Apr 9, 2017

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார் தொடர் – 4

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார் தொடர் 4
எம். ஷம்சுல்லுஹா

பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை விதிக்கும் அறிவிப்பைக் கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். அதைப் பார்த்து விட்டு இந்தத் தடை நெல்லை மாவட்டத்தில் மட்டும் தான் இருந்தது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. தமிழகத்திலேயே முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் ஒன்று மேலப்பாளையம். அங்கு தவ்ஹீது பிரச்சாரம் அன்று உச்சக்கட்டத்தில் இருந்தது போலவே எதிர்ப்பும் உச்சக்கட்டத்தில் இருந்தது; உச்சி வெயிலாகக் கொதித்தது. அதனுடைய எதிரொலி தான் ஜமாஅத்துல் உலமா சபையின் இந்த உத்தரவு!

எழுத்துப்பூர்வமான இந்த அறிவிப்பு நம்முடைய கைவசம் இருந்ததால் அதை மக்கள் பார்வைக்காக இங்கு வெளியிட்டிருந்தோம். ஆனால் இந்தத் தடையுத்தரவு தமிழகம் முழுவதும் பின்பற்றப்பட்டது. இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

சமீப காலம் வரை ஏகத்துவக் கொள்கை நுழைய முடியாத ஊராக நெல்லை மாவட்டம் பேட்டை என்ற ஊர் இருந்தது. அல்லாஹ்வின் அருளால் அந்தக் கோட்டையிலும் இந்த ஏகத்துவக் கொள்கை உள்ளே புகுந்தது. அதன் பின் அங்கு பள்ளியில் தொழுகைக்குச் சென்ற நம்முடைய கொள்கைச் சகோதரர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். அந்த வழக்கு மாநகரக் காவல்துறையிடம் வந்தது. மாநகரக் காவல்துறை அதை கோட்டாட்சித் தலைவர் தலைமையில் சமாதானக் குழுவை ஏற்படுத்தியது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, பள்ளியில் தொழுவதைத் தடை செய்யும் அந்தக் குழுவினருக்குத் தலைமை தாங்கி வந்தது வேறு யாருமல்ல! மவ்லவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் அவர்கள் தான். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் இந்தத் தடையுத்தரவு இன்று வரை தமிழகத்தில் நீடிக்கின்றது என்பதை விளக்குவதற்காகத் தான்.

மேலும், இன்றளவும் இதற்குத் தலைமை தாங்குவோர், இதைத் தூண்டுவோர், இதை அமல்படுத்துவோர் எல்லாமே ஜமாஅத்துல் உலமா சபையினர் தான் என்பதையும் இந்த நிகழ்விலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அநியாயக்கார ஆலிம்கள்

அல்லாஹ்வின் பள்ளி வாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

அல்குர்ஆன் 2:114

இந்த வசனத்தை இவர்களிடம் சுட்டிக் காட்டும் போது இவர்களால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் தங்கள் மொத்த வெறுப்பையும் இந்த வசனத்தின் மீது இந்த அநியாயக்கார ஆலிம்கள் கொட்டுகின்றனர். குர்ஆனில் இப்படியொரு வசனம் இடம்பெற்று விட்டதே! என்று உள்ளூர வெறுத்துத் தள்ளுகின்றனர்; வெந்து சாகின்றனர். இந்த வெறுப்பின் அகோரம் தான் பொது மக்களை ஏகத்துவவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துமாறு தூண்டி விடுவதாகும். இந்த அநியாயத்தைத் தமிழகம் முழுவதும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஜமாஅத்துல் உலமாவின் தொழுகை தடைப் படலம், ஏகத்துவவாதிகளுக்கு எதிராக நடத்தும் கொலை வெறித் தாக்குதல், பிரச்சாரத்திற்குத் தடை, சமூக பகிஷ்காரம் ஆகிய அனைத்துமே குர்ஆன் கூறும் கொள்கைக்கு எதிராக அபூஜஹ்ல் வர்க்கம் நடத்திய வெறியாட்டங்களாகும். குர்ஆனுக்கு எதிராகக் குறைஷிக் கூட்டடம் நடத்திய கோரத் தாக்குதல்களாகும்.

குறைஷிகள் கொடுத்த உடல் ரீதியான தாக்குதல்களை அரங்கேற்றியதுடன் இவர்கள் நின்று விடவில்லை. குறைஷிகள் நிகழ்த்திய உளவியல் ரீதியிலான தாக்குதல்களையும் இவர்கள் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

உளவியல் தாக்குதல்

சூனியக்காரர், கவிஞர், குறிகாரர், பைத்தியக்காரர் என்று மக்கத்து இறை மறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களை உளவியல் ரீதியாகத் தாக்குதல் நடத்தினார்கள். விமர்சன விஷக் கணைகள் மூலம் நபி (ஸல்) அவர்களை சோர வைத்தார்கள். இதன் மூலம் நபி (ஸல்) அவர்களை மன ரீதியாக ஓய்க்க நினைத்தனர்.

இன்றும் இதே பாணியில் இவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தில் உள்ளவர்களை நோக்கி விமர்சனக் கணைகளை எறிந்து கொண்டிருக்கின்றனர்.

வெளிநாட்டுப் பணம், அரசியல் செல்வாக்கு போன்றவற்றுக்காக ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதாகக் குற்றம் சாட்டினார்கள். அவ்லியாக்களைத் திட்டுவதாகவும், நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் இழிவு படுத்துவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் இன்னும் இது போன்ற ஏராளமான விமர்சனங்களை நம்மீது தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஏகத்துவவாதிகளை ஓய்க்கவும் உட்கார வைக்கவும் நினைக்கிறார்கள். இவர்களது இந்த முயற்சியும் குர்ஆன் மீது கொண்டுள்ள வெறுப்பினால் தான்.

வெளிப்படையான வெறுப்பு

இந்த வெறுப்பை தெளிவாகத் தெரிவதற்கு இன்னும் சில வசனங்களைத் தெரிந்து கொள்வோம்.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அல்குர்ஆன் 39:45

இது மக்கா காஃபிர்களின் மன நிலையைப் படம்பிடித்துக் காட்டும் வசனமாகும். இந்த நிலையை நூற்றுக்கு நூறு அப்படியே இவர்களிடமும் பார்க்கலாம். அல்லாஹ் என்று சொல்லும் போது இவர்களின் உடலில் எந்த அசைவையும் பார்க்க முடியாது. ரஹ்மான் ரஹீம் என்று அல்லாஹ்வின் பெயர்களைச் சொல்லும் போது இவர்களிடம் எந்த அசைவும் தென்படாது. ஆனால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்று சொல்லும் போது கத்தஸஹுல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் என்று பூரித்துப் புளங்காகிதம் அடைகின்றனர்.

அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள்; அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள் என்று சொன்னால் அன்றைய காஃபிர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதே நிலைமையை, முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு இன்று இணை வைத்துக் கொண்டிருக்கும் இவர்களிடமும் பார்க்கலாம்.

அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

அல்குர்ஆன் 17:46

"அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப்பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்'' என்பதே இதற்குக் காரணம். உயர்ந்தவனும், பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே அதிகாரம்.

அல்குர்ஆன் 40:12

இவை அனைத்தும் மக்கா இணை வைப்பாளர்கள் கொண்டிருந்த கோரமான வெறுப்பாகும்.

மாநபியின் புகார்

இத்தகைய வெறுப்பைக் கொண்ட அம்க்களுக்கு எதிராக மாநபி (ஸல்) அவர்கள் ஒரு புகாரை மறுமை மன்றத்தில் பதிவு செய்கின்றார்கள். அந்தப் புகார் பதிவைப் பார்ப்பதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் எதிராக மக்கத்து காஃபிர்கள் கட்டவிழ்த்து விட்ட அநியாயங்கள், அக்கிரமங்களை மீண்டும் ஒருமுறை பட்டியலிட்டுக் கொள்வோம்.

1. கொலை முயற்சி

2. பிரச்சாரத்திற்குத் தடை

3. பள்ளியில் தொழத் தடை

4. சமூகப் பகிஷ்காரம்

5. மக்காவை விட்டே துரத்தியடித்தல்

இவை அனைத்தும் எதற்காக? குர்ஆன் கூறுகின்ற ஏகத்துவத்தைப் போதித்ததற்காக!

அந்த மக்கள் குர்ஆன் மீது கொண்ட வெறுப்பின் வெளிப்பாடு தான் இவை! இந்த வெறுப்பை அணுவணுவாக அனுபவித்த நபி (ஸல்) அவர்கள், மறுமை மன்றத்தில் ஒரு புகாரைப் பதிவு செய்கின்றார்கள்.

"என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்'' என்று இத்தூதர் கூறுவார்.

அல்குர்ஆன் 25:30

இந்தப் புகார் மக்கா காஃபிர்களுக்கு மட்டும் எதிரானதல்ல! மக்கா காஃபிர்களின் அனைத்துத் தன்மைகளுக்கும் ஒத்த வகையில் வெறுப்பை வெளிப்பட்டுத்திக் காட்டிய அனைவருக்கும் எதிரானது தான். நாம் இதுவரை கண்ட ஒப்பீட்டின் படி மக்கா காஃபிர்களின் அதே தன்மைகளை வெளிப்படுத்திய இன்றைய உலமாக்களுக்கும் எதிரான புகார் தான் நபி (ஸல்) அவர்கள் பதிவு செய்யும் அந்தப் புகார்!

இந்தப் புகாரின் விளைவு என்ன? நரகம் தான். மறுமையில் குர்ஆன் தான் நடுவராக வந்து நிற்கின்றது.

மறுமை நாüல் இறை நம்பிக்கையாளர்கள் கவலைப்படும் அளவுக்கு நிறுத்தி வைக்கப் படுவார்கள். அப்போது அவர்கள், "இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும் படி (யாரையாவது) நாம் கேட்டுக் கொண்டால் என்ன?'' என்று பேசிக் கொள்வார்கள். பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்கüடம் சென்று, "நீங்கள் மனிதர்கüன் தந்தை ஆதம் ஆவீர்; அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான்; தனது சொர்க்கத்தில் உங்களை குடியிருக்கச் செய்தான்; தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; எல்லாப் பொருட்கüன் பெயர்களையும் உங்களுக்கு அவன் கற்பித்தான். (எனவே,) இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்கள் இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்'' என்று கோருவர். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை'' என்று கூறிவிட்டு, உண்ணக் கூடாதெனத் தடை விதிக்கப் பட்டிருந்த மரத்திலிருந்து புசித்து விட்டதால் தாம் புரிந்த தவறை அவர்கள் எடுத்துக் கூறுவார்கள். "(எனக்குப் பின்) பூமியில் உள்ளவர்களுக்கு இறைவனால் நியமிக்கப்பட்ட (முக்கியமான) இறைத் தூதர்கüல் முதலாமவரான நூஹ் (அலை) அவர்கüடம் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்.

உடனே இறை நம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்கüடம் செல்வார்கள். அப்போது அன்னாரும் "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை'' என்று கூறி, அறியாமல் தம் இறைவனிடம் வேண்டியதால் ஏற்பட்ட தமது தவறை அவர்கள் நினைவு கூர்வார்கள். பிறகு, "நீங்கள் பேரருளாள(ன் இறைவ)னின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்கüடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கüடம் செல்வார்கள். அப்போது அவர்களும், "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை'' என்று சொல்லிவிட்டு, தாம் (உலக வாழ்வில்) சொன்ன மூன்று பொய்களை எடுத்துக் கூறுவார்கள். பிறகு, "நீங்கள் மூசா (அலை) அவர்கüடம் செல்லுங்கள். அவருக்கு அல்லாஹ் தவ்ராத்தை வழங்கி, அவருடன் உரையாடி, தன்னுடன் கலந்துரையாடும் அளவுக்கு நெருக்கம் அüத்த அடியார் ஆவார் அவர்'' என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் மூசா (அலை) அவர்கüடம் செல்வார்கள். அப்போது அன்னாரும், "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை'' என்று சொல்லிவிட்டு, (உலகில்) ஒருவரைக் கொலை செய்து விட்டதால் தாம் செய்த குற்றத்தை எடுத்துக் கூறுவார்கள். பிறகு "நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமான, அவனது ஆவியும் வார்த்தையுமான ஈசா (அலை) அவர்கüடம் செல்லுங்கள்'' என்று மூசா கூறுவார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் ஈசா (அலை) அவர்கüடம் செல்வார்கள். அவர்களும் "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை; இறைவனால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்கüடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனை அவனது இல்ல(மான சொர்க்க)த்தில் சந்திக்க அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் என் இறைவனைக் காணும் போது சஜ்தாவில் விழுந்து விடுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே) விட்டு விடுவான். பிறகு அவன், "எழுங்கள், முஹம்மதே! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும்'' என்று கூறுவான். அப்போது நான் எனது தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி என் இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் நான் வெüயேறி அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.

பிறகு மீண்டும் (இரண்டாம் முறையாக) என் இறைவனை அவனது இல்லத்தில் சந்திக்க நான் அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் இறைவனைக் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே) விட்டு விடுவான். பின்னர் "முஹம்மதே! எழுங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; ஏற்கப்படும். கேளுங்கள்; தரப்படும்'' என்று கூறுவான். அப்போது நான் எனது தலையைத் தூக்கி, இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பின்னர் நான் பரிந்துரைப்பேன். எனக்கு அவன் வரம்பு விதிப்பான். அப்போது நான் வெüயேறிச் சென்று அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.-

பின்னர் மூன்றாம் முறையாக மறுபடியும் என் இறைவனை அவனது இல்லத்தில் சந்திக்க நான் அனுமதி கேட்பேன். எனக்கு அந்த அனுமதி வழங்கப்படும். இறைவனை நான் காணும்போது சிரவணக்கத்தில் விழுவேன். தான் நாடிய வரை (அப்படியே) என்னை அல்லாஹ் விட்டு விடுவான். பிறகு "முஹம்மதே! எழுங்கள். சொல்க; செவியேற்கப் படும். பரிந்துரை செய்க; ஏற்கப்படும். கோருக; அது தரப்படும்'' என இறைவன் கூறுவான். அப்போது நான் எழுந்து, என் இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பின்னர் பரிந்துரைப்பேன். அவன் எனக்கு வரம்பு விதிப்பான். நான் வெüயேறிச் சென்று, அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.

"இறுதியில் குர்ஆன் தடுத்து விட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் இருக்க மாட்டார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, "(நபியே!) உம் இறைவன் உம்மை ("மகாமும் மஹ்மூத்' எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்'' எனும் (17:79 ஆவது வசனத்தை) ஓதினார்கள்.

பிறகு இந்த "மகாமும் மஹ்மூத்' எனும் இடம் உங்கள் நபிக்காக வாக்கüக்கப்பட்ட இடமாகும்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 7440

இந்தக் குர்ஆன் தான் மறுமையில் நடுவராக வந்து நிற்கின்றது. தன்னை வெறுத்தவர்களை சுவனம் செல்ல விடாமல் தடுத்து விடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கும் புகாரின் அடிப்படையில், இந்த உலமாக்களுக்கும் சுவனம் தடையாகி விடுகின்றது. அல்லாஹ் காப்பானாக!

இவ்வாறு கூறுகையில் ஒரு கேள்வி எழலாம். மக்காவில் நபி (ஸல்) அவர்களை எதிர்த்தவர்கள் காஃபிர்கள். அவர்கள் மறுமையை நம்பாதவர்கள். இந்த உலமாக்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் மறுமை நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களும் அவர்களும் எப்படி ஒன்றாவார்கள்? இது தான் அந்தக் கேள்வி.


இதற்கான விடையை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

EGATHUVAM AUG 2008