May 1, 2017

கேக் வெட்டிய ஜாக் மவ்லவி

கேக் வெட்டிய ஜாக் மவ்லவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பிற மேடைகளில் ஏறுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றது. நாம் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தது, கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில கசப்பான அனுபவங்களை வைத்துத் தான்.

(இது தொடர்பாக நமது மாநில பொதுச் செயலாளர் சகோதரர் ஆர். ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் விரிவான விளக்கங்களை "பிற மேடைகளில் பிரச்சாரம் - தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு'' என்ற தலைப்பில் அளித்திருக்கின்றார்.)

நமது இந்த நிலைப்பாட்டை நமக்கு எதிரான அமைப்புகள் அனைத்தும் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. இவர்களது விமர்சனம் தவறானது; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையே நியாயமானது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ:

நாகர்கோயில் அருகில் பின்னந்தோடு என்ற ஊரில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இந்த விழாவில் ஜாக் அமைப்பின் பேச்சாளரும், அந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிவாசலின் இமாமுமான யாஸீன் இம்தாதி போய் கலந்து கொள்கின்றார்.

ஒருவேளை, நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விழா (மீலாது விழா) தான் பித்அத்; ஈஸா நபியின் பிறந்த தின விழா (கிறிஸ்துமஸ்) கொண்டாடுவது சுன்னத் என்று எண்ணுகிறார்கள் போலும்.

இதில் போய் கலந்து கொண்டு, கேக் வெட்டி, பிறந்த தின விழாவைக் கொண்டாடி ஜாக்கின் கொள்கைப் பிடிப்பை நிலைநாட்டியுள்ளார்.

இனி நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாக்களிலும் சோறாக்கி, ஜோராக அங்கேயும் இந்தக் கொள்கைப் பிடிப்பைப் பறைசாற்றினால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

"யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூற்கள்: அஹ்மத், பஸ்ஸார்

இந்த மவ்லவி ஏதோ அறியாமல் கலந்து கொண்டிருக்கிறார் அல்லது மயக்கத்தில் போய் கலந்து கொண்டு விட்டார் என்று யாரும் கடுகளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

ஏனெனில் இவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, போகக் கூடாது என்று இருக்கிறதா? என்று ஜாக்கிற்கே உரிய தனி பாணியில் கேட்டிருக்கின்றார்.

பெண் வீட்டு விருந்து கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் போது, பெண் வீட்டு விருந்துக்குத் தடை இருக்கின்றதா? என்று ஆணித்தரமான(?) அசத்தலான (?) கேள்வியை ஜாக் கேட்கின்றது. அதே அடிப்படையில் தான் இந்தக் கேள்வியும் அமைந்திருக்கின்றது.


அந்த அடிப்படையில் நாளை இவர்கள் மீலாது விழாவும் கொண்டாடுவார்கள். கேட்டால் இதே பதிலைத் தான் தருவார்கள். போகிற போக்கைப் பார்த்தால் குராபிகளை மிஞ்சி விடுவார்கள் போல் தெரிகின்றது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

EGATHUVAM JAN 2012