நபிவழிக்கு முரணான மத்ஹபுகள் - 1
குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு தான் இஸ்லாத்தின்
மூல ஆதாரங்களாகும். ஒரு வணக்கம் இஸ்லாத்தில் உள்ளதாக அங்கீகரிப்பதாக இருந்தாலும், அல்லது அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை முறைப்படுத்துவதாக
இருந்தாலும் அதை இந்த இரண்டின் மூலமே தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் வாழ்வில்
உயிர் மூச்சாக,
வழிகாட்டு நெறியாக, வாழ்வியல்
வழிமுறையாக ஏற்றுப் பின்பற்ற வேண்டியது குர்ஆன், ஹதீஸ்
ஆகிய இவ்விரண்டைத் தான். இதுவே நம்மை சுவனத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையாகும்.
குர்ஆன், ஹதீஸ் எனும் பாதையில் பயணிக்க வேண்டிய முஸ்லிம்கள் புதிய பாதைகள்
பலவற்றை ஏற்படுத்திக் கொண்டு அவ்வழிகளில் பயணிக்கின்றார்கள். அவர்கள் புதிதாக உருவாக்கிய
அப்பாதைகள் தங்களை அழிவை நோக்கி அழைத்துச் செல்பவை என்பதை ஏனோ உணராமல் உள்ளனர். முஸ்லிம்களை
நரகை நோக்கி அழைத்துச் செல்லும் பாதைகளில் பெரும் பங்களிப்பாற்றுவது மத்ஹபு எனும்
()பாதையாகும். முஸ்லிம்கள் வணக்க வழிபாடு முறைகளில் பல பிரிவுகளாகப் பிளவுண்டு கிடப்பதற்கும், இஸ்லாத்தின் அடிப்படைத் தூண் என்று போற்றப்படுகின்ற தொழுகை முறையிலும்
சில முஸ்லிம்கள் வேறுபட்டிருப்பதற்குக் காரணமும் இந்த மத்ஹபுகளே!
கந்தூரி விழா, சமாதி வழிபாடு, யானை ஊர்வலம், மவ்லிது, மீலாது விழா போன்ற வழிகேடுகளை அரங்கேற்றி அதை ஆதரிப்போரும் மத்ஹபைப்
பின்பற்றுவோராகவே இருக்கின்றனர். இப்படியாக மத்ஹபுகள் செய்த சாதனை(?)களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நபிவழிகளை பிரதிபலிப்பவையாக இந்த மத்ஹபுகள் இருந்திருக்குமானால்
பல பித்அத்கள் தோன்றியிருக்காது. எண்ணற்ற சடங்குகள் முளைத்திருக்காது. மத்ஹபுகள் நபிவழிக்கு
முரண்படுவதாலே முஸ்லிம்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் தோன்றுகிறது.
மத்ஹபுகள் கூடாது என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் எழுத்து
மற்றும் உரைகள் மூலமாக, பல வருடங்களாகப் பிரச்சாரம்
செய்து வருகிறோம். இதன் பலனாக பல மக்களை இந்த வழிகேட்டிலிருந்து மீட்டெடுத்து ஏகத்துவக்
கொள்கையின் பக்கம் ஈர்த்திருக்கின்றோம். இந்த மத்ஹபு இஸ்லாத்திற்கு விரோதமானது, நபிவழிக்கு முரணானது என்பதை மேலும் மக்களின் உள்ளங்களில் ஆழப்பதியச்
செய்வதற்காக இத்தகவல்களை இங்கே தருகின்றோம். மத்ஹப் என்றால் என்ன?
மத்ஹபுகள் நபிவழியுடன் எவ்வாறு முரண்படுகின்றன என்பதைக் காணும்
முன் மத்ஹபு என்றால் என்ன? என்பதன் சிறு விளக்கத்தை அறிந்து
கொள்வோம். மத்ஹப் என்ற அரபு பதத்துக்கு வழிமுறை, செல்லுமிடம்
என்று பொருளாகும். கழிவறை என்ற பொருளும் உண்டு. இந்த அர்த்தத்தில் தான் அபூதாவூதில்
முதல் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ??? அரபி 5
நபியவர்கள் மத்ஹபிற்கு (கழிவறை) செல்ல விரும்பினால் தூரமாகச்
செல்வார்கள். (நூல்: அபூதாவூத் 1)
மத்ஹப் என்பது பொதுவாக அனைத்து வழிமுறைகளையும் குறிக்கும் என்றாலும்
நடைமுறையில் இமாம்கள் மார்க்க ரீதியாகச் சென்ற வழிமுறையை குறிக்கப் பயன்படுத்துகின்றனர்.
அதாவது குர்ஆன்,
ஹதீஸை இமாம்கள் எவ்வாறு புரிந்து கொண்டு தங்கள் நிலைபாட்டை எடுத்தார்களோ, அதன் படி செயல்பட்டார்களோ அதைப் பிசகாமல் பின்பற்றுவது மத்ஹபு
எனப்படுகின்றது.
ஷாஃபி இமாம் மார்க்கத்தை எவ்வாறு புரிந்து செயல்பட்டாரோ அவ்வழியைப்
பின்பற்றுபவர்கள் ஷாபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் என்கிறோம். இமாம் அபூஹனிஃபாவின் வழிமுறையைப்
பின்பற்றுபவர்கள் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் என்கிறோம். மத்ஹபுகள் தோன்றக் காரணம்
ஒருவர் மார்க்க ரீதியாக ஒரு கருத்தைக் கூறுகிறார் எனில் அதைக்
கண்மூடித்தனமாக ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ளலாகாது. மாறாகக் குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றுடன் ஒத்துப்போகின்றதா என்பதை உரசிப்பார்த்து, ஒப்புநோக்கியே ஏற்றுக் கொள்ளவேண்டும். யானைக்கும் அடிசறுக்கும்
என்ற பழமொழிக்கேற்ப எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரிடத்திலும் சில, பல தவறுகள் ஏற்படவே செய்யும். மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில்
அவர்களும் தவறுகளை இழைத்திருப்பார்கள். இதை உணர்ந்து அவர்களின் கருத்தை குர்ஆன், நபிவழியுடன் ஒப்புநோக்கி ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த ஆய்வுக்
கண்ணோட்டமின்றி இவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்ற பார்வையே மத்ஹபுகள் தோன்றக்
காரணமாகி விட்டது. மத்ஹபிற்கும் இமாம்களுக்கும் சம்பந்தமில்லை
மேற்குறிப்பிட்ட ஆய்வுக் கண்ணோட்டம் அனைவரிடத்திலும் இருக்க
வேண்டும் என்பதே இமாம்களின் நிலைப்பாடாக, எண்ணமாக, கருத்தாக இருந்தது. எந்த இமாமும் தன்னைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற
வேண்டும் எனக் கூறவில்லை. மாறாக குர்ஆன், சுன்னாவைப்
பின்பற்ற வேண்டும், தங்களை விட அவைகளுக்கு முன்னுரிமை
வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
??? அரபி 6
ஹதீஸ் ஸஹீஹ் ஆக இருந்தால் அதுவே எனது மத்ஹபு வழிமுறையாகும் என
இமாம் அபூஹனிஃபா கூறினார். மேலும் அவர் "மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர் எனது புத்தகத்திலிருந்து
ஃபத்வா அளிப்பது தகாது. நான் எங்கிருந்து அக்கருத்தை கூறினேன் என்பதை அவர் அறியும்
வரை'' (ஃபத்வா வழங்க அனுமதியில்லை.) என்று கூறினார்.
நூல்: உசூலுத்தீன் இன்தல் இமாமி அபூஹனிஃபா
பாகம் 1, பக்கம் 6
??? அரபி 7
"நீங்கள் கூறிய கருத்து குர்ஆனுக்கு முரண்பட்டால் (என்ன செய்வது)?'' என இமாம் அபூஹனிஃபாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அல்லாஹ்வின் வேதத்திற்காக எனது சொல்லை விட்டுவிடுங்கள்'' எனக்கூறினார். "அல்லாஹ்வின் தூதருடைய சொல்லிற்கு உங்கள்
கருத்து முரண்பட்டால்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு
"அல்லாஹ்வின் தூதரின் சொல்லிற்காக எனது கருத்தை விட்டுவிடுங்கள்'' எனக்கூறினார்.
நூல்: தய்ஸீருல் அஜீர்
பாகம் 1, பக்கம் 487
உதாரணத்திற்கு இமாம் அபூஹனிஃபாவின் கருத்தை இங்கு பதிவு செய்துள்ளோம்.
இது போன்றே இமாம் ஷாஃபி, மாலிக், அஹ்மத் போன்ற இமாம்களும் கூறியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள்
அவர்களின் வார்த்தைகளாக அவர்களின் நூல்களிலேயே இடம்பெற்றுள்ளன.
இதனால் தான் மத்ஹபுகளைக் கண்டித்து பேசும் நாம் ஒரு போதும் இமாம்களைக்
கண்டித்துப் பேசுவதில்லை. அவர்களை மதிக்கவே செய்கின்றோம். அவர்களின் பெயரால் மத்ஹபுகளை
உருவாக்கியதையும், அது குர்ஆன் நபிவழிக்கு முரணாக
இருந்தும் அதைப் பின்பற்றுவதையுமே கண்டிக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் இந்த ஜமாஅத்
இச்செயலைக் கண்டிக்கவே செய்யும். எனவே மக்கள் உருவாக்கியிருக்கும் மத்ஹபுகளுக்கும்
அவ்விமாம்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. அதனை விட்டும் அவர்கள் விலகியவர்கள்.
இமாம் அபூஹனிஃபாவின் மேற்கண்ட கருத்தைக் கவனிக்கும் போது குர்ஆன், நபிவழிக்கு முரணாக அவரது கருத்து இருந்தால் அக்கருத்தை விடுத்து, தூக்கியெறிந்து, குர்ஆன் நபிவழியைப்
பின்பற்ற வேண்டும் என்பதே இமாம் அபூஹனிஃபாவின் நிலைப்பாடாக இருந்தது என்பதை அறியலாம்.
எனவே இமாம் அபூஹனிஃபாவின் கருத்து குர்ஆன், சுன்னாவிற்கு
முரண்பட்டால் அனைவரும், குறிப்பாக அவரைப் பின்பற்றுவதாகக்
கூறிக்கொள்ளும் ஹனபி மத்ஹபினர் தயங்காமல் அக்கருத்தைத் தூக்கியெறிய வேண்டும். அது தான்
அவர்கள் அந்த இமாமுக்குச் செய்கின்ற மரியாதை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனி, இமாம் அபூஹனிஃபாவின் கருத்துக்கள்
எவ்விதத்தில் நபிவழியுடன் நேரிடையாக மோதுகின்றது, முரண்படுகின்றது
என்பதைக் காண்போம். இதை வேறு வார்த்தையில் கூறுவதாக இருந்தால், ஹனபி மத்ஹபினர் தூக்கியெறிய வேண்டிய, மார்க்க ரீதியாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்களை
காண்போம்.
EGATHUVAM JAN 2012