பேசும் மொழிகளும் படைத்தவனின் அற்புதமே!
எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
நமது கருத்துக்களைப் பரிமாறுவதற்கும், எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் மிகச் சிறந்த ஊடகமாக மொழி இருக்கிறது.
மொழி என்பது மனிதர்களை வகைப்படுத்தும் காரணிகளுள் முக்கியமானதாக இருக்கிறது.
உலக அளவில் ஏறத்தாழ 6800 மொழிகள் இருக்கின்றன.
2001ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில்
மட்டும் 1652 மொழிகள் பேச்சுவழக்கில் இருக்கின்றன. அதிகப்பட்சமாக 10 இலட்சம் மக்களால் பேசப்படுவதாக 29 மொழிகளும், 10,000 மக்களால்
பேசப்படுவதாக 122 மொழிகளும் இருக்கின்றன.
சில மொழிகள் அழிந்துவிட்டன. சில மொழிகள் பேசுவதற்கு ஆளின்றி
அழிந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில மொழிகள் மாறும் உலகத்திற்குத் தோதுவாக பல மாற்றங்களைச்
சந்தித்துக் கொண்டிருக்கின்றன. பல மொழிகள் எழுத்து வழக்கில் இல்லாமல் வெறும் பேச்சளவில்
மட்டுமே இருக்கின்றன. இத்தகைய, மொழியைப் பற்றிச் சிந்திக்கும்
போது வியப்பாக இருக்கிறது. இன்னும், குர்ஆன் ஹதீஸ்களில்
ஆராயும்போது இது தொடர்பான பல்வேறு போதனைகள் கிடைக்கின்றன. அவற்றை அறிந்திடவே இக்கட்டுரை.
படைத்தவன் இருப்பதற்கான சான்று
நமது உடலில் ஒரு ஐம்பது கிராம் எடை கூட இல்லாத சிறிய சதைப் பகுதியே
நாக்கு. ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்ட சின்னஞ்சிறிய நாக்கை அசைப்பதால், அதிலிருந்து விதவிதமான மொழிகள் வெளிப்படுவதைப் பார்க்கும்போது
ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?
மனிதர்கள் பலவகையில் இருப்பது போன்று மொழிகளும் வேறுபட்டதாக
இருப்பதைப் பார்க்கிறோம். இப்படி மனிதர்களுக்கு மத்தியில் ஏராளமான மொழிகள் இருப்பது
சாதாரண விஷயமல்ல. இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கும் அவன் அனைத்துப் படைப்பினங்களையும்
நுணுக்கமாகப் படைத்திருக்கிறான் என்பதற்கும் இது மிகப்பெரும் சான்று என்பதை முதலில்
நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும்
மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகüல் உள்ளனவையே.
திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 30:22
மொழிபேசும் உயிரினங்கள்
மனிதர்கள் மட்டுமல்ல, மற்ற உயிரினங்களும்
தங்களுக்குள் செய்திகளைத் தெரிவித்துக் கொள்கின்றன. இன்பம், துன்பம் என்ற அனைத்து நேரங்களிலும் பரஸ்பரம் உணர்வுகளைப் பரிமாறிக்
கொள்கின்றன. அனைத்து ஜீவராசிகளும் தங்களது இனத்திற்கு இடையே வெவ்வேறான வித்தியாசமான
ஒலிகளை வெளிப்படுத்தித் தொடர்பு கொள்கின்றன. இதன்மூலம், பிற ஜீவராசிகளும் தங்களுக்குத் தோதுவான மொழியைக் கையாளுகின்றன
என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நம்மால் அவைகளின் மொழியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை
என்பதற்காக அவைகளுக்கு மத்தியிலும் மொழி என்ற தொடர்பு அறவே இல்லை என்று வாதிட முடியாது.
ஏனெனில், இறைவன் நாடினால் அவைகளின் மொழியையும் மனிதர்களுக்குப் புரிய
வைக்க முடியும் என்பதே உண்மை. இந்தப் பேருண்மையைப் பிரதிபலிக்கும் வேதவரிகளைக் காண்போம்.
தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். "மக்களே! பறவையின் மொழி
எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது.
இதுவே தெளிவான அருட்கொடையாகும்'' என்று அவர் கூறினார். ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள்
ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.
அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது "எறும்புகளே!
உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில்
உங்களை மிதித்து விடக்கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது.
அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக!
உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!'' என்றார்.
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத் ஹுத் பறவையை நான் காணவில்லையே!
அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். "அதைக் கடுமையான
முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன்.
அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்'' (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது.
"உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊரிலிருந்து
உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்'' என்று
கூறியது. "நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு
ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக்
கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி
பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று.)
அல்குர்ஆன் 27:16-24
அனைத்து மொழிகளையும் அறிந்தவன்
உலகில் பல மொழிகள் இருக்கின்றன. ஒருவருக்கு என்ன மொழி தெரியுமோ
அந்த மொழியில்தான் அவருடன் பேச இயலும். அப்போதுதான் அவர் அதைப் புரிந்து கொள்வார்.
வெவ்வேறு இரு மொழியைப் பேசும் இருவர், தங்களுக்கு
மத்தியிலே இரு மொழியையும் தெரிந்த ஒருவரின் உதவியால்தான் கருத்துக்களைப் பறிமாறிக்
கொள்ள முடியும்.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தெரிந்திருந்தாலும் உலகிலுள்ள
அத்தனை மொழிகளையும் அறிந்தவர் யாருமில்லை. ஆனால், அல்லாஹ்
அனைத்து மொழிகளையும் அறிந்தவன். அடியார்கள் அவனிடம் எந்த மொழியிலும் பிரார்த்தனை செய்யலாம், அவன் நம்மிடம் உரையாடுவதற்கு எந்தவிதத்திலும் எந்தவொரு மொழிப்பெயர்ப்பாளரும்
தேவையில்லை. எனவே, நாம் அறிந்திருக்கும் மொழி மூலம்
மறுமை நாளில் நம்முடன் நேரடியாக அவன் உரையாடுவான்.
(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு
இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். அதற்கு நபி
(ஸல்) அவர்கள்,
"வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை காவலரின்றிச் செல்லும்போது
மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில்
ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவார். அதை வாங்குவதற்கு எவனும் இருக்கமாட்டான்.
அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களில் ஒருவர், அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே
திரையுமிருக்காது; மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான்.
அப்போது (அல்லாஹ்), "நான் உனக்குப் பொருளைத்
தரவில்லையா?''
எனக் கேட்க அவர்
"ஆம்' என்பார். பிறகு "உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா?'' எனக் கேட்டதும்
அவர் "ஆம்'
என்று கூறிவிட்டுத் தமது வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகமே காட்சியளிக்கும். பின்னர் இடப்பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே பேரீச்சம்பழத்தின் ஒரு
சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின்
மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ர-),
நூல்: புஹாரி (1413), (3595), (6539)
மொழியை அறிந்திருப்பதில் படைத்தவனுக்கும், படைப்பினங்களுக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசத்தை நாம்
கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்து மொழிகளையும்
அறிந்தவன். ஆனால் ஒரு மனிதனுக்கு அவனுக்குத் தெரிந்த மொழியில் சொன்னால் மட்டுமே அவனால்
புரிந்து கொள்ள முடியும். இதைப் பற்றி சிந்தித்தால், இறந்துபோனவர்களிடம்
உதவிதேடும் தர்கா வழிபாடு எந்தளவிற்கு மாபெரும் வழிகேடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து
கொள்ளலாம்.
இறந்துபோன ஒரு மனிதனிடம் அனைத்து மொழி பேசும் மக்களும் கோரிக்கை
வைத்து மன்றாடுவதும், அவர் அந்தப் பிராôத்தனைகளை விளங்கிக் கொள்வார் என்று நம்புவதன் மூலம் இது, படைத்தவனுக்கு ஒப்பாக படைப்பினத்தை வைக்கும் படுமோசமான இணைவைப்புக்
காரியம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உயிரோடு இருக்கும்போதே ஒரு மனிதனால் அனைத்து மொழிகளையும் அறிந்திருக்க
முடியாது எனும் போது இறந்துபோனவருக்கு எப்படி அனைத்து மொழிகளும் புரியும். இதை விளங்கிய
பிறகாவது, நம்பிக்கையாளர்கள் தர்ஹாக்களை விட்டும் தூரவிலக வேண்டும்.
மொழிப் பெருமையைப் புறக்கணிப்போம்
மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் பல்வேறு காரணங்களை வைத்துக்
கொண்டு பெருமையடிக்கிறார்கள். எங்களது மொழிதான் உயர்ந்தது; மற்ற மொழிகள் தாழ்ந்தது என்று மொழிப்பெருமை பேசுபவர்கள் இன்றைய
காலத்தில் இருப்பதுபோன்று நபிகளாரின் காலத்திலும் இருந்தார்கள். அரபி மொழியே சிறந்தது
என்றும் மற்ற மொழிகளை பேசுபவர்கள் கால்நடைகள் என்றும் அன்றைய அரபிகள் கருதினர்.
மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை விதைக்கும் சித்தாந்தங்கள்
அனைத்தையும் ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மார்க்கம், மொழிரீதியாக
இருந்த இந்தப் பெருமையையும் பகட்டையும் களைந்தெறிந்தது. அனைத்து மொழிகளும் சமமானவை
என்றும் அவற்றைப் பேசும் மக்களும் சமமானவர்களே என்றும் மனித ஒற்றுமைக்குக் குரல் கொடுத்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக அரபி மொழி சிறந்தது என்பதால் குர்ஆன்
அந்த மொழியில் அருளப்படவில்லை. மாறாக, அது தூதரின்
தாய்மொழியாக இருப்பதால் அதிலே அருளப்பட்டது. இவ்வாறுதான் அனைத்து தூதர்களுக்கும் அவரது
மொழியிலேயே வேதம் வழங்கப்பட்டது என்று இஸ்லாம் பிரகடனப்படுத்தியது. மொழிப்பெருமையை
ஒரேயடியாக மண்ணுக்குள் புதைத்தது,
அரபி மொழியல்லாதவர்களை விட அரபி மொழிபேசுபவர்களுக்கு எந்தவொரு
சிறப்பும் இல்லை. அரபி மொழி பேசுபவர்களைவிட அரபியல்லாதவர்களுக்கு எந்தவொரு சிறப்பும்
இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத் (22391)
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக
அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு
விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 14:4
இதை விளங்காமல் சில முஸ்லிம்கள் அரபிமொழியை வரம்பு மீறிக் புகழ்வதைப்
பார்க்கிறோம். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் அரபி மொழியைத்தான் பேசினார்கள் என்றும், மறுமைநாளில் அல்லாஹ் அரபி மொழியில்தான் மனிதர்களுடன் பேசுவான்
என்றும், அரபி மொழிதான் சொர்க்கத்தின் மொழி என்றும் பொய்யான தகவல்களைப்
பரப்புகிறார்கள். அரபி மொழி அறிந்து கொண்டதால் பொதுமக்களைவிட தங்களை உயர்வாகக் கருதிக்
கொள்ளும் அறிஞர்கள், ஆலிம்கள் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள்
இதற்குப் பிறகாவது திருந்துவார்களா?
மொழியறிவை வளர்த்துக் கொள்வோம்
ஒரு மொழியறிந்தவர் ஒரு ஆளுக்குச் சமமானவர்; இரு மொழியறிந்தவர் இரண்டு ஆட்களுக்குச் சமமானவர் என்று பேச்சு
வழக்கில் சொல்வார்கள். எனவே நமக்குத் தெரிந்த மொழியில் இருக்கும் நுணுக்கங்களைத் தெரிந்து
கொள்வதிலும்,
அதல்லாத பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர்களாக
இருக்க வேண்டும். காரணம், நடைமுறை வாழ்வில் மொழியறிவின்
மூலம் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இதற்கான வழிகாட்டுதல் மார்க்கத்திலும் இருப்பதை
நாம் கவனிக்க வேண்டும்.
ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை)
எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும்
பல (வட்டார) மொழி வழக்குகüன் படி எனக்கு ஓதக் கற்றுத்
தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில்
ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புஹாரி 3219
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், யூதர்கüன் (ஹீப்ரு அல்லது சிரியாக் மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி
எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டு, நபி
(ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி (ஸல்)
அவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன்.
நூல்: புஹாரி 7195
பிற மொழிகளைத் தெரிந்து கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது
அல்ல என்பதற்கும் மேலாக, அது ஆர்வமூட்டப்பட்ட காரியம்
என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறமொழிகளைத் தெரிந்து கொள்வதன் மூலம், ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இன்றைய சூழ்நிலையில் ஆங்கில மொழியைத் தெரிந்தவரும், தெரியாத மற்றொருவரும் வேலையைத் தேடி நேர்முகத் தேர்விற்கு (இன்டர்வியூ)
செல்லும் போது,
இருவரும் சமமான படிப்பு படித்தவர்களாக இருப்பினும், ஆங்கில மொழி அறிந்தவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதைப் பார்க்கலாம்.
கடல் கடந்து பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் தொழில்துறைகளில், நிறுவனங்களில் மொழி பெயர்ப்பாளர்களுக்குப் பிரகாசமான வேலைவாய்ப்புகள்
இருக்கின்றன. எனவேதான், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும்
மொழியியல் எனும் பாடப்பிரிவு மூலம் பல்வேறு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.
மொழியை கையிலெடுத்த அசத்தியவாதிகள்
சத்தியத்தை எதிர்ப்பவர்கள், தங்களது
அசத்தியக் கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்கும் சத்தியக் கருத்துக்களை தடுப்பதற்கும்
மொழியைப் பெரும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். தங்களது குருட்டுத்தனமாக நம்பிக்கைகளை, கருத்துக்களை பெருமளவில் மொழியாக்கம் செய்து பரப்புகிறார்கள்.
பெரும்பாலும், சத்தியத்தை
நம்பும் பாமர மக்களைக் குறிவைத்து வேத வரிகளுக்குத் தவறான மொழியாக்கம், விளக்கங்கள் கொடுத்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்து குழப்புகிறார்கள்.
இவ்வாறு, கள்ளத்தனங்களை, தந்திரங்களைச்
செய்யும் அசத்தியவாதிகள் காலங்காலமாக இருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்தகையவர்கள் காலத்திலும் இருந்துள்ளார்கள்.
அப்போது, பிரச்சாரம் செய்ய வந்த அன்றைய அசத்தியவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும்
முறையை நபிகளார்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரூ (எபிரேய)
மொழியில் ஓதி,
அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம்
உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம்.
(மாறாக, முஸ்-ம்களே!) கூறுங்கள்: அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் யஅகூபின் சந்ததியினருக்கும் அருளப்பட்டதையும்
மற்றும் மூசாவுக்கும், ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கும், அவர்கüன் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை
அனைத்தையும் நாங்கள் நம்புகின்றோம். (அல்குர்ஆன் 2:136)
நூல்: புஹாரி 7542, 4485, 7362
இன்றைய காலகட்டத்தில் இதற்கு முக்கிய உதாரணமாக கிறிஸ்தவர்களைக்
குறிப்பிடலாம். கிறிஸ்தவ போதகர்கள், தங்களது பைபிளில்
இருக்கும் கர்த்தர் என்ற வார்த்தைளுக்கு அல்லாஹ் என்று மொழியாக்கம் செய்து பாமர முஸ்லிம்
மக்களை ஏமாற்றுகிறார்கள். தங்களது அசத்தியக் கருத்துக்களை பல திட்டங்கள் தீட்டி பிற
மொழி பேசும் மக்களிடம் பரப்பும் வேலையை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு
பதிலடி கொடுப்பதற்கு சத்தியவாதிகள் புறப்படவேண்டும்.
பிறமொழி பேசும் மக்களும் இந்த சத்திய மார்க்கமான இஸ்லாத்தைத்
தெரிந்து கொள்வதற்குரிய வாய்ப்புகளை வசதிகளை ஏற்படுத்துவதில் முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். பிறமொழி மக்களும் அசத்தியக் கருத்துக்களை அடையாளம் கண்டு கொள்வதற்குரிய வழிகளை
ஏற்படுத்த வேண்டும். ஆனால், தமிழ் மொழி பேசும் மக்களிடம்
எடுத்துச்சொல்வதைக் காட்டிலும் பல மடங்கு குறைவாகவே மாற்று மொழி மக்களிடம் சத்தியத்தைத்
தெளிவுபடுத்தும் காரியத்தை நம் மக்கள் செய்கிறார்கள் என்பதே உண்மை.
மொழியைப் பற்றிய மேலும் பல தகவல்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்
காண்போம்.
EGATHUVAM MAR 2014