பிளேக் நோய்க்குத் தீர்வு
1994ம் ஆண்டு சவூதி மற்றும் வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்தியாவுடனான
விமானப் போக்குவரத்தை ரத்துச் செய்தன. இதற்குக் காரணம் என்ன? அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பிளேக் நோய் தான்.
இந்த பிளேக் மற்றும் காலரா நோயினால் குஜராத் மாநிலம் பல்லாயிரக்கணக்கான
பொருளாதார நஷ்டத்தைச் சந்தித்தது. மக்கள் அங்கிருந்து வேறு நகரங்களுக்குத் தப்பியோட
ஆரம்பித்தனர். இவ்வாறு உலகில் ஏதேனும் ஓர் ஊரில் காலரா மற்றும் பிளேக் நோய் ஏற்படும்
போது அவ்வூரிலுள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறலாமா? இதற்கு உலகில் எந்த ஒரு மதமோ, இஸமோ, சட்டமோ விடை சொல்லவில்லை. ஆனால் இயற்கை மார்க்கமான இஸ்லாம் தான்
இதற்கு ஒரு தீர்வைச் சொல்கின்றது.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள்.
சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின்
அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப்
போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே
கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள்.
பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து
வேறுபாடு ஏற்பட்டது. பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப்
பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும்
என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென
முடிவெடுத்தார்கள்.
அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான்
பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக
என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால்
அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை
நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல நான் கேட்டேன்'' என்று
கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5279
மேற்கண்ட ஹதீஸில் கூறப்படும் இந்த உத்தரவு பெரும் அறிவியல் கருத்தைத்
தாங்கி நிற்கின்றது. ஓர் ஊரில் இது போன்ற நோய் ஏற்பட்டால் அவ்வூர் மக்கள் அங்கேயே தங்கி
விட்டால் அந்நோய் அவ்வூருடன் நின்று விடும். வெளியே சென்றார்கள் என்றால் நோயும் வெளியூர்களில்
பரவ ஆரம்பித்து விடும். அது போன்று வெளியூரிலுள்ளவர்களும் அந்த ஊருக்குச் செல்லாமல்
இருந்தால் அதிலிருந்து பாதுகாப்புப் பெற முடியும். இதைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
1400 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கின்றார்கள்.
இன்று உலக நாடுகள் இந்த முறையைத் தான் கையாள்கின்றன. பறவைக்
காய்ச்சல் ஏற்பட்டு விட்டாலோ, நீல நாக்கு நோய் ஏற்பட்டு விட்டாலோ
இந்த அடிப்படையில் தான் தடை செய்கிறார்கள்.
குஜராத் பிளேக் நோயின் போது இந்த முறையைப் பின்பற்றித் தான்
வளைகுடா நாடுகள் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தின.
அறிவியலில் வளர்ந்து விட்ட நாடுகள் கடைப்பிடிக்கும் இந்த முறையை, எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் கூறுகின்றார் என்றால் நிச்சயம்
அவர் தனது சொந்தக் கருத்தாக இதைக் கூறியிருக்க முடியாது. அனைத்தையும் அறிந்த இறைவனின்
கருத்தாகத் தான் இது இருக்க முடியும். அவர் கொண்டு வந்த மார்க்கமும் மனித சிந்தனையில்
உருவானது அல்ல. இறைவனால் வழங்கப்பட்ட இயற்கை மார்க்கம் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.
EGATHUVAM SEP 2007