Apr 9, 2017

இரவுத் தொழுகை

இரவுத் தொழுகை

கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி

துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

"ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2157

இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.

இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 990

தராவீஹ் தொழுகையும் இரவுத் தொழுகையும் வேறு வேறா?

ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும் இஷாவிற்குப் பிறகு ஃபஜ்ர் தொழுகை வரை உள்ள இடைப்பட்ட நேரத்தில் தொழுகின்ற தொழுகை இரவுத் தொழுகையாகும். ரமலான் மாதத்திற்கென்று பிரத்தியேகமாக எந்தத் தொழுகையும் கிடையாது. ஆனால் நபியவர்கள் ரமலான் மாதத்தின் இரவுகளில் இதனைத் தொழுவதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

"நபி (ஸல்) முன்னேரத்தில் ஒரு தொழுகையும் பின்னேரத்தில் ஒரு தொழுகையும் தொழுதுள்ளனர்; எனவே தராவீஹ் என்பது வேறு, தஹஜ்ஜுத் என்பது வேறு' என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது தவறான கருத்து என்பதைப் பின்வரக்கூடிய ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் ஒரே தொழுகையைத் தான் பல நிலைகளில் தொழ வைத்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அல்அத்தமா என மக்கள் அழைக்கும் இஷா தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்.

நூல்: முஸ்லிம் 1340

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையிலிருந்து பஜ்ர் வரையிலும் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கை 11 ஆகும் என்று அன்னை ஆயிஷா (ரலி) குறிப்பிடுகிறார்கள். இந்தத் தொழுகை தஹஜ்ஜுத் தொழுகை என்றால் தராவீஹ் தொழுகை எங்கே? என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் செய்தி, நபி (ஸல்) அவர்கள் இரவில் தொழுதது பல பெயர்களில் உள்ள ஒரே தொழுகையைத் தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் பல சான்றுகள் நபிமொழித் தொகுப்புகளில் காணப்படுகின்றன. அவற்றையும் பாருங்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பினுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவு வரை தொழுதோம். பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவை) அடைய முடியாதோ என்று எண்ணும் அளவிற்குத் தொழுதோம்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: நஸயீ 1588

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமலானில் நோன்பு நோற்றோம். ரமலானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழவைத்தார்கள். அதன் பிறகு (சில நாட்கள்) தொழ வைக்கவில்லை. ரமலானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது மீண்டும் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தம் குடும்பத்தினரையும் மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்து விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு நீண்ட நேரம் தொழவைத்தார்கள்

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: நஸயீ, இப்னு மாஜா 1317

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்ற வரை நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழ வைக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்) இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும் போது இரவின் பாதி வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் "ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது'' என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்த போது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்த போது தமது குடும்பத்தினரையும் மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்களுக்கு ஸஹர் (நேரம்) தவறி விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.

நூல்: அபூதாவூத் 1167

இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1340

இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 7452

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 428

நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 183

நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 996

ரக்அத்களின் எண்ணிக்கை

8+3 ரக்அத்கள்

"ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா

நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344

12+1 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும், அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதி வரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி (ஸல்) அவர்கள் தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 183, முஸ்லிம் 1400

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 1138, முஸ்லிம் 1402

10+1 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும்   வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1339

8+5 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழு வார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1341

4+5 ரக்அத்கள்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து "சின்னப் பையன் தூங்கி விட்டானோ?'' அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கி விட்டார்கள். பிறது (சுபுஹுத்) தொழுகைக்கு புறப்பட்டார்கள்.

நூல்: புகாரி 117

8+5 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1341

9 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: புகாரீ 1139

7 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், ஏழு ரக்அத்கள்'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: புகாரீ 1139

5 ரக்அத்கள்

"வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

3 ரக்அத்கள்

"வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

1 ரக்அத்

"வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

தொழும் முû

நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்கள்: நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281

நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸயீ 1698

நபி (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸயீ 1699

...நபி (ஸல்) அவர்கள் வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸயீ 1700

இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்

இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுது கொள்வதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது. சிலர் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதை பித்அத் என்று வாதிடுகின்றனர். ஆனால் இது தவறான கருத்தாகும். பின்வரும் ஹதீஸை மிகக் கவனமாகப் படித்தால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்ற வரை நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழ வைக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்) இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும் போது இரவின் பாதி வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் "ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது'' என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்த போது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்த போது தமது குடும்பத்தார்களையும் மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்களுக்கு ஸஹர் (நேரம்) தவறி விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.

நூல்: அபூதாவூத் 1167

இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது என்றால் நபியவர்கள்  "ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது''  என்ற வாசகத்தைக் கூறியிருக்க மாட்டார்கள். எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதும் சிறந்தது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

நபியவர்கள் கடைசி சில நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழாததற்குக் காரணம் அது கடமையில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காகத் தான். எனவே ஜமாஅத்தாகத் தொழுதால் கடமை போன்ற ஒரு நிலை ஏற்படுகிறதே? என்பது தவறான வாதமாகும்.

நபியவர்களுக்குப் பிறகு யாரும் மார்க்கத்தில் புதிதாக உருவாக்க முடியாது. இரவுத் தொழுகை கடமையில்லை என்பதை அனைவரும் விளங்கியே வைத்திருக்கிறார்கள். எனவே ஜமாஅத்தாகத் தொழுவதை யாரும் குறை கூறுவது கூடாது.

வீட்டில் தொழுவதே மிகச் சிறந்தது

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்து நபி (ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து "உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகை களைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: புகாரி 731

இரவுத் தொழுகை தவறி விட்டால்...

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

நூல்: முஸ்லிம் 1358

20 ரக்அத்களா?

இரவுத் தொழுகை அதாவது மக்களால் தராவீஹ் என்று அழைக்கப்படும் தொழுகை 20 ரக்அத்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். அதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் ஜமாஅத்துடன் அல்லாமல் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)

நூல்: பைஹகீ 4391

இந்தச் செய்தி மட்டும் தான் தராவீஹ் 20 ரக்அத்கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி வரும் ஹதீஸாகும். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இந்தச் செய்தியில் இடம் பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர் என்று அந்த ஹதீஸின் அடிக்குறிப்பிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

அடுத்தாக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம், உமர் (ரலி) அவர்கள் தொடர்புடையதாகும்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர் என்று யஸீத் பின் ரூமான் என்பவர் கூறுகிறார்.

நூல்: முஅத்தா 233

இந்தச் செய்தியைப் பற்றி விமர்சனம் செய்யும் இமாம் பைஹகீ அவர்கள், "யஸீத் பின் ரூமான் என்பவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தை அடையவில்லை. அதாவது உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்கவில்லை' என்று தமது அல்மரிஃபா என்ற நூலில் குறிப்பிடுவதாக ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த ஸைலயீ அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

நூல்: நஸபுர் ராயா,

பாகம்: 2, பக்கம்: 154

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத ஒருவர் அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை எவ்வாறு கூற முடியும்?

எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகின்றது,

மேலும் இதற்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் 8+3 ரக்அத்கள் தொழுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி இமாம் மாலிக் அவர்களின் அல்முஅத்தா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உபை பின் கஅப் (ரலி), தமீமுத்தாரீ (ரலி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு   உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்

நூல்: முஅத்தா (232)

உமர் (ரலி) காலத்தில் மக்கள் தொழுதார்கள், உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற இரண்டு செய்திகளில் உமர் (ரலி) அவர்கள் எதில் தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள்?

மக்கள் செய்தார்கள் என்பதில் உமர் (ரலி) அவர்களுக்கு எங்கே தொடர்பு உள்ளது? உமர் (ரலி) அவர்கள் 8+3 தொழுமாறு கட்டளையிட்டார்கள் என்பதில் தான் நேரடியான தெளிவான தொடர்பு உள்ளது என்பதோடு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கும் ஒத்துப் போகிறது. எனவே இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும்.

இஸ்லாத்தின் தூணாக விளங்கக் கூடிய மக்காவில் தராவீஹ் 20 ரக்அத்கள் தான் தொழுகிறார்கள். இதை ஏன் நாம் பின்பற்றக் கூடாது? என்று கேட்கின்றனர்.

இஸ்லாத்தின் தூண் என்று இவர்கள் கூறும் மக்காவிலுள்ள கஅபத்துல்லாஹ்வில் தான் எண்ணற்ற சிலைகள் இருந்தன. அல்லாஹ்வை வணங்குவதற்குக் கட்டப்பட்ட முதல் ஆலயமாக அது இருந்தும் சிலை வணக்கத்தை நபிகளார் ஆதரிக்கவில்லை. மாறாக கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் படைத்தவனின் கட்டளைக்கு அது மாற்றமாக இருந்ததால்! எனவே நம்மைப் படைத்த இறைவன் என்ன கட்டளையிட்டுள்ளான் என்று பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.

மேலும் இன்றளவும் மக்காவில் சில விஷயங்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை அங்குள்ள சில உலமாக்கள் எதிர்த்துக் கொண்டும் உள்ளனர்.

மேலும் சவுதியில் உள்ள பல உலமாக்கள் இரவுத் தொழுகையை நாம் சொன்ன அடிப்படையில் தான் நடைமுறைப்படுத்துகின்றனர்.

எனவே கஅபாவில் இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் நடத்தி வருவதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை. இவ்வாறு அங்கு நடைபெற்று வருவதற்கு ஆட்சியாளர் களும், அதைக் கண்டிக்காத அங்குள்ள உலமாக்களும் தான் பொறுப்பாவார்கள்.

இரவுத் தொழுகையின் எண்ணிக்கையில் ஏன் குழப்புகிறீர்கள்?

இதற்கு முன்பு வரை 11 ரக்அத்துக்கு மேல் இரவுத் தொழுகை கிடையாது என்ற நீங்கள் தற்போது 13 தொழலாம் என்று கூறுகிறீர்களே? ஏன் இந்தக் குழப்பம்? இது சரிதானா? என்று கேட்கின்றனர்.

நடைமுறையில் இரவுத் தொழுகை இருபது ரக்அத்துகள் என்று வரையறை செய்து நடைமுறைப் படுத்தி வந்ததால் நாம் அதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை என்றும், நபிகளார் பெரும்பான்மையாகத் தொழுதது 8+3 என்றும் கூறி வருகிறோம். மேலும் அந்த ஹதீஸில் 8+3 ரக்அத்துக்கு மேல் நபி (ஸல்) அவர்கள் அதிகப்படுத்தியதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதால் 8+3 தவிர வேறு எண்ணிக்கை இல்லை என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர நாம் அவ்வாறு கூறவில்லை.

நாம் ஆரம்ப காலத்திலும் 13 ரக்அத்கள் தொழலாம் என்றே கூறியுள்ளோம். (பார்க்க: 1990 ஆண்டு ஜனவரியில் நாம் வெளியிட்ட "தொழுகை' என்ற புத்தகம், பக்கம்: 219, 220)

நாம் ஏற்கனவே அந்தக் கருத்தைக் கூறியிருக்காவிட்டாலும் ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் போது நமக்குக் கிடைக்கும் விஷயங்களை மக்களுக்குக் கூறுவது தான் இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். "நாம் முன்னர் ஒன்று கூறி விட்டோமே! இப்போது அதற்கு மாற்றமாக அமைந்து விடுமே' என்று எண்ணி, சொல்லாமல் இருப்பது மார்க்கத்தை மறைப்பதாகும்; இறையச்சத்திற்கு எதிரானதாகும்.


எனவே நம்மை யார், எப்படி விமர்சனம் செய்தாலும் சத்தியத்தைச் சொல்வதற்கு ஒரு போதும் தயங்க மாட்டோம்.

EGATHUVAM AUG 2008