Apr 5, 2017

வேலியே பயிரை மேயும் வேதனை

வேலியே பயிரை மேயும் வேதனை

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கத்தோலிக்க திருச்சபை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவுள்ளது. இந்த ஐநூறு பேரும் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப் பட்டவர்கள். 660 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்குவதற்காக நீதிபதியின் ஒப்புதலுக்கு, திருச்சபை காத்திருக்கின்றது என்று வாதியின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தச் செய்தி பி.பி.சி.யில் 15.07.2007 அன்று வெளியானது.

இது 2002ல் பாலியல் பலாத்கார ஊழல் வெடித்த பிறகு திருச்சபை செலுத்த வேண்டிய மிகப் பெரிய தொகையாகும்.

1950 முதல் அமெரிக்காவிலுள்ள டயோசீஸ் பாதிரிகளின் பாலியல் விவகாரத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகை 2 பில்லியன் டாலர் ஆகும். இதில் கால் பகுதியை லாஸ் ஏஞ்சல்ஸ் திருச்சபை மட்டும் செலுத்தியுள்ளது.

73 வயது நிரம்பிய பால் ஷான்லே என்ற பாதிரியாரும், மற்றொரு பாதிரியும் வாட்டிகன் தலைமையகத்தால் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். நான்கு சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது தான் பால் ஷான்லே மீதான குற்றச்சாட்டு!

இது போன்று பெண்களிடம் நடந்த பாலியல் கொடுமைகளையும் பி.பி.சி.யின் இந்தச் செய்தித் தொகுப்பு பட்டியலிடுகின்றது.

பொதுவாக ஆண், பெண் இரு பாலருமே பால் உணர்வுடன் தான் படைக்கப்பட்டுள்ளனர். ஆண், பெண் இரு பாலர்களுக்கும் பசி, தாகம் ஏற்படுவது போலவே பருவ வயது வந்ததும் பாலியல் தேட்டமும் ஏற்படுகின்றது. இதற்கு ஒரு வடிகால் இல்லையென்றால், மறிக்கப்படும் ஆற்று வெள்ளம் பல வழிகளிலும் பாய்வது போன்று பாலியல் உணர்வு பொங்கி வழிய ஆரம்பித்து விடும்.

இது தான் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் ஊழல் மூலம் பளிச்சென்று வெளியே தெரிகிறது.

அதனால் தான் துறவு நிலையை மேற்கொள்ளக் கூடாது; அவ்வாறு மேற்கொள்பவர்கள் முஸ்லிம்களே கிடையாது என்று  முஹம்மத் (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்தி விடுகிறார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர்.  அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள், நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.

பிறகு, "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?'' என்று சொல்-க் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், "நான் என்ன செய்யப் போகின்றேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்'' என்றார்.

இன்னொருவர், "நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகின்றேன்'' என்றார்.

மூன்றாம் நபர், "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகின்றேன். ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தானே! அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்.  அல்லாஹ்வைப் பயந்து நடப்பவனாவேன்.  ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கின்றேன். விட்டு விடவும் செய்கின்றேன்.  தொழவும் செய்கின்றேன்.  உறங்கவும் செய்கின்றேன்.  மேலும் நான் பெண்களை மணம் முடித்தும் உள்ளேன்.  ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: புகாரி 5063

திருமணம் முடித்தவர்களே இன்றைய உலகில் வழி தவறும் போது திருமணம் முடிக்காதவர்களின் நிலையை நாம் சொல்லவும் வேண்டுமா? இது போன்ற காரணங்களால் தான் துறவறத்தைக் கடமையாக்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பின்னர் அவர்களின் அடிச் சுவட்டில் நமது தூதர்களைத் தொடர்ந்து அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் (அவர்களைத்) தொடர்ந்து அனுப்பினோம். அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம். அவரைப் பின்பற்றியோரின் உள்ளங்களில் இரக்கத்தையும், அன்பையும் ஏற்படுத்தினோம். தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.

அல்குர்ஆன் 57:27

துறவறத்தை இறைவன் கடமையாக்கவில்லை. கிறித்தவர்கள் துறவறத்தைத் தங்களுக்குத் தாங்களே கடமையாக்கிக் கொண்டு, அதைச் சரிவரப் பேணவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அதாவது, துறவறம் என்பது இயற்கையை எதிர்த்து நிற்பது என்று கூறி அதை வெறுக்கிறது.

இஸ்லாத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர்கள் அனைவருக்கும் மனைவி, மக்களை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 13:38

திருக்குர்ஆன் என்ற இறை வேதம் மனிதனின் இயற்கைக்குத் தக்க திருமணத்தை முடிக்கச் சொல்கிறது. அதாவது, பாலியல் உணர்வுகளை உரிய வழியில், திருமணம் என்ற ஒப்பந்த அடிப்டையில் தீர்த்துக் கொள்ளச் செய்கிறது.

ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்ற ஓரினச் சேர்க்கையையும் இயற்கைக்கு மாற்றமான வெறுக்கத்தக்க நியதி என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

லூத்தையும் (அனுப்பினோம்). "நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை; சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?'' என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, "நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக'' என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

அல்குர்ஆன் 29:28, 29

இது போன்ற சீரழிவுக்கு உள்ளாக்கும் காரியத்தைச் செய்த ஒரு சமுதாயத்தையே இறைவன் அழித்து விட்டதாகக் கூறுகிறான்.


இவ்வாறு மனிதனை இயற்கையான இனிய வழியில் செல்லச் செய்வது இஸ்லாமிய வழியாகும். காரணம், அது இறைவன் வழங்கிய இயற்கை நெறியாகும்.

EGATHUVAM SEP 2007