியுள்ளார்கள்.


எனவே கணவனின் பொறுப்பில் உள்ள அனைவரையும் கவனிக்கின்ற பொறுப்பு அவன் மனைவிக்கு இருக்கின்றது. அதே நேரத்தில் எந்த ஒன்றும் சக்திக்கு மீறியதாக இருக்கக் கூடாது. மருமகள் என்பதற்காக அனைத்து வேலைகளையும் அவளே செய்ய வேண்டும் என்று மாமியார்கள் கருதக் கூடாது. இரு தரப்பினரும் இறைவனைப் பயந்து மார்க்கத்திற்கு உட்பட்டு நடந்து கொண்டால் ஒவ்வொரு குடும்பமும் ஒரு பல்கலைக் கழகமே!

EGATHUVAM JAN 2009