Apr 9, 2017

ரமளான் : கூலி தரும் குர்ஆன் மாதம்

ரமளான் : கூலி தரும் குர்ஆன் மாதம்

அல்லாஹ்வின் வேதத்தில் எந்தவொரு மாதத்தின் பெயரும் பதிவாகவில்லை. ஒரு மாதத்தைத் தவிர! அது தான் புனித மிக்க ரமளான் மாதமாகும். இந்த மாதத்தின் மாண்பையும் மகிமையையும் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரமளான் மாதத்தின் பெயரை அல்லாஹ் குறிப்பிடும் அளவுக்கு இதன் சிறப்பு தான் என்ன? அதையும் அல்லாஹ்வே சொல்கிறான்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

அல்குர்ஆன் 2:185

இம்மாதத்தில் குர்ஆன் இறங்கியிருப்பதால் அதற்கு அப்படியொரு சிறப்பு! இந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டிருப்பதால் தான் நோன்பும் கடமையாக்கப்பட்டுள்ளது என்பது அதன் சிறப்பை மேலும் தூக்கிக் காட்டுகின்றது.

இதற்கு முந்தைய வசனமும் நோன்பைப் பற்றித் தான் பேசுகின்றது. ஆனால் அந்த வசனத்தில், நோன்பு பிடிப்பவர்கள் பிடிக்கலாம்; நோன்பை விட்டவர்கள் அதற்கு ஈடாக தர்மம் செய்யலாம் என்ற சலுகையை அளிக்கின்றது. மேற்கண்ட 2:185 வசனத்தில்   அந்தச் சலுகையை ரத்துச் செய்து விட்டு, "ரமளான் வந்து விட்டால் நோன்பு நோற்றே ஆக வேண்டும்; காரணம் அம்மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டுள்ளது' என்று கூறி, குர்ஆனின் மகத்துவத்தை அல்லாஹ் உணர்த்துகின்றான்.

இந்தச் சலுகையை அளிக்காமல் எடுத்த எடுப்பிலேயே, "ரமளான் மாதத்தில் குர்ஆன் அருளப் பட்டிருப்பதால் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்' என்று அல்லாஹ் கூறியிருக்காம். ஆனால் அதில் இப்போது நாம் காண்கின்ற இந்த அழுத்தத்தைக் காண முடியாது.

முதலில் சலுகையை வழங்கி விட்டுப் பிறகு அதை ரத்துச் செய்து இந்தக் குர்ஆனின் பக்கம் மக்களின் முழுக் கவனத்தையும் திருப்பச் செய்கிறான் அல்லாஹ்! இதன் மூலம் குர்ஆனின் மகத்துவத்தையும் மாண்பையும் உணர்த்துகிறான். அந்தக் குர்ஆன் இறங்கிய மாதத்தைக் கண்ணியப்படுத்தும் விதமாக சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப் படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1899

ஆம்! ரமளான் மாதம், குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை அப்படியே  பிரதிபலிக்கின்றது. குர்ஆனின் நோக்கமே சுவனத்திற்கு மக்களை அழைத்துச் செல்வது தான்.

தத்தித் தத்தி நடக்கும் ஒரு சிறு குழந்தை, ஒரு மாத காலத்திற்கு நடைவண்டி பிடித்து நடக்க ஆரம்பித்து, பின்னர் நடை வண்டியில்லாமல் நடக்க ஆரம்பித்து விடுகின்றது.

அது போன்று பாவத்தில் விழுந்து விட்ட அடியார்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கு ரமளான் மாதம் நடைவண்டியாக அமைகின்றது.

பாவத்தில் வீழ்ந்து, நொண்டியாகக் கிடக்கும் அவர்களை நடை பயிற்றுவித்து, சுவனத்தின் பாதையில் நடக்க வைத்து விடுகின்றது. அப்படிப்பட்ட ரமளான் மாதம் நம்மை வந்தடைகின்றது. குர்ஆன் இறங்கிய இம்மாதம் நமக்குக் கூலியைப் பெற்றுத் தர வந்து விட்டது.

லைலத்துல் கத்ரும் இஃதிகாஃபும்

நம்முடைய பாதையைச் சரி செய்து பட்டை தீட்ட வரும் இம்மாதத்தில்...

இதுவரை ஜமாஅத் தொழுகைகளில் அலட்சியமாக இருந்த நாம் ஜமாஅத் தொழுகைகளை விடாமல் கடைப்பிடிப்போமாக!

அதிகமதிகம் தர்மங்களை அள்ளி வழங்குவோமாக! காரணம் இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக தர்மம் வழங்குபவர்களாக இருந்துள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கüலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3220

மேற்கண்ட ஹதீஸில் தர்மத்தின் சிறப்பை அறிந்து கொள்வதுடன், நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடன் கொண்டிருந்த தொடர்பையும் நாம் அறியலாம்.

லைலத்துல் கத்ரு இரவை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோமாக!

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.

அல்குர்ஆன் 97:1-5

லைலத்துல் கத்ரை அடைய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்த இரவு அடங்கியுள்ள ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் இல்லறத்தைக் கூட நாடுவதில்லை.

(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2024

லைலத்துல் கத்ரை அடைய வேண்டும் என்பதற்காக ரமளானின் பிந்திய பத்து நாட்களும் பள்ளிவாசலில் தங்கியிருக்கும் இஃதிகாஃப் எனும் வணக்கத்தை நபி (ஸல்) அவர்கள் செயல் படுத்தியுள்ளார்கள்.

ஓர் இஸ்லாமிய அரசாக இருந்தால் அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றுக்கு உரிய விடுமுறை அளித்து இந்த அமல்களைச் செய்வதற்கு ஆர்வமூட்டலாம். அப்படியொரு மகத்தான இரவு இம்மாதத்தின் இறுதிப் பத்து இரவுகளில் அடங்கியுள்ளது. எனவே அந்தப் பத்து நாட்களில் உள்ள பணிகளை முன்னரே முடித்து விட்டு, லைலத்துல் கத்ரை அடைவதற்குத் தயாராவோமாக!


கூலி தரும் குர்ஆன் மாதத்தின் உச்சக்கட்டப் பகுதியான லைலத்துல் கத்ரின் நன்மைகளை அடைந்து சுவனத்தை பரிசாகப் பெறுவோமாக!

EGATHUVAM AUG 2008