May 14, 2017

குடும்பவியல் 11 - கொலையில் முடியும் கள்ள உறவுகள்

குடும்பவியல் 11 - கொலையில் முடியும் கள்ள உறவுகள்

தொடர்: 11


உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

ஆண்களோ, பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களை விட்டும் தவிர்ந்து வாழ வேண்டும்,

நம்மை ஒழுக்கத்திலிருந்து நெறிதவழச் செய்கின்ற காரியங்களை விட்டு விலகியிருக்க வாழவேண்டும் என இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகின்றது.

அதில் மிக முக்கியமான அறிவுரை, பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் அந்நிய ஆண்கள் எவரும் நுழைந்துவிடக் கூடாது என்ற கட்டளையாகும். இதுபோன்ற தனிமை சந்திப்புகள் தான் தவறுக்குத் தூண்டுகின்றன என்பது பற்றிக் கடந்த இதழில் கண்டோம்.

இதில் அடங்கியிருக்கின்ற மற்றொரு விபரீதத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனிமை சந்திப்புகள் மூலம் ஆண், பெண் இரு தரப்பினருமே தவறில் ஈடுபட்டிருந்தாலும் இதைச் சாக்காக வைத்து, ஒருவர் மற்றவரை பிளாக்மெயில் செய்வதையோ, அல்லது மாட்டி விடுவதையோ பார்க்கிறோம்.

இன்ன நபர் என்னை நான்கு ஆண்டுகளாக வன்புணர்ச்சி செய்தார் என்று ஒரு பெண் காவல் துறையில் புகார் செய்வதைப் பார்க்க முடிகிறது. இது உண்மையாக இருக்க முடியாது. இது ஒரு பெண் செய்யும் சூட்சுமம்.

ஏனெனில் ஒரு ஆண் தன்னை வன்புணர்ச்சி செய்கின்றான் எனில் 4 ஆண்டுகள் வரை அதைப் பொறுத்துக் கொண்டு இருந்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சொல்லமாட்டாள். முதல் தடவை செய்த உடனேயே புகார் கொடுத்திருப்பார்.

ஏழு ஆண்டுகளாக என்னை ஏமாற்றி என் வாழ்க்கையைச் சீரழித்து விட்டார் என்று பெண்கள் புகார் செய்வதையும் நடைமுறையில் காண்கிறோம். இவை புகார் செய்கிறவர்களும் சேர்ந்து செய்யும் தவறுகளாகும்.

இதுபோன்று தவறான முறையில் உறவில் ஈடுபடக் கூடியவர்கள் இத்துடன் இன்னும் கூடுதலாகப் பல விஷயங்களை எதிர்பார்ப்பார்கள்.

ஒருவன், ஒரு பெண்ணின் பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்கத்தில் அவளுடன் தகாத உறவு வைத்திருப்பான். அது போல் பெண்ணும் இது போன்ற நோக்கத்துடன் தகாத உறவு வைத்திருப்பாள். அந்த  நோக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் போதுதான் காவல்துறையில் புகார்கள் கொடுக்கப்படுகின்றன.

காவல்துறையும் இதுபோன்ற வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். இரண்டு பேரும் உடன்பட்டுத்தான் இந்தத் தவறைச் செய்திருக்கிறீர்கள் என்று காவல்துறை சொல்வதில்லை. அதுவும் பெண்கள் தரும் புகார் எனில் உடனேயே காவல் துறையினர் பதிவு செய்வதைப் பார்க்கிறோம்.

இன்றைய காலத்தில் ஆணோ, பெண்ணோ தங்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் செய்கின்ற இந்தத் தவறினால் அதிகாரத்தின் மூலம் வேண்டுமானால் ஆண்கள் மிரட்டப்படலாமே தவிர, அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதுவும் தவறு செய்வதை செல்போனில் நேரடிக் காட்சிகளாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டு அதை மற்றவர்களுக்கு வெளியிடுவேன் என்று மிரட்டி பெண்களிடமிருந்து பணம் பறிக்கிற நிகழ்வுகளெல்லாம் சமூகத்தில் நடப்பதைப் பார்க்கிறோம்.

மிகவும் நெருங்கிப் பழகுபவர்களால் தான் இந்தக் கேடுகெட்ட அக்கிரமங்கள் நடப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். எனவே அந்நிய ஆண், பெண் இருவர் தனிமையில் இருப்பதால் நமது கற்பொழுக்கத்தையும் இழந்துவிடுகிறோம். அத்துடன் காலமெல்லாம் நாம் நிம்மதியிழந்து இருக்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

கணவன் மனைவி என்ற ஆகுமான உறவாக இருப்பின் கணவனுக்கு ஏற்படும் கேவலத்தை  ஈடுசெய்வதற்காக மனைவி பாடுபடுவாள். மனைவிக்கு ஏற்படுகிற இழப்பை ஈடுசெய்வதற்காகக் கணவன் பாடுபடுவான். அவள் இவனுக்கு ஆடையாகவும் இவன் அவளுக்கு ஆடையாகவும் இருப்பார்கள் என திருமறைக் குர்ஆன் கூறுகிறது.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.

(அல்குர்ஆன் 2:187)

இப்படி நகமும் சதையாக ஒட்டியுறவாடக் கூடிய உறவில் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் கள்ளத்தனமான உறவில் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும். இது போன்ற தவறான உறவில் ஈடுபடுவர்களில் ஒவ்வொருவரும் பிறருக்கு எதிராக ஆவணங்களையும் ஆதாரங்களையும் தவறான முறையில் பயன்படுத்த முயற்சிப்பார்கள். இப்படியிருப்பவர்கள் தங்களுக்கு மத்தியில் ஏதேனும் கசப்புணர்வுகள் ஏற்பட்டால் உடனேயே தாங்கள் திரட்டி வைத்தவற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டும், தான் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்களை அதன் மூலம் அனுபவித்துக் கொண்டும் இருப்பார்கள்.

சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்தவர்கள் கூட திருந்திக் கொள்வதற்கு முடியாமலும் வெளியில் சொல்ல முடியாமலும் தத்தளித்து மீண்டும் மீண்டும் சித்ரவதைக்குள்ளாவதைப் பார்க்கிறோம். இவ்வளவு பெரிய விபரீதத்தையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் நபியவர்கள் ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் பேசுவதை, பார்ப்பதை முதல் சந்திப்பிலேயே தடுத்து விடுகிறார்கள்.

பெண்கள் கொடுக்கின்ற அதிகமான புகார்களில், பெண்களும் சேர்ந்து தான் அந்தத் தவறுகளைச் செய்திருப்பார்கள். பிரச்சனை வருகிற போது பழியை ஆண்கள் மீது பெண்கள் போட்டுவிடுகிறார்கள்.

அவர் ஏமாற்றிவிட்டார், இவர் ஏமாற்றிவிட்டார் என்று பெண்கள் கொடுக்கிற புகார்களில் பாதி தான் உண்மை. ஏனெனில் இவர்களும் சேர்ந்துதான் பாதித் தவறைச் செய்திருப்பார்கள்.

பெண்கள் மட்டுமல்ல! ஆண்களாக இருந்தாலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை தான் கள்ளத்தனமான உறவு கொள்பவர்களிடம் இருக்கும். அவரவர் கௌரவம் தான் அவரவருக்கு முக்கியமாக இருக்கும்.

ஆனால் கணவன் மனைவி என்ற குடும்ப உறவு அப்படிப்பட்ட இழிவான பண்பைக் கொண்டிருக்காது. எனவே குடும்பங்கள் நாசமாகப் போவதற்கும் சிக்கி சின்னாபின்னமாவதற்கும் அடிப்படையான காரணம், தனிமையில் அந்நியர்களுடன் இருப்பதும், பழகுவதும், பேசுவதும், கொஞ்சிக் குலாவுவதும் தான் என்பதை நடைமுறையில் பார்க்கிறோம்.

ஒருவரின் கள்ளத்தொடர்புகள் மற்றவருக்குத் தெரியும் போது ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்கும் தகாத உறவு காரணமாக அமைந்துள்ளது.

இதனால் தான் கள்ளக் காதலர்கள் மனைவியையும் கணவனையும் கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. தான் பெற்றெடுத்த பிள்ளையைக் கூட, தனது கள்ளக் காதலுக்குத் தொல்லை எனக் கருதி தன் கையாலேயே கொலை செய்யும் நிகழ்வுகளெல்லாம் அரங்கேறி வருகின்றது. பிள்ளையைக் கொலை செய்து பெட்டியில் வைத்து பேருந்து நிலையத்தில் வீசும் ஈவு இரக்கமற்ற சம்பவங்களையும் நாம் செய்தி ஊடகங்களில் பார்க்கிறோம்.

இவை அனைத்திற்கும் அடிப்படை என்னவென்று பார்க்க வேண்டும். எடுத்த உடனேயே எந்த ஆணும் எந்தப் பெண்ணும் தவறு செய்துவிட மாட்டார்கள். முதலில் பேசுவார்கள், அதன் பிறகு தனிமையில் பழகுவார்கள், இப்படியே பழகிப் பழகி, கள்ளத் தொடர்பு வரை சென்றுவிடுகிறது.

அடிப்படைக் காரணம் தனிமையில் இருப்பதுதான் என்பதை எந்த அறிவு ஜீவியும் விளங்க மறுப்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எந்தத் தவறும் நடக்காவிட்டாலும் கூட தவறு நடந்ததைப் போன்ற தோற்றம் வருவதற்கும் காரணம், ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருப்பது தான்.

சமீபத்தில் தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்து, அவர் அசிங்கப்பட்டதை செய்திகளில் நாம் பார்த்தோம். இதற்கு அடிப்படைக் காரணமே இந்தத் தனிமை தான். எனவே இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற பேராபத்துக்களை நாமும் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், "இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்'' என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப் போவதில்லை'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4386

இதுபோன்றே புகாரியிலும் பதிவு செய்யப்பட்ட இன்னொரு சம்பவமும் இருக்கிறது.

ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!'' என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, "இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!'' எனக் கூறினார்கள். அவ்விருவரும் "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) -அல்லாஹ்வின் தூதரே!'' என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்'' என்று தெளிவுபடுத்தினார்கள்.

நூல்: புகாரி 2038, 3281

இரத்தம் ஓடாத ஒரு இடம் கூட மனித உடலில் கிடையாது. எனவே இரத்தம் ஓடுவதைப் போன்று மனிதனின் உடல் முழுவதிலும் ஷைத்தான் வியாபித்திருக்கிறான். அவன் எங்கிருந்தாவது இலேசான ஊசலாட்டத்தை ஏற்படுத்திவிடுவான் என்பதால் தான் இவ்வாறு தெளிவுபடுத்தியதாகச் சொன்னார்கள் நபியவர்கள்.

மனைவியுடன் கணவன் இருக்கும் போதும் கூட இருட்டின் காரணத்தினால் பிறர் சந்தேகப்படுவார்கள் எனில், அந்நிய ஆண்களுடனோ பெண்களுடனோ இருந்தால் சந்தேகப்படமாட்டார்களா? அவ்வாறு சந்தேகப்படுவதைக் குறைகூற முடியுமா?

மேலும் அல்லாஹ்வின் தூதரின் மீதே ஷைத்தான் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவான் எனில் நாம் எம்மாத்திரம்? நபியவர்களை உயிரினும் மேலாக மதித்தவர்களில் முதலாம் தரத்தில் இருப்பவர்கள் ஸஹாபாக்கள். அவர்களிடமே ஷைத்தான் நபியவர்களைப் பற்றிய ஊசலாட்டத்தை ஏற்படுத்திவிடுவான் எனும் போது நமது நிலை என்ன?

எனவே நாம் நமது வாழ்வில் எந்தக் கட்டத்திலும் ஒரு பெண் அந்நிய ஆண்களுடனோ, ஆண் அந்நியப் பெண்களுடனோ தனிமையில் இருப்பதற்குரிய வாய்ப்புக்களை ஏற்படுத்திவிடவே கூடாது. இதை நாம் உணர வேண்டும் என்பதற்காக நபியவர்களின் வாழ்வில் இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி நமக்கு இறைவன் உணர்த்திக் காட்டுகின்றான்.

ஒரு ஆண், ஒரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண், ஒரு ஆணுடனோ இருக்க வேண்டுமாயின் அந்தப் பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு மஹ்ரமான உறவுகள் உடனிருக்கும் நிலையில் தான் இருக்க முடியும். மஹ்ரம் என்றால் ஏற்கனவே சொன்னதைப் போன்று திருமணத்திற்குத் தடை செய்யப்பட்டவர்கள் என்று பொருள்.

அதாவது ஒரு பெண்ணின் தகப்பனுடன், அண்ணன் தம்பியுடன், தாயுடன், கணவனுடன், மாமனாருடன் இருக்கின்ற போது இன்னொரு அந்நிய ஆணுடன் பேசிக் கொண்டிருப்பதைத் தவறெனக் கூறமுடியாது. இந்த நிபந்தனையில் தான் ஒரு பெண்ணுடன் ஒரு அந்நிய ஆண் பேசமுடியும். இப்படித் தான் பெண்ணும் பேசமுடியும்.

"ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்ன இன்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில்) நான் என்ன செய்வது?)'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "(போருக்குச் செல்வதி-ருந்து பெயரை) திரும்பப் பெற்றுக் கொண்டு, நீர் உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5233

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்கüன் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது.  அப்போது நான், "இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்)தான்'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5102

வளரும் இன்ஷா அல்லாஹ்


EGATHUVAM MAR 2014