May 23, 2017

ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு 10 - ஐங்கடவுள்களை ஆராதிக்கும் ஐந்தடிக் கவிதை மாலை

ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு 10 - ஐங்கடவுள்களை ஆராதிக்கும் ஐந்தடிக் கவிதை மாலை

தொடர்-10 

எம் ஷம்சுல்லுஹா

ஹுஸைன் மவ்லிதில் ஒன்பதாவது ஹிகாயத்...

இதில் இந்தக் கவிஞர் உரை நடையில் உளறியிருக்கும் ஓர் ஆதாரமற்ற அபத்தம் இதோ:

தலைவர் ஹுசைன் ஹிஜிரி 61,  முஹர்ரம் மாதம் ஆஷூரா (பத்தாம் நாள்) வெள்ளியன்று கொல்லப்படுகின்றார். அப்போது அவருக்கு வயது 65. இப்ராஹீம் (அலை) அவர்கள் நம்ரூத் என்பவனால் நெருப்பில் தூக்கி எறியப்பட்ட நாளில் கிரகணம் ஏற்பட்டது போன்று  ஹுசைன் மரணம் அடைந்த நாளில் சூரியன் கிரகணம் ஏற்பட்டது. இது  வழக்கத்திற்கு மாற்றமான நிகழ்வு என்று வான சாஸ்திர நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கஸ்ஸாலியும் ஏனையோரும் ஹுசைன் (ரலி)யின் கொலைச் சம்பவத்தை அறிவிப்பது கூடாது; அது தடை செய்யப்பட்டது என்று கூறியுள்ளதால் நாம் அந்தச் சம்பவத்தைக் கூறாமல் மவ்னம் காத்து விட்டோம்.

நபி (ஸல்) அவர்களுக்கும் கனீமத் (போரில் கிடைத்த வெற்றி) பொருள் விருப்பமானது; தர்மப் பொருட்கள் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும்  தடை என்பதால் அன்னார் மீது நான் தொடுக்கும் புகழ் மாலைப் பூக்களை வெற்றிப் பொருளாகக் கருதி  அவற்றை ஐந்தடி பாக்களாக்கி அன்பளிப்பாக வழங்குகின்றேன். அந்த ஐந்தடி கவிதைகளை அவர்களுக்கு காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன். இதன் பலனாக நபி (ஸல்) அவர்களின் வாசலில்  பாவிகள் அடைக்கலம் புகின்ற அந்நாளில் வெற்றி பெற விரும்புகின்றேன். அவர்களின் இரு பேரர்களை  ஒரு பொருட்டாக்கி -வஸீலாவாக்கி- ஏற்றம் பெற எண்ணுகின்றேன்

இது உரை நடையில் இந்தக் கவிஞன் உளறிய உளறல். பொதுவாக ஷியாக்கள் ஹுசைன் (ரலி)யை புகழ்வதிலும், போற்றுவதிலும் வரம்புக் கடந்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.  அதற்கு ஓர் எடுத்துக் காட்டுத் தான் சூரிய கிரகண விவகாரம்.

ஹுசைன்  காலத்தில் கிரகணம் பிடித்ததையே நம்மால் ஜீரணிக்க  முடியாத போது இப்ராஹீம் நபி காலத்து கிரகணத்தை நாம் எப்படி ஜீரணிக்க முடியும்?   எந்த ஆதாரமும் இல்லாத இந்த வானளாவியப் பொய்க்கு  வான சாத்திர நிபுணர்களின் வாய்க்கு வந்தபடியான  வாக்கு மூலங்கள் வேறு!  வான சாஸ்திரங்கள் என்றாலே பொய்கள் நிறைந்த போலி ஜோசியங்களின் களஞ்சியங்கள் என்பது உலகறிந்த விஷயம். அவர்களைத் தான்  இந்த ஷியாக் கவிஞர்   துணைக்கு கூப்பிட்டுக் கொள்கின்றார்.

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் மகன் இப்ராஹீம் மரணித்த போது இது போன்ற பேச்சுக்கள் மக்களிடம்  உலாவின. ஊர் முழுக்கப் பரவின. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனடியாக  அந்த வாசலையே அடைத்தனர்.

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் "இப்ராஹீமின் இறப்புக்காகத் தான் கிரகணம் ஏற்பட்டது'' என்று பேசிக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் பிரகாசம் வரும்வரை அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!'' என்று சொன்னார்கள்.

 அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)

நூல் : புகாரி எண்: 1060

இந்த ஹதீஸில் யாருடைய மரணித்திற்காகவும் சூரிய, சந்திரன் மறையாது என்று கூறி  மக்களின் மூட நம்பிக்கைக்கு மரண அடி கொடுக்கின்றார்கள். அவ்வாறு கொடுக்கவில்லையென்றால், இறந்த மகனான இப்ராகீமுக்கும், தந்தையான முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் தெய்வீகத் தன்மையைக் கொடுத்து அவர்களைக் கடவுளாக்கி அழகு பார்த்திருப்பார்கள். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அணை போட்டுத் தடுக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடுத்த அந்தக் காரியத்தைத் தான் இந்தக் கேடு கெட்ட ஷியா கவிஞர்  ரசனையாக ரசித்துக் கூறுகின்றார். இதன் மூலம் தான் குரு மகா சன்னிதானமாகக் கருதுகின்ற ஹுசைன் (ரலி) மீது கொண்டிருக்கின்ற கள்ளக் கடவுள் பக்தியை இந்த உரை நடைப் பகுதியில் போட்டு உடைத்து, தன்னை ஒரு  ஷியா என்று  பக்காவாகவும், பகிரங்கமாகவும் அடையாளப்படுத்திக் கொள்கின்றார்.

நபியின் பேரர்களைக் கொண்டு இவர் தேடப் போகின்றேன் என்று சொல்கின்ற இந்த வஸீலாவிற்குசென்ற இதழில் சமத்தையான சம்மட்டி அடி கொடுத்துள்ளோம். அதனால் இங்கு அதை திரும்பக் கூறவில்லை. இப்போது இவர் உரை நடைப் பகுதியில் கூறியபடி ஐந்தடி பாக்களில் அள்ளி விட்டிருக்கின்ற அபாயகரமான நச்சுக் கருத்துகளைப் பார்ப்போம்.

يا أهل بيت النبي ياسول من فقرا

سبطي رسول كريم راحم الفقرا

أخذا بكف عبيد آثم حقرا

فأحسناه كما إحسانكم وقرا

ممن براكم من الزهرا علت قمرا

நபியின் குடும்பமே! ஏழைகளின் நாட்டமே!  ஏழைகளுக்கு இரக்கம் காட்டுகின்ற சங்கைமிகு தூதரின் இரு பேரர்களே!  கேவலப்பட்ட இந்தப்  பாவியான அடிமையின் கையைப் பிடியுங்கள்! இவனுக்கு நீங்கள் உதவுங்கள்! உங்கள் உதவிக்கு ஒரு மரியாதை உண்டு! ஏனென்றால்நீங்கள் வான் மதியான (ஃபாத்திமா எனும்) பெண்மணியிடமிருந்து உதயமானவர்கள்!

ஏழைகளின் நாட்டம் என்றும், நபி (ஸல்) அவர்கள் ஏழைகளுக்கு இரக்கம் காட்டுபவர்கள் என்றும் வர்ணனை செய்வதிலிருந்து இந்தக் கவிஞன் நபியின் குடும்பத்தாரிடம் உதவி என்ற பெயரில் காசு பணத்தைத் தான் கோருகின்றார் என்று  இந்தக் கவிதை அடிகளை படிப்பவர் எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  பொதுவாக எல்லா மவ்லிதுகளின் பாடலாசிரியர்கள், தாங்கள் யாரைக் கடவுளாகவும், கதாநாயகராகவும் ஆக்கி கவிதை மாலை தொடுக்கின்றார்களோ அவர்கள் அனைவருமே அவர்களிடம் காசு பணத்தைக் கேட்காமல் இருப்பதில்லை. அவர்களைப் போன்றே இந்தக் கவிஞனும் ஹசன், ஹுசைன் (ரலி) ஆகியோரிடத்தில் காசு பணத்தைக் கேட்கின்றார்.

இவ்வாறு கேட்பதற்கு ஏற்றவாறு, முதலில், நபியின் குடும்பத்தாரே வசதியிலும், வளத்திலும் இருந்தார்களா?

அடுத்து, நபி (ஸல்) அவர்களும், அவர்கள் குடும்பத்தாரும் வறுமையைப் போக்குபவர்களாக இருந்தவர்களா? என்ற  இரண்டு விஷயங்களை நாம் இங்கு பார்க்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள், அவர்களது குடும்பத்தார்களின் வாழ்க்கையைப் பார்ப்பவர்களுக்கு அவர்களின் வறுமை எந்த அளவுக்கு அவர்களை வாட்டி எடுத்தது என்று தெளிவாகப் புரிவது மட்டுமல்ல; அவர்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்து விடும். அதற்கு இதோ சில எடுத்துக் காட்டுக்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5374

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5383

நபி (ஸல்) அவர்கள் உலகத்தை விட்டுப் பிரிகின்ற வரை மூன்று நாட்கள் தொடர்ந்து வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை என்று இந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது போர்க் கவசம் ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், "இரும்புக் கவசம்'' என்றும் இன்னோர் அறிவிப்பில், "இரும்புக் கவசம் ஒன்றை யூதரிடம் அடகு வைத்தார்கள்'' என்றும் இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2916

இறுதி நபி (ஸல்) அவர்கள் இறுதியாகப் பிரிகின்ற வரை வறுமை அவர்களை வாட்டி வதைத்திருக்கின்றது. ஆட்டி அலைக்கழித்திருக்கின்றது.

ஃபாத்திமா ரலி) ஷியாக்களால் கடவுளாகவும், கருணை சிந்தும் ரட்சகியாகவும் பார்க்கப்படுபவர்; பாவிக்கப்படுபவர்.  அவர்களும் வறுமையில் தான் உழன்றார்கள்.  அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கு ஒரு பணியாளர் கூட கிடையாது.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா, நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப் போனோம். அவர்கள், "நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்'' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும், ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், "நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? "நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது "உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்து லில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல்: புகாரி  5361

நபி (ஸல்) தமது அருமை மகள் ஃபாத்திமா (ரலி) மீது அதிகமான அன்பும், பாசமும் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவர் ஆவார்.

இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 3714

 அப்படிப்பட்ட மகளார் ஒரு பணிப்பெண்ணை வேண்டிக் கேட்கும் போது நபி (ஸல்) அவர்களால் அதைக் கூட கொடுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் இப்படிப்பட்ட வறுமையில் தான் தங்களது வாழ்நாள் முழுவதும் உழன்று கொண்டிருந்தார்கள். இது எதை உணர்த்துகின்றதுநபி (ஸல்) அவர்கள்  தமது வறுமையைப் போக்கிக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதைத் தான் உணர்த்துகின்றது.

ஹசன், ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும் பெரிய செல்வச் சீமான்களாக வாழவில்லை என்பதைத் தான் வரலாற்றில் நாம் பார்க்க முடிகின்றது. அதனால் ஹசனும், ஹுசைனும் தங்களது வறுமை தீர்த்துக் கொள்ளும் நிலையில் இல்லாத போது அடுத்தவர்களின் வறுமையைத் தீர்க்க முடியும் என்பது  இந்த ஷியாக் கவிஞருக்கு புரியவில்லை.  இதற்குக் காரணம் இஸ்லாமியக் கடவுள் கொள்கையில் இவருக்கு ஏற்பட்டிருக்கும் கோளாறு தான்!

அதைத் தான் இங்கு இரண்டாவது விஷயமாகப் பார்க்கப் போகின்றோம்.

மக்கா காஃபிர்களின் பக்கா நம்பிக்கை

"வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா'' என்று நீர் கேட்பீராக!

அல்குர்ஆன் 10:31

உணவு அளிப்பவன் அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை மக்கத்து காஃபிர்களிடம் இருந்துள்ளது. ஆனால் இது இந்த ஷியாக் கவிஞரிடம் இல்லை.

பிற தெய்வங்களுக்கு அறவே சக்தி இல்லை

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான்.463 பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

அல்குர்ஆன் 30:40

இந்த வசனம் உணவு வழங்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே  தவிர வேறு யாரிடமும் இல்லை என்பதை பிரகடனப்படுத்துகின்றது. ஆனால் இந்த கவிஞரோ நபி (ஸல்) அவர்களுக்கும், அன்னாரின் குடும்பத்தாரான அஹ்லுல் பைத்துக்கும் இருக்கின்றது என்று வாதிடுகின்றார்.

விரித்தும் குறைத்தும் வழங்குபவன் அவனே!

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை அற்பசுகம் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 13:26 

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர்ஆன் 17:30,31

உலகில் ஒரு சாரார் வசதிமிக்கவர்களாகவும், மற்றொரு சாரார் வசதியில்லாதவர்களாகவும் வாழ்கின்றனர். வசதியில்லாத ஒவ்வொருவரும் தானும் எப்படியும் ஒரு பணக்காரராக ஆகி விடவேண்டும் என்று துடிக்கின்றனர். மிக ஒரு சிலரைத் தவிர  அவர்களால் அவ்வாறு ஆக முடிவதில்லை. அந்த ஒரு சிலர் செலவந்தர்களாகும் போது மற்ற சில பணக்காரர்கள் ஏழைகளாகி விடுகின்றனர். படி அளப்பது அல்லாஹ் தான் என்பதை  இது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உணர்த்துகின்றது.

நபிக்கு உணவளிப்பதும் நாயன் அல்லாஹ் தான்

உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.

அல்குர்ஆன் 20: 132

இந்த வசனத்தில் நபி (ஸல்) அவர்களை நோக்கி உனக்கு  உணவளிப்பவன் நான் தான் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம்.

அல்குர்ஆன் 15:20

இந்த வசனத்தின் படி உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவன் தான் உணவளிக்கின்றான் என்ற பொதுப் பட்டியலில் நபி (ஸல்) அடங்கி விடுகின்றார்கள். அதனால் நபி (ஸல்) அவர்களுக்கென்று தனியாக, குறிப்பாக உனக்கு உணவளிக்கின்றேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களிடமே  இப்படி கையேந்திக் கேட்கின்ற கண்மூடித்தனமான கூட்டம் உருவாகும் என்று வல்ல நாயன் அறிந்திருந்ததால் தான் இப்படியொரு நெற்றியடியான வார்த்தையைப் பயன்படுத்துகின்றான் என்று நம்மால் மிகத் தெளிவாக உணர முடிகின்றது. அனைத்தையும் அறிந்த அந்த ஆற்றல்மிகு அறிவாளனுக்கு அனைத்துப் புகழும்!


இதுவரை நாம் கவிஞரின் ஐந்தடிக் கவிதையில் அவர் தூவிய இணை வைப்பெனும் கந்தகப் பொடிக்கு சந்தேகமற்ற விளக்கத்தைப் பார்த்தோம். இப்போது அவரது அடுத்த கந்தகம் நிறைந்த  ஐந்தடிகளை அடுத்த இதழில்  பார்ப்போம்.

EGATHUVAM JUN 2016