அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் 38 - கற்கோட்டையைக் கைப்பற்றிய காலித்
எம். ஷம்சுல்லுஹா
தூமத்துல் ஜன்தலின் அரசர் உகைதிரின் கதையை ஒரு முடிவுக்குக்
கொண்டு வந்த காலித், அந்நகர மக்களை எதிர் கொள்ள களத்தில்
குதிக்கின்றார். அந்நகர மக்களுக்கு ஆதரவாக, இஸ்லாமியப்
படைக்கு எதிராக ஜுதி பின் ரபீஆ, வதீஆ அல் கலபி, இப்னு ரூமான்ஸ் அல் கலபீ, இப்னுல்
அய்ஹம், இப்னுல் ஹத்ரஜான் ஆகிய தளபதிகள் தங்கள் படைகளுடன் களமிறங்கினர்.
இருமுனைத் தாக்குதல்
ஏற்கனவே தூமத்துல் ஜன்தலை ஒரு முனையில் இயாள் முற்றுகையிட்டுக்
கொண்டிருப்பதால் அதன் மறுமுனையில் காலித் முற்றுகையிடத் தொடங்கினார். இவ்வாறு தனக்கும், இயாளுக்கும் இடையில் தூமத்துல் ஜன்தல் அமையுமாறு பார்த்துக்
கொண்டார்.
அந்நகரத்தின் கோட்டைக்குள் அனைவரும் இருப்பதற்கு இடம் போதவில்லை
என்பதால் கோட்டையைச் சுற்றிலும் அரபுக் கிறித்தவர்கள் நின்று கொண்டிருந்தனர். படையை
நிலை கொள்ளச் செய்த காலித் அப்போது தான் ஒரு நிதானத்திற்கு வந்திருந்தார்.
ஜுதி என்பவன் வதீஆவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு காலிதை நோக்கி
வருகின்றான். காலிதைக் கண்ட மாத்திரத்தில் அவ்விருவரும் பின்வாங்க முனைகின்றனர். ஆனால்
காலித் அவர்களை விடுவதாக இல்லை. அவ்விருவரும் காலிதைச் சந்திக்கும் அதே வேளையில் இப்னுல்
ஹத்ரஜானும்,
இப்னுல் அய்ஹமும் இயாளுடன் மோதுகின்றனர்.
ஒரே பிடியில் ஜுதி, காலிதின் கட்டுப்பாட்டில்
வந்து விடுகின்றான். அது போல் வதீஆ என்பவன் அக்ரஃ பின் ஹாபிஸின் கையில் கிடைக்கின்றான்.
இயாளிடம் மோதியவர்கள் தோல்வியைத் தழுவுகின்றார்கள். இந்த இருமுனைத் தாக்குதல்களுக்கு
ஈடு கொடுக்க முடியாமல், கோட்டைக்கு வெளியே நின்ற கூட்டத்தினர்
கோட்டைக்குள் அலறியடித்து நுழைகின்றனர். அனைவரையும் தாங்கிக் கொள்ள முடியாமல் கோட்டையின்
வாயிற்கதவு மூடப்படுகின்றது.
தங்கள் அணியினர், தங்களை வெளியே
விட்டு விட்டு,
கதவைச் சாத்தி விட்டனர்; அதாவது, தங்களை மரணக் கோட்டைக்கு அருகில் விட்டு விட்டனர் என்று வெளியே
நின்றவர்கள் வெதும்பினர்; வேதனையில் விம்மினர்.
மரணத்தைக் கண்டு அஞ்சி நின்ற அவர்களை மரணக் கோட்டைக்கு அனுப்ப
காலித் தவறவில்லை. போரில் கொல்லப்பட்ட அவர்களின் உடல்கள் கோட்டை வாசலை அடைக்கும் அளவுக்குக்
குவிந்து கிடந்தன.
கலப் கிளையார்களைத் தவிர மற்ற கைதிகள் அனைவருக்கும் காலித் மரண
தண்டனை விதிக்கின்றார்.
இந்த கலப் கிளையாருக்காக இஸ்லாமியப் படையில் உள்ள அக்ரஃ பின்
ஹாபிஸ், ஆஸிம், பனூ தமீம் ஆகியோர் அடைக்கலம்
கேட்டனர்; அபயமளிக்குமாறு வேண்டினர்.
"ஏன் இன்னும் அறியாமைக் கால உணர்வை பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இஸ்லாமிய உணர்வைப் பாழடிக்கின்றீர்கள்?'' என்று கடிந்தவாறே அவர்களின் வேண்டுகோளை காலித் நிறைவேற்றுகின்றார்.
கதவுடைப்பும்
கைதுப் படலமும்
அவர்களுக்கு வாழ்வு கிடைப்பதில் உங்களுக்கு ஏன் வருத்தம் ஏற்படுகின்றது? ஷைத்தானின் வலையிலிருந்து இவர்கள் தப்புவதில் உங்களுக்கு என்ன
ஆட்சேபணை? என்று ஆஸிம், காலிதிடம்
மறுப்பு தெரிவித்தார்.
காலித் அதை ஒன்றும் கண்டு கொள்ளாது கோட்டை வாசலை உடைப்பதற்குரிய
காரியங்களில் கவனம் செலுத்தத் துவங்கினார்.
கடைசியில் கோட்டைக் கதவு உடைக்கப்பட்டது. மரணத்தை விட்டுத் தப்பித்து
விட்டோம் என்று அந்த மக்கள் போட்ட கணக்கு தவறானது. மூடிக் கிடந்த வாசல் திறக்கப்பட்டதும்
அது அவர்களுக்கு மரணத்தின் வாசல் ஆனது. போர்க் கைதிகள் அனைவரும் மரண தண்டனையைச் சந்திக்கின்றனர்.
பணி செய்வதற்குத் தகுதியான, வலிமையுள்ள
வாலிபர்கள் கைதிகளாகப் பிடிக்கப்படுகின்றனர். பெண்களும் சிறை பிடிக்கப்படுகின்றனர்.
அதிக விலை கொடுப்போருக்கு அவர்கள் விற்கப்படுகின்றனர். ஜுதியின் மகளை காலித் வாங்கிக்
கொண்டார். அவள் ஓர் அழகி! அவளுடன் தூமத்துல் ஜன்தலில் தங்கினார். தன்னுடன் வந்த அக்ரஃ
பின் ஹாபிஸை ஆட்சிப் பொறுப்பைக் கவனிப்பதற்காக அன்பாருக்கு அனுப்பி வைத்தார்.
இயாளின் பொறுமை
இயாளின் ஓராண்டு கால முற்றுகை, காலிதின் வரவுக்காகக் காத்திருந்தது போல் அமைந்தது. அவர் வந்து
தான் அந்த வெற்றியை அடைய வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு! அது இங்கு நடந்தேறியது.
வெற்றி மேல் வெற்றி குவிக்கும் வீரர் தங்களிடத்தில் இருந்திருந்தால்
கிரேக்கர்கள்,
காலிதுக்கு வெற்றிக் கடவுள் என்று பெயர் சூட்டியிருப்பார்கள்.
அவரை வணங்கி வழிபடவும் ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் இந்த வீரர் குவித்த
வெற்றிகளை அல்லாஹ்வின் அருட்கொடை என்று விளங்கி வைத்து, அவனுக்கு ஆனந்தப் பெருக்குடன் நன்றியைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர்.
காலித் வந்த பின்னர் தான் இயாளின் முற்றுகை ஒரு முடிவுக்கு வந்தது
என்றாலும்,
இயாளின் ஓராண்டு கால முற்றுகை, அவரது உறுதிப்பாடு, எஃகு போன்ற
அவரது நிலைப்பாடு பாராட்டுக்குரியதாகும். இஸ்லாமிய வரலாறு கண்ட மிக அரிதான முற்றுகையாகும்.
இயாள் ஏன் இவ்வளவு காலம் முற்றுகையில் நீடிக்க வேண்டும்?
தூமத்துல் ஜன்தலுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?
ஜன்தலத் என்பதன் பன்மை ஜன்தல் ஆகும். ஜன்தலத் என்றால்
"கல்'
என்று பொருள். இஸ்மாயீல் நபியின் மகன் தூமா என்பார் இதை கற்கள்
நிறைந்த பகுதியில் கட்டியதால் அவரது பெயருடன் இணைத்து, தூமத்துல் ஜன்தல் என்று அழைக்கப்படலாயிற்று! இவ்வாறு முஃஜமுல்
புல்தான் என்ற நூலில் அல்ஹமவி குறிப்பிடுகின்றார்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த கற்கோட்டையைத் தான் எதிரிகள்
வசம் போய் விடாமல் இயாள் கவசமாகக் காத்து நிற்கின்றார்.
தூமத்துல் ஜந்த-ன் அரசர் உகைதிர், நபி (ஸல்) அவர்களுக்கு அன்பüப்புகளை
அனுப்பினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2616
"தூமத்துல் ஜந்தல்' பகுதியின்
மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத்
துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி
(ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக
வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டு விடுங்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 3863
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆட்சிக் காலத்திலேயே தூமத்துல்
ஜன்தல் பக்கம் கவனம் செலுத்தியிருக்கின்றார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
அவர்களை அடுத்து அபூபக்ர் (ரலி) அவர்களும் தூமத்துல் ஜன்தல்
பக்கம் அதிகக் கவனம் செலுத்துகின்றார்கள். அதனால் தான் இயாளின் இந்த முற்றுகை! இது
ஏன்?
இதுவரைக்கும் இஸ்லாத்தின் கைவசம் வந்த ஹீரா, இராக், இனிமேல் வரவிருக்கும் சிரியா
ஆகிய முப்பெரும் நகரங்களுக்குரிய பாதைகள் தூமத்துல் ஜன்தலில் இருந்து தான் பிரிகின்றன.
அப்படியொரு தலையாய இடத்தில் அமைந்திருப்பதால் தான் அதற்கு இந்த முக்கியத்துவம்!
இத்தனை நகரங்களுக்கும் இட்டுச் செல்லும் இந்த தூமத்துல் ஜன்தல்
விஷயத்தில் ஓர் இஸ்லாமியப் பேரரசு எப்படி மெத்தனமாக இருக்க முடியும்?
இந்தத் தலையாய பாதையில் அந்நிய சக்திகளின் ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களிடம்
வந்துள்ள இராக்,
ஹீரா போன்ற பகுதிகளையும், சிரியாவையும்
தட்டிப் பறிக்கும் மையமாக மாறி விடும். இப்படியொரு முட்டுக்கட்டை இந்த மூன்று நகரங்களுக்குச்
செல்லும் வழியில் விழுந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஓராண்டு காலமாக இயாள் முட்டுக்
கொடுத்து நின்றார். விட்டுக் கொடுக்காமல் காத்து நின்றார்.
இந்த அடிப்படையில் வரலாற்றில் காலிதுக்கு இணையாக இயாள் மின்னிக்
கொண்டிருக்கிறார். இஸ்லாமிய மணி மகுடத்தில் ஒரு பதக்கத்தைப் பதித்த பெருமையைப் பெற்றுத்
திகழ்கின்றார்.
தூமத்துல் ஜன்தல் இஸ்லாமிய அரசின் கீழ் வருவதற்குக் காரணமாயிருந்த
காலித், இயாள் ஆகிய வீரர்களின் பங்களிப்பை எடுத்துக் காட்டவே இந்தப்
பின்னுரை!
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM AUG 2008